வியாழன், 26 பிப்ரவரி, 2009

காற்றாக ஆதல்

காற்றாக ஆதல்

உள்ளங்கைக்குள் ஓடும்
ரேகைகளின் புதிர்ப்பாதைகள்
அழைத்துச்செல்லும் மர்ம பிரதேசங்கள்
யாருமற்ற வெளியில்
பார்வையின் தடம்
பதியாத பயணம்
இருக்குக் கயிறுகளாகும்
விரல்கள்
வாசல் திறக்க மறுத்தது
சாளரம் திறந்தது
மரணத்துடன் புணர்ச்சி
கருகும் வாடை வந்த திசையில்
எரியும் தீயின் தாக நாவுகள்
வெற்றுவெளியில் துழாவும்
தசைகள் சுருங்கி சோம்பல் முறிக்கும்
அணைத்துக்கொள்ள ஆவல்
மழையில் ஒதுங்க தஞ்சம் தேடும்
தீயின் அபயக்குரல்
நீரில் மூச்சு முட்ட
இட்டுச்செல்லும்
இருந்ததில் இல்லாதிருந்தது
இன்மைக்கு செல்லும்
சகல தடங்களும் அழிந்து
அரூப வெளிக்குள் ரூபமிழந்து
திசை தொலைத்த காற்றாய்
அலையுற்றது
முகம் பார்க்க முயற்சித்த
எளிய ஆசையை முறியடித்தது
நீர்ப்பரப்பு
இனி தடையில்லை
காதோர சிகையுடன்
கன்னத்தில் ஓடிபபிடிக்க
முதுகில் புரளும் குழலை அலைய
உடை களைய
மேல் உதட்டு வியர்வை பருக
காற்றோடு இருத்தல்
காற்றாக இருத்தல்
காற்றாக ஆதல்
காற்றடைத்த பைக்கு எதற்கு நாமகரணம்
பலூனை உடைத்து
பறந்து சென்றது காற்று
உடைமை இழந்து
அடையாளமும் அழிந்து
இன்மைக்குள் நிரந்தரமானது

கருத்துகள் இல்லை: