வெள்ளி, 10 ஏப்ரல், 2009

மு. சுயம்புலிங்கம் கவிதைகள்



சரிசெய்

நீ கவனிக்கறதே இல்லை
உன்னுடைய சாட்டையில்
வார் இல்லை
முள் இல்லை
சரி செய் பிரயோகம் பண்ணு
அப்போது தான்
வசத்துக்கு வரும்
அதுகள்
உன் வசத்துக்கு வரும்.


சுய வேலைவாய்ப்பு

காலையில் எழும்ப வேண்டியது
ஒரு கோணியோடு
ஒரு தெருவு நடந்தால் போதும்
கோணி நிறைந்து விடும்
காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன
தலை நிமிர்ந்து வாழலாம்.


பஞ்சனை

எதுக்கு
நாக்கத் துருத்திக்கிட்டு வாரிய.......
அடிக்கிற சோலியெல்லாம
வச்சிக்கிடாதிங்க.........

ஏங்கிட்ட
என்ன குத்தம் கண்டுட்டிய.......
ஒங்களுக்கு
நான் என்ன பணிவிட செய்யல
சொல்லுங்க.........

நீங்க தேடுன சம்பாத்யத்த
தின்னு அழிச்சிட்டனா..........
ஒங்களுக்கு தெரியாம்
எவனையும் கூட்டி வச்சிக்கிட்டு
வீட்டுக்குள்ள ஒறங்குதனா.........

ஒங்களுக்கு வாக்கப்பட்டு
ரொம்பத்தான்
நான் சொகத்த கண்டுட்டேன்...........
பஞ்சனைல
உக்கார வெச்சித்தான
எனக்கு நீங்க
சோறு போடுதிய.........

எஞ்சதுரத்த
சாறாப் பிழிஞ்சிதான
ஒரு வா தண்ணி குடிக்கறேன்...........
ஒங்க மருவாதிய
நீங்களாக் கெடுத்துக்கிடாதீக..........
எடுங்க கைய
மயித்த விடுதியளா என்ன......

அவள் வார்த்தைகளில்
ஆவேசம் பொங்கி
கரை புரண்டு வந்தது
அவள் வார்த்தைகளில்
நேர்மையும் சத்தியமும் இருந்தது

அவன் பிடி தளர்ந்தது
திருணைல கெடக்கான் அவன்
குடிச்சது
தின்னது
எல்லாத்தையும் கக்கிக்கிடடுக் கெடக்கான்

அவா
புருசனக் கழுவி
வீட்டக் கழுவி
எல்லாத்தையும்
சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்



முந்தித்தவம்

நீ ஒரு ஆம்பள
உனக்கு ஒரு பொண்டாட்டி......

புள்ளைகளுக்கு
கலைக்டர் வேல வேண்டாம்.......
ஒரு எடுபிடி வேல
வாங்கிக் கொடுக்க முடியாது
உன்னால.......

வீடு வித்து
வாயில போட்டாச்சி.......
தாலிநூல் வித்துத் தின்னாச்சி......
கம்மல் இருக்கா.....
மூக்குத்தி இருக்கா.....

வீட்டு வாடகைக்கு
பொம்பள ஜவாப் சொல்லணும்

விடிஞ்சாப் போற
அடஞ்சா வாற

மண்ணெண்ண அடுப்பில் சமச்சி
வீடு பூராவும் கரி

ஒரு பாவாடைக்கு
மாத்துப் பாவாட கெடையாது
முகத்துக்குப் பூச
செத்தியங்காணு
மஞ்சத்துண்டு இல்ல
நல்லாப் பொழைக்கறவா
சிரிக்கறா

ஒனக்கு
ஆக்கி அவிச்சி
ருசியா கொட்டணும்

கால் பெருவிரலை நீட்டி
ஒத்தச் செருப்பை
மெள்ள இழுத்தேன்
பாழாய்ப் போன ரப்பர்
வார் அறுந்திருக்கிறது

அவள் பின்கழுத்தில்
என் கண்கள்
செல்லமாய் விழுந்தன

அந்த மஞ்சக்கயிற்றில்
ஒரு ஊக்கு இருக்கு
கேக்கலாம்
கேளாமலேகூட
தென்னி எடுக்கலாம்

அவள் அழுவதைப் பார்க்க
இஷ்டம் இல்லை
செருப்பை விட்டுவிட்டு
நடக்கிறேன்.

தளபதி

என் பேரன் பேத்திகளுக்கு நான் தாத்தா
எங்க வூர் இளைஞர்களுக்கு நான் தான் தளபதி

மக்கள் கடல்

தூண்டில் போட்டும் கொல்கிறார்கள்
வலை போட்டும் பிடிக்கிறார்கள்

( உயிர்மை வெளியீட்டில் நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள் தொகுப்பிலிருந்து )

4 கருத்துகள்:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

மானுடத்தின் வலி சொல்லும் கவிதைகள். மனதை ஏதோ செய்கின்றன.

-ப்ரியமுடன்
சேரல்

பெயரில்லா சொன்னது…

அருமையான அறிமுகம்,
அத்தனையும் யதார்த்தமான கவிதை
வலி நிரப்புகின்றது.

ச.முத்துவேல் சொன்னது…

விளிம்பு நிலை(மக்களின்) கவிதைகள்.அதன் சுயத்தோடு இருக்கிறது.தளபதி கவிதை, நல்ல அரசியல் கவிதை.
படிக்கக்கொடுத்ததற்கு நன்றி.(சுயம்புலிங்கம் உயிரோடு இருக்கிறார்தானே? அவருடைய பெயரில் ஒரு வலைப்பூ இருக்கிறது.suyambulimkam.blogspot.com)

யாத்ரா சொன்னது…

சேரல், பெயரிலி, முத்துவேல் நன்றிங்க அனைவருக்கும்.

முத்துவேல் கவிஞரைப்பற்றி எந்தக் குறிப்பும் நூலில் இல்லை.