வியாழன், 11 ஜூன், 2009

தவிப்பு


யாருமற்ற வெளியில் சுவர்களமைத்து
மின்வேலியிட்டு சிறைப்படுத்தியிருக்கிறேன்
சுவர்களெங்கும் கிறுக்கல்கள்
பிரக்ஞையின்றி என்னாலேயே எழுதப்பட்டு
அழிக்க அழிக்க நீண்டபடியிருக்கும் சொல்வெளி
பட்சி பூச்சி தாவரங்களிடம்
சொற்குப்பையோடு உரையாடியதில் என்
உறவை முறித்துக்கொண்டன அவை
மொழியை மழுங்கச் சவரம் செய்யினும்
நரையுடன் பல்லிளிக்கிறது
வெளிப்படும் குரல்களை
பரிகசிக்கிறது இவ்வெளி
கேவலம் மொழியன்றி வேறில்லையோ நான்
புலன்களைக் கொல்ல திட்டமிடுகிறேன்
அகத்தின் அப்புறப்படுத்தவியலாத
சேகரங்கள் அழுகி நாறுகிறது
உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதில்
தொடர்ந்த தோல்வி இயலாமை கழிவிரக்கம்
புறப்பிணைப்பறுக்க அகவிழுது
பிடித்தாடுகிறது குரங்கு
என்னை என்ன
செய்வதென்றறியாது தத்தளிக்கிறேன்


18 கருத்துகள்:

அகநாழிகை சொன்னது…

யாத்ரா,
கவிதையின் ஒவ்வொரு வரிகளிலும் இருக்கின்ற உள்ளாழ்ந்த பொருள்களை வாசித்து அமிழ்ந்து கொண்டேயிருக்கிறேன். வார்த்தைகளைச் சேகரித்து சுமந்து திரிகின்ற ஒரு மனதில் சலசலத்து விரைகின்ற ஓடை போல எழுந்து உள்மன உணர்கொம்புகளை கிளரச் செய்கிறது. கவிஞன் நிகழ்வுகளில் வாழ்பவன், நிகழ்வுகளின் பாதிப்புதான் அவன் என்பதையும் புலப்படுத்துகின்றன உன் கவிதையின் வரிகள். மழை வடித்த ஈரம் உறுஞ்சிய மண்ணைப்போல உணர்ந்து நெகிழ்கிறேன்.

வாழ்த்துக்கள் யாத்ரா.

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

நந்தாகுமாரன் சொன்னது…

ஒரு introspective கவிதை evocative-ஆக இருப்பது நன்றாக இருக்கிறது

Deepa சொன்னது…

//மொழியை மழுங்கச் சவரம் செய்யினும்
நரையுடன் பல்லிளிக்கிறது//

பொய்ச் சாயத்தை விட நரை அழகு தான். புரிகிறது.

நட்புடன்,
தீபா

நந்தாகுமாரன் சொன்னது…

And yeah it is very difficult to be far from this madding word-crowd

Ashok D சொன்னது…

//புறப்பிணைப்பறுக்க அகவிழுது
பிடித்தாடுகிறது குரங்கு//
நல்ல வரிகள் யாத்ரா

புறப்பிணைப்பறுக்க - வார்த்தை சரியா??

வழக்கம்போல் இயலாமையே கவிதை கூவினாலும்.. this one is different man

ஆ.சுதா சொன்னது…

ரொம்ப ஆழமானக் கவிதை. உணர முடிகின்றது.

Sugirtha சொன்னது…

திரும்ப திரும்ப படித்து முழு கவிதையையும் உள்வாங்கினேன். தன்னை அறியும் முயற்சியின் வெளிப்பாடாய் துவங்கி, நினைவுகளுக்குள் நடக்கும் சொற்களின் ஊடுருவலை சொல்லி இருக்கும் இந்த கவிதையும் உங்கள் முயற்சியும் வியப்படைய செய்வதாய். ரசிக்கிறேன் யாத்ரா!

பிரவின்ஸ்கா சொன்னது…

//பிரக்ஞையின்றி என்னாலேயே எழுதப்பட்டு
அழிக்க அழிக்க நீண்டபடியிருக்கும் சொல்வெளி //

ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

மாதவராஜ் சொன்னது…

உங்கள் மீதான் நேசமும், பிரியமும் ஒவ்வொரு கவிதையோடும் அடர்த்தியாகிக் கொண்டே இருக்கிறது. ரொம்ப நெருக்கமானவராக உணர வைக்கிறது. நல்ல கவிதைக்கு நன்றி.

இராவணன் சொன்னது…

//பிரக்ஞையின்றி என்னாலேயே எழுதப்பட்டு
அழிக்க அழிக்க நீண்டபடியிருக்கும் சொல்வெளி
//
//பட்சி பூச்சி தாவரங்களிடம்
சொற்குப்பையோடு உரையாடியதில் என்
உறவை முறித்துக்கொண்டன அவை/

//மொழியை மழுங்கச் சவரம் செய்யினும்
நரையுடன் பல்லிளிக்கிறது
வெளிப்படும் குரல்களை//

//புறப்பிணைப்பறுக்க அகவிழுது
பிடித்தாடுகிறது குரங்கு//

மிக மிக அருமை நண்பா.

மணிஜி சொன்னது…

நிறையமுறை படித்து புறிந்து கொள்ள ஆசை...

anujanya சொன்னது…

நல்லா இருக்கு.

//புறப்பிணைப்பறுக்க அகவிழுது
பிடித்தாடுகிறது குரங்கு//

என்ன ஒரு சொற்பிரயோகம் ! (மீண்டும் சொற்கள்!)

அனுஜன்யா

உயிரோடை சொன்னது…

நல்ல கவிதை. வார்த்தைகளை கிட்டவில்லை பாராட்ட, நெகிழ்வா இருக்கு...

//பிரக்ஞையின்றி என்னாலேயே எழுதப்பட்டு
அழிக்க அழிக்க நீண்டபடியிருக்கும் சொல்வெளி//

யப்பா, ரொம்ப அருமை யாத்ரா. எத்தனையோ முறை ஏதோ பேசிட்டு பின்ன ஒரு ஏன் அப்படின்னு வருத்தபட்டு இருக்கோம். ரொம்ப அருமையா இருக்கு படிக்க நெகிழ்வா இருக்கு. நிறைய எழுதுங்க யாத்ரா..

ஆனா

//உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதில்
தொடர்ந்த தோல்வி இயலாமை கழிவிரக்கம்//

தேவையற்ற சிந்தனைகளை தூக்கி தூர போடுங்கள் யாத்ரா. உங்களிடம் இருக்கும் மொழி எழுத்து நீங்கள் உலகின் ராஜா போல அல்லவா உணரணும்...

சீக்கிரம் சிரித்த முகத்தோடு சிறந்த கவிதைகளை படைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு...

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி சொன்னது…

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான கவிதையைப் படித்த திருப்தி இருக்கிறது. மனிதர்களற்ற வெளிகளில் உலவும் மனங்களின் தீராத நினைவுகளை
மொழியின் செழுமையைத் தாங்கிய வார்த்தைகளில் நிரவிவிட்டு இருக்கிறீர்கள்.

அருமை தோழரே...

பெயரில்லா சொன்னது…

//மாதவராஜ் சொன்னது…

உங்கள் மீதான் நேசமும், பிரியமும் ஒவ்வொரு கவிதையோடும் அடர்த்தியாகிக் கொண்டே இருக்கிறது. ரொம்ப நெருக்கமானவராக உணர வைக்கிறது. நல்ல கவிதைக்கு நன்றி.//

கூடவே பிரமிப்பும்.

Joe சொன்னது…

மிகச் சாதாரண வார்த்தைகளில் கவிதை (?!?) எழுதுபவனுக்கு இந்த கவிதையை இரண்டு, மூன்று முறை வாசிக்க வேண்டியிருக்கிறது.

அற்புதமான கவிதை.

//புறப்பிணைப்பறுக்க அகவிழுது
பிடித்தாடுகிறது குரங்கு//
அட்டகாசம்!

யாத்ரா சொன்னது…

அகநாழிகை, நந்தா, தீபா, அசோக், முத்து, சுகிர்தா, பிரவின்ஸ்கா, மாதவராஜ், இராவணன், தண்டோரா, அனுஜன்யா, உயிரோடை, கோகுல், வடகரை வேலன், ஜோ அனைவருக்கும் என் நன்றிகள்

chandru / RVC சொன்னது…

நண்பா, உன்னையும் உன் உணர்வுகளையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது. இருப்பு மிகவும் முக்கியம்,தேவையற்ற சிந்தனைகளை விலக்கி இதைப்போன்ற சிறந்த கவிதைகளை என்றும் தருவாய் என ஆவலோடு எதிர்பார்க்கும் நண்பன் - RVC