ஞாயிறு, 24 மே, 2009
திருவினை
திருவினையாகாத முயற்சிகளை நொந்து
கயிற்றைத் தேர்ந்தெடுத்தேன்
கடைசியாக
அதற்கு முன்பாக
மலங்கழித்து விடலாமென
கழிவறை போக
பீங்கானில் தேரைகளிருக்க
கழிக்காது திரும்பி
வரும் வழியில்
எறும்புகளின் ஊர்வலத்திற்கு
இடையூறின்றி கவனமாக
கடந்து வந்தேன் அறைக்குள்
கரிசனங்கள் பிறந்து விடுகிற
கடைசி தருணங்களின்
வினோதத்தில் புன்சிரித்தேன்
என்றுமில்லாமல் அதிகமாய் வியர்க்க
பொத்தானையழுத்தப் போகையில்
சிறகுகளில் படர்ந்திருக்கும் சிலந்தி வலை
பார்வையில் இடறியது
40000 உயிர்கள் மாண்டுபோன
செய்தி தாங்கிய
தினசரி அருகிருந்தது
விசிறயேதேனும் அகப்படுமாவெனத் தேடுகையில்
சாம்பல் கிண்ணத்தில்
பிணங்களென்றிருக்கும்
துண்டுக் குவியல்களைக் கண்டு
கடைசி சிகரெட் பிடிக்கும்
ஆசையையும் கைவிட வேண்டியதாயிற்று
சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு
காத்திருக்கும் கயிற்றிற்க்கிரையாக
கதவைச் சாற்ற
கதவிடுக்கில் நசுங்கியிரண்டான
பல்லியின் வாயிலிருந்து
தப்பிப் பறந்ததொரு பூச்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
21 கருத்துகள்:
உள்ளடக்கத்தில், சமகால நிகழ்வுகள் மீதான விமர்சனங்களோடு வந்திருக்கிறது கவிதை. எறும்புக்கும் தீங்கு நினைக்காத புத்தமத கொள்கைகள் கிழித்தெறியப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதேவேளை, தற்கொலை செய்துகொள்ளத் துணிவதற்கும் ஒரு பாவப்பட்ட உயிரைக் கொல்ல நேர்வதையும் இயல்பாகச் சொல்கிறது. வாழ்வின் சகலமூலைகளிலும் வன்முறை நிறைந்திருப்பதை உணர்த்துகிறது. சித்தாந்தங்கள் தோற்றுப்போகிற அவலம் எல்லா வரிகளிலும் இருக்கிறது. மிக முக்கியமான கவிதை.
என்னனெவோ சொல்கின்றது கவிதை.
வீரியமான கவிதை.
படித்தேன் ரசித்தேன் வியந்தேன்...
அருமையான வரிகள்.
எளிமையான நடை...
நன்றி...
நல்லா இருக்கு நண்பா
அருமை.
simply superb... brings about a surrealistic experience.. good.. keep up the good work.
best wishes
அடுத்தடுத்து பயணிக்க வைக்கிற கவிதை. ரசித்தேன்.!
உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, வார்த்தை, மணல்வீடு, உயிர் எழுத்து..இன்ன பிற. இவற்றில் ஏதாவது ஒரு இதழுக்கு உடனடியாக நீங்கள் இக் கவிதையை அனுப்புகிறீர்களா இல்லை உங்கள் பெயரில் நான் அனுப்பட்டுமா.தயவுசெய்து அனுப்புங்கள்.
யாத்ரா!
என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு! கவிதையின் பூரணம் இந்தக் கவிதையெங்கும் நிறைந்திருக்கிறது.
-ப்ரியமுடன்
சேரல்
திரு.மாதவராஜ் அவர்கள் சொன்னது போல, வாழ்வின் எல்லா மூலைகளிலும் வன்மம் நிறைந்திருப்பதை கவிதை சொல்கிறது..
வாழ்த்துக்களும் பெரிமிதமும் நண்பரே!
The website at yathrigan-yathra.blogspot.com contains elements from the site thiruttusaavi.blogspot.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.
For detailed information about the problems with these elements, visit the Google Safe Browsing diagnostic page for thiruttusaavi.blogspot.com.
உடனடியாக திருட்டுசாவி தளத்தை உங்கள் தளத்திலிருந்து தூக்கிவிடுங்கள். இல்லையேல் உங்கள் தளம் கூகிளால் அழிக்கப்படும்!!!!
மிக மிக அருமையான கவிதை யாத்ரா.
இறுதி வரிகள் மிகவும் அரு்மை
இன்னொரு விஷயம்
//பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு//
இதை எவ்ளோ பேரு புரிஞ்சிப்பாங்கன்னு தெரியல.
ஆனா எனக்கு இதைப்படிச்சதும் அழனும் போல இருக்கு.முழுசா உணருகிறேன்.
இந்த கவிதை நி்னைவும் வந்தது
//
கழி்வறையின் விட்டத்தை பார்த்தான்
தூக்கில் தொங்கப்போவதில்லை தான்
எனி்னும் பார்த்தான் // (என்னை கலங்கடிச்ச கவிதை இது)
மாப்ளே யாத்ரா,
(நீ மாமான்னு கூப்ட்டா நான் அப்படிதான் கூப்பிட முடியும்)
அந்தந்த கணத்தின் வாழ்வை
அது சோகமானாலும், சுகமானாலும்
அனுபவித்தும், சிலாகித்தும்,
வர்ழ்கிற உன்னதன் நீ என்பதை
உன்னோடும் முத்துவேலுடனும்
கழித்த விடியும் வரை பேசிக்கொண்டிருந்த அந்த இரவில் அறிந்துகொண்டேன்.
வாசித்து முடித்ததும் போர்வைக்குள் புகுந்து கொள்வது போல
ஓரிருண்மை உனது கவிதைகளை வாசித்தபின் ஏற்படுகிறது, எல்லோருக்கும் சொல்வதில்லை இது. பின்னூட்டமோ, முன்னூட்மோ அல்ல,
நீ மகாமனிதனாய் இருந்திருப்பாய், கடந்த காலத்தில் வாழ்ந்த மிச்சங்களாய் உன்னை துரத்திக் கொண்டிருக்கின்றன கவிதைகள். கவிதையில் தென்படும் தனிமை, விரக்தி, காதல் எல்லாமே அனுபவித்தறிந்தவை என்பதையும் நானறிவேன். மேதமைக்கும் ஆயுளுக்கும் உள்ள அற்ப நூலிழையை உறுதியான கயிறாகச்செய்யத்தான் இந்த வாழ்க்கை. நெகிழ்வாக இருக்கிறது. கவிதைக்காகவே இருந்து போகட்டும் அந்த வார்த்தைகள்.
(மாப்ளே தேரை என்றதும் அன்றிரவு உன் வீட்டு மாடியில் என் மீது வந்து விழுந்த தேரை ஞாபகத்திற்கு வந்தது.)
நெகிழ்வோடும்,
நெஞ்சம் நிறைந்த அன்போடும்...
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
புரியுது ஆனா புரியல... நான் ரொம்ப சின்ன பையன்..
அதெப்படி மலங்கழிக்க போயிட்டு போகாம வரமுடியும்... கடசில தற்கொலையாவது பண்ணிங்கலா இல்லையா?
good kavithai....
ரொம்ப நல்லா இருக்குங்க.
yethra
sagapporavanakku yethukku ithana yechi priyam? malarunu poi kauru podama ,ninnkkittu vetipalama pecikittu?
harikrishnan
மாதவராஜ், முத்து, வேத்தியன், மண்குதிரை, நந்தா, ஆறுமுகம், ஆதி, முத்துவேல், சேரல், ஆதவா, தமிழர்ஸ், இராவணன், அகநாழிகை, அசோக், சுந்தர், ஹரி அனைவருக்கும் நன்றி.
அருமை. இதற்கும் அதிகமான வார்த்தைகள் இருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
//"அகநாழிகை" கூறியது... மேதமைக்கும் ஆயுளுக்கும் உள்ள அற்ப நூலிழையை உறுதியான கயிறாகச்செய்யத்தான் இந்த வாழ்க்கை. நெகிழ்வாக இருக்கிறது. கவிதைக்காகவே இருந்து போகட்டும் அந்த வார்த்தைகள்.///
அதையே நானும் சொல்கிறேன்.
ரொம்ப நெகிழ்வாய் இருக்கு யாத்ரா..
உங்கள் கவிதைக்கு மட்டும் பின்னூட்டம்
இட்டு போக இயல்வதில்லை..எப்ப வந்தாலும் தளத்துக்கு.
உங்களையும் சேர்த்து வாசிக்க நண்பர்கள் தருகிறார்கள்.
ச.முத்துவேல்
வாசு அண்ணா
தருகிற பிரியம் கவிதைக்கான மற்றொரு தளம் விரிகிறது.
கவிதை தருகிறவன்,கவிதையை விட அழகாய் இருக்கிறான் எப்போதும்.
சகோதரா,போய்கொண்டு இரு.
கருத்துரையிடுக