வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009
பிரான்சிஸ் கிருபா கவிதை
ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி
அம்மா கவலையின்றி துணி துவைப்பாள்
அப்பா கவனமாக நாளிதழ் வாசிப்பார்
அண்ணன் கடன் பட்டவன் போல் டி.வி பார்ப்பான்
அவளோ சலிப்பின்றி வகுப்பெடுப்பாள்
மாடத்துத் தொட்டிச் செடிகளில்
குட்டிப்பூக்கள் அவளை எட்டி எட்டிப் பார்க்கும்
ஜன்னல் திலைச்சீலைகள் கெக்கலித்து நெளியும்
வாசலில் நுழையும் வெயில்
அவள் காலில் விழுந்து பாடம் கேட்கும்
கைகளைத் தூக்கி தூரப் போடுவது மாதிரி விளக்குவாள்
ஆத்திரப்படும் போது காலை ஓங்கித் தரையில் உதைப்பாள்
சுட்டு விரலால் காற்றில் எழுதுவாள் அழிப்பாள்
புரிந்து கொள்ளாத மாணவ மாணவிகளிடம் பொறுமையிழப்பாள்
பொட்டு வைப்பதைவிட மெதுவாகத் தான் என்றாலும்
தன் நெற்றியில் அடிக்கடி அடித்துக் கொள்வாள்
கன்னத்தில் ஒரு பலூன் ஊதிக் கடைவாயில் கடித்தபடி
யோசனையோடு குறுக்கும் மறுக்கும் நடப்பாள்
கெட்டிக்கார குழந்தைகளைப் பாராட்ட
புன்னகை வயலில் பூவொன்று பறித்துக் கொண்டு
சந்தோஷ வரப்புகளில் ஓடோடி வருவாள்
ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி
திங்கட்கிழமையை தள்ளிக் கொண்டு போவாள் பள்ளிக்கு
( இந்தக் கவிதையை படித்ததிலிருந்து அவ்வப்போது தானே மெலிதாய் சிரித்துக் கொள்கிறேன். டீச்சர் சிறுமி அடிக்கடி தோன்றி எனக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள். நான் புரியாத மாதிரி நடித்து, அவள் பொறுமையிழந்து பொட்டு வைப்பது போல் மெலிதாக தலையிலடித்துக் கொள்வதை உள்ளூர ரசித்து புன்னகைத்துக் கொள்கிறேன். என் சமீபத்திய நாட்களை அழகாக்கிக் கொண்டிருக்கும் அந்த முகமறியாச் சிறுமிக்கும் கிருபாவுக்கும் என் நன்றிகள்.
நிழலன்றி ஏதுமற்றவன் என்ற தொகுப்பிலுள்ள கவிதை இது. யுனைடட் ரைட்டர்ஸ் வெளியீடு. )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
11 கருத்துகள்:
நல்லா இருக்கு யாத்ரா.
இங்குதான் வாசிக்கிறேன் யாத்ரா.நல்ல பகிர்வு.
Thanks for sharing.. :-)
romba nalla irukku nanba
nanum vekuvaaka rasikkireen
pakirvukku nanruiyum
ரொம்ப நல்லா இருக்குது யாத்ரா... பகிர்விற்கு நன்றி!
பகிர்விற்கு நன்றி..
\\டீச்சர் சிறுமி அடிக்கடி தோன்றி எனக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள்.//
:)
சமீபத்தில் விகடனில் காதல் கவிதைகள் எழுதியவர் தானே? கல்யாண்ஜி தன் கவிதைத்தொகுப்பு முன்னுரையில் இவரைப்பற்றி சொல்லியிருந்தார். பகிர்வுக்கு வணக்கங்கள் 'ணே :)
விகடனில் வாசித்துயிருக்கிறேன் பி.கிருபாவை, சரக்குள்ள மனிதர்.
இக்கவிதையை உள்வாங்க... மனம் மிக லேசாய் இருக்க வேண்டும். ஏன்னா அப்ப தான்ப்பா..நல்லா அனுபவிக்கமுடியும்.
லேசா இருக்க நரக வாழ்க்கை சாத்தியமா?
ப.ந.யா.(same words man as usual)
நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி யாத்ரா..
புன்னைகைக்க வைக்கிறாள் டீச்சர் சிறுமி. நல்ல பகிர்வுக்கு நன்றி யாத்ரா
-ப்ரியமுடன்
சேரல்
பிரான்சிஸ் கிருபாவொட சில கவிதைகள் தான் படிச்சிருக்கேன், படிக்கணும். இது ரொம்ப நல்லாயிருக்கு யாத்ரா.
கருத்துரையிடுக