திங்கள், 23 மார்ச், 2009

அண்மையில் மறைந்த கவிஞர் அப்பாஸ் நினைவாக



ஆத்மாநாமை
ரோஜாப்பதியன்கள் தேடிக்கொண்டிருக்கிறது

கோபிகிருஷ்ணனின்
டேபிள் டென்னிஸ் சத்தமும்
உள்ளேயிருந்து சில குரல்களும
கேட்டுக்கொண்டேயிருக்கிறது

இப்படியிருக்க இருவரும்
சுயஅழிப்பில் மீட்சியடைந்தனர்


ப சிங்காரம்
எல்லோரும் தனியாகவே
இருக்கிறோமெனச் சென்றார்

நகுலன்
சூரல் நாற்காலியையும்
கோட் ஸ்டாண்டையும்
கால்சுற்றும் பூனையையும் விட்டு
சுசிலாவை அடைந்தார்

ஆதவனை அருவி
தாகம் தீர்த்துக்கொண்டது

வாழ்வைக் கொண்டாடிய
ஜி நாகராஜனை
சாவு துணைக்கழைத்துக்கொண்டது

ஸ்டெல்லா புரூஸ்
துணையிழந்து
வாழமுடியாமல் போனார்

சுந்தர ராமசாமி
ஒரு வேடந்தாங்கல்
புலம் பெயர்ந்து மறைந்தது

கற்றதையும் பெற்றதையும்
கற்பித்த சுஜாதா
காலம் ஆனார்

இருத்தலியம் பேசிய
அப்பாஸ்
நகுலன் சொன்னது போல
இல்லாமல் போய்விட்டார்

வர வர குறைகிறது
இருப்பின் மீதான ஈர்ப்பு

(எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் இச்செய்தியை வாசிக்கையில் சூழ்ந்த வெறுமையில் மனம் தத்தளித்தது. அப்பாஸ் அவர்களின் கவிதைகளும், பாவண்ணனின் உரையும் அத்தளத்தின் சுட்டியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் கடற்கரய் அப்பாஸ் அவர்களின் புகைப்படத்தை தன் வலைப்பூவில் வெளியிட்டிருந்தார், நன்றி. முகவரி http://thesanthri.blogspot.com/ )

5 கருத்துகள்:

ச.முத்துவேல் சொன்னது…

/இருத்தலியம் பேசிய
அப்பாஸ்
நகுலன் சொன்னது போல
இல்லாமல் போய்விட்டார்/

வாதையோடு எழுதிருக்கிறீர்கள்.இவ்வரிசையில், பாரதியின் நினைவும் எனக்கு ஏற்படுகிறது.
முதலில் இறந்தவன் என்கிற அப்பாஸின் தொகுப்புக்கு பணம் அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறேன்.புத்தகம் வருவதற்கு
முன் முதலில் இறந்துவிட்டார் என்கிற
செய்தி வந்துள்ளது.கைவசம் ஆறாவது பகல் எடுத்துவந்தேன்.அக் கவிஞனுக்கு அஞ்சலி செலுத்துவிதமாய் இனிதான் படிக்கவேண்டும்.

யாத்ரா சொன்னது…

வாங்க முத்துவேல், பாரதி, புதுமைப்பித்தன் நினைவும் இன்னும் பலர் நினைவும் வருகிறது

நான் எழுதிய பழைய கவிதை ஒன்னு நினைவு வருது

மரணம்
இரக்கமும்
கருணையும் நிரம்பியது
வாழ்வை விடவும்

மரணம் அவர்களுக்கு மீட்சி
நமக்கு,,,,,,,

ஆதவா சொன்னது…

உங்கள் கவிதையெனும் அஞ்சலியைக் காட்டிலும் எனக்குச் சொல்ல வேறேதுமில்லை!!

மாதவராஜ் சொன்னது…

நேற்றிரவு கவிஞர் அப்பாஸின் மரணம் குறித்து எழுத்தாளர் உதயசங்கர் போனில் பேசினார். கோவில்பட்டிதானே அவருக்கு?

வருத்தமாக இருக்கிறது.

யாத்ரா சொன்னது…

வாங்க ஆதவா, மாதவராஜ்.
ஆமாம் கோவில்பட்டி தான் சார்