வெள்ளி, 24 ஜூலை, 2009

நாகப்பழ நாக்கு


கருநீலப்பாவாடையோரத்தில் மடித்து
எச்சிற்படாமல் கடித்துத் தரும் புளிப்பு மிட்டாய்
கடித்துக் கடித்து திறக்கும்
பென்சில் வைக்கும் பிளாஸ்டிக் பெட்டியில்
பதிந்திருக்குமுன் பற்தடம்
கணக்கு பீரியடில் விழுந்த உன் பல்லை
வானத்துக்கு காட்டாமல்
உள்ளங்கைக்குள் இறுக மூடி
மதிய உணவு இடைவேளையில்
புதைத்த அந்த இடம்
இன்டர்வலில் புதர்ச்சரிவில்
நிகழ்த்தும் சிறுநீர் ஓட்டப்பந்தயம்
முத்தமிட்ட கன்னத்தைத் துடைத்துக்கொண்டே
கழுவ ஓடி குழாய் திறக்க காற்று வர
உள்ளங்கைக்குள் எச்சில் துப்பி
என் முத்தம் அழித்தது
ரிப்பனையவிழ்த்து விட்டே சலித்துப்போன
ரெட்டைப் பின்னல் நாட்களுக்கிடையில்
உச்சியிலிருந்து துவங்குமாறு அலங்கரித்திருந்த
அந்த ஒற்றைப் பின்னல் தினத்தில்
அதை பதினெட்டாவது முறையாக பற்றியிழுத்த
அப்போது அழுது கொண்டே
போடா செந்திலு பொந்திலு குந்திலு நாயே என்றதற்கு
போடி வள்ளி கள்ளி குள்ளி பல்லி பன்னி என்றது
நாகப்பழம் தின்ற நாக்கு காட்டி
நங்கு காண்பித்தது
பாதி சாப்பிட்டிருந்த ஐய்சைப் பிடுங்கிக்
கொண்டோடிய அன்று முழுக்க என்னிடம் பேசாமலிருந்தது
நொண்டியாட்டத்தில் உன் போங்கு ஆட்டம்
பொறுக்காது ஒரு அறைவிட
சில கணங்களில் உன் கன்னத்தில் சிவந்தயென்
விரல் தடம் பார்த்ததிர்ந்து
தடவியபடியே தழுவ முயல்கையில்
காக்கா அடி அடித்து அழுது
விலக்கிக்கொண்டோடியது
விளையாட்டாய் வளையல் உடைப்பது
வழக்கம் தானெனினும்
அன்று பீரிட்ட ரத்தம் பார்த்து
சாரிடி சாரிபா சாரிபா மன்னிச்சிக்கோவென
காயத்தின் ரத்தத்தை வாயில் வைத்து உறிஞ்சியது
தவறவிட்ட ஒற்றைக் கொலுசுக்காய்
அன்று முழுதும் அழுதழுது முகம் வீங்கி
வீட்டுக்குச் செல்கையில்
ஏய் இங்க பாருடி என
கையில் ஆடவிட்டபோது
சிரிப்பும் அழுகையுமாய்
பிடிபடாது ஓடிய என்னைத் துரத்தியது
ஒருநாள் விளையாட்டு பீரியடில்
மைதானத்தில் வழிமறித்து
நான்.......நான்...... என தயங்கி நின்றது
காலத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றாய்
புரட்டப் பட்டுக் கொண்டேயிருக்கிறது
இன்று காலையிலிருந்து
இவளுக்கு சுகமில்லாததால்
அம்முக்குட்டியை அழைத்துவர பள்ளிக்குச் செல்ல
அழுதபடி அப்பா தோ பாருப்பா
அந்தப் பையன் என் கையை எப்படி கடிச்சிட்டான்
என்றவள் கையை வருடிவிட்டு
அவள் சுட்டுவிரல் காட்டிய திசை பார்க்க
மிரண்டு பயந்திருக்கும்
அந்த மழலையின் கரம் பிடித்து
நின்றிருந்தாள் வள்ளி.

திங்கள், 13 ஜூலை, 2009

நிலைக்கண்ணாடி


கடந்து சென்றதும்
உன்னிலிருந்து என்னை
அழித்திருக்கிறாயோவென சந்தேகித்தேன்
அருகில் வந்து பார்க்க
உன்னில் அப்படியே நானிருந்தேன்
தவறாக புரிந்து கொண்டமைக்கு
சற்றே வருந்தி
மன்னிப்பு கேட்டுச்
சென்ற என்னையழைத்து
என்னில் தன்னை சில கணம்
பார்த்துச் செல்பவர்களுக்கிடையில்
என்னில் வசிக்க விரும்பிய இதயமே
பிரியமே உன் நம்பிக்கையும் நேசமும்
என்னை வீழ்த்திவிட்டது
என் தனிமைக்கு விமோசனமளித்து
எப்போதும் என்னை விட்டகலாதிருப்பாயாவென
இறைஞ்சி கலங்கினாய்
உன் பிரியத்தின்
கனம் தாளாமல் பரிதவித்தேன்
மெதுமெதுவாய் பின்னால் நகர்ந்து
உன்னில் என்னைச் சிறியதாக்கி
சிறு பூச்சியென
பெயர்த்துக் கொண்டோடினேன் என்னை
நீ நேசித்த என்னை
நான் விரும்பிய உன்னில்
நிரந்தரமாய் இருத்திக் கொள்ள
இயலாமல் போன
குற்றவுணர்வை அதிகரிக்கச் செய்கிறது
பிறகான தருணங்களில்
உன்னை நெருங்கி கடக்கும் போதெல்லாம்
நீ பார்க்கும் பார்வை

செவ்வாய், 7 ஜூலை, 2009

கவிஞர் இசை கவிதைகள்


3 கி. மீ

அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்திற்கு
அவ்வூரைப் பார்க்கும்
ஆசை வந்துவிட்டது ஒரு நாள்

வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்து கொண்டிருக்க

3 கி.மீ. 3 கி.மீ. எனத்
தன்னை பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்

வளர்ந்தாலும் நடந்தாலும்


என் தோட்டத்தில்
ஒரு ரோஜா பூத்திருக்கிறது
அதன் கூந்தல் வெகு தொலைவில் இருக்கிறது

ரோஜாவின் கனவில் கூந்தலும்
கூந்தலின் கனவில் ரோஜாவும்
அடிக்கடித் தோன்றி மறைகிறது

கூந்தலை எண்ணி எண்ணி
ரோஜா கறுத்து வருகிறது
கூந்தல் சிவந்து வருகிறது
ரோஜா நடந்து செல்லவோ
கூந்தல் வளர்ந்து நீளவோ
இயலாது

வளர்ந்தாலும் நடந்தாலும்
சென்று சேர இயலாது

தற்கொலைக்கு தயாராகுபவன்

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்துநிலையில்
என்னென்னவோ செய்கிறான்

அவன் கையில்
குடும்பப் படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து தனியே தன்னுருவைப்
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்

எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல்நுனி
கூடவே வருவேனென்கிறது

தோழமை

எல்லா வெள்ளியின் மாலைகளிலும்
தான் விளையாடிக் கொண்டிருந்த
மைதானத்தை அப்படியே விட்டுவிட்டு
புறப்பட்டு விடுகின்றனர்
பள்ளிக்குழந்தைகள்
ஒரு நாள்
இல்லை
ஒரு நாள்
பிரிவின் வெம்மை பொறுக்காது
பேருந்தேறும் அப்பெரு மைதானமும்

சகலமும்

சகலமும் கலைந்து சரிய
அழுதழுதடங்கியவன்
தன்னருகே வந்து
குழைந்த நாய்க்குட்டியை
மெல்லமெல்ல தடவிக் கொடுத்தான்
அது அவன்
உடலாகவும் இருந்தது

பூனை

பூனை ஒரு விலங்கு
அதற்கு தெரிந்திருக்கிறது
பிரியமானவர்களைக் கடிக்கும் முன்னே
பற்களை எப்படி உதிர்த்துக் கொள்வதென
ஸ்பர்சிக்கும போது
நகங்களை எவ்வாறு மழுங்கிக்கொள்வதென

சௌமி குட்டி சௌமியா ஆனது எப்போது

ஒருமுறை சௌமி குட்டிக்கு
வேடிக்கை காண்பிப்பதற்காக
அய்.. பூ! என்றேன்
அன்றிலிருந்து அய்.. பூ! அய்.. பூ!
என்றே அவள் விளிக்க
மலர்ந்ததிலிருந்து மேலும் மலர்ந்தன...

பூ என்பதற்கு முகம் திருப்பாத அவைகள்
அய்.. பூ! என்பதில் இறும்பூதெய்தின

அல்லி வட்டம் புல்லி வட்டம்
இதழ்கள் காம்பென படம் வரைந்து
பாகம் குறிக்கும்
தாவரவியல் மாணவியான
சௌமியாவுக்கு
இன்று பூக்களைப் பற்றி சகலமும் தெரியும்
அய்.. பூ! பூவான போது தான்
சௌமி குட்டி சௌமியா ஆனாள்
அல்லது
சௌமி குட்டி சௌமியா ஆனபோது
அய்.. பூ! பூவாகிப் போனது

( கவிஞர் இசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு, உறுமீன்களற்ற நதி, காலச்சுவடு பதிப்பக வெளியீடு. வாசிக்க தந்துதவிய நண்பர் முத்துவேலுக்கு நன்றிகள். )

புதன், 1 ஜூலை, 2009

எறும்பின் பயணம்


சமவெளியிலிருந்து இச்சுவரின்
காரை பெயர்ந்த பள்ளத்தாக்குகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன் எறும்பாகி

நடையில் சிறு வேகம்
சிறு நிதானிப்பு
சிறு வளைவு

சக எறும்புகளோடு
விதானத்தையொட்டிய
செங்குத்துச் சுவரில் ஊர்ந்தபடி
முன் பின்னாய் திரும்பிப்பார்க்க
புலம்பெயர் அகதியாய் உணர்ந்தேன்
போகுமிடம் குறித்த தெளிவுகளின்றி
கவலையேதுமற்று ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
எப்படி இச்சுவரைப் பற்றி
நடந்து கொண்டிருக்கிறேனென்பது
எனக்கே ஆச்சர்யமாயிருக்கிறது
யாரையும் கடிக்கக் கூடாதென்கிற எண்ணம்
பார்ப்போம்

ஒரேயொரு ஆசை மட்டும்
பருகுவதற்கு யாருமற்று
யுகயுகமாய் தனித்திருக்கும்
மது நிரம்பிய குவளையின்
விளிம்பில் சுற்றியபடியிருக்க வேண்டும்
ஆயுள் முழுக்க

ஊழிக் காலத்தில்
அப்படியே அதிலிறங்கி
ஜலசமாதியடைந்து விட வேண்டும்

ஜன்னல் வரை சென்று
கதவு மூடப்பட்டிருக்க
வட்டமடித்து திரும்பிக்கொண்டிருந்தனர் முன்னோர்

என்ன நினைத்தேனோ
கதவைத் திறந்து விட்டு
நானும் என் சக எறும்புகளும
ஜன்னல் விளிம்பு வழி
வெளியேறிக் கொண்டிருப்பதை
பார்த்துக் கொண்டிருந்தேன்

பிறகு எவ்வளவு காத்திருந்தும்
என்னை வந்தடையவேயில்லை
எறும்பாகிப் போன நான்

ஒருவேளை அதற்கு
அந்த மதுக்குவளை
கிடைத்திருக்கலாம்