புதன், 29 ஏப்ரல், 2009
வைதீஸ்வரன் கவிதைகள்
கண்ணாடியை துடைக்கத் துடைக்க
என் முகத்தின் அழுக்கு
மேலும் தெளிவாகத் தெரிகிறது
தன் கூட்டுக்கும்
வானுக்கும்
பாலம் தெரிகிறது
பறவைகளுக்கு மட்டும்
எழுத நினைக்காத தருணம்
எழுத நேருகிறது
மிகத்தெரிந்தது போல்
தெரியாததை எழுதிக்
கொண்டிருக்கிறேன்
எழுதி முடித்தவுடன் தான்
எனக்கு வெளிச்சமாகிறது
இதைத்தான் நான்
தெரிந்து கொள்ள வேண்டிக்
காத்திருந்தேனென்று
புதிர்
இருட்டை வரைந்திருக்கிறேன்
பார் என்கிறான்
தெரியவில்லையே என்கிறேன்
அது தான் இருட்டு என்கிறான்
இன்னும் தெரியவில்லை என்கிறேன்
மேலும் உற்றுப் பார்த்து
அதுவே அதனால் இருட்டு என்கிறான்
இவன் இருட்டு
எனக்கு எப்போது
வெளிச்சமாகும்
மேலே
வெள்ளைச் சுவரில்
மெல்லிய நிழல்கள்
சிலந்தியின் கலைக்கு
செலவற்ற விளம்பரங்கள்
உபதேசம் நமக்கு
அடுத்த வீட்டுக் காரனிடம்
அன்பாய் இருந்து தொலைத்து விடு
வம்பில்லை
பல்தேய்த்துக் கொண்டிருக்கும் போது
பக்கத்து வீட்டுக் காரனிடம்
வெள்ளையாய் சிரித்துவிடு
தொல்லையில்லை
என்றாவது
உன்வீட்டில்
மழை பெய்யும் போது
அவன் வீட்டில்
குடை இருக்கும்
என்றாவது உன் செடியை
ஆடு கடிக்கும் போது
அவன் கையில் ஆளுயரக்
கம்பு இருக்கும்
உன் வீட்டுக் குழந்தைகள்
ஓடியாட
அவன் வீட்டுத் தாழ்வாரம்
நீளமாயிருக்கும்
எதற்கும்
ஒரு விதமான தவமாக
தினந்தினம்
வேலியோரம் சற்றே
கால் சொறிந்து நில்லு
உளுந்தூரில் அவன் பாட்டி செத்ததால்
உனக்குப் போன தூக்கம்
ஊருக்குள் திருட்டு கற்பழிப்பு
உணவுத்தட்டு கருப்பு மார்க்கெட்டு
யாருக்கோ தவறிவிட்ட
லாட்டரிச் சீட்டு
எவனுக்கோ பிறந்து விட்ட
இரண்டு தலைப் பிள்ளை
இன்னும்
கிரஸின் விலை ஊசி விலை
கழுதை விலை காக்காய் விலை
எல்லா நிலையும் பந்தமுடன்
பல் திறந்து பேசிவிட்டு
வாய்க் கொப்பளித்து வந்துவிடு
தொந்தரவில்லை
என்றாவது நின்று போகும்
உன் சுவர் கடிகாரம் கூட
அவன் வீட்டில் அடிக்கும் மணியை
ஒட்டுக் கேட்கட்டும்
ஏசுவும் புத்தனும்
எதற்கு சொன்னான் பின்னே
அடுத்தவனை நேசி என்று
அவனால் உபகாரம்
ஆயிரங்கள் உனக்கு இருக்கும்
அதை மட்டும் யோசி
நீ ஒரு நகரவாசி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
12 கருத்துகள்:
நல்லதொரு அறிமுகம்.
அத்தனையும் நல்ல தேர்வு, அருமையான கவிதைகள்.
வைதீஸ்வரன் கவிதைகள் இதற்கு முன் படித்ததில்லை, முயற்சிக்கிறேன்.
நீங்கள் சொல்லும் கவிஞர்கள் அத்தனை பேருடைய புத்தகத்தையும் வாங்கி கடிக்க வேண்டும். தேடுகின்றேன்.
நன்றி யாத்ரா.
//கண்ணாடியை துடைக்கத் துடைக்க
என் முகத்தின் அழுக்கு
மேலும் தெளிவாகத் தெரிகிறது//
அருமை. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
கவிதைகள் நன்றாக இருக்கின்றன. நிறைய கவிஞர்களை அறிமுகம் செய்கிறீர்கள்.. கூடவே அவைப்பற்றிய சிறுகுறிப்பு ஒன்றும். புத்தக விபரங்களையும் கொடுக்கலாமே!!
என்னைப் பெரிதும் பாதித்தவர் இல்லையெனினும் இவருடய முரண்நகை வகை கவிதைகள் எனக்குப் பிடிக்கும் ... வைதீஸ்வரன் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒரு கவிஞர் ... இவர் ஒரு ஓவியரும் கூட ... கோட்டோவியங்கள் இவருடைய speciality ...
”வைதீஸ்வரன் கவிதைகள்” என்ற இவருடய முழு தொகுப்பு இங்கே கிடைக்கிறது - http://www.anyindian.com/
வைத்தீஸ்வரனின் இந்த கவிதைகளை வாசித்ததில்லை.
பகிர்வுக்கு நன்றி யாத்ரா.
புதுமையான கவிதைகள். அழகாய் இருக்கின்றன. நகரவாசி கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நல்ல அறிமுகம். நன்றி!
-ப்ரியமுடன்
சேரல்
கவிதாவிலாசம் என்று மூன்று நான்கு ஆண்டுகள் முன்பு எழுதியது நினைவிருக்கிறது. அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. ஒருமுறை க.பெ-வில் சுஜாதா மேற்கோள் காட்டியிருந்தார், வார்த்தைகள் சரியாக ஞாபகமில்லை:
"என்னை யானையாக்கி
மண்ணில் வீழ்த்தி சவாரி செய்து
கைகொட்டி சிரிக்க
உனக்குமா ஆனந்தம்?"
//தன் கூட்டுக்கும்
வானுக்கும்
பாலம் தெரிகிறது
பறவைகளுக்கு மட்டும்//
என்ன அருமையான வரிகள். பகிரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி யாத்ரா.
நன்றி முத்து, நந்தா ஒரு இணைப்பு கொடுத்திருக்கிறார் பாருங்கள், அல்லவெனில் 1960லிருந்து 2000 வரை இவர் எழுதிய 250க்கும் மேற்ப்பட்ட மொத்த கவிதைகளின் தொகுப்பு கவிதா வெளியீடாக கிடைக்கிறது.
நன்றி இலக்குவண்
நன்றி ஆதவா, முத்துவிற்கான பதிலில், மற்றும் நந்தா ஒரு லிங்கையும் கொடுத்திருக்கிறார்.
நன்றி நந்தா, ஆம் இவருடைய கோட்டோவியங்கள் சில கவிதைகளுடனே இருந்தது. விமானத்துறையில் பணியாற்றியிருக்கிறார்.
நன்றி மண்குதிரை
நன்றி சேரல்
நன்றி வெங்கிராஜா பகிர்வுக்கு.
நன்றி பாஸ்கர்
நல்ல கவிதைகள். இது வரை படித்ததில்லை. நன்றி யாத்ரா.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா
கருத்துரையிடுக