வெள்ளி, 24 ஜூலை, 2009
நாகப்பழ நாக்கு
கருநீலப்பாவாடையோரத்தில் மடித்து
எச்சிற்படாமல் கடித்துத் தரும் புளிப்பு மிட்டாய்
கடித்துக் கடித்து திறக்கும்
பென்சில் வைக்கும் பிளாஸ்டிக் பெட்டியில்
பதிந்திருக்குமுன் பற்தடம்
கணக்கு பீரியடில் விழுந்த உன் பல்லை
வானத்துக்கு காட்டாமல்
உள்ளங்கைக்குள் இறுக மூடி
மதிய உணவு இடைவேளையில்
புதைத்த அந்த இடம்
இன்டர்வலில் புதர்ச்சரிவில்
நிகழ்த்தும் சிறுநீர் ஓட்டப்பந்தயம்
முத்தமிட்ட கன்னத்தைத் துடைத்துக்கொண்டே
கழுவ ஓடி குழாய் திறக்க காற்று வர
உள்ளங்கைக்குள் எச்சில் துப்பி
என் முத்தம் அழித்தது
ரிப்பனையவிழ்த்து விட்டே சலித்துப்போன
ரெட்டைப் பின்னல் நாட்களுக்கிடையில்
உச்சியிலிருந்து துவங்குமாறு அலங்கரித்திருந்த
அந்த ஒற்றைப் பின்னல் தினத்தில்
அதை பதினெட்டாவது முறையாக பற்றியிழுத்த
அப்போது அழுது கொண்டே
போடா செந்திலு பொந்திலு குந்திலு நாயே என்றதற்கு
போடி வள்ளி கள்ளி குள்ளி பல்லி பன்னி என்றது
நாகப்பழம் தின்ற நாக்கு காட்டி
நங்கு காண்பித்தது
பாதி சாப்பிட்டிருந்த ஐய்சைப் பிடுங்கிக்
கொண்டோடிய அன்று முழுக்க என்னிடம் பேசாமலிருந்தது
நொண்டியாட்டத்தில் உன் போங்கு ஆட்டம்
பொறுக்காது ஒரு அறைவிட
சில கணங்களில் உன் கன்னத்தில் சிவந்தயென்
விரல் தடம் பார்த்ததிர்ந்து
தடவியபடியே தழுவ முயல்கையில்
காக்கா அடி அடித்து அழுது
விலக்கிக்கொண்டோடியது
விளையாட்டாய் வளையல் உடைப்பது
வழக்கம் தானெனினும்
அன்று பீரிட்ட ரத்தம் பார்த்து
சாரிடி சாரிபா சாரிபா மன்னிச்சிக்கோவென
காயத்தின் ரத்தத்தை வாயில் வைத்து உறிஞ்சியது
தவறவிட்ட ஒற்றைக் கொலுசுக்காய்
அன்று முழுதும் அழுதழுது முகம் வீங்கி
வீட்டுக்குச் செல்கையில்
ஏய் இங்க பாருடி என
கையில் ஆடவிட்டபோது
சிரிப்பும் அழுகையுமாய்
பிடிபடாது ஓடிய என்னைத் துரத்தியது
ஒருநாள் விளையாட்டு பீரியடில்
மைதானத்தில் வழிமறித்து
நான்.......நான்...... என தயங்கி நின்றது
காலத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றாய்
புரட்டப் பட்டுக் கொண்டேயிருக்கிறது
இன்று காலையிலிருந்து
இவளுக்கு சுகமில்லாததால்
அம்முக்குட்டியை அழைத்துவர பள்ளிக்குச் செல்ல
அழுதபடி அப்பா தோ பாருப்பா
அந்தப் பையன் என் கையை எப்படி கடிச்சிட்டான்
என்றவள் கையை வருடிவிட்டு
அவள் சுட்டுவிரல் காட்டிய திசை பார்க்க
மிரண்டு பயந்திருக்கும்
அந்த மழலையின் கரம் பிடித்து
நின்றிருந்தாள் வள்ளி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
32 கருத்துகள்:
இந்த வீட்டை காலி செய்தாயிற்று
எப்படி எடுத்துச் செல்வது
சுவற்றில் இருக்கும் எண்ணைக் கறையை ..
மஞ்சள் அரைத்து அரைத்து
அவ்வண்ணமே இருக்கும் குளியலறைத்திட்டை
இவளின் மூச்சு ஒட்டிக்கொண்டிருக்கும் புகைப் போக்கியை
இந்தக் கவிதையில் இருக்கும் யாத்ராவை
இந்தக்கவிதையை படித்ததும் இந்த நிமிஷம் தோன்றிய வரிகள் இவை யாத்ரா
உங்கள் கவிதை கவிதைக்கு வித்திடும் கவிதைகள்
ஹி ஹி..... நல்லா இருக்குங்க யாத்ரா..
வள்ளியோட பையன் திரும்பவும் ஒரு வள்ளியைப் பார்க்காமல் இருக்கக் கடவது!!
:) நானும்தான் தினம் தினம் எம்பொண்ணை கொண்டு போய் பள்ளியில் விடுகிறேன். எங்க "ராசா"வைத்தான் பாக்க முடியறதில்லை.
ஹா ஹா ஹா ....கவிதை அருமை.
அழகான கவிதை நடையில் அருமையான சிறுகதை
நான் சொல்ல வந்ததை நந்தா சொல்லிவிட்டார். ஒரு நல்ல சிறுகதையை கவிதையாக பிடித்துவிட்டேர்கள் நண்பா.
அப்பு சூப்பரப்பு
அருமை..:-))))
காலத்தை எடுத்து மடியில் வைத்து கொண்டு ,படம் படமாக விரித்து காட்டி கொண்டிருந்தீர்கள் யாத்ரா...நேசன்,ஆதவா,வித்யா,நந்தா,மண்குதிரை,வாசு அண்ணா,அசோக்,கார்த்திகை பாண்டியன் அப்புறம் நானும் கூட...பார்த்து நிறைந்து கொண்டிருந்தோம்!...
காலத்தை எடுத்து மடியில் வைத்து கொண்டு ,படம் படமாக விரித்து காட்டி கொண்டிருந்தீர்கள் யாத்ரா...நேசன்,ஆதவா,வித்யா,நந்தா,
மண்குதிரை,வாசு அண்ணா,அசோக்,
கார்த்திகை பாண்டியன் அப்புறம்
நானும் கூட...பார்த்து நிறைந்து
கொண்டிருந்தோம்!...
எப்படி இப்படி துல்லியமாய், பசுமையாய், ஈரங்காயாமல் பால்யத்தை நினைவுகூர்ந்து எழுதமுடிகிறது.
இது கவனித்து, வளர்த்து, பயன்படுத்திக்கொள்ளப்படவேண்டிய திறன்.அப்படியே வாஞ்சையாய் உள்ளே இழுத்துக்கொள்கிறது கவிதை.
உணர்ச்சிப்பிழம்பு நீங்கள்தான் என்றால் எங்களையும் அப்படி மாற்றிவிடுகிறீர்கள்.
அருமை செந்தில்,
காற்சட்டைப் பிராயத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டீர்கள். உடனே ஏதாவது ஒரு பள்ளிக்குச் சென்று அமர்ந்தெழ வேண்டும் போல் இருக்கிறது.
ஏதோ ஒரு புள்ளியில் எல்லோரையும் கட்டிப் போட்டு விடுகிறது இக்கவிதை.
//அழகான கவிதை நடையில் அருமையான சிறுகதை//
வழிமொழிகிறேன்..
கலித்தொகையில் “சுடர் தொடி கேளாய்” கவிதையை வாசித்த அனுபவம் நண்பா. நல்லாயிருக்கு.
/போடா செந்திலு பொந்திலு குந்திலு நாயே என்றதற்கு
போடி வள்ளி கள்ளி குள்ளி பல்லி பண்ணி என்றது/
:)
:))))))
ரசித்தேன்..
Nundhaa,
மண்குதிரை அவர்கள்
சொன்னது எனக்கும் தோன்றியது
ஒரு நல்ல சிறுகதையை கவிதையாக்கி இருக்கிறீர்கள் .
அருமை .
- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
அப்படியே எனது விடுமுறை தினங்களைப்பார்ப்பது போலவே இருக்கிறது. முடிகையில் ஒரு சொல்ல இயலாத வலியும், இழப்புகளின் நினைவுகூரலும், வெறும் கைகளின் 'வாய்ட்'-ஆக உள்ளே இழுக்கிறது. தோண்டையை செருமிக்கொண்டு தான் பேச முடிகிறது. அந்த தலைப்பு... ஏ-க்ளாஸ்!
இன்னொரு அருமையான கவிதை - சிறுகதையின் இலட்சணங்களுடன்.
எனக்கும் 'தகனம்' என்பது 'எரித்தலை' நினைவூட்டியது. 'வானம் பார்க்காமல்' நாம் அனைவரும் செய்தது 'புதைத்தல்' தானே :)
அனுஜன்யா
flash back :)
nice.
யாத்ரா,
இப்போது தான் கவிதை படித்தேன். அகநாழிகை சொன்னது போல ஒரு நீண்ட கதைக்கான கருவை உள்ளடக்கியது உன் கவிதை. சிறு வயதில் நடந்த சின்ன சின்ன சம்பவங்களை கொண்டு வந்தது, அந்த நட்பின் மேல் உனக்கிருந்த அன்பு மற்றும் அந்த நட்பிடம் காட்டிய குறும்புத்தனமெல்லாம் அருமை. புனைவோ நிஜமோ சிறுவயதில் பள்ளி பருவத்திற்கு சென்று திரும்புகின்றேன் இந்த கவிதை மூலம். இவ்வளவு உணர்வை கொட்டி உன்னால் மட்டுமே கவிதை வடிக்க முடியும். உன் சிறு வயது வள்ளியும் அழகு, அங்கும் உன் மென்குணம் வெளிப்படுவதும் அழகு.(வளையல் கிழித்த கைக் கண்டு பதறுவது, இரட்டை சடை பின்னாததை ஏக்கத்தோடு பார்ப்பது). சிறு வயது பளிப்பு காட்டல்களை அப்படியே கொண்டு வந்திருப்பதும் அழகோ அழகு. ஒரு வாழ்க்கையின் சுழற்சியை கவிதையில் கொண்டு வந்திருப்பது அழகுப்பா. நல்ல கவிதை வாழ்த்துகள்.
பால்யத்தின் நினைவுகளை உள்ளடக்கிய எளிமையான கவிதை.
அருமை.
உயிரோடை லாவண்யா அக்கா, அமித்து அம்மா - நன்றி
நச் யாத்ரா :) ஒரு சிறுகதைய அழகான கவிதை வரிகள்ல கொடுத்ததுக்கு.
ரொம்ப நல்லா இருக்குங்க இந்தக் கவிதையும்.
நன்றி காந்தி
நன்றி சுந்தர்ஜி
அருமை!
:-)
நன்றி தீபா.
சிறுபிராய நினைவுகளில் நனையவிட்டீர்கள்.
நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்.
நன்றி அரவிந்தன்
நன்றி நேசமித்ரன்
wonderful script, excellent flow of words, it mesmerises my thoughts, hats off to the author, I am becoming a great fan of your writings.
KRISHNAN( GOWRISANKAR'S FRIEND)
கருத்துரையிடுக