புதன், 18 மார்ச், 2009

யூமா வாசுகியின் கண்ணீரைப் பின்தொடர்ந்து


தொலைவான ஓரிரவு

என் அம்மா...
உன் ஒரு முலையிலிருந்து மறுமுலைக்கு
என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது
பிரிவென்று கருதாதே.
என் தமக்கையே நெடுவழியில் நான்
உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல்
பற்றிக்கொள்ளும் பொழுது இது.
தீண்டலற்ற இடைநொடி
தனிமையோ என்று திகைக்காதே
என் தங்கையே உன்னைத் தியானிக்கும்
என் மனம் இமைக்கும் தருணமிது.
அச்சமய இருட்டில் நீ மிரளாதிரு.
உறங்கு என் மகளே
தோள் மாற்றிச் சுமக்கவே உன்னை
என் நெஞ்சிலிருந்து அகற்றுகிறேன்.
ஐயோ இது விலகலோ என்று
திடுக்கிட்டு விழித்துவிடாதே.
சகலமுமான என் பிரியமே
இன்று நாளெல்லாம் உன் நினைவால்
எத்தனை முறை மனம் ததும்பி
கண்ணீர் வரப் பார்த்தது...


( என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர் என்ற யூமா வாசுகியின் கவிதைத் தொகுப்பிலிருந்து )


கென் தன்னுடைய வலைப்பதிவில் மஞ்சள் வெயில் வாசிப்பனுபவத்தை எழுதியிருக்கக் கண்டேன், எங்களூர் நூலகத்தில் தேட கிடைத்தது. அந்நாட்களில் நானும் ஜீவிதா ஜீவிதாவென்று பிதற்றியபடியிருந்தேன். மொழிநடை, இளகிய மனம், கசிந்துகொண்டேயிருக்கும் இதயம், தாங்கொணாத் துயரளிக்கும் பிரியம், நிராகரிப்பின் புறக்கணிப்பின் மறுப்பின் வலி நிரம்பிய உணர்வுகளின் சிதறல் என எல்லாமும் யூமா வாசுகியை இன்னும் கண்டடைதலுக்கான தேடலைத் தூண்டியது,

இவ்வருட புத்தகக் கண்காட்சியில் அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு, என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர் கவிதைத்தொகுதிகளும், உயிர்த்திருத்தல் சிறுகதைத் தொகுப்பும், ரத்த உறவு நாவலும் கிடைக்கப் பெற்றதில் மகிழ்ந்தேன்.
துயரத்தை ரசிப்பதில் அப்படியென்ன குரூர ஈடுபாடோ தெரியவில்லை. நெஞ்சை கனக்க வைப்பதும் கசியச்செய்வதுமான கலை இலக்கியங்களின் மீதான நாட்டமே அதிகமிருக்கிறது. எனக்கு ஏதோ ஆழ்மனப்பிறழ்விருப்பதாகக்கூடச் சந்தேகமெழும் சில சமயங்களில். மிகவும் உலர்ந்த இவ்வாழ்வில் எதன் பொருட்டாவது அழுவதிலும் நெகிழ்வதிலும் தான் வாழ்தலுக்கான கணங்கள் இருப்பதாகவும் எந்நேரமும் மனதை அரித்துக்கொண்டிருப்பவற்றின் தற்காலிக மீட்சியாகவும் மனம் நிறுவிக்கொள்ள முயல்கிறது, புனைவே வாழ்வாய், வாழ்வே புனைவாய். புனைபவர்களின் வாழ்வு அதிபுனைவாய் இலக்கிய உலகம் எண்ணிலடங்கா ரகசியங்களை உள்ளடக்கியதாயிருக்கிறது.

15 கருத்துகள்:

மாதவராஜ் சொன்னது…

யாத்ரா!

உங்கள் எழுத்துக்களும், ரசனைகளும் வெகுவாக பாதிக்கின்றன.
//எனக்கு ஏதோ ஆழ்மனப்பிறழ்விருப்பதாகக்கூடச் சந்தேகமெழும் சில சமயங்களில். மிகவும் உலர்ந்த இவ்வாழ்வில் எதன் பொருட்டாவது அழுவதிலும் நெகிழ்வதிலும் தான் வாழ்தலுக்கான கணங்கள் இருப்பதாகவும் எந்நேரமும் மனதை அரித்துக்கொண்டிருப்பவற்றின் தற்காலிக மீட்சியாகவும் மனம் நிறுவிக்கொள்ள முயல்கிறது//

எனக்கும் இதுபோலத்தான்.

ஆதவா சொன்னது…

உங்கள் எழுத்துக்கள் நல்ல தரமாக இருக்கின்றன.

கவிதை பகிர்தலுக்கு நன்றிஅ

யாத்ரா சொன்னது…

மாதவராஜ் ஐயா, உங்க கிட்ட பிடிச்சதே, உங்களோட இந்த நெகிழ்வு தான்

ஆதவா இதோ நான் இருக்கேன், அப்படீன்னு என்னுடைய எல்லா பதிவிற்கும் வந்து வாழ்த்தி பின்னூட்டமிடறீங்க

என்ன கைம்மாறு செய்யப்போகிறேனோ

ஒரு மாசம் ஆகுது, என்னுடைய 25 வது பதிவு இது

ஆதவா சொன்னது…

உண்மையைச் சொல்லப் போனால்.... உங்களுக்குப் பதிவு கொடுக்கும் பொழுது எனக்கு பயங்கர வேலை.. சரி,, ஒரு நல்ல கவிதையைப் பார்த்துட்டும் பதில் போடலைன்னா... அது நல்லா இருக்காது!!!

கைம்மாறு எல்லாம் என்னங்க.... ஏதோ எழுத்துக்களால் பிணைந்திருக்கிறோம்.... எனக்கு பிடிச்சிருக்கு... பதில் தாரென்.. அவ்வளவுதான்!!!

25வது பதிவுக்கு வாழ்த்துக்கள் யாத்ரா அவர்களே!

யாத்ரா சொன்னது…

வாங்க ஆதவா, மகிழ்ச்சி, நன்றி

anujanya சொன்னது…

யூமா படித்தது இல்லை. ஆவலைத் தூண்டி இருக்கு. உங்கள் எழுத்து நல்லா இருக்கு. தொடருங்கள்.

ஒரு மாதம். அதற்குள் 25 பதிவுகளா? அபாரம். வாழ்த்துகள்.

அனுஜன்யா

யாத்ரா சொன்னது…

அனுஜன்யா அவர்களே, மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

நல்ல பகிர்வு யாத்ரா!

சின்ன சின்ன இடைவெளிகள்!

பாலூட்டும் தாய், குழந்தையினை இடமாற்றும் நொடிகள்!

தோளில் சுமக்கும் குழந்தையை இடமாற்றும் நொடிகள்!

விரல் பிடித்து நடக்கையில் மறு விரல் மாற்றி பிடிக்கும் நொடிகளென

இவ்வளவு அழகான நொடிகளா அவைகள் என்று!

யோசிக்க வைத்தது இந்தக் கவிதை!

கவிதை படைக்க கரு எப்படி வேண்டுமானாலும் கிடைக்கும் என்பதற்கு இக்கவியும் ஒரு உதாரணம்!

நல்ல கவி யாத்ரா!

Karthikeyan G சொன்னது…

யூமா வாசுகியின் அறிமுகத்திற்கு மிக நன்றி!!

யாத்ரா சொன்னது…

வாங்க ஷீ நிசி, கார்த்திகேயன், நன்றி

ச.முத்துவேல் சொன்னது…

ஹையோ. ரொம்ப நல்லாயிருக்குதுங்க.
உங்களோட வாசிப்பு ஆர்வமும், முதிர்வும், ஆழமான உங்க பார்வையும், கருத்துக்களும் பிரமிப்பயிருக்குது.இதுலவேற கூச்ச சுபாவின்னு சொல்றீங்க./எனக்கு ஏதோ ஆழ்மனப்பிறழ்விருப்பதாகக்கூடச் சந்தேகமெழும் சில சமயங்களில். /
இலக்கியவாதிகள்னாலே உலகமும் அப்டித்தான் பாக்கும்.ஆனா,அதுவா உண்மை?

யாத்ரா சொன்னது…

வாங்க முத்துவேல், மிக்க நன்றி, உண்மையிலேயே கூச்ச சுபாவி தான், எழுத்து தான் சுதந்திர வெளியாக இருக்கு,

கோபிகிருஷ்ணனோட உள்ளேயிருந்து சில குரல்கள் வாசிச்சு இருக்கீங்களா, அடிப்படையில எல்லாருக்குள்ளயுமே இந்த பிறழ்வு இருக்குனு சொல்றார், எனக்கும் இதனையொத்த கருத்து இருக்கு.

மொழி வசப்படறவங்க இலக்கியமாக்கிடறாங்க,
பட்டத்தோட நூல் கையில இருக்குற வரைக்கும் பிரச்சனையில்ல, ஆனா எழுத்துனு வந்துட்டா அந்த நூல் தானா அறுந்துடும், நகுலனை கூர்ந்து கவனித்தீர்களானால் இந்த தன்மை தெரியும், அது தான் அவர்கிட்ட இருக்கிற தனித்தன்மை.அந்த பைத்திய நிலையில தான் படைப்பு உன்னத நிலையை எய்துகிறது,

எல்லா உணர்வுகளும் பிறழ்வு தான், சலனமற்ற உள்வெளி சாத்தியமேயில்ல, அங்கேயும் வெறுமையின் இம்சை.
நிறைய பேசலாம் இந்த மாதிரி,

என்னோட சுற்றமும் நட்பும் இலக்கியப்பரிச்சயமில்லாதது, ஏற்கனவே என்னை ஒரு மாதிரி தான் பாக்கறாங்க, இதெல்லாம் பேசனா, ஏர்வாடி குணசீலம்னு முத்திரையே குத்திடுவாங்க. அந்த கூச்சத்துலயே பேசாம இருந்துடுவேன், தவிரவும் பேச்சு ஒற்றைத்தன்மைய கொடுத்துடுது, மௌனம் நவீன கவிதை மாதிரி அர்த்தங்களின் சாத்தியகூறுகள் அதிகம், நேர்ல இவ்ளோ பேசியிருக்க மாட்டேன், எழுத்து என்பதால் நூல் அறுந்துடுச்சி

உண்மைன்னு ஒன்னு இல்லவே இல்லங்க, உண்மை பொய் எல்லாமே மொழியால் நாம் புனைந்து கொண்டது,
எந்த நிகழ்வைப் பார்த்தாலும் எதுவுமே தோணக்கூடாது (தோன்றுவது கண்ணை மறைத்துவிடுகிறது உண்மையை காண்பதிலிருந்து, இது jk கூற்று), அந்த தன்மை, வெறுமை தான் உண்மை, ஆக நாம எல்லாரும் உண்மைக்கு வெகு அப்பால் இருக்கோம், இப்படி பகிர்ந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியா இருக்குங்க, நன்றி,

நான் இன்னும் முழுப்பிறழ்வை எய்தவில்லை, அந்த நிலையை அடையனும், அதுக்கான பயணமாத்தான் இருக்கு, அது ஒரு பரவச வெளி (ecstacy). படைப்பாளிக்கு இந்த விளிம்பு நிலை மேல் எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கு, அது தான் அவனோட கச்சாப்பொருள், இந்தக் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக்களை முன்வைத்தால் இதை ஒரு விவாத இலக்கியமாக வளர்த்தெடுக்கலாம்.

Chandran Rama சொன்னது…

Yatra,
Ratha Uravu by Uma vasughi
i am really glad that you liked it.
Now there is something similar novel by one mr.pandiyak kannan called 'salavan'... oh this is so
mind blowing... down to earth realism.. very new to us city folks.. This book is published by bharathi puthagalayam. pl try to read this book and write your valuable comments in your blog. I am sure this author needs to be exposed. and that could happen by you,through your blog.
thanking you

யாத்ரா சொன்னது…

நன்றி ஆறுமுகம், வருகைக்கும் பகிர்வுகளுக்கும்,
நீங்கள் குறிப்பிட்ட பிரதியை நிச்சயம் வாசித்து பகிர்ந்து கொள்கிறேன்

Chandran Rama சொன்னது…

Thank you sir for your kind response.