திங்கள், 9 மார்ச், 2009

ஆத்மாநாமின் ரோஜாப் பதியன்கள்

என் ரோஜாப் பதியன்கள்

என்னுடைய இரண்டு ரோஜாப் பதியன்களை
இன்று மாலை சந்திக்கப்போகிறேன்
நான் வருவது அவற்றிற்குத் தெரியும்
மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்
பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது
எனக்குப் புரிகிறது
நான் மெல்ல படியேறி வருகிறேன்
தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன
புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்
செருப்பைக் கழற்றி முகம் கழுவி
பூத்தூவாலையால் துடைத்துக்கொண்டு
கண்ணாடியில் எனைப் பார்த்து
வெளிவருகிறேன்
ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி
என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன்
நான் ஊற்றும் நீரைவிட
நான் தான் முக்கியமதற்கு
மெல்ல என்னைக் கேட்கின்றன
என்ன செய்தாய் இன்று என
உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என
பொய் சொல்ல மனமின்றி
செய்த காரியங்களைச் சொன்னேன்
அதனை நினைத்துக்கொண்ட கணத்தைச் சொன்னேன்
சிரித்தபடி காலை பார்ப்போம்
போய்த்தூங்கு என்றன
மீண்டும் ஒரு முறை அவற்றைப் பார்த்தேன்
கதவைச் சாற்றி படுக்கையில் சாய்ந்தேன்
காலை வருவதை எண்ணியபடி,

ஆத்மாநாம், இந்தப் பெயரிலேயே ஒரு ஈர்ப்பு இருக்கிறது பாருங்கள். இவரை அடைந்த கணம் முதல் கவிதை குறித்த என் அத்துனை பிம்பங்களும் மறுநிர்மாணம் செய்யப்பட்டது.

கிணற்றுத் தண்ணீரின் தன் பிம்பம் இவரை தழுவிக்கொள்ள அழைத்திருக்கிறது, எப்படி இந்த மனப்பிறழ்வு, 34 வயதில் தானே தனக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்ட நிகழ்வு வாழ்வெனும் பெரும்புதிர் குறித்து என்னை அலைக்கழியச்செய்திருக்கிறது.

48 வயதில் மணமுடித்து தன் 67 வயதில் மனைவியை இழக்க நேரிட்ட துயரில் தன்னை மீளா உறக்கத்தில் ஆழ்த்திக்கொண்ட ராம் மோகனாகிய காளிதாஸ் என்கிற ஸ்டெல்லா புரூஸின் என் நண்பர் ஆத்மாநாம் என்ற தொகுப்பின் இரட்டை பாதிப்பு வேறு எனக்குள்,

என் பிறந்த தினத்தில் (ஜீலை 6) தான், தான் செல்லும் நாளை தேர்ந்திருக்கிறார். ஆத்மாநாம் பெயர் வேறு, ஆத்மா நாமா நானா, தீராத மனச்சோர்வுக்கு உள்ளாகியிருக்கிறேன். நான் மட்டுமா, அவர் ஊற்றிய நீரை விட அவரை முக்கியமாக கருதிய அந்த ரோஜாப் பதியன்கள் அவரின் இழப்பை எப்படி எதிர்கொண்டிருக்கும், எதிர்ப்படும் ரோஜாப்பதியன்களில் எல்லாம் இழப்பின் மென்சோகம்.

5 கருத்துகள்:

ச.முத்துவேல் சொன்னது…

/நான் மட்டுமா, அவர் ஊற்றிய நீரை விட அவரை முக்கியமாக கருதிய அந்த ரோஜாப் பதியன்கள் அவரின் இழப்பை எப்படி எதிர்கொண்டிருக்கும், எதிர்ப்படும் ரோஜாப்பதியன்களில் எல்லாம் இழப்பின் மென்சோகம். /

நல்ல உணர்வுபூர்வமான பகிர்வு.

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

நெகிழ்வான பதிவு. தமிழின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவர் எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன். படித்தது இல்லை.. உங்கள் எழுத்துக்கள் என்னை படிக்கத் தூண்டுகின்றன.. அவருடைய முடிவு மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..

yathra சொன்னது…

வாங்க முத்துவேல், கார்த்திகைப் பாண்டியன்.
ஆத்மாநாம் போன்று தங்கள் வாழ்வியல் முறையால் என்னுள் அதிர்வை ஏற்படுத்திய படைப்பாளிகள் பலர், கோபிக்கிருஷ்ணன், சில்வியா பிளாத், ப.சிங்காரம், நகுலன், வல்லிக்கண்ணன், ஜி.நாகராஜன்,,,,,
இன்னும் பலர்,
இந்த மனவருத்தங்களையெல்லாம் யாரிடமாவது கொட்டித்தீர்த்தால் தான் பாரம் குறையும் போலிருக்கிறது.

ஆதவா சொன்னது…

என்னவோ தெரியவில்லை... கவிதை நிற்குமிடத்தில் என்னையே நான் இழந்தேன்..... உங்கள் எழுத்துக்கள் ஒரு புதிய் பரிமாணத்தில் மின்னுக்ன்றன.....

யாத்ரா...

மிகச்சிறந்த படைப்பாளிகள் அதிக காலங்கள் வாழ்வதில்லை

பாரதி
புதுமைப்பித்தன்
வான்கா..

ஆத்மாநாம்...

பகிர்தலுக்கு நன்றி... இன்னும் இருந்தால் தாருங்கள்.

yathra சொன்னது…

வாங்க ஆதவா,
//மிகச்சிறந்த படைப்பாளிகள் அதிக காலங்கள் வாழ்வதில்லை//

ஆமாம் ஆதவா, இது தான் என் ஆதங்கம்