வியாழன், 22 அக்டோபர், 2009

ராஜசுந்தரராஜன் கவிதைகள்

*

குற்றுயிரும் கொலையுருமாய்க் கிடந்த
ஒரு சிகரெட்டை
முற்றாகக் கொன்றவன் நான்
அதில் எனக்குக்
குற்றபோதம் இல்லை


*

வான பரியந்தம் உயர்ந்த கோபுரத்தில் ஏறி
இல்லை என்று கைவிரித்து நிற்கிறது
சிலுவை


*

மழை இல்லெ தண்ணி இல்லெ

ஒரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்து இல்லெ

அடைக்கலாங் குருவிக்குக்
கூடுகட்ட
என் வீடு சரிப்படலெ

நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்


*

கிறுக்குப்பிடித்த பெண்ணைக்
கர்ப்பவதியாக்க
எவன் மனம் துணிந்தது இப்படி
அதற்கு முன் இவளைப்
புஷ்பவதியாக்க
இறை மனம் துணிந்ததே எப்படி


*

காக்கைகள் கொத்த
எறுமை நிற்கிறது இணங்கி
உண்ணிகள் காரணம்


சருகு

நழுவியது கிளையின் பிடி
விடுதலை.

விடுபட்ட மறுகணம்
மாட்டிக்கொண்டதோ காற்றின் கையில்.
அலைக்கழிப்பு

ஒரு குடிப் பிறந்தோம்

ஒரு கனி
ஒரு இலை
உதிர்ந்தன பழுத்து.

மண்ணோடு கலந்த வழியில்
ஒன்று மரம்
ஒன்று உரம்.


*

ஒரு சுடர்
ஒரு நிழல்
இல்லை தொல்லை

இருள் போக்க வந்ததுகள் என்று
வழி நெடுக விளக்குகள்.
ஒன்றின்மீதோன்று புரண்டு
குழப்பித் தொலைக்குதுகள் நிழலுகள்.


*

ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம் நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.


*

பின்தங்கிப் போன என்னை
உன் இகழ்ச்சி – நகும் - பார்வையின்
கீழ் நிறுத்திக் காணவா
உச்சியை எட்டி ஓடினாய்.
நடந்தது இது தான்.
இடைவழியில், சிறுதொலைவு.
வண்ணத்துப்பூச்சிகளின் பின்னோடி
போட்டிப்போட மறந்துவிட்டேன்.



*

அப்படி ஒரு நிலைமை
வரும் என்றால் அக்கணமே
வாழோம் என்றிருந்தோம்

வந்தது.
அப்படியும் வாழ்கிறோம்.

நம்மோடு நாம் காண
இத்தென்னைகள்
தம் மேனி வடுக்கள் தாங்கி.


*

கண்டெடுத்தோம்
அப்படியும் கவலைப்படுகிறோம்
அய்யோ யார் தொலைத்தாரோ என்று.


( முகவீதி கவிதைத்தொகுப்பு, தமிழினி பதிப்பகம் )

வியாழன், 15 அக்டோபர், 2009

எம் . யுவன் (யுவன் சந்திரசேகர்) கவிதைகள்


பங்களிப்பு

இந்த வரியை
நான் எழுதும்போது
கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.
கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.
சில பேர் சத்தியத்துக்காக
சிலபேர் காரணமறியாமல்.
கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.
சிலபேர் சாவதற்காக
சிலபேர் கொல்லப்படுவதற்காக.
மீதிப்பேர் இடைவெளியை
நிரப்பவென்று ஏதேதேதோ
செய்து விட்டார்கள்
ஒருவருமே கவனிக்காது
கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு
என்னுடைய பங்களிப்பாய்
ஒரு பதினாறு வரிகள்.


விலாசம்

தீர்மானத்தின் ஆணிகள்
அறையப்படாத சவப்பெட்டி
என்று என் கபாலத்தைச்
சொல்லலாம் நீங்கள்.
ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி
மொழியின் புதைமணலில்
கழுத்திறுக மூழ்கும்
முட்டாள் ஜென்மம் என்றும்.
இரவின் வைரம் விடிந்
ததும் காக்காப்பொன்னாக
மறுகும் லோபியாய்
தூண்டிமுள்ளில் மாட்டி
கூடைக்குச் சேரும் மடமீனென்று.
நழுவிப்போகும்
கணத்தின் சிலிர்ப்பை
ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்
வீணைத்தந்தி என்று.
அல்லது
இரா.சு.குப்புசாமி,
23 செக்கடித்தெரு,
மேலகரம்,
காறையூர் (வழி)
என்று.


கொண்டுவந்த கடல்

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
சென்ற முறை சிப்பி.
அதற்கு முன்னால் சோழி
பாலிதீன் பைகளில்
செதில் கலந்த மணலும்,
கரைக்கோயில் குங்குமமும்
கொண்டு வந்ததுண்டு.
ஒரு முறைகூட
கடலின் பரிதவிப்பை
பரிவை ஆறுதலை
கொண்டு வர முடிந்ததில்லை.
சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
பாதியாகிச்
செத்துக் கிடக்கிறது அலமாரியில்.


தொலைந்தது எது

தொலைந்தது எதுவென்றே
தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்.
தொலைந்ததின் ரூபம்
நிறம் மனம் எதுவும்
ஞாபகமில்லை.
மழையில் நனைந்த பறவையின்
ஈரச்சிறகாய் உதறித் துடிக்கும்
மனதுக்கு
தேடுவதை நிறுத்தவும் திராணியில்லை.
எனக்கோ பயமாயிருக்கிறது
தேடியது கிடைத்தபின்னும்
கிடைத்தது அறியாமல்
தேடித் தொலைப்பேனோ என்று.

( முதல் 74 கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம் )

செவ்வாய், 13 அக்டோபர், 2009

ஆனந்த் கவிதைகள்



அந்த நாள்
எனக்கு நன்றாக
நினைவில் இருக்கிறது

அன்று என்ன
நடந்தது என்பதுதான்
ஞாபகமில்லை




மாடிப்படியில்
ஏறிக்கொண்டும்
இறங்கிக்கொண்டும்
இருக்கிறார்கள் அனைவரும்

ஏறிக்கொண்டும்
இறங்கிக் கொண்டும்
இருக்கிறது மாடிப்படி



படுகை

பறக்கும் பறவையில்
பறக்காமல் இருப்பது
எது

ஓடும் ரயிலில்
ஓடாது நிற்கிறது
ஜன்னல்

எங்கும் போகாமல்
எங்கும் போய்க் கொண்டிருக்கிறது
சாலை

எப்போதும் போய்க் கொண்டே
எங்கேயும் போகாமல் இருக்கும்
நதி
எங்கும் போகாமல் இருக்கும்
படுகையின்மேல்
எப்போதும் போய்க் கொண்டிருக்கிறது



சுவருக்கு வெளியில் இருந்து
சுவர்களைப் பார்த்து இருந்தேன்
உள்ளும் புறமும் தெரிந்தது

பின் சுவரானேன்
உள்ளும் புறமும்
ஒன்றெனத் தெரிந்தது

இப்போது
சுவருக்குள் என்ன இருக்கிறது
என்பதைத்தான்
பார்க்கவேண்டும்

சுவர் தன்னைப் பார்க்கும்போது
சுவர் இல்லாமல் போகிறது

( அளவில்லா மலர் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம். இவரும் தேவதச்சனும் இணைந்து அவரவர் கைமணல் எனும் தங்கள் முதல் கவிதைத் தொகுதியை கொண்டுவந்தார்கள் என அறிகிறேன். )

செவ்வாய், 6 அக்டோபர், 2009

கொஞ்சம் திரும்பிப்பார்க்கிறேன்



இப்பதிவை எழுத அழைத்த நண்பர் நர்சிம் அவர்களுக்கு நன்றி.

திரும்பிப்பார்த்தல் எப்போதுமே லயிப்பான விஷயமாக இருந்தில்லை. காரணம் இப்படியான மகிழ்ச்சியான காலங்கள் தொலைந்து போயிற்றே என்ற விசாரம் ஒரு புறம், மனதைத் துகள்துகளாகச் சிதறடித்த துர்நிகழ்வுகள் மீட்டப்படும் போதான கணங்களின் தாங்கவியலாத அவஸ்தைகள் ஒரு புறம் என முத்தம் பெற்ற இடத்தை தடவிப்பார்த்துக் கொள்வதும் தழும்புகளை குத்திக் கிளறிப்பார்ப்பதுமான செய்கைகளை கவனத்தோடே தவிர்க்க முயற்சித்திருக்கிறேன். நிகழின் கணங்கள் மட்டும் அவ்வளவு உணக்கையான தட்பவெப்பத்தில் இருக்கிறதாயென்ன.

எழுத்துக்கு மனப்பதிவுகள் அவசியமாகிறது, அவற்றைத் துறந்து சுதந்திரமாகி விடத் துடிப்பவன் எழுதுவது, சுயசூன்யம் வைத்துக் கொள்வது போன்றதானது. அதைத் தவிர்த்துவிட எவ்வளவோ முயன்று தோற்றிருக்கிறேன். எழுத்தின் மூலமான, மனப்பதிவுகளை சேமிப்பதை அவற்றைப் பற்றியதான அபிப்ராயங்கள் உருவாக்கிக் கொள்வதை அவைகள் என்னை வதைக்க அனுமதிப்பதை சினத்தையும் வெறுப்பையும் ஏன் அன்பையும் நெகிழ்வையும் கூட தூண்டுவதை தவிர்த்து விட வேண்டுமென்பது என் கடந்த காலம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடமாக நினைத்திருந்தேன். எந்த தப்பித்தலுக்கான முயற்சியும் எந்த விடுதலையையும் வழங்கிவிடவில்லை என்பது வேறு விஷய்ம்

ஒரு வித வெறுமையை எனக்குள் சிருஷ்டித்துக் கொள்வதே பிரதான நோக்கமாயிருந்தது, இந்த வெறுமையைத் தான் நான் ஓயாது என் எழுத்துகள் மூலமாக அடைந்து கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். என் எல்லா பிணைப்புகளிலிருந்தும் சப்தமில்லாமல் உதிரும் இலைபோன்று என்னை துண்டித்துக் கொள்வதே என் சகல துயரத்திலிருந்துமான விடுதலையாக இருக்க முடியும் என்பது என் எண்ணமாயிருந்தது. என் இச்செயற்பாடுகளின் காரணமாக ஓஷோவும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் இருந்திருக்கிறார்கள் என்பதை இப்போது உணரமுடிகிறது. இந்த மனநிலை ஒரு பருவம், அடுத்த பருவம் இதற்கு எதிர் நிலையிலிருக்கும். இப்படி ஒரு நிலைப்பாட்டிலும் அதற்கு எதிர்நிலையிலும் மாறி மாறி இருந்திருக்கிறது என் கடந்த பத்து வருடங்கள்.

என் நிலை ஒரு மாதிரி இரட்டைநிலை, நீரின் ஈர ஸ்பரிசத்திற்கும் ஆசை, கனமின்றி ஓட்டைக் குடமாகவும் இருக்க வேண்டும். இதை ஈடு செய்யும் வகையில் இலக்கியங்கள் இருந்தன. பத்து வருடங்கள் அவை என்னோடு கூடவே நான் அவைகளோடு கூடவே இருந்து வந்திருக்கிறோம். இவை என் புறவுலகின் பற்றற்ற தன்மைக்கும் அகத்தின் வெறுமைக்கும் அவ்வப்போது தீனியிட்டு வந்தன.

கணினி என்கிற தொழில் நுட்பம் 2006 வரை எனக்கு மிக அந்நியமாகவே இருந்து வந்திருக்கிறது. சுயமாக மின்னஞ்சல் கூட கிடையாது, முற்றிலும் பூஜ்யம். இப்போதும் ஏனென்று தெரியவில்லை பூஜ்ய நிலையின் மேல் தீராத காதல் இருந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி அந்த நிலையைத் தொட்டுவிட்டு வருவது எனக்கு பிடித்தமான செய்கையாக இருந்திருக்கிறது. பிறகான காலகட்டத்தில் பணியின் படிநிலைகளில் மேசையும் கணிணியுமாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்பொழுதும் அதை முழுமையாக பயில முடியவில்லை. கழுத்தை நெறிக்கும் தேவையின் கரங்களை விலக்குமளவிற்கு கற்றுக் கொண்டேன்.

பிறகு இணையம் பரிச்சயமானது, கூகுளில் எதையெதையோ தேடித் தேடி தொலைந்து போனேன். ஒரு சுபயோக சுபதினத்தில் வலையில் மேய்ந்து கொண்டிருக்கையில் தமிழ் தட்டுப்பட இடறி விழுந்து எழுந்து நிற்க இலக்குகளற்ற யாத்ரீகனுக்கு திறக்கப்படும் மாயக்குகைகள் போன்று திறந்தன பிளாகுகள். பிளாக் என்கிற தளங்களை அவைகள் பிளாக் என்று தெரியாமலே வாசித்திருக்கிறேன், இப்போதைய என் நண்பர்களை அப்போதே புக்மார்க் செய்யத் தெரிந்துகொண்டு, செய்து தொடர்ச்சியாக வியந்து வாசித்துவந்தேன், உடனடி கருத்துப்பரிமாற்றங்கள் பரஸ்பர நட்புகள் சர்ச்சைகள் மோதல்கள் என பல தளங்களில் விரிந்திருந்தது பதிவுலகம்.

இலக்கியப் பிரதிகளோடு வலைப்பதிவுகள் வாசிப்பதும் வழமையாகிவிட்டது. அப்பொழுதும் பிளாக் பற்றிய எந்த நுட்பங்களும் அறிந்திருக்கவில்லை. பின்னூட்டமிடக்கூடத் தெரியாது. 2009 பிப்ரவரி வரை எனக்கு ஜிமெயில் முகவரி கூட கிடையாது. தம்பி மற்றும அவனுடைய ஒரு நண்பன் உதவியோடு ஜிமெயில் முகவரி துவங்கி, அப்போதே பிளாக் என்ற சொல்லைக் காணுற பிளாகும் துவங்கியாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஜன்னலையும் திறந்து பார்த்து தளத்தைக் கட்டமைத்தாகிவிட்டது. தமிழில் எப்படி தட்டச்சுவது, Google transliteration கிடைத்தது, ஆங்கிலத்தில் தட்டச்ச தமிழில் வந்தது, இப்படி எனக்கு மிகப்பிடித்த கவிதைகளை சில பதிவுகளாக இடத்துவங்கினேன்.

அதுவரையில் நான் வாசித்து வந்த தளங்களில் பின்னூட்டமிட கற்றுக்கொண்டுவிட்டேன். வண்ணதாசன் என் ஆதர்சம், வண்ணதாசன் எழுத்துகள் என ஒரு நான்கு பக்க அளவில் Google transliteration ல் தட்டச்சிய கட்டுரை காணாமல் போனது நொடியில் ஏதோ தொழில் நுட்பப் கோளாறு காரணமாக. அந்த ஒடிந்த மனநிலையில் அப்படி காணாமல்போனதையே நான்குவரிப்பதிவாக்கி பதிவிட்டேன். அப்போது தான் NHM writer உபயோகிக்கச் சொல்லி ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்களிடமிருந்து பின்னூட்டம் வந்தது. பிறகு அவ்வப்போது எழுத்துப்பிழைகளை சுட்டியும் தன் விமர்சனங்களை மென்மையாக தெரிவித்தபடியும் இருந்தார்.

பிறகு ஆதவா, ச முத்துவேல், அனுஜன்யா, மாதவராஜ், வடகரைவேலன் அண்ணாச்சி,,,,,,,, மற்றும பலர் தொடர்ந்து வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டது மிகுந்த ஊக்கமளிப்பதாயிருந்தது. ஒரு நாள் மதியம் பதிவுப்பக்கம் வருகையில், என் சதுரங்கம் கவிதையை தன் வலைப்பப்பக்கத்தில் அறிமுகப்படுத்தி பதிவிட்டிருந்தார் ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்கள். அன்று அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

பிறகு எவ்வளவு அன்புள்ளங்கள். அந்தப்பட்டியல் மிக நீளமானது. ஒரு கைக்குழந்தையைப் போல் அவர்கள் கரங்களில் வலம் வரத்துவங்கினேன். எவ்வளவு அன்பு, நட்புகள், நல்லிதயங்கள் என இவ்வருட பிப்ரவரி முதல் இது வரையிலான ஏழு மாதங்களிலான பயணம் மிக இனிமையானது.

வலையுலகில் முதலில் தொலைபேசியது ச.முத்துவேல் அவர்களிடம் தான், முதலில் பார்த்ததும் அவரையும் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களையும். பிறகு அநேகமாக எல்லோரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இப்பதிவுலகம் எனக்களித்திருக்கும் நட்பு வட்டத்தை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வெறுமையை தனிமையை உறவின் பிரிவின் வலியை வாழ்வின் அலைக்கழிப்பை என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டபோது இந்த நட்பு வட்டத்திடமிருந்து ஆறுதலாகப் பெற்ற சொற்களின் கதகதப்பு இன்னும் அப்படியே இருக்கிறது.

தற்போது எதுவும் எழுதுவதில்லையே என நண்பர்கள் கேட்பதுண்டு, தற்போதைய வேலைப்பளு காரணம் எனத் தோன்றினாலும் இன்னும் ஆழ்ந்து யோசிக்க ஒரு காரணம் தென்பட்டது. எனக்கு வருடமொருமுறை பருவகாலம் மாதிரி ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்துவிடும் (உண்மை நம்புங்கள்), அந்த பைத்தியநிலை சில மாதங்கள் நீடிக்கும், பிறகு இயல்பு நிலை திரும்பிவிடும். பிறகு குறிப்பிட்ட இடைவெளி விட்டு அடுத்த வருடத்தில் அந்தப் பருவம் திரும்பவரும். அந்தக் காலகட்டத்தில் வித்தியாசமான அந்நியமான செய்கைகளை செய்து வந்திருக்கிறேன். அப்படியான செய்கைகளில் எழுதுவதும் ஒன்று.

கொஞ்சம் என்று நிறையவே திரும்பிப்பார்த்துவிட்டேன். :)

வியாழன், 1 அக்டோபர், 2009

சங்கர ராம சுப்ரமணியன் கவிதைகள்



சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை

தலைப்பிரட்டைகளை
மீன்களென்று எண்ணி
நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து அள்ளி
சட்டைப்பையில்
நிரப்பிச்செல்லும் சிறுவர்கள் நீங்கள்
அவை
உங்கள் விருப்பப்படியே
உங்கள் தலைக்குள்ளும்
சில நாட்களுக்கு
அவரவர் வசதிக்கேற்ப
குப்பிகளிலும்
மீனென நீந்தும்.
மீன்களைப் பிடிப்பதற்கு தேவையான
தூண்டில்கள்
வலைகள்
காத்திருப்பின் இருள்
எதையுமே அறியாத சிறுவர்கள்
நீங்கள்.
தலைப்பிரட்டைகளை
சட்டைப்பைக்குள் நிரப்பி
எடுத்துச்செல்கிறீர்கள்.
உலகிற்கும்
காத்திருக்கும் உங்கள் அம்மாவிற்கும்
யாரும் எதிர்பார்த்திராத
அரிய உயிர்த்துடிப்புள்ள
பரிசை எடுத்துச்செல்வதில்
உங்கள் மனம் படபடக்கிறது
உங்கள் தோழி தேஜீவிடமும்
இந்தப் பரிசை
பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும்
நண்பர்களே
உங்களது இப்போதைய
சந்தோஷத்திற்கு
நான் ஒரு பெயர் இடப்போகிறேன்.
தலைப்பிரட்டை.



ஒரு இரையை
புதிரானதும், கரடுமுரடானதுமான இடங்களில்
எலி ஒன்று இழுத்துச் செல்வது போல்
கனவொன்று
நேற்றும் என்னை வழியெங்கும்
அழைத்துச் சென்றது.
என்னை பரிதவிக்க விட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
அந்தக் கனவு கொறித்தது
மீதியாய் என்னை மதில்களிலிருந்து
தூக்கி எறிந்தது.
அபாயத்தில் அலறுவதும் பீதிக்குள்ளாவதுமாய்
வழியெங்கும் கனவின்
கொடூரப் பற்களிடையே
நடுங்கியபடி இருந்தேன்.
கனவில் எங்களைக் கண்டாயா என்று
நீங்கள் கேட்கிறீர்கள்
சற்று இளைப்பாறிவிட்டு
உங்களுக்கு நியாயமாகவே பதிலுரைக்கிறேன்.
நீங்கள் இல்லாமலா ?

நித்தியவனம்

தெலைபேசியில் உள்ள எண்காட்டியில்
எண்கள் நடுங்குவதை
முதல் முறையாய் பார்க்கிறீர்களா.
உங்கள் அழைப்புமணியின் ரீங்காரம்
இதவரை செல்லாத நிலவுகளின்
சுவர்களுக்குள்
ஊடுருவுவதை உணர்கிறீர்களா.
நீங்கள் அழைக்கும் நபர்
சற்றுமுன் இறந்தவராய் இருக்கக்கூடும்.



இரவு காகமென அமர்ந்திருக்கிறது
உயிர்
ஒரு கொக்கின்
வெளிச்ச உடலுடன்
ஆஸ்பத்திரி காரிடாரில் நடந்து
வெளியேறியது.
கொக்கும் காகமும்
ஒரு நித்ய வனத்திற்குள்
ஜோடியாய் பறப்பதை
நீங்கள் பார்த்தீர்கள்
நான் பர்ததேன்.


( சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை, சந்தியா பதிப்பகம். முதலில் இவரின் காகங்கள் வந்த வெயில் தொகுப்பு தான் படிக்க கிடைத்தது, அது இவரின் பிற தொகுதிகளையும் தேடும் ஆர்வத்தைத் தூண்டியது, பிறகு அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள், தற்போது இந்தத் தொகுப்பும் வாசிக்க முடிந்தது. இவரின் முதல் தொகுப்பான மிதக்கும் இருக்கைகளின் நகரம் இன்னும் வாசிக்க கிடைக்கவில்லை. வாசகனை மிரட்டாத எளிய ஆற்றொழுக்கான உரைநடையில் கவித்துவ புனைவுகளாய் இக்கவிதைகள் நிறைவான வாசிப்பனுபவத்தையும் கவிதானுபவத்தையும் நல்குகிறது. )