செவ்வாய், 17 மார்ச், 2009

அழைக்கும் பிம்பம்

அழைக்கும் பிம்பம்

தண்ணீரில்
தன் பிம்பம்
தழுவுதல்
தற்கொலையா
(ஆத்மாநாம் நினைவாக)

இரக்கப்படாதீர்கள்

தனிமையிலேயே விட்டுவிடுங்கள்
என் பேரன்பும்
மரக்கிளையினின்று
சுழன்றபடி உதிரும்
பழுப்பு இலை போன்ற
என் பிரிவும்
கொன்றுவிடக்கூடும்
உங்களை.

விட்டுச்சென்றபின்

தத்தித் தத்தி
வல இட உள்ளங்கால்களால்
அழைத்து வந்த
கூழாங்கல்லை தாட்சண்யமின்றி
விட்டுச்சென்றதும்
திருப்பத்தில் மறையும் வரை
பார்த்திருந்தது
ரயில் மறையும் வரை
கையசைக்கும்
வழியனுப்ப வந்தவளைப்போல.

இவள்

காரில் இவளுடன்
சென்றிருந்தேன்
ஐயோவென இவளின் அலறல்
வேகத்தைக் குறைத்து
இவளைப் பார்க்கிறேன்
ஆசுவாசமாய்
இவள் வாகனத்தின் முன்னால்
பார்த்த திசையில்
தும்பி
கடந்து சென்றது.

10 கருத்துகள்:

ச.முத்துவேல் சொன்னது…

உள்ளபடியே எல்லாமே அருமையான,டச்சிங்கான கவிதைகள்.3 வது ரொம்ப க்யூட்.ஏன் நீங்கள் இவற்றை எதும்,இதழ்களுக்கு அனுப்பவில்லயா?அனுப்புங்களேன்.

யாத்ரா சொன்னது…

மிக்க நன்றி முத்துவேல், தங்களின் வருகைக்கு, நான் மிகவும் கூச்ச சுபாவி, வலையுலகிற்கே இப்போது தான் வந்திருக்கிறேன், கணினியறிவு மிக குறைவு, nhm writer உபயோகிக்கச்சொல்லி சுந்தர்ஜி தான் உதவினார், அனுப்புகிறேன்.

இரண்டு மூன்று நாட்களாய் தங்களை காண முடியவில்லை,,,

ஆதவா சொன்னது…

அனைத்தும் அருமை!!! முத்துவேல் அவர்கள் சொன்னது போல இதழ்களுக்கு அனுப்புங்கள்

யாத்ரா சொன்னது…

வாங்க ஆதவா, நன்றி, அனுப்புகிறேன்

ஆ.சுதா சொன்னது…

நல்ல கவிதைகள்
அறுமையாக எழுதியிருக்கீங்க

இரண்டாவதுகவிதை மிக பிரமாதம்

யாத்ரா சொன்னது…

வாங்க முத்துராமலிங்கம், வருகைக்கும் பகிர்வுகளுக்கும் நன்றி

anujanya சொன்னது…

நான்கும் நன்று. மிகப் பிடித்தது 'இரக்கப் படாதீர்கள்' மற்றும் 'விட்டுச்சென்றபின்'.

நான், நீங்க ரொம்ப சீனியர். பத்திரிகைக்கு அனுப்பி, வெளிவரும் போது உவகை அடையும் பருவம் தாண்டியவர் என்று நினைத்தேன் :)

உங்கள் கவிதைகள் நிச்சயம் நிறைய சிற்றிதழ்களில் வரும் தரம் வாய்ந்தவை. அவசியம் அனுப்புங்கள்.

அனுஜன்யா

யாத்ரா சொன்னது…

வாங்க அனுஜன்யா, நன்றி, மிகவும் நெகிழ்வாய் உணர்கிறேன்

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

முதல் கவிதை மிகப் பிடித்திருக்கிறது. கடைசிக் கவிதையும். (அலரல் - அலறல்?)

யாத்ரா சொன்னது…

சுந்தர்ஜி அவர்களுக்கு மிக்க நன்றி, பிழையை திருத்திக்கொள்கிறேன், இனி வராமல் பார்த்துக்கொள்கிறேன், உங்கள் அக்கரை மிகவும் பிடித்திருக்கிறது