புதன், 2 டிசம்பர், 2009

இருப்பு

நீர்த்திரை விழிகளுடன்
தூசு படிந்த நிழற்படத்தை
முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்
காய்ந்து உதிர்ந்த இலைச்
சருகுகளை விலக்கிப்
பார்க்கிறது காற்றுடன் மழை
கல்லறை எழுத்துக்களை
நெடும்பயண ஓய்வாய்
சிலுவைக்கரங்களில்
வந்தமர்ந்த பறவை
தத்தியிறங்கி தானியமென
கொறிக்கிறது
கல்லறை எழுத்துக்களின்
ஒற்றுப்புள்ளிகளை
தோற்றம் மறைவு என்ற
சொற்களுக்கிடையில்
கறுத்த அட்டைப்பூச்சி
மெல்ல ஊர்கிறது
பெயரைப் போர்த்தியிருக்கும்
பறவையின் எச்சத்தைக் கழுவி
மனதோடு வாசிக்கிறது மேகம்
திசையறியாது மிதந்த
ஒற்றையிறகு நனைந்து
ஒட்டுகிறது சிலுவை உச்சியில்
பளிங்குச் சதுரங்க மேடையில்
மழைத்துளிகளின்
காய் நகர்த்தலுக்கெதிராக
கிளையிலை துளை வழி
சூது நிரம்பிய ஆட்டத்தை
ஆடிக்கொண்டிருக்கின்றன
சூர்யக் கிரணங்கள்
மழைத்துளிகளும் ஒளிப்புள்ளிகளும
ஆடிச் சலித்துச் செல்ல
இருளின் மடியில்
தவழ்ந்திருக்கும் சமயம் வருகிறாள்
கைக்கும் வாய்க்கும் எட்டாமல்
நீலி நிலா
ஒற்றைமுலை குலுக்கி
அதிகாலை
கல்லறை இடுப்பின்
தாழ்வாரத்தில்
மொக்கவிழ்ந்த குறியாய்
முளைத்திருக்கிறது காளான்

( உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை )

திங்கள், 30 நவம்பர், 2009

மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா





அழைப்பிதழ்

மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும்
மக்கள் கலை இலக்கிய விழா


நாள் :26 டிசம்பர் 2009

சனிக்கிழமை பிற்பகல் 3.30மணி

இடம்: ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம். 636453
தொடர்புக்கு :9894605371,9894812474,9677520060,9789779214

பஸ்ரூட்: சேலம்-டூ-மேட்டூர்
பஸ் நிறுத்தம்: பொட்டனேரி

தெருக்கூத்து ஒரு மகத்தான கலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்லாது ஒப்பற்ற நமது பண்பாட்டு அடையாளமாகும். மலிந்து பெருகி வரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, தோல்பாவை கட்ட பொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள பூர்வ கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் சமூகத்தின் கடைகோடியில் வாழ்ந்து வரும் மக்கள் கலைஞர்கள் மீள

முடியாத வறுமையில் உழன்ற போதிலும் தம் உடல் பொருள் ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்.

நம் சகோதரர்களை இனம் கண்டு பாராட்டுவதும், அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச் செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதார சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும் அங்ஙனமே மணல்வீடு சிற்றிதழும் மற்றும் களரி தெருக்கூத்துப் பயிற்சி பட்டறையும் இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா கலைஞர் பெருமக்களுக்கான பாராட்டு விழாவாக அமைக்கப் பெற்றிருக்கிறது இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி மகிழ அன்போடு அழைக்கிறேன்.

இப்படிக்கு,
மு.ஹரிகிருஷ்ணன்
ஆசிரியர், மணல்வீடு



தலைமை : ச.தமிழ்ச்செல்வன்( மாநில பொதுச் செயலாளர், த.மு.எ.ச)


முன்னிலை: ஆதவன் தீட்சண்யா(ஆசிரியர் புது விசை)


சிறப்பு விருந்தினர்: எடிட்டர். பி. லெனின்.


நிகழ்ச்சித் தொகுப்பு: வெய்யில்,நறுமுகை. இராதாகிருஷ்ணன்








அமர்வு:1 மாலை 3.30-4.00மணிவரை


களரிக் கூட்டுதல்: அம்மாபேட்டை சரஸ்வதி நாடக சபா.

வரவேற்புரை: தக்கை.வே.பாபு

துவக்கவுரை: பிரபஞ்சன்


அமர்வு.2 மாலை 4-6மணி வரை

கிராமிய தெருக்கூத்து கலைஞர்களுக்கு, தெருக்கூத்துச்செம்மல்
தோற்பாவைக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு, நிகழ்த்துக்கலைச் செம்மல்,கலைச்சுடர் விருது& பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்

வாழ்த்துவோர்:

முனைவர் கே.ஏ. குணசேகரன்,முனைவர் மு.இராமசாமி
அம்பை,கிருஷாங்கினி,நாஞ்சில் நாடன்,பொ.வேல்சாமி,இமயம், ஹேமநாதன்(உதவி இயக்குநர் மண்டல கலை பண்பாட்டு மையம். சேலம்), பெருமாள் முருகன், புதிய மாதவி, பாமரன், லிங்கம்


சிறப்புரை: எடிட்டர் பி.லெனின்

நிறைவுரை: ச.தமிழ்ச்செல்வன்

நன்றியுரை: மு.ஹரிகிருஷ்ணன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வ.சண்முகப்ரியன், இர.தனபால்

வரவேற்புக்குழு: லக்ஷ்மி சரவணக்குமார்,செல்வ புவியரசன்,கணேசகுமாரன்,அகச்சேரன்,ராஜா.


மாலை6மணி முதல் 7மணி வரை : உணவு இடை வேளை


அமர்வு3: மாலை7மணி

நல்ல தங்காள் (கட்ட பொம்மலாட்டம்)

நிகழ்த்துவோர்: ஸ்ரீ இராம விலாஸ் நாடக சபாக்குழுவினர்,பெரிய சீரகாபாடி.
மிருதங்கம்:திருமதி.லதா
முகவீணை:திரு.செல்வம்(கண்டர் குல மாணிக்கம்)






அமர்வு4- இரவு 10 மணி

மதுரை வீரன் (தெருக்கூத்து)

நிகழ்த்துவோர்: எலிமேடு கலைமகள் நாடக சபா.
கோமாளி: மாதேஸ்
காசி ராஜன் :சண்முகம்
செண்பகவள்ளி:பழனிச்சாமி
சின்னான்:செல்லமுத்து
செல்லி:பிரகாஷ்
வீரன்:சதாசிவம்
பொம்மண்ண ராஜன்:வீராசாமி
வீர பொம்மன்:பெரிய ராஜு
பொம்மி:வடிவேல்
முகவீணை:குஞ்சு கண்ணு .செல்வம்.
மிருதங்கம்:வெங்கடாச்சலம், நடராஜன்
அரங்க நிர்வாகம்:சென்ன கிருஷ்ணன், வ. பார்த்திபன்.

(இவ்விரு நிகழ்வுகளுக்கு மட்டும்(கட்ட பொம்மலாட்டம் , தெருக்கூத்து)
பார்வையாளர் நன்கொடை:ரூ.50

நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அளிக்க விரும்புவோர்,

ஆசிரியர், மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர், சேலம் - 636 453 என்ற முகவரிக்கு பணவிடை மூலமாகவோ,

611901517766, சண்முகப்பிரியன் என்ற ICICI வங்கி எண்ணுக்கு நேரடியாகவோ அளிக்கலாம்.

திங்கள், 23 நவம்பர், 2009

இக்கணம்

தத்தளித்து
கால்துடுப்புகளசைத்து
கரையேற
எவ்வளவு முயற்சித்தும்
மூழ்கும் தருவாயிலிருக்கிறது
அத்தனை கால்களிருந்தும்
மரத்தினின்று
இடறி விழுந்த
கம்பளிப் பூச்சி
தான் மரண விளிம்பாகிவிட்ட
தவிப்பில் தன்னொரு உள்ளங்கையை
உதிர்த்தது அந்தக் கரையோரத்தரு
மழைத்துளிகள் குத்திப் புதையும்
புள்ளியினின்று
விரியும் வட்டங்கள்
ஒன்றையொன்று முத்தமிட்டு
மடிகின்றன
காற்றின் சுழிப்பில்
அவ்விலையைப் பூச்சி
பூச்சியை இலை
மாறி மாறி துரத்தியும்
எதிரெதிர்த் திசையில்
செல்ல நேர்ந்தும் என
தீராத அலைக்கழிப்பின் இறுதியில்
வெகு அருகில்
வீழ்ந்த மற்றொரு இலை
விளிம்பைப் பற்றி
ஏறியது பூச்சி
கரை
பரந்த நீர்வெளி தொடு வான்
இப்புறமிருக்கும் நீர்நடு தனிப்பாறை
என எல்லா திசைகளிலும்
சிறுசிறு தூரம்
சென்று சலித்துக் களைத்து
நிலைத்து தவழ்ந்து கொண்டிருக்கிறது
மென்னலைகளின் சீரான லயத்தில்
இலை மேல் ரயில்

திங்கள், 9 நவம்பர், 2009

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

கதவு

திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்
கதவின் பின்புறம் அவ்வப்போது
உறும்
பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும்
அங்கு யாருமில்லை எனக்
கருதவிடாது பார்த்துக் கொள்கின்றன
அயர்விலும் ஆற்றாமையிலும்
திரும்பச் செல்ல
எத்தனிக்கும் கணந்தோறும்
கதவு நோக்கி வரும் காலடியோசையொன்று
உன் காத்திருப்பின் எல்லைகளை நீட்டிக்கிறது
திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறாய்


ஊழியம் & கம்பெனி (பி) லிமிடெட்

நீங்கள் ஒரு ஓவியர் என்பதை நன்கு அறிவோம் அதனாலேயே
சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியை
வழங்கியிருக்கிறோம் உங்களுக்கு
அந்த இசைக் கலைஞரைப் பாருங்கள்
எவ்வளவு அமைதியாக மணியடித்துக் கொண்டிருக்கிறார்
ஏன் இப்படி உங்கள் கண்கள் கலங்கியிருக்கின்றன
நீங்கள் பயன்படுத்த வேண்டிய
சுண்ணமும் மட்டையும் காத்துக்கொண்டிருக்கின்றன
இப்போதே பணியைத் துவக்குங்கள்
இன்னும் சில தினங்களில் நமது ஆண்டு விழாவில்
கலந்து கொள்ள கடவுள் வர உள்ளார்
அதற்குள்ளாக அனைத்தும் தயாராக வேண்டும்
அதென்ன தூரிகையா
பணியிடத்திற்கு அதோடெல்லாம் வராதீர்கள்
நமது நிறுவனத்தின் விதிகளை அறிவீர்கள் தானே
பணிநேரத்தில் செல்பேசியை உபயோகிக்காதீர்கள்
சரி சீக்கிரம் வேலையைத் துவங்குங்கள்
கடவுளின் அதிகாரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்
பணிகளை மேறபார்வையிட.


முல்லா

கடிகாரங்களை விற்பதற்காக பாக்தாத்தின் கடைத்தெருக்களில்
நாள் முழுதும் சுற்றிக் கொண்டிருந்த முல்லா வீடு திரும்பிக் கொண்டிருந்தார் தன் ஒட்டகத்தில். எதிர்காலத்திற்குள் நுழையவே தெரியாத அந்தக் கடிகாரங்களை யாருமே வாங்கவே இல்லை வழக்கம் போல். சென்ற முறை பழங்களை மட்டுமே நறுக்கும கத்திகளைக் கொண்டு வந்த போதும் இப்படித்தான் நடந்தது. தாகத்தில் நா உலர பாலைவனத்தை அவர் கடந்து கொண்டிருந்தபோது மாறுவேடத்தில் அங்கு வந்த கடவுள் அவரை யாரெனக் கேட்டார். என் பெயர் முல்லா நஸ்ருதின் வாங்குவதற்கு யாரும் வராத பொருட்களைத் தயாரிப்பதில் மட்டுமே தேர்ச்சி பெற்றவன் என, புன்னகையோடு அவரின் கரங்களைப்பற்ற கடவுள் முனைந்தபோது, இந்தக் கரங்களை நான் பார்த்திருக்கிறேன் என்றார் முல்லா. எப்படியெனக் கடவுள் புருவமுயர்த்த, நான் நடந்து செல்லும் போது என் கால்களுக்கடியில் முள் வைத்துக்கொண்டே போகும் கரங்களை நன்கறிவேன் என்றார்.


மரப்பாச்சி

வேப்பமரத்தால் ஆன மரப்பாச்சி பொம்மையொன்று நெடுங்காலம் என் வீட்டிலிருந்தது. மிகுந்த காதலோடு அதற்கு என் பெயரை வைத்திருந்தேன். வாசனைத்திரவியங்கள் முகப்பூச்சு என என்னென்னவோ பூசியும் அதனிடமிருந்து இறுதிவரை அகலவில்லை வேம்பின் உலர்ந்த கசப்பு வாசனை. அதனிடம் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் மெல்லிய விம்மலோசை இரவுகளில் என் அறையெங்கும் வியாபிக்கிறது பேரிரைச்சலாக. அது என்னிடம் ஏதும் கேட்கவில்லை ஆயினும் அதற்கு தவறான உதவிகளையே செய்தேன் போலும். தன்னை இரண்டாகப் பிளக்கும் ஒரு கோடாரி அல்லது சாம்பலாய்த் தூளாக்கும் கொஞ்சம் நெருப்பு என எதையாவது பரிசளித்திருக்கலாம் நான். ஒரு நாள் அது திடீரெனக் காணாமல் போய்விட்டது. அதுமுதலாய் அதனை எல்லா இடத்திலும் தேடிவருகிறேன். அதனிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கவேண்டும். அவ்வளவே. திடீரெனக் காணாமல் போவது எப்படியென.

(காயசண்டிகை கவிதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம்)

வியாழன், 22 அக்டோபர், 2009

ராஜசுந்தரராஜன் கவிதைகள்

*

குற்றுயிரும் கொலையுருமாய்க் கிடந்த
ஒரு சிகரெட்டை
முற்றாகக் கொன்றவன் நான்
அதில் எனக்குக்
குற்றபோதம் இல்லை


*

வான பரியந்தம் உயர்ந்த கோபுரத்தில் ஏறி
இல்லை என்று கைவிரித்து நிற்கிறது
சிலுவை


*

மழை இல்லெ தண்ணி இல்லெ

ஒரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்து இல்லெ

அடைக்கலாங் குருவிக்குக்
கூடுகட்ட
என் வீடு சரிப்படலெ

நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்


*

கிறுக்குப்பிடித்த பெண்ணைக்
கர்ப்பவதியாக்க
எவன் மனம் துணிந்தது இப்படி
அதற்கு முன் இவளைப்
புஷ்பவதியாக்க
இறை மனம் துணிந்ததே எப்படி


*

காக்கைகள் கொத்த
எறுமை நிற்கிறது இணங்கி
உண்ணிகள் காரணம்


சருகு

நழுவியது கிளையின் பிடி
விடுதலை.

விடுபட்ட மறுகணம்
மாட்டிக்கொண்டதோ காற்றின் கையில்.
அலைக்கழிப்பு

ஒரு குடிப் பிறந்தோம்

ஒரு கனி
ஒரு இலை
உதிர்ந்தன பழுத்து.

மண்ணோடு கலந்த வழியில்
ஒன்று மரம்
ஒன்று உரம்.


*

ஒரு சுடர்
ஒரு நிழல்
இல்லை தொல்லை

இருள் போக்க வந்ததுகள் என்று
வழி நெடுக விளக்குகள்.
ஒன்றின்மீதோன்று புரண்டு
குழப்பித் தொலைக்குதுகள் நிழலுகள்.


*

ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம் நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.


*

பின்தங்கிப் போன என்னை
உன் இகழ்ச்சி – நகும் - பார்வையின்
கீழ் நிறுத்திக் காணவா
உச்சியை எட்டி ஓடினாய்.
நடந்தது இது தான்.
இடைவழியில், சிறுதொலைவு.
வண்ணத்துப்பூச்சிகளின் பின்னோடி
போட்டிப்போட மறந்துவிட்டேன்.



*

அப்படி ஒரு நிலைமை
வரும் என்றால் அக்கணமே
வாழோம் என்றிருந்தோம்

வந்தது.
அப்படியும் வாழ்கிறோம்.

நம்மோடு நாம் காண
இத்தென்னைகள்
தம் மேனி வடுக்கள் தாங்கி.


*

கண்டெடுத்தோம்
அப்படியும் கவலைப்படுகிறோம்
அய்யோ யார் தொலைத்தாரோ என்று.


( முகவீதி கவிதைத்தொகுப்பு, தமிழினி பதிப்பகம் )

வியாழன், 15 அக்டோபர், 2009

எம் . யுவன் (யுவன் சந்திரசேகர்) கவிதைகள்


பங்களிப்பு

இந்த வரியை
நான் எழுதும்போது
கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.
கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.
சில பேர் சத்தியத்துக்காக
சிலபேர் காரணமறியாமல்.
கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.
சிலபேர் சாவதற்காக
சிலபேர் கொல்லப்படுவதற்காக.
மீதிப்பேர் இடைவெளியை
நிரப்பவென்று ஏதேதேதோ
செய்து விட்டார்கள்
ஒருவருமே கவனிக்காது
கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு
என்னுடைய பங்களிப்பாய்
ஒரு பதினாறு வரிகள்.


விலாசம்

தீர்மானத்தின் ஆணிகள்
அறையப்படாத சவப்பெட்டி
என்று என் கபாலத்தைச்
சொல்லலாம் நீங்கள்.
ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி
மொழியின் புதைமணலில்
கழுத்திறுக மூழ்கும்
முட்டாள் ஜென்மம் என்றும்.
இரவின் வைரம் விடிந்
ததும் காக்காப்பொன்னாக
மறுகும் லோபியாய்
தூண்டிமுள்ளில் மாட்டி
கூடைக்குச் சேரும் மடமீனென்று.
நழுவிப்போகும்
கணத்தின் சிலிர்ப்பை
ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்
வீணைத்தந்தி என்று.
அல்லது
இரா.சு.குப்புசாமி,
23 செக்கடித்தெரு,
மேலகரம்,
காறையூர் (வழி)
என்று.


கொண்டுவந்த கடல்

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
சென்ற முறை சிப்பி.
அதற்கு முன்னால் சோழி
பாலிதீன் பைகளில்
செதில் கலந்த மணலும்,
கரைக்கோயில் குங்குமமும்
கொண்டு வந்ததுண்டு.
ஒரு முறைகூட
கடலின் பரிதவிப்பை
பரிவை ஆறுதலை
கொண்டு வர முடிந்ததில்லை.
சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
பாதியாகிச்
செத்துக் கிடக்கிறது அலமாரியில்.


தொலைந்தது எது

தொலைந்தது எதுவென்றே
தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்.
தொலைந்ததின் ரூபம்
நிறம் மனம் எதுவும்
ஞாபகமில்லை.
மழையில் நனைந்த பறவையின்
ஈரச்சிறகாய் உதறித் துடிக்கும்
மனதுக்கு
தேடுவதை நிறுத்தவும் திராணியில்லை.
எனக்கோ பயமாயிருக்கிறது
தேடியது கிடைத்தபின்னும்
கிடைத்தது அறியாமல்
தேடித் தொலைப்பேனோ என்று.

( முதல் 74 கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம் )

செவ்வாய், 13 அக்டோபர், 2009

ஆனந்த் கவிதைகள்



அந்த நாள்
எனக்கு நன்றாக
நினைவில் இருக்கிறது

அன்று என்ன
நடந்தது என்பதுதான்
ஞாபகமில்லை




மாடிப்படியில்
ஏறிக்கொண்டும்
இறங்கிக்கொண்டும்
இருக்கிறார்கள் அனைவரும்

ஏறிக்கொண்டும்
இறங்கிக் கொண்டும்
இருக்கிறது மாடிப்படி



படுகை

பறக்கும் பறவையில்
பறக்காமல் இருப்பது
எது

ஓடும் ரயிலில்
ஓடாது நிற்கிறது
ஜன்னல்

எங்கும் போகாமல்
எங்கும் போய்க் கொண்டிருக்கிறது
சாலை

எப்போதும் போய்க் கொண்டே
எங்கேயும் போகாமல் இருக்கும்
நதி
எங்கும் போகாமல் இருக்கும்
படுகையின்மேல்
எப்போதும் போய்க் கொண்டிருக்கிறது



சுவருக்கு வெளியில் இருந்து
சுவர்களைப் பார்த்து இருந்தேன்
உள்ளும் புறமும் தெரிந்தது

பின் சுவரானேன்
உள்ளும் புறமும்
ஒன்றெனத் தெரிந்தது

இப்போது
சுவருக்குள் என்ன இருக்கிறது
என்பதைத்தான்
பார்க்கவேண்டும்

சுவர் தன்னைப் பார்க்கும்போது
சுவர் இல்லாமல் போகிறது

( அளவில்லா மலர் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம். இவரும் தேவதச்சனும் இணைந்து அவரவர் கைமணல் எனும் தங்கள் முதல் கவிதைத் தொகுதியை கொண்டுவந்தார்கள் என அறிகிறேன். )