செவ்வாய், 23 ஜூன், 2009

எங்களின் ஒரு மாலைப்பொழுது


காற்று அளைந்து விட்டுக்
கொண்டிருந்ததவள் குழலை
மடியில் கிடந்து
மார்பில் புரளும் கற்றைகளை
விரல்நுனியில் சுருட்டி விட்டுக் கொண்டிருக்க
ஓயாத அலைகளை இமைக்காது
வெறித்துக் கொண்டிருந்தாள்
அவள் விரல் நக
விளிம்புகளையும் ரேகைகளையுமென்
நகத்தால் வரைந்தும்
புறங்கை ரோமக்கால்களை
லேசாய் ப்ற்றியிழுத்தும்
கைக்கடிகாரத்தையும் வளையல்களையும்
முன் பின்னாயிழுத்து விட்டும்
தாவணி நுனியில் முடிச்சிட்டும் அவிழ்த்தும்
நீள கழுத்துச்செயின் டாலரை
லேசாய் ஊஞ்சலாட்டிக் கொண்டும்
நகக்கணு சேகரங்களையகற்றியபடியும்
விரல்களுக்கு சொடுக்கெடுத்தும்
நெயில் பாலிஷை சுரண்டி விட்டுக் கொண்டுமிருந்தேன்
எதற்கும் எச்சலனமுமில்லை
சற்றே மறந்திருந்த காரணம் நினைவு வர
மெல்ல எழுந்து இடைவெளி விட்டமர்ந்தேன்
மௌனத்திற்கு
இசையமைத்துக் கொண்டிருந்தன அலைகள்
மணலில் அழித்தழித்து எழுதிக் கொண்டிருக்க
இமையோரத்திலிருந்து ஒற்று முற்றுப்புள்ளிகள்
விழுந்து கொண்டிருந்தன
இறுக்கமான மௌனம் வதைத்துக் கொண்டிருக்க
வழக்கமான விடைபெறுதலின்றி
புதைகுழியாய் கால்களிழுக்க
திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தேன்
இன்னும் கடலையே வெறித்துக் கொண்டிருக்கிறாள்

திங்கள், 22 ஜூன், 2009

தரை


கழுவி விடப்பட்டிருக்கும்
இந்தச் சிமெண்டுத் தரையின் ஈரம்
கொஞ்சம் கொஞ்சமாக
உலர்ந்து கொண்டேயிருக்கிறது காற்றில்
உலர உலர
நீர்ச்சித்திரங்கள்
மாறியபடியிருக்கின்றன
ஈரம் முழுதும் உலர்ந்த இப்பொழுது
காட்சிகள் முடிந்த திரையானது
மனதும் தரையும்
மீண்டும் ஈர
ஸ்பரிசத்திற்க்காய் காத்திருக்கிறோம்
இந்த உலர்ந்த தரையும்
உலர்ந்த நானும்.

வியாழன், 18 ஜூன், 2009

இன்றைய நாட்குறிப்பு


நேற்று கண்ட காட்சியும்
கொண்ட கோலமும்
பரிமாறல்களும்
பொய்யெனவும் மாயையெனவும்
தோற்றப்பிழையெனவுமானது இன்று

இக்கரைக்கு
அக்கரை பச்சை
அக்கரைக்கு
இக்கரை பச்சை
எக்கரைக்கு
எக்கரை பச்சை
பச்சை நிறம் எப்படியிருக்கும்
நிறம் நிஜமா
கற்பனையா
ஒட்டகத்திற்கு
பச்சை பிடிக்குமா
இவைகளெல்லாம்
கானலின் நீரோ காட்சிப்பிழை தானோ
அற்ப மாயைகளோ இவற்றுள்
ஆழ்ந்த பொருளில்லையோ
பார தீ,,,,,,,,,,,,,,,,,

புதன், 17 ஜூன், 2009

ஒரு சந்திப்பு


சமீப காலமாய் அடிக்கடி
அரூப ரூபமாய் தோன்றிக்கொண்டு
எவளென்றறியாத எவளோவாக
இருந்த அவள்
இன்று பிரசன்னமாகிவிட்டாள்
எத்தனை யுகங்களாக
இந்தச் சந்திப்பிற்க்காய்
காத்திருந்தோமென
இருவர் கண்களும்
பேசிக்கொண்டன

ஞாயிறு, 14 ஜூன், 2009

என் அறை


வெறுமையானதொரு பின்மதியப்பொழுதில்
ஜெமினி ஒயின்ஸில்
தனியாவர்த்தனம் முடித்து
என்னோடு உரையாடிக்கொண்டே
தனிமை வசிக்குமென்
அறையடைந்து பூட்டைத் திறந்து
உள்ளே நுழைய
யன்னல் விளிம்பிலிருந்து
வாசலுக்கு ஓடிவரும் அணில்
குளியலறையிலிருந்து தேரை
குழல்விளக்கு சட்டகத்திலிருந்து பல்லி
வந்தவை அதது அதனதன் இடத்தில்
சில கணங்கள் ஸ்தம்பித்து
என்னையே உற்று நோக்க
வாசல்வரை வந்து வரவேற்கும்
எவளென்றறியாத எவளோ
அரூப ரூபமாய் தோன்ற
வெயிலும் தூறலுமானதாயிருந்தது
பருவநிலை
பாப்கேசம் கழுத்துரச
நெற்றி வரவேற்புத் தோரணமாயசைய
குட்டைப்பாவாடையில் கொலுசொலிக்க
ஓட்டைப்பல்வரிசை தெரியச் சிரித்து
ஓடிவந்து வாசலிலேயே
சட்டையையும் கைகளையும்
மழலையன்பொழுகப் பற்றிக்கொள்ளும்
என் இந்திரியத்தில் ஒளிந்திருக்கும் பிஞ்சுகள்
தோன்றி மறைந்தார்கள் இமைப்பதற்குள்
கானல் தோற்றப்பிழைகளிலிருந்து தெளிவுற்று
உடை களைந்து கைலிக்கு மாறி
சாம்பல் கிண்ணம் சிகரெட் சகிதம்
யன்னலோர மேசையருகான நாற்காலி மீதமர
அணிலும் தேரையும் பல்லியும்
ஏதோ சொல்ல விழைவதாய்
ஓடியும் தாவியுமருகே வர
அவைகளுக்குப் புரிகிற மொழியில்
பகிர்ந்து கொண்டவை
உங்களுக்கு நான்
எனக்கு நீங்கள்
வேறு யார் இருக்கிறார்கள்
நம்மை விட்டால்
இந்த அறைக்கும்.................

வியாழன், 11 ஜூன், 2009

தவிப்பு


யாருமற்ற வெளியில் சுவர்களமைத்து
மின்வேலியிட்டு சிறைப்படுத்தியிருக்கிறேன்
சுவர்களெங்கும் கிறுக்கல்கள்
பிரக்ஞையின்றி என்னாலேயே எழுதப்பட்டு
அழிக்க அழிக்க நீண்டபடியிருக்கும் சொல்வெளி
பட்சி பூச்சி தாவரங்களிடம்
சொற்குப்பையோடு உரையாடியதில் என்
உறவை முறித்துக்கொண்டன அவை
மொழியை மழுங்கச் சவரம் செய்யினும்
நரையுடன் பல்லிளிக்கிறது
வெளிப்படும் குரல்களை
பரிகசிக்கிறது இவ்வெளி
கேவலம் மொழியன்றி வேறில்லையோ நான்
புலன்களைக் கொல்ல திட்டமிடுகிறேன்
அகத்தின் அப்புறப்படுத்தவியலாத
சேகரங்கள் அழுகி நாறுகிறது
உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதில்
தொடர்ந்த தோல்வி இயலாமை கழிவிரக்கம்
புறப்பிணைப்பறுக்க அகவிழுது
பிடித்தாடுகிறது குரங்கு
என்னை என்ன
செய்வதென்றறியாது தத்தளிக்கிறேன்


ஞாயிறு, 7 ஜூன், 2009

கவிஞர் திறனாய்வாளர் ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு அஞ்சலி


திரு ஹரன் பிரசன்னா அவர்கள், தன் வலைப்பதிவில் ( தமிழ் இந்து.காம் ) கவிஞர் ராஜமார்த்தாண்டன் குறித்தும், அவர் கவிதைகள் சிலவற்றைத் தொகுத்தும் பதிவிட்டிருக்கிறார். நண்பர்கள் வாசிக்க

http://nizhalkal.blogspot.com/

http://www.tamilhindu.com/2009/06/kavi-rajamarthandan-anjali/

கவிஞர் ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு நம் அஞ்சலிகள்.

செவ்வாய், 2 ஜூன், 2009

தவம்


தவத்திலிருக்குமென்
விழிகளுக்கு பாலூட்டும்
கனத்து பருத்து மதர்த்து
திமிர்ந்த முலைகள்
தவப் பயண
இளைப்பாறலாய் மடிகிடத்தி
அனல் பறக்க
ஆவி பிடிப்பதாய்
கூந்தலைப் படர்த்தி போர்த்தும்
ஒளி புக முடியாமல் முழுதுமாய்
அடர் கானக இருள் வெளியில்
நாவின் கால்தடம் சரசரக்க
இலக்கற்று கிடந்தலைகிறேன்
யாத்ரீகனாய் வன மேனியெங்கும்
காற்றாய் விரல்களூர மெய் சிலிர்க்க
நரம்புகள் புடைத்து
கூடும் உதிர வேகம்
கரங்களில் இருமலை பிசைந்து
கசிந்து பாயும்
பால்நதியிடை கவிழ்ந்து
மூச்சடைகிறேன் மூழ்கி
மயிர்க்கால்களின் வேர்களை
மென்மையாய் வருடும்
நகத்துணுக்குகள்
திடீர்க் காற்றில் சட்டெனப்
புரளும் சருகுகளானோம்
எழுதியெழுதி தீராத
பிரபஞ்ச காவியத்தை
உழுதுழுது எழுதி
சற்றே ஓய்வெடுக்கையில்
ஓயாது படபடக்கும் தாள்
எழுதுகோலை மறுபடியும் ஊர்தலுக்கழைத்து
சற்றே பொறு
எழுதுகோல் விறைக்கட்டும்
உயிர்மை திரளட்டும்
அவிழ்த்தவிழ்த்து வாசித்து
ரசிக்கும் மற்றுமொரு
கவிதையை எழுதுகிறேன்.