ஞாயிறு, 14 ஜூன், 2009

என் அறை


வெறுமையானதொரு பின்மதியப்பொழுதில்
ஜெமினி ஒயின்ஸில்
தனியாவர்த்தனம் முடித்து
என்னோடு உரையாடிக்கொண்டே
தனிமை வசிக்குமென்
அறையடைந்து பூட்டைத் திறந்து
உள்ளே நுழைய
யன்னல் விளிம்பிலிருந்து
வாசலுக்கு ஓடிவரும் அணில்
குளியலறையிலிருந்து தேரை
குழல்விளக்கு சட்டகத்திலிருந்து பல்லி
வந்தவை அதது அதனதன் இடத்தில்
சில கணங்கள் ஸ்தம்பித்து
என்னையே உற்று நோக்க
வாசல்வரை வந்து வரவேற்கும்
எவளென்றறியாத எவளோ
அரூப ரூபமாய் தோன்ற
வெயிலும் தூறலுமானதாயிருந்தது
பருவநிலை
பாப்கேசம் கழுத்துரச
நெற்றி வரவேற்புத் தோரணமாயசைய
குட்டைப்பாவாடையில் கொலுசொலிக்க
ஓட்டைப்பல்வரிசை தெரியச் சிரித்து
ஓடிவந்து வாசலிலேயே
சட்டையையும் கைகளையும்
மழலையன்பொழுகப் பற்றிக்கொள்ளும்
என் இந்திரியத்தில் ஒளிந்திருக்கும் பிஞ்சுகள்
தோன்றி மறைந்தார்கள் இமைப்பதற்குள்
கானல் தோற்றப்பிழைகளிலிருந்து தெளிவுற்று
உடை களைந்து கைலிக்கு மாறி
சாம்பல் கிண்ணம் சிகரெட் சகிதம்
யன்னலோர மேசையருகான நாற்காலி மீதமர
அணிலும் தேரையும் பல்லியும்
ஏதோ சொல்ல விழைவதாய்
ஓடியும் தாவியுமருகே வர
அவைகளுக்குப் புரிகிற மொழியில்
பகிர்ந்து கொண்டவை
உங்களுக்கு நான்
எனக்கு நீங்கள்
வேறு யார் இருக்கிறார்கள்
நம்மை விட்டால்
இந்த அறைக்கும்.................

25 கருத்துகள்:

யாத்ரா சொன்னது…

இதை எழுதி முடித்த பிறகு, இன்று மதியம் அணில் படுத்திருந்த என்னை அலறியடிக்கச்செய்து இடது தோற்பட்டையில் செல்லமாய் ரத்தம் வர பிறாண்டி விட்டுப்போனது, தேரை என் காலில் தாவி குழந்தையாய் பூச்சாண்டி காட்டியது, மற்றபடி பல்லி என் உற்ற தோழன், தோழியாகவுமிருக்கலாம், உத்திரத்திலிருக்கும் அதனிடம் தினமும் பேசிக்கொண்டிருந்துவிட்டுத்தான் உறங்குவது வழக்கம்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

தனிமை மிகக்கொடுமையானது யாத்ரா. இது மிகச் சாதாரணமான சொல்லாடலாக இருக்கலாம். ஆனால் உண்மை. அதன் கோர முகத்தை தினம் தரிசிப்பவன் நான். என்னை விட்டு நீங்கிப் போக மறுக்கிறது எனக்குத் துணையான என் தனிமை

-ப்ரியமுடன்
சேரல்

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி சொன்னது…

கவிதை அருமையாக இருக்கிறது...
//உங்களுக்கு நான்
எனக்கு நீங்கள்
வேறு யார் இருக்கிறார்கள்
நம்மை விட்டால்
இந்த அறைக்கும்.................///

நிதர்சனமான வரிகள். ஸ்தம்பிக்க செய்கிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

இந்தக் கதைக் கவிதை(யும்) நல்லாயிருக்குங்க.

நந்தாகுமாரன் சொன்னது…

ஒரு vaccum உள் மிதப்பதைப் போல உணர்ந்தேன் இதைப் படித்ததும் ... எதை எழுதினாலும் அது கவிதையாகும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் ... தொடருங்கள் ...

Karthikeyan G சொன்னது…

நல்லா இருக்கு.

நன்றிகள்..

ச.முத்துவேல் சொன்னது…

நல்லாயிருக்குது யாத்ரா.

Joe சொன்னது…

தனிமையின் கொடுமை வேதனையானது.

இந்த கவிதையைப் படித்து முடித்த வுடன், நெஞ்சை அழுத்திப் பிழிந்தது. (அது கிளிஷே-யாக தோன்றினாலும்)

Thamira சொன்னது…

என்ன சொல்வதென தெரியவில்லை.. (இதை பாராட்டாக மட்டுமே கொள்ளவேண்டாம்)

உயிரோடை சொன்னது…

உங்க கவிதைகளில் K.B படத்தின் வித்தியாசமான பொருட்கள் கதாப்பாத்திரம் ஆவது போல ('அழகன்' டெலிபோன், 'வானமே எல்லை' பணப்பெட்டி) தேரையும்,பல்லியும், அணிலும் மற்றும் தனிமையும் கதாப்பாத்திரங்கள் ஆகின்றன.

சீக்கிரம் தனிமை போய் விட இனிமை நிறைந்திட நீங்கள் தனிமைக்காக ஏங்கும் காலம் வரக்கடவது என்று சந்தோசமாக சபிக்கிறேன்.

//எவளென்றறியாத எவளோ
அரூப ரூபமாய் தோன்ற//

ஒன்னுமில்லை உள்ள போன சரக்கு தான் அப்படி காட்டி இருக்கும். :)

//வெயிலும் தூறலுமானதாயிருந்தது
பருவநிலை//

உங்க தனிமையும் மற்ற கதாப்பாத்திரங்களும் போல பருவநிலை இருக்கு. இது இருந்தா அது இல்லை தானே ஆனா எப்படி இரண்டும்?

ச.முத்துவேல் சொன்னது…

/சீக்கிரம் தனிமை போய் விட இனிமை நிறைந்திட நீங்கள் தனிமைக்காக ஏங்கும் காலம் வரக்கடவது என்று சந்தோசமாக சபிக்கிறேன். /

இதே அர்த்தத்தில் நானும் எழுதி பிறகு அழித்துவிட்டேன்.

ny சொன்னது…

அழகாருக்கு!

...அப்படின்னா கொசுத் தொல்லை இல்லைங்களா உங்க ரூம்ல?!

ஆ.சுதா சொன்னது…

நேற்றே படித்தது.
தற்போதே நேரம்!
அற்புதமான கவிதை யாத்ரா.

அகநாழிகை சொன்னது…

யாத்ரா,
கவிதை அருமையாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

மாதவராஜ் சொன்னது…

நேற்றே படித்து விட்டேன்....
இன்னும் உங்கள் அறைக்குள்ளேயே வசித்துக் கொண்டு இருக்கிறேன்.

Deepa சொன்னது…

//எதை எழுதினாலும் அது கவிதையாகும் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் ... //

அழகாகச் சொல்லி இருக்கிறார் நந்தா. எனக்கும் தோன்றியது இது தான்.
அருமை யாத்ரா.

யாத்ரா சொன்னது…

சேரல், கோகுல், ஜ்யோவ்ராம் சுநதர், நந்தா, ஜி கார்த்தி, முத்துவேல், ஜோ, ஆதி, உயிரோடை, கார்டின், முத்து, அகநாழிகை, மாதவராஜ், தீபா அனைவருக்கும் என் நன்றிகள்.

Sugirtha சொன்னது…

தனிமையில் இருக்கும் எல்லாமே எனக்கு பிடிக்கும். அந்த வகையில் இந்த கவிதை எனக்கு நிரம்ப பிடித்திருக்கிறது. அதை எழுதும்போது இருந்த உங்கள் மனநிலை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது யாத்ரா. நாம் வெறுத்தாலும், வாழ்த்தினாலும், அழுதாலும், சிரித்தாலும் தனிமை கூடவே வருகிறது வாழ்கையின் எல்லா கட்டத்திலும் நிதர்சனமாய். பிறகு ஒரு நல்ல நாளில் அதுவே பிடித்து போகிறது. பிடித்து போகிறதா? பழகி போகிறதா? தெரியவில்லை.

யாத்ரா சொன்னது…

நன்றி சுகிர்தா, சரியாச் சொல்லியிருக்கீங்க.

anujanya சொன்னது…

நந்தா சொல்வது தான். அருமையாக தொடர்ந்து நல்ல கவிதைகள் உங்களிடமிருந்து. கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கு.

அனுஜன்யா

யாத்ரா சொன்னது…

நன்றிங்க அனுஜன்யா.

Unknown சொன்னது…

Yahtra,
This "En Arrai" is Great. I have red the review of others and i don't know how to express like others. You are getting in to the next stage.

யாத்ரா சொன்னது…

நன்றி கௌரிஷங்கர்.

இரசிகை சொன்னது…

nallayerukkunga...:)

நளன் சொன்னது…

:) nice poem.