செவ்வாய், 15 செப்டம்பர், 2009

ரமேஷ் பிரேம் கவிதைகள்

  • ஆழிப்பேரலை
    ஊருக்குள் புகுந்தது
    தொலைக்காட்சிப் பெட்டியருகே இருந்த
    கண்ணாடித் தொட்டி மீன்களை
    மீண்டும் கடலுக்குள் சேர்த்தது

    ஆழியின் ஆழ்படிவில்
    பனிக்குடத்துக்குள்
    நீந்திக் கொண்டிருக்கிறது
    சிசு

  • எறும்புகளுக்கு
    தற்கொலை செய்துகொள்ளத்
    தெரிவதில்லை
    எனக்குத தெரிந்த எறும்பொன்று
    மூன்று முறை தோல்வி கண்டது
    எதேச்சையாக ஒரு நாள்
    என்னைக் கடித்தபோது
    தன் இறுதி முடிவுக்கான வழியை
    அறிந்து கொண்டது

  • இரவில் படுக்கப் போவதற்கு முன்
    உறைக்கு ஊற்றிய பால் தயிராவதைக்
    காலையில் கண்டதுண்டு

    இரவெலாம் கண்விழித்து
    அது வேறொன்றாகத் திரியும்
    கூத்தைக்
    கண்டதுண்டோ நீ
    கதைசொல்லி

  • காகம்
    வழி தவறி விட்டது
    மிடறு நீருக்காக
    பாலை நிலப்பகுதியில் அலைந்தது

    பள்ளிவிட்டுச் செல்லும் குழந்தையின்
    தோள் பையிலிருந்த கதைப்புத்தகத்துள்
    ஒரு பானையையும்
    அதிலுள்ள கையகல நீரையும் கண்டது
    பரபரப்போடு கற்களைத் தேடியது
    தாகத்தை மறந்து தானும் ஒரு கதையாவதற்கு

  • புத்தகத்தின் மீது
    வட்டமாக விழுகிறது
    மேசை விளக்கின் ஒளி
    வரிவரியாக நீளும்
    எழுத்துக்களால் உருவாகும்
    கதைகளுக்குள் நிகழ்ந்தபடியிருக்கும்
    மனிதர்கள்
    தனியொருவனை ஐந்தாறு பேர்
    ஆயுதங்களோடு விரட்டுகிறார்கள்
    என்னால் எதுவும் செய்ய முடியவில்லை
    சமயோசிதமாக புத்தகத்தை மூடியிருந்தால்
    என் முகத்தில் பட்டுத் தெறித்து வழியும்
    கதகதக்கும் இக்குருதியை
    தவிர்த்திருக்கலாம்
    ஒருவேளை

  • ஒவ்வொரு தீக்குச்சிகளாக உரசி
    விரல்கள் சுடும் வரை எரியவிடுவது
    சிறுவயதிலிருந்து பழக்கம்

    அபூர்வமாக சில சமயம்
    எரியும் சுடரில்
    யாரோ பார்ப்பது தெரியும்

    முகமற்ற பார்வை


  • நெருப்பு ஏன் சுடுகிறது

    சுடக்கூடாது என்று அதற்கு யாரும்
    ஏன் சொல்லித் தரவில்லை

    கடல் உப்புக் கரிக்கிறது
    மீன் ஏன் கரிப்பதில்லை

    தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்
    சரி சாமி செய்வது தப்பில்லையா

    குழந்தைகள் பேசிப் பேசி
    பெரியவர்கள் ஆகிறார்கள்

  • கனவில் வந்த அப்பா
    நான் அதிகமாகக் குடிப்பதாகக்
    குறைபட்டுக்கொண்டார்
    தனக்கு சாராயம் வைத்துப்
    படையலிடாததையும்
    நாசூக்காகச் சொல்லிவிட்டுப் போனார்

    ( உப்பு கவிதைத் தொகுதியிலுள்ள கவிதைகள். உயிர்மை வெளியீடு )

17 கருத்துகள்:

thamizhparavai சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே...
காகம்,கதையும்....
புத்தகக் கதையின் குருதி தெறிக்கும் வன்முறையும், ஆழிப்பேரலையில் மூழ்கிய பனிக்குட சிசுவும் தாக்கத்தை ஏற்படுத்தின...

சென்ஷி சொன்னது…

பகிர்விற்கு நன்றி யாத்ரா!

//குழந்தைகள் பேசிப் பேசி
பெரியவர்கள் ஆகிறார்கள்//

அருமை

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

நல்ல பகிர்வு யாத்ரா. நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை சொன்னது…

pakirvirku nanri nanba

ஜெனோவா சொன்னது…

Super !! Thanks for the sharing yatra!

Learn Speaking English சொன்னது…

படு சூப்பர்

நந்தாகுமாரன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி யாத்ரா

Karthikeyan G சொன்னது…

யாத்ரா, பகிர்விற்கு நன்றி

Ashok D சொன்னது…

கவிதைகள் அனைத்தும் அருமை

மணிஜி சொன்னது…

யாத்திரை போன சுகம்

Venkatesh Kumaravel சொன்னது…

இரவல் தர்றீங்களா? ஈ-புக் கிடைக்குமா? ஸ்கேன் செய்து வைக்கும் பழக்கமிருந்தால் மடலிடவும். உடனே வாசிக்க ஆவலாய் இருக்கிறது!

சந்தான சங்கர் சொன்னது…

"வரிவரியாக நீளும்எழுத்துக்களால்
உருவாகும்கதைகளுக்குள்
நிகழ்ந்தபடியிருக்கும்மனிதர்கள்"

நல்ல பகிர்வு..

Ashok D சொன்னது…

நண்பா... எங்கே உனது கவிதைகள். காத்துக்கொண்டிருக்கிறேன். எழுது.

பா.ராஜாராம் சொன்னது…

மிக நல்ல கவிதைகள் யாத்ரா..சிலிர்ப்பா இருக்கு.முன்னையும் தேடி,தேடி வாசித்ததில்லை.ஒரு சுட்டலில் எவ்வளவோ கிடைக்கிறது.கண் இருட்டி வருது திசை அறியா எழுத்து.இந்த விஞ்ஞானம்,அதன் வீச்சு,எவ்வளவு சுகமாய் இருக்கு.பகிர்தலுக்கு அன்பு தம்பி.அசோக்
சொல்வது போல் ரொம்ப நாள் ஆச்சு யாத்ரா,எழுதுங்களேன்.

இரசிகை சொன்னது…

yellaame piichirukku........:)

நளன் சொன்னது…

பகிர்விற்கு நன்றிகள் யாத்ரா :)

kumar சொன்னது…

கவிதைகள் அருமை