புதன், 8 ஏப்ரல், 2009

ஞானக்கூத்தன் கவிதைகள்



பார்க்கப் படுதலின்றி வாழ்க்கை பிறிதென்ன ?

யார் யார் என்னை பார்க்கிறார்கள் ?
பார்க்கிறார்கள் என்ற உயர்திணை
முடிவு கூடத் தவறு தான்.

எது எவரால் பார்க்கப் படுகிறேன் என்பதே சரி.
வீதியில் நடந்தால் கல்லாப் பெட்டிக்
கிண்ணத்து வழவழப்பைத் துழாவிக்கொண்டு
கடைக்காரர் என்னைப் பார்க்கிறார்.

தெருமாறிச் செல்லும் நாய் பார்க்கிறது
அதைத் தொடரும் மற்றொரு நாயும் பார்க்கிறது
ஒரு சிறுவன் ஒரு சிறுமி அவர்களிடம் நானொரு
காதல் கடிதத்தை இன்னாளிடம்
கொடுக்கச் சொல்வேனோ என்று பார்க்கின்றனர்.

பெருமாள் மாட்டுடன் எதிரில் வந்தவன்
ஒன்றும் கேட்காமல் என்னைப் பார்க்கிறான்.
அவனது மாடும் என்னைப் பார்க்கிறது.
வெள்ளைப் புள்ளிகள் மேவிய ஆடுகள்
கிளுவை இலைகளைப் புசித்துக் கொண்டு
என்னைப் பார்க்கின்றன.
தபால்காரர் கையில் அடுக்கிக் கொண்ட
கடிதக் கடடுகளை விரல்களால் பிரித்து
எனக்கு கடிதம் இல்லை என்று
சொல்லாமலே என்னைப் பார்க்கிறார்.

குட்டிகள் பின்பற்ற தெருவின் ஓரத்தில்
குறுங்கால்களோடு நடக்கும்
பெரிய பன்றி என்னைப் பார்த்தது.
ஆனால் குட்டிகள் என்னைப் பார்க்கவில்லை
தாயைத் தவிர யாரையும் பார்க்கத்
தெரியாதவை. மேலும் இன்னும் வயதாகவில்லை

வரிசையாய் மின்சாரக் கம்பிமேல்
உட்கார்ந்திருக்கும் காக்கைக் கூட்டத்தில்
ஒன்றாவதென்னைப் பார்க்காமலா இருந்திருக்கும் ?

எல்லாம் எல்லோரும் என்னைப் பார்ப்பது
போலப் பிரமை எனக்கேன் வந்தது
ஞானாட்சரி நீ சொல்வாயா
எப்போதும் என்னை விமர்சிக்கும் உன் வாயால் ?


ஒரு பையன் சொன்ன கதை

ஓட்டுக் கூரைமேல் ஒரு காக்கை தனது
கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு
எதையோ தின்றதாம் ஆர்வமாகவும்
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டும்

தெருவெல்லாம் பசியோடு பறந்து
எங்கே என்ன கிடைத்ததோ
இப்போது தின்கிறது காக்கையென்று
நினைத்துக் கொண்டனாம்
ஒரு வேளை தன் வீட்டுக் கொல்லையில்
உலர்த்தி வைத்ததாய் இருக்குமோ
என்று நினைப்பு வரவே
விட்டானாம் ஒரு கல் காக்கை மேலே
என்னவோ கவலையில் நான் இருந்த போது
ஒரு பையன் சொன்னான் இந்தக் கதையை எனக்கு

களத்திரம்

சொன்னார். சொன்னார். முச்சுவிடாமல்
சொன்னார். அப்புறம் கேட்கிறேன் என்றேன்.
இன்னும் கொஞ்சம் கேளென்று சொன்னார்
உறங்குவது போல பாவனை செய்யலாம். ஆனால்
எவ்வளவு கஷ்டம் கேட்பது போல
நீண்ட நேரம் பாவனை செய்வது ?
கோட்டுவாய் விட்டேன். அவரோ இன்னமும்
சொன்னார். முக்கியமான கட்டத்தை
அடையவில்லை இன்னமும் என்றார்.
ஓயாமல் சொன்னார். மூன்றாம் மனிதன்
ஒருவன் வந்தென்னை மீட்க
மாட்டானா என்று நான் ஏங்கும் சமயம்
அவரே ஓய்ந்து போய் அடுத்த சந்திப்பில்
மீதியைச் சொல்வதாய் என்னை நீங்கினார்.
அவர் சொன்ன கதைகளை எல்லாம்
உம்மிடம் சொன்னால் நீரும் என்போல்
ஆகிவிடுவீர்.
மனைவியைக் கனவில் காணும்
வாழ்க்கை போல் கொடுமை உண்டோ ?


(விருட்சம் வெளியீட்டில் ஞானக்கூத்தன் அவர்களின் பென்சில் படங்கள் தொகுப்பிலிருந்து)

15 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

நான் ஞானக்கூத்தன் படித்ததில்லை.

நல்ல கவிதைகள்!

'ஒரு பையன் சொன்ன கதை' கவிதையை மிகவும் ரசித்தேன்.

-ப்ரியமுடன்
சேரல்

ஆ.சுதா சொன்னது…

ஞானகூத்தனின் கவிதைகளை இதற்கு முன் படித்தில்லை, படிக்க தந்ததிறகு நன்றி, கவிதைகளின் யதார்த்தம்
நம்மீதும் ஊர்கின்றது.

மாதவராஜ் சொன்னது…

இப்போதுதான் இவைகளைப் படிக்கிறேன். நன்றி யாத்ரா...

ஆதவா சொன்னது…

விகடன் தீபாவளி மலர்களில் ஞானக்கூத்தனைப் படித்திருக்கிறேன்..

(அதிலொன்று பாண்டவக் குலத்தோன்றலான யயாதியை வைத்து ஒரு கவிதை படித்திருந்தேன்.. இறுதியில் ஏதோ ஞான சுயோதமே என்று முடித்திருப்பார்... இன்னமும் விளங்காத கவிதை அது!@)

மூன்றில் நடுக்கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது... மற்ற இரண்டும்தான்!!

நந்தாகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நந்தாகுமாரன் சொன்னது…

ஞானக்கூத்தனின் - ஸ்ரீலஸ்ரீ, தமிழ், அன்று வேறு கிழமை, காலவழுவமைதி, கொள்ளிடத்து முதலைகள், சினிமாச்சோழர், தோழர் மோசிகீரனார், வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு, உயர்திரு பாரதியார், தொழுநோயாளிகள், சமூகம், யாரோ ஒருத்தர் தலையிலே, மீண்டும் அவர்கள், ஆகஸ்டு 15, மஹ்ஹான் காந்தி மஹ்ஹான் - ஆகியவை என்னுடைய Personal Favourites. ஒரு அரசியல் பகடி கவிதை ஒன்றும் list-இல் இருக்கிறது ... தலைப்பு மறந்துவிட்டது - வடமாநில அரசியல்வாதி ஒருவன் தமிழ்நாட்டு அரசியல் மேடையில் பேசுவது - அதன் சாரம். அபத்தவியல் மற்றும் Parody சார்ந்த நிறைய கவிதைகளை அருமையாக எழுதியிருக்கிறார். அவசியம் வாசிக்க வேண்டிய கவிஞர்.

மண்குதிரை சொன்னது…

நன்றி யாத்ரா.

ஞானகூத்தனின் கவிதைகளில் உள்ள அங்கதம் சிறப்பானது.

சில கவிதைகளை இப்போது நினைதாலும் வாய்விடு சிரித்துவிடுவேன்.

இந்த கவிதையை வாசித்துப்பாருங்கள்,

//என்ன மாதிரி
என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.//


சிரிக்காமல் இருக்கமுடியுமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ஞானக்கூத்தனின் சில கவிதைகள் பிடிக்கும்; சில பிடிக்காது (உதா : எனக்கும் தமிழ்தான் மூச்சு / ஆனால் பிறர் மேல் விடமாட்டேன், சைக்கிள் கமலம் போன்றவை).

ச.முத்துவேல் சொன்னது…

ஞானக்கூத்தன் அவர்களின் கவிதைகள் சிலவற்றை இதுபோல் இணையத்தில் மட்டும் அங்கங்கு படித்திருக்கிறேன்.உங்கள் மூலம் சில(மண்குதிரை மூலம் ஒன்று) படிக்ககிடைத்ததற்கு நன்றி. நல்ல கவிதைகள்.அவரின் எளிமைத்தன்மையும், அங்கத நடையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரின் இதுவரையிலான மொத்தத் தொகுப்பும் ஆழி பதிப்பில் வெளிவந்திருக்கிறதாகக் கேள்வி.

யாத்ரா சொன்னது…

சேரல், முத்து, மாதவராஜ், ஆதவா, நந்தா, மண்குதிரை, சுந்தர், முத்துவேல் நன்றிங்க அனைவருக்கும்.

நந்தா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, இவரின் எல்லா கவிதைகளிலுமே இந்தப் பகடி எள்ளல் அங்கதம் இவைகள் பிரசித்தம், எல்லாவற்றையும் பகடியாக மாற்றிவிடுவார்.

மண்குதிரை கவிதைகள் வழமையாக மனபாரம் தரும்,நானும் கவிதைகள் படித்து சிரித்தது இவர்களைப் படித்துத் தான்.

சுந்தர் சார் எனக்கும் சில கவிதைகள்

இதுவரை இவரை வாசிக்காதவர்களுக்கு இந்தப் பதிவு பயன்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.வாசித்தவர்களின் பகிர்வுக்கும் நன்றி

Karthikeyan G சொன்னது…

Thanks for the post..

Can u pls post his poem which has something like "Vaarthaigalai veesi sendraar.." as election Special. :)

thanx in advance..

யாத்ரா சொன்னது…

அன்பு கார்த்திகேயன், எந்தத்தொகுப்பிலென்று நினைவில்லை, தேடி வெளியிடுகிறேன்

Ashok D சொன்னது…

ஞானகூத்தன் கடைசி வரியில் சிக்ஸர் அடித்துவிட்டார்

யாத்ரா சொன்னது…

அசோக் வாய்ப்பு கிடைத்தால் இவரைப் படியுங்கள், எல்லாவற்றையுமே பகடியாகப் பார்ப்பவர், நவீன கவிதையின் முன்னோடி.

Ashok D சொன்னது…

Sure... yathra Thank u...