வெள்ளி, 24 ஏப்ரல், 2009

நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறவராக இருந்தால்



ஸ்ரீநேசன் கவிதை

கொலை விண்ணப்பம்


நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறவராக இருந்தால்
முதலில் என்னைத் திட்டுங்கள் மோசமான
காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகளால்
தவறாமல் அம்மாவுடனான எனது உறவை
அதில் கொச்சைப் படுத்துங்கள்
எதிர்வினையே புரியாத என்னைக்
கண்டு இப்போது எரிச்சலடையுங்கள்
அதன் நிமித்தமாக என்னைச் சபியுங்கள்
நான் லாரியில் மாட்டிக்கொண்டு சாக வேண்டுமென்று
இல்லையெனில் நள்ளிரவில் நான் வந்து திறக்கும்
என் வீட்டுப் பூட்டில் மின்சாரத்தைப் பாய்த்து வையுங்கள்
அல்லது நான் பருகும் மதுவில் விஷம் கலந்து கொடுங்கள்
முடியாத பட்சத்தில் மலையுச்சியை நேசிக்கும் என் சபலமறிந்து
அழைத்துச் சென்று அங்கிருந்து தள்ளி விடுங்கள்
அது அநாவசியமான வேலை என நினைத்தால்
என் முதுகிலேனும் பிச்சிவா கத்தியால் குத்துங்கள்
நீங்கள் தைரியம் கொஞ்சம் குறைவானவரெனில்
ஆள் வைத்துச் செய்யுங்கள்
தடயமே தெரிய வரக்கூடாது என்றால்
பில்லி சூன்யமாவது வையுங்கள்
இதுவெதுவும் பொருந்தவில்லையெனில்
ஆற்றில் மூழ்கடிக்கலாம்......
தூக்கேற்றிக் கொல்லலாம்.....
பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தலாம்......
இவற்றையெல்லாம் முயற்சித்துப் பாருங்கள்
ஒன்றினாலும் பலனில்லாத பட்சத்தில்
என் மனைவியை வன்புணர்ச்சி செய்யுங்கள்
அல்லது என் குழந்தைகள் தூங்கும் போது
பாறாங்கல்லால் தலை நசுக்குங்கள்
அப்படியும் நான் உயிரோடு தொடர்ந்திருந்தால்
தயவுசெய்து இறுதியிலும் இறுதியாக
அன்பையாவது செலுத்துங்கள்.

( ஸ்ரீநேசன் அவர்களுக்கும் தக்கை காலாண்டிதழுக்கும் நன்றி )

14 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

மொத்த கவிதையையும், கடைசி இரண்டு வரிகள் விழுங்கி விடுகின்றன.அன்பிற்குத்தான் எத்தனை வல்லமை!!!

ஆ.சுதா சொன்னது…

//மாதவராஜ் கூறியது...
மொத்த கவிதையையும், கடைசி இரண்டு வரிகள் விழுங்கி விடுகின்றன.அன்பிற்குத்தான் எத்தனை வல்லமை!!!//

உண்மை. கவிதை சொல்லும் அன்பு
படிப்பவனை கொலை செய்யும்,
கடைசியிலும் கடைசியாக படித்தவன்
அன்பை மட்டுமே கொலை செய்ய முடியாதவனாய் இருப்பான்.

அருமாயான கவிதை யாத்ரா.
மிக மிக அருமை!

ஆதவா சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க. கடைசியில் அன்பால் கொன்னுடுங்க என்று சொல்றீங்க.... நல்லா இருக்குங்க...

லேகா சொன்னது…

ரொம்ப நல்ல இருக்கு யாத்ரா!!

50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

மண்குதிரை சொன்னது…

நல்ல பகிர்வு யாத்ரா. ரசித்தேன்.

பெயரில்லா சொன்னது…

என்னவோ பண்ணுதுங்க உங்கள் கவிதை.

நந்தாகுமாரன் சொன்னது…

யார் இந்த ஸ்ரீநேசன்?

anujanya சொன்னது…

நல்ல கவிதை. ஆனால்... வன்முறை மிகுதி :(

அனுஜன்யா

ச.முத்துவேல் சொன்னது…

(வெறும்) சொற்களைமட்டும் வைத்துக்கொண்டு என்ன விதமான உணர்வுகளையும் எழுப்பிவிடமுடிவது ஆச்சரியம்தான் இல்லையா? நல்ல பகிர்வு. ரொம்பப் புடிச்சுருக்கு.
@ நந்தா
உங்களுக்கு ஸ்ரீநேசனைத் தெரியாமலிருப்பது ஆச்சரியம்தான். ஜெயமோகன் அவரின் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் என்கிற நூலில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். ஜெமோவின் சிபாரிசுகளில் இவரின் கவிதைகளும் அடங்கும்.vanam.wordpress.com (வனம் சிற்றிதழில், ஆத்மாநாம் பற்றிய இவரின் செவ்வியைத் தேடிப்படியுங்கள். என் வலைப்பூவிலும் ஒரு இடுகையில் இணைப்புக்கொடுத்துள்ளேன்.
குறிப்பிடத்தகுந்த நவீன கவிஞர்.தமிழ்ப் பேராசிரியர்.காலத்தின் முன்னொரு செடி என்கிற கவிதைத் தொகுப்பு கொண்டுவந்துள்ளார். அடுத்த தொகுப்பு விரைவில்..)

யாத்ரா சொன்னது…

இது கவிஞர் ஸ்ரீநேசன் அவர்களின் கவிதை. அப்பாஸ் சி மணி அஞ்சலிக் கூட்டத்திற்கு சென்றிருந்த போது அவரைப் பார்த்திருந்தேன்.

அப்போது தக்கை காலாண்டிதழ் கிடைத்தது, அதிலிருந்த அவருடைய இந்த கொலை விண்ணப்பம் கவிதை என்னை மிகவும் பாதித்தது, பகிர்ந்து கொள்ள விரும்பி பதிவிட்டேன்.

நந்தா அவர்களுக்கு ஸ்ரீநேசன் பற்றிய அறிமுகத்தை முத்துவேல் அவர்கள் கொடுத்திருக்கிறார், குறிப்பிட்டுள்ள இணைப்பில் அவரது பல கவிதைகளும் செவ்விகளும் இருக்கிறது, ஸ்ரீநேசன் அவசியம் வாசிக்கப்படவேண்டிய கவிஞர்.

மாதவராஜ், முத்து, ஆதவா, லேகா, மண்குதிரை, வடகரைவேலன், நந்தா, அனுஜன்யா, முத்துவேல் அனைவருக்கும் நன்றி.

Venkatesh Kumaravel சொன்னது…

ஏற்கனவே வாசித்த மாதிரி இருந்தது; ஸ்ரீநேசனை பற்றி ஞானமில்லை, எங்கோ மேற்கோள் காட்டப்பட்டிருந்தது என்று நினைக்கிறேன். நல்ல பதிவு, இது போன்ற முன்னோடிக் கவிஞர்களின் எழுத்துக்களையும் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.

யாத்ரா சொன்னது…

நன்றி வெங்கிராஜா

நந்தாகுமாரன் சொன்னது…

ஸ்ரீநேசன் கவிதைகள் சிலவற்றை நான் முன்னரே படித்திருக்கிறேன்

உ.தா.

"ஒரு இரவைத் திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய விரல்கள்
அதிலொரு விரலைத் திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய இரவுகள்"

ஆனால் பெயர் தான் நினைவில் இல்லை அதனால் தான் யார் இவர் என்று கேட்டேன் ...

Venkatesh Kumaravel சொன்னது…

அதேதான்... எஸ்.ரா தேசாந்திரியில் எழுதியிருந்தார் அல்லவா?