வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

நகரும் அகவை

நகரும் அகவை

மறந்து போன அகவை
பிரபஞ்சத்தின் ஆதிப்புள்ளியில் இருந்து நீள்கிறதா
புதையப்புதைய முளைத்துக்கொண்டே போகும்
நிகழ் கணத்திலிருந்தா
புறச்சிதைவின் அடையாளங்களை
கேளிக்குள்ளாக்கும் நிலைக்கண்ணாடியுடனான
தோழமைபபிளவு
அழிப்பானுடன் ஒரு கை
சாக்குத்துண்டுடன் ஒரு கை
அழித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும்
நிகழ் கணத்திலிருக்க நினைவுப்பிசகு ஏதுவாக
தொலைத்தது இழந்தது
மறந்தது
வேக நகர்வில் பின் நகரும் சாலை
ஒரே இடத்தில ஓடிக்கொண்டிருப்பதாக உறுத்த
நின்றதும் நேசமாய் சிரிக்க
தார்ச்சாலையில் எழுதி வைத்த பெயரை
வெப்பம் உறிய
உறையும் காலம்
சாத்தியப்பாடுகளுக்கு அப்பாலிருக்க
நிச்சயமின்மைகள் வன்மையான
ஆயுதங்களுடன் துரத்த
திரும்பிப்பார்த்தளுக்கான அவகாசங்களற்று
வன்மத்திற்கு பதிலியாய் வன்மமாய்
கழிகிறது
கடிகார முட்கள்
கால் குத்த
நின்றபடி ஓட
களைப்பின் நிமித்தமோ
கோளாறின் நிமித்தமோ
உறக்கமோ தியானமோ கோமாவோ மரணமோ நேர்ந்துவிட
குற்ற உணர்வுகளின்றி நகர்கிறது காலம்
உச்ச பிறழ்வு எய்த
உபாயங்கள் தேடி களைத்து
நினைவின் புதைகுழியில்
மீட்சிக்கான பிரயத்தனங்கள் மழுங்கடிக்கப்பட்டு
மனதை அரித்துதின்ன
புழுக்களுக்கு கொடுத்து
உயிர் கொடுத்து உயிர் வளர்த்து
நரமாமிசம் பகிர்ந்து விருந்தோம்பி
பொரியலுக்கு ரத்தவங்கியிலிருந்து தருவித்து
இரை உண்டு இறை வளர்த்து
வளர்த்து அழித்து உண்டு வளர்ந்து அழிந்து
தீயின் பசியையும்
புழுக்களின் ஜீவிதத்தையும்
கணக்கிற்க்கொண்டு
அகவை நகர்ந்துகொண்டிருக்கிறது
அழிவை நோக்கி


இன்றைய தினம்


கோடை நன்பகல் மின்வெட்டில் கழிய
சட்டைப்பையின் வென்சுருட்டுப்பெட்டியை துழாவ
காலியான வெறுமையில் நசுக்கி எரிய
விரக்தியின் வரிகள் பதிய
எழுத மறுக்கும் மை
குழிகள் நிரம்பிய சாலையில் அடிவயிறு குளுங்க
சில்லரையற்று நடத்துனரின் பேச்சிற்கு ஆளாக
வழக்கமாய் பூக்கும் தோட்டத்து கொடியும் பூக்காது
சாளரம் ஒட்டிய மரக்கிளையில்
வந்தமரும் பறவையும் வராது
இன்றைய தினம் இப்படியிருக்க
வங்கிக்கடனுக்காக அலைபேசியில்
தேவதைக்குரல்
ஒருமணிநேரம் கேட்டுக்கொண்டிருந்தது

கருத்துகள் இல்லை: