செவ்வாய், 28 ஏப்ரல், 2009

இன்னும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் குரல்மொழியற்ற பிராந்தியத்தில்
அர்த்தமற்ற புனிதச் சிரிப்புடன்
வெற்றுவெளியில் காலுதைத்து
காற்றில் கரங்களைத் துழாவி
முலையென விரல் சுப்பி
தவழ்தலின் முன்வைப்பாய் கவிழ்ந்து
என்னைப் பார்த்து சிரித்தபடியிருக்கும்
இப்பிஞ்சை அள்ளியெடுத்து
உச்சிமுகர்ந்து முத்தி கொஞ்சவே ஆசை
முன்பொரு கால ரயில் பயணத்தில்
மூன்று மணி நேர அன்னியோன்ய
சகவாசத்தின் இறுதியில்
என் சுட்டுவிரல் அழுந்தப் பற்றிய அந்தக்
குட்டிக்கடவுளின் தளிர்க்கரம் விலக்கி
அவர்கள் இறங்க வேண்டிய
நிறுத்தத்தில் அதன் தாய்
அழ அழ அழைத்துச் சென்ற குரல்
இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது
தளிர்க்கரத் தடம் இன்னமும்
என் சுட்டு விரலில்...........


( மாதவராஜ் சார் அவர்களின் விருப்பத்திற்கிணங்க, சந்தோஷக் கவிதை எழுத முயற்சித்தேன். இது சந்தோஷக் கவிதையா என்பது தான் தெரியவில்லை.)

16 கருத்துகள்:

சேரல் சொன்னது…

சந்தோஷக் கவிதைதான் நண்பரே! நன்றாக இருக்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாத பிரிவுகளில் ஒன்று இதுவும் கூட.

-ப்ரியமுடன்
சேரல்

ஆ.முத்துராமலிங்கம் சொன்னது…

//மொழியற்ற பிராந்தியத்தில்
அர்த்தமற்ற புனிதச் சிரிப்புடன்
வெற்றுவெளியில் காலுதைத்து
காற்றில் கரங்களைத் துழாவி
முலையென விரல் சுப்பி//

வார்த்தைகளை எங்கிருந்து பிடிப்பீர்களோ... எல்லாக் கவிதைகளுக்கும் வெரொரு தளத்திலிருந்து வார்த்தை பிறக்கின்றது உங்களுக்கு. அதனாலயே தணித்துவம் பெருகிறது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்.

|தளிர்க்கரத் தடம் இன்னமும்
என் சுட்டு விரலில்...........|

சந்தோசக் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ரொம்ப நல்லா இருக்கு யாத்ரா.

Karthikeyan G சொன்னது…

:)

ஆதவா சொன்னது…

ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க. எல்லோருக்கும் இப்படியான உணர்வு ஏற்படுவதுண்டு!!

புன்னகை சொன்னது…

முன்னொரு காலத்தில் அனுபவித்த மூன்று மணி நேரம் மகிழ்ச்சி இன்றுவரை சொல்லமுடியுதுனா நிச்சயம்
மகிழ்ச்சி தரக்கூடியகவிதை தான்

Nundhaa சொன்னது…

this is in harmony with life ... but this is not joyous poetry ... beacause the seperation as expressed is tearful and heavy on the heart ... but this is good poetry ...

மண்குதிரை சொன்னது…

நமக்குள் ஏதோ இருக்கிறது யாத்ரா.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

/உச்சிமுகர்ந்து முத்தி கொஞ்சவே ஆவல்/

இங்கே ஆவல் என்பதைவிட ஆசை என்பது சரியாய் வருமோ?

நல்லாயிருக்குங்க.

eswari சொன்னது…

intha kavithai sathosamum,ini orumurai anthai anubavita mudiyuma endra ekkammum kalathathu.


with love
ESWARIRA.

வெங்கிராஜா சொன்னது…

ஏகாந்தம், தோழமை, உறவாதல், ஏக்கம், சோகம், அன்னியோன்னியம், பிரிவு, சங்கோஜம், விதி, துயரம். சந்தோஷக் கவிதை என்று ஒரு சொல்லில் அடக்குவதா? பரிதாபம். நல்ல தொடக்கம், தொடர விழைகிறேன்.

ச.முத்துவேல் சொன்னது…

நல்லாயிருக்குது யாத்ரா. பழைய ஞாபகத்துல, இப்ப குழந்தையை கொஞ்சாம விட்டுடாதீங்க. அதுதான் சரி.( நான் இப்படில்லாம் நாட்டாமை சொல்றதுதான் சரியில்ல)

yathra சொன்னது…

நன்றி சேரல்
நன்றி முத்து

நன்றி கார்த்திகேயன், என்ன சிரிக்கறீங்க கார்த்தி

நன்றி ஆதவா
நன்றி புன்னகை

நன்றி நந்தா, சந்தோஷக் கவிதை தான் எழுத முயற்சித்தேன், ஆனா வாழ்க்கை எனக்கு இப்படித் தான் இருக்கு என்ன செய்ய.....

நன்றி மண்குதிரை, ஆமாம்பா நமக்குள்ளே ஏதோ இருக்கு நண்பா, எல்லாம் வேளச்சேரி தண்ணீர்,

நன்றி சுந்தர் சார்,ஆமாம் ஆசை தான் மிகச்சரியான வார்த்தை.

ஈசு நீ வந்து படிச்சி comment போடுவது மகிழ்ச்சியா இருக்குடி, உனக்கு நன்றி சொன்னா நீ கோவிச்சிப்பே,,,,,,

நன்றி வெங்கிராஜா, தொடர்கிறேன்.

முத்துவேல், நன்றி நண்பா, பழைய ஞாபகம் தான் என் பிரச்சனையே, நீங்க சொல்லாம வேற யார் சொல்வது.

TKB காந்தி சொன்னது…

கவிதை நல்லயிருக்கு யாத்ரா.

//சந்தோஷக் கவிதை எழுத முயற்சித்தேன். இது சந்தோஷக் கவிதையா என்பது தான் தெரியவில்லை//

இது சூப்பர்

sugirtha சொன்னது…

குழந்தைகள் வாழ்வை அர்த்தமாக்கும் தேவதைகள். அவர்களோடு நம்மை எளிதில் இணைத்துக் கொள்ள முடிகிறது. சமயங்களில் பக்கத்துக்கு வீட்டு மனிதர்களோடு கூட குழந்தைகள் மூலமாகவே நாம் அறிமுகமாகிறோம்.

Karthikeyan G சொன்னது…

//கார்த்திகேயன், என்ன சிரிக்கறீங்க //

**இது சந்தோஷக் கவிதையா என்பது தான் தெரியவில்லை.**

உங்களின் இந்த நக்கலுக்கு தான். :)

yathra சொன்னது…

நன்றி காந்தி
நன்றி சுகிர்தா

நக்கல் இல்லை, சட்டி அகப்பை கதையா அப்படித் தான் வருது. கார்த்தி இப்படியிருக்கு வாழ்க்கை என்ன செய்ய.....