திங்கள், 31 ஆகஸ்ட், 2009

தூண்டில் இருள்



அடர்வன இருளை முதுகில்
படர்த்திச் செல்கிறாள்
சீராய் கத்தரிக்கப்பட்டு
காற்றில் அலையும்
நீள் இருள் இழைகளின் நுனியிலிருக்கும
தூண்டிற் முட்களில்
சிக்கித் தவிக்கின்றன
என் விழிக்கோளங்கள்

அவள் காற்சுவடுகளுககு
திலகமிட்டபடி தொடர்கின்றன
செறுகப்பட்ட விழிதுவாரம் வழி பரவி
இமையோரங்களில் வழியுமென் உதிரத்துளிகள்

கேச இழை வேர்களில் கூடிய மென்வலியில்
உணர்கிறாள் அகப்பட்டதின் பாரத்தை
மகிழ்ச்சியோ மிரட்சியோ
கூடுதல் விசையுடன்
இழுத்தோடுகிறாள்

விரைதலில் பிணித்த வலியில்
நகரவியலாது ஸ்தம்பித்த கணம்
விழிகள் என் இமைகளிலிருந்து பெயர்ந்து
காலமற்ற காலத்தின் பெண்டுலங்களாய்
அவள் பிருஷ்டங்களை
உரசியுரசிச் செல்கின்றன

விட்டு விலகிச் செல்லும்
என் கண்களை
கண்களின்றி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

சி. மோகன் கவிதை



எனக்கு தூக்கம் வருகிறது – எனினும்
தூங்கும் மார்க்கமறியாது விழித்திருக்கிறேன்
எனக்கு தூக்கம்வரும் போது
ஒரு மிருகம் வாய் பிளந்து நாக்கை நீட்டும்
நான் வாயினுள் புகுந்து நாவினுள் துயின்றிருப்பேன்
பொதுவாக என் சயன அறையும்
படுக்கையும் அவை தாம்

சமயங்களில் என் கடவுளின் உள்ளங்கையிலும்
என் சாத்தானின் மடியிலும்
அயர்ந்து உறங்கியிருக்கிறேன்

இன்று அந்த மிருகத்தைக் காணவில்லை
எப்போதாவது இது நேர்வது தான்
ஏனென்று நானும் கேட்டதில்லை

கடவுளின் உள்ளங்கையைத் தேடிய போது
அவர் சுயமைதுனத்தில் லயித்திருந்தார்
சாத்தானின் மடியை நாடிய போது அவர்
கடவுளின் மனைவியோடு சுகித்திருந்தார்

இப்போது நான் என்ன செய்வது
எனக்கு தூக்கம் வருகிறது
தூங்கும் மார்க்கமறியாது விழித்திருக்கிறேன்


நன்றி - கடவு இதழ் (நாடோடிகள் விட்டுச் சென்றிருப்பது)

புதன், 26 ஆகஸ்ட், 2009

ஊர்சுலா ராகவ் கவிதை



சகிக்க முடியாத ஆண்

ஒரு கவிஞனுமான எனது தந்தை
சமூகம் விரும்பாதவனாகவும்
தன் சுதந்திரத்தை அடிமைப் படுத்தும்
பெண்களுக்கு கணவனாக இருப்பதாகவும்
தன் போதை நாட்களிடையே உளறுகிறார்
வெளியெங்கும் சொல்லாடல்களுக்கான
நபர்களைத் தேடிக் கொண்டிருக்குமவர்
மதுவோடு இறைச்சியையும்
காலி செய்தவாறு சில கவிதைகள்
கிடைத்த நாளில் மகிழ்வுடன் எங்களிலிருந்து வெளியேறுகிறார்
நள்ளிரவு விடுதிகளில் கைவிட்டுச் செல்பவரை
தனது புரவலர் என்று அறிமுகப்படுத்தும்
அவரை புரிந்து கொண்ட பெண்ணொருத்தி
மனைவியாகக் கிடைக்க வழியற்று
காலம் கடந்து போய்விட்டதாகப் புலம்பும் போது
யாராலும் சகிக்க முடியாது
இச்சைகளை கவிதையில் புணர்ந்து கொண்டும்
நமைச்சல்களை உறக்கத்தில் கீறிக் கொண்டும்
ஏறக்குறைய பரி நிர்வாணமாகி விடுகிறார்
சில சமயம் தன் கவிதைகளுக்கு சில நாணயங்களை
பரிசாகக் கொண்டு இருப்பிடம் திரும்பும் அவர்
நள்ளிரவில் என்னை எழுப்பி நடனமாடுவார்
தன்னை ஒரு தந்தை இல்லையென்றும்
உன் தாயின் தோழன் அல்லது காதலன் என்றும்
பொய் சொல்வார்
கன்றாவி தான் ஒரு கவிஞன் தந்தையாய் இருப்பது


( இந்தக் கவிதையும் படிக்கும் போது லேசான புன்முறுவலை வரவழைத்தது. இக்கவிதையை எழுதிய ராகவ்வின் தந்தை ஒரு நவீன கவிஞர். இந்தப் பின்புலம் தெரிந்த பிறகு இக்கவிதையை கூடுதலாகவே ரசிக்க முடிந்தது. )

நன்றி - புது எழுத்து சிற்றிதழ்

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

மணல் வீடு கவிதைகள்



இரு மாத இதழாக வெளிவரும் சமீபத்திய மணல் வீடு சிற்றிதழில் நண்பர்கள் முபாரக், மண்குதிரை, நிலாரசிகன், ச. முத்துவேல், சேரல் ஆகியோரின் கவிதைகளோடு என் கவிதைகளும் வெளியாகியிருக்கின்றன. நண்பர்களுக்கு வாழ்த்துகள்

வெளிவந்த சாசனம், திருவினை, மோனவெளி மற்றும் தரை கவிதைகளின் இணைப்புகள்

http://yathrigan-yathra.blogspot.com/2009/04/blog-post_21.html

http://yathrigan-yathra.blogspot.com/2009/05/blog-post_24.html

http://yathrigan-yathra.blogspot.com/2009/05/blog-post_12.html

http://yathrigan-yathra.blogspot.com/2009/06/blog-post_22.html


மணல் வீடு முந்தைய இதழ்களில் வெளிவந்த படைப்புகள் சில பின்வரும் இணைப்பிலுள்ள வலைப்பூவில் பதிவிடப்பட்டிருக்கிறது. இதழின் முகவரி மற்றும் விவரங்கள் இந்த வலைப்பூவிலிருக்கிறது

http://manalveedu.blogspot.com/

மணல் வீடு சிற்றிதழுக்கும் அதன் ஆசிரியர் மு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

பிரான்சிஸ் கிருபா கவிதை



ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி

அம்மா கவலையின்றி துணி துவைப்பாள்
அப்பா கவனமாக நாளிதழ் வாசிப்பார்
அண்ணன் கடன் பட்டவன் போல் டி.வி பார்ப்பான்
அவளோ சலிப்பின்றி வகுப்பெடுப்பாள்
மாடத்துத் தொட்டிச் செடிகளில்
குட்டிப்பூக்கள் அவளை எட்டி எட்டிப் பார்க்கும்
ஜன்னல் திலைச்சீலைகள் கெக்கலித்து நெளியும்
வாசலில் நுழையும் வெயில்
அவள் காலில் விழுந்து பாடம் கேட்கும்
கைகளைத் தூக்கி தூரப் போடுவது மாதிரி விளக்குவாள்
ஆத்திரப்படும் போது காலை ஓங்கித் தரையில் உதைப்பாள்
சுட்டு விரலால் காற்றில் எழுதுவாள் அழிப்பாள்
புரிந்து கொள்ளாத மாணவ மாணவிகளிடம் பொறுமையிழப்பாள்
பொட்டு வைப்பதைவிட மெதுவாகத் தான் என்றாலும்
தன் நெற்றியில் அடிக்கடி அடித்துக் கொள்வாள்
கன்னத்தில் ஒரு பலூன் ஊதிக் கடைவாயில் கடித்தபடி
யோசனையோடு குறுக்கும் மறுக்கும் நடப்பாள்
கெட்டிக்கார குழந்தைகளைப் பாராட்ட
புன்னகை வயலில் பூவொன்று பறித்துக் கொண்டு
சந்தோஷ வரப்புகளில் ஓடோடி வருவாள்
ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி
திங்கட்கிழமையை தள்ளிக் கொண்டு போவாள் பள்ளிக்கு



( இந்தக் கவிதையை படித்ததிலிருந்து அவ்வப்போது தானே மெலிதாய் சிரித்துக் கொள்கிறேன். டீச்சர் சிறுமி அடிக்கடி தோன்றி எனக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள். நான் புரியாத மாதிரி நடித்து, அவள் பொறுமையிழந்து பொட்டு வைப்பது போல் மெலிதாக தலையிலடித்துக் கொள்வதை உள்ளூர ரசித்து புன்னகைத்துக் கொள்கிறேன். என் சமீபத்திய நாட்களை அழகாக்கிக் கொண்டிருக்கும் அந்த முகமறியாச் சிறுமிக்கும் கிருபாவுக்கும் என் நன்றிகள்.

நிழலன்றி ஏதுமற்றவன் என்ற தொகுப்பிலுள்ள கவிதை இது. யுனைடட் ரைட்டர்ஸ் வெளியீடு. )

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

சில பிரியங்கள்



அறுபட்ட கோழியின்
தூவலாய் மிதக்கின்றன
கைவிடப்பட்ட பிரியங்கள்
சில மிதந்து மேகங்களுக்கப்பால் சென்று
நட்சத்திரங்களாகி விடுகின்றன
சில அலைகளின் மடிப்புகளில்
மூழ்கி கடற்பாசிகளோடு நேசம் கொள்கின்றன
சில சாக்கடையில் மிதக்கும்
சூரிய வட்டில் பரிமாறப்பட்டிருக்கும்
நரகல் துண்டுகளை அலங்கரிக்கின்றன
சில
பலருக்கு கைக்கெட்டிவிடும் பாவனை காட்டி
கண்மூடியாய் பின்தொடர வைத்து
தற்கொலை முனையில்
சொர்க்கத்தின் வாயிலை
திறந்து வைக்கின்றன
சில
காதலர்களின் பார்வைக் கம்பிகளில்
பட்டாம்பூச்சியென அமர்ந்தமர்ந்து
சங்கேதமாய் எதையோ
உணர்த்த முயல்கின்றன
சில
சிலந்தி வலைகளில் சிக்கி
காற்றின் அலைக்கழிப்புகளில்
விலகும் கணத்தை எதிர்நோக்கியிருக்கின்றன
இப்படி எல்லாமும் தங்களுக்கான
இடங்களைத் தேர்ந்து கொள்ள
ஒரேயொரு இறகு மட்டும்
தனித்து மிதந்து கொண்டிருக்கிறது அந்தரத்தில்
எவ்விடம் எதனிடம் யாரிடம்
அது சென்றடையப் போகிறதென்கிற
பதற்றம் கூடிக்கொண்டே வருகிற தருவாயில்
பாலருந்த விழையும்
குழந்தையின் முனைப்போடு
தேவதையொருத்தியின் ( தேவதையோ ராட்சசியோ )
முலையிடை தஞ்சமடைகிறது
சடுதியில் பார்வைப்புலத்திலிருந்து
மறைந்துவிட்ட அவள் இதை
கவனித்தாளோ கவனிக்கவில்லையோ
தெரியவில்லை
கூ(ண்)டடைந்த பிரியத்தை
உடை களைகையில் அவள்
தூக்கியெறிந்துவிடக் கூடாதென
பிரார்த்தித்துக் கொள்வோம் சபிப்போம்

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

ஒரு பொழுதில்


வீதியில் விழுந்திருக்கும்
மின் கம்பி நிழலின்
ஒரு கோட்டில்
முன்பின்னாய் பாதம் பதித்து
தடுமாறும் தருணங்களில்
சிலுவையாய் கரம் விரித்து
சமன்குலைவை சரி செய்தபடி நடக்கிறாள்
ஒரு தாவணிப் பெண்

கவனித்தோ கவனிக்காமலோ
அமர்ந்திருந்த நிழற்ப்பறவையை
மிதித்து விட
கீச்கீச்சென காலடியிலிருந்து மீண்டு
பறந்து சென்றதோ ஓடிச்சென்றதோ
அந்தப் பறவை என
மேல் கீழாய் அவதானித்தபடியிருந்த
ஒரு அபூர்வ கணத்தில்
சிறகில் அவளை வைத்து
அலகில் என் கழுத்தைப் பற்றி
பறந்து கொண்டிருந்தது அப்பறவை

முன்பே தீர்மானித்து
வைத்திருந்தது போலும்
ஒரு மேகத்தில் விடுவித்துச் சென்றது எங்களை
கழுத்தில் பற்றிய அலகின் தடத்திலிருந்து
வழியும் குருதியைத் தடுக்க
தாவணியவிழ்த்து கட்டிடுகிறாள்
சுருக்குக் கயிறாகி இறுகுகிறது கழுத்து

பொழியக் காத்திருந்த மேகத்தில்
எங்கள் காலடிகள் நழுவுகின்றன
சறுக்கிய படியே
மழைத் தாரை பிடித்திறங்கி
சங்கமமானோம்
அலைகள் தணிந்திருக்கும்
நடுக்கடலில்