புதன், 1 ஜூலை, 2009

எறும்பின் பயணம்


சமவெளியிலிருந்து இச்சுவரின்
காரை பெயர்ந்த பள்ளத்தாக்குகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன் எறும்பாகி

நடையில் சிறு வேகம்
சிறு நிதானிப்பு
சிறு வளைவு

சக எறும்புகளோடு
விதானத்தையொட்டிய
செங்குத்துச் சுவரில் ஊர்ந்தபடி
முன் பின்னாய் திரும்பிப்பார்க்க
புலம்பெயர் அகதியாய் உணர்ந்தேன்
போகுமிடம் குறித்த தெளிவுகளின்றி
கவலையேதுமற்று ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
எப்படி இச்சுவரைப் பற்றி
நடந்து கொண்டிருக்கிறேனென்பது
எனக்கே ஆச்சர்யமாயிருக்கிறது
யாரையும் கடிக்கக் கூடாதென்கிற எண்ணம்
பார்ப்போம்

ஒரேயொரு ஆசை மட்டும்
பருகுவதற்கு யாருமற்று
யுகயுகமாய் தனித்திருக்கும்
மது நிரம்பிய குவளையின்
விளிம்பில் சுற்றியபடியிருக்க வேண்டும்
ஆயுள் முழுக்க

ஊழிக் காலத்தில்
அப்படியே அதிலிறங்கி
ஜலசமாதியடைந்து விட வேண்டும்

ஜன்னல் வரை சென்று
கதவு மூடப்பட்டிருக்க
வட்டமடித்து திரும்பிக்கொண்டிருந்தனர் முன்னோர்

என்ன நினைத்தேனோ
கதவைத் திறந்து விட்டு
நானும் என் சக எறும்புகளும
ஜன்னல் விளிம்பு வழி
வெளியேறிக் கொண்டிருப்பதை
பார்த்துக் கொண்டிருந்தேன்

பிறகு எவ்வளவு காத்திருந்தும்
என்னை வந்தடையவேயில்லை
எறும்பாகிப் போன நான்

ஒருவேளை அதற்கு
அந்த மதுக்குவளை
கிடைத்திருக்கலாம்

32 கருத்துகள்:

Vidhoosh சொன்னது…

//யாரையும் கடிக்கக் கூடாதென்கிற ...//

//ஜலசமாதியடைந்து விட வேண்டும்//
//வட்டமடித்து திரும்பிக்கொண்டிருந்தனர் //
class sir. கலக்கல் கவிதை.:)

காமராஜ் சொன்னது…

கவிதைகள் மேலிருக்கும் ஆர்வத்தை
மேலும் மேலும் பெருக்குகிறீர்கள்
கவிதை மிக மிக அருமை

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

நல்ல கவிதை யாத்ரா

-ப்ரியமுடன்
சேரல்

உயிரோடை சொன்னது…

யாத்ரா உன் க‌விதை கொண்டாட‌ப்ப‌ட‌ வேண்டியவை. உன் க‌விதைக‌ள் என் வேலை ப‌ளூவின் சுமைக‌ளையும் சில‌ ச‌ம‌ய‌ம் ம‌ன‌ சுமையையும் குறைக்கின்ற‌ன‌. நிறைய‌ முறை தொலைந்து போகும் என்னை இந்த‌ முறை உன் நீர் சித்திர‌ த‌ரையும், ப‌ய‌ணிக்கும் எறுப்பும் மீட்டு த‌ந்திருக்கின்ற‌ன‌. நிறைய‌ எழுத‌ நினைக்கிறேன் இந்த‌ க‌விதையையும் த‌ரை க‌விதை ப‌ற்றி. ஒரு வித‌ நெகிழ்வில் எழுத‌ முடிய‌வில்லை. வார‌ இறுதியில் மீள் விம‌ர்ச‌ன‌ம் இடுவேன்.

மாதவராஜ் சொன்னது…

தம்பி! அருமையான கவிதை.

உன்னை மதுரையில் சந்தித்ததும், உன்னோடும், முத்துவேலோடும் பேருந்தில் சென்னை வரை பயணம் செய்த தருணங்கள் நிழலாடிக்கொண்டு இருக்கின்றன, ஒரு கவிதையைப் போல.

anujanya சொன்னது…

அபாரமான கவிதை. ஜல சமாதி வரை எங்கெங்கோ கொண்டு சென்றது. பிறகு வந்தது almost வேறு கவிதை போல இருந்தது. மீண்டும் படிக்கவேண்டிய கவிதை. நாடி வருபவர்களை ஏமாற்றம் தராமல் நல்ல படைப்பு தருவது இலேசான விடயமில்லை. உங்களுக்கு அது எளிதில் கைகூடிகிறது.

வாழ்த்துகள் யாத்ரா. வாசுவின் விமர்சனத்துக்கும் காத்திருக்கிறேன்.

அனுஜன்யா

butterfly Surya சொன்னது…

வாவ்.. அருமை.. அருமை

வாழ்த்துகள்.

அகநாழிகை சொன்னது…

யாத்ரா,
வாசிக்கும்போதே எறும்பாகிப் போனேன்
நிலையற்ற வாழ்வினைக் கொண்ட
சிற்றுயிரின் ஒரு பொழுது நிகழ்வை
தானே அதுவாகி எழுதிச்செல்கிற இந்தக்கவிதையில் பல காட்சிகள் பிரமிப்பானது.

//செங்குத்துச்சுவரில்
ஊறியபடி
முன் பின்னாய் திரும்பிப்பார்க்க
புலம்பெயர்ந்த அகதியாய் உணர்ந்தேன்//

மு
ன்
பி
ன்
னா
ய்

தி
ரு
ம்
பி
ப்
பா
ர்
க்


நானே எறும்பாகியதாய் உணர்ந்தேன்.

நன்றாக இருக்கிறது யாத்ரா.


என்றைக்குமான அன்போடு,

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

ரொம்பப் பிடிச்சிருக்கு யாத்ரா!

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

//பிறகு எவ்வளவு காத்திருந்தும்
என்னை வந்தடையவேயில்லை
எறும்பாகிப் போன நான்
ஒருவேளை அதற்கு
அந்த மதுக்குவளை
கிடைத்திருக்கலாம் //

என்ன சொல்லட்டும்? அருமை.

மதன் சொன்னது…

எனக்குக் குடி பிடிக்காதென்றாலும், உங்கள் கவியெறும்பின் கடி பிடித்தது யாத்ரா.. எதிர்பார்க்கிறோம்! :)

நந்தாகுமாரன் சொன்னது…

ultimate ... மிக அருமை ... இன்னும் சில adjectives கூட சேர்த்துப் பாராட்டலாம் ... I just LOVE this ... எறும்பு என் உடலெங்கும் ஊர்கிறது கடிக்காமல் ... சாமி எறும்பா ... ? :) I like it man ...

பிரவின்ஸ்கா சொன்னது…

என்ன சொல்ல ..
ரொம்ப நல்லா இருக்கு ..
சூப்பர் ..


-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

thamizhparavai சொன்னது…

என்னுடைய பார்வையில்,
சுறுசுறுப்பான எறும்பாக மாறிப்போனாலும் கடைசியில் தேடிப் போவது எறும்பின் இயல்பை மாற்றியமைப்பதுபோல் ஓர் நிரந்தர இடத்தை,ஒரு வித சோம்பலை,ஒருவித அலைச்சலில்லாத நிம்மதியை,சுகத்தை...
‘எறும்பாக மாறிய நான்,
பின் நானாக மாறிவிட்ட எறும்பு’

மன்னிக்கவும் எனது புரிதல் அவ்வளவுதான்...

பெயரில்லா சொன்னது…

யாத்ரா,

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படித்தான் சில சமயங்களில் என்னிலிருந்து பிரிந்த நானும், நானும் எதிர்வாதம் செய்கிறாப் போல் ஆகிறது.

விலங்குபூட்டிய காலகளை எட்டிப் போட்டு நடக்க எப்பொழுது வாய்க்குமோ தெரியவில்லை. விட்டு விலகவும் மனதில்லை. அதுவரை கழியட்டும் நாட்களாவது அதன் போக்கில் என்பதாக இருக்கிறது வாழக்கை; பெரும்பாலோருக்கு.

இரா. சுந்தரேஸ்வரன் சொன்னது…

எனக்குப் பிடித்திருக்கிறது இக்கவிதை!

- இரா. சுந்தரேஸ்வரன்
http://akamumpuramum.blogspot.com

ஆ.சுதா சொன்னது…

நானும் மிரட்சியுடன்!!

Kumky சொன்னது…

உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.
(விசிலடிச்சான் குஞ்சு)

Kumky சொன்னது…

எங்கூருல ரெம்ப புடுச்சுபோச்சுன்னு வையி இப்பிடித்தாம் விசிலடிச்சு வுட்டு சந்தோசபட்டுக்குவோம்.....
விசிலு சத்தம் கேக்குதா?

Sugirtha சொன்னது…

யாத்ரா, இந்த வரிகள் என்னை கவர்ந்தது.

/பருகுவதற்கு யாருமற்று
யுகயுகமாய் தனித்திருக்கும்
மது நிரம்பிய குவளையின்
விளிம்பில் சுற்றியபடியிருக்க வேண்டும்/

மது நிரம்பிய குவளையை, எனக்கே எனக்கான, யாருமே பருகியிருக்காத, யாரோ ஒருவரின் அன்பாகவும், அந்த விளிம்பில் சுற்றுகிற எறும்பு நானாகவும் கற்பனை செய்து கொண்டேன். ரம்மியமாய் இருந்தது.

Ashok D சொன்னது…

எறும்பாகிப்போனாலும் கவிதைகளில் ராட்ஸனாய் மாறிக்கொண்டிருக்கிறாய்..
மதுவிடம் மட்டும் ஜாக்கிரதை MAN.

யாத்ரா சொன்னது…

வித்யா, காமராஜ், சேரல், லாவண்யா,மாதவராஜ்,அனுஜன்யா,
வண்ணத்துப்பூச்சியார், வாசு, ஜ்யோவ்ராம்சுந்தர், ஸ்ரீ, மதன், நந்தா, பிரவின்ஸ்கா, தமிழ்ப்பறவை, வடகரைவேலன், சுந்தரேஸ்வரன், முத்து, கும்க்கி, சுகிர்தா, அசோக் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி.

மண்குதிரை சொன்னது…

nalla irukku nanbaa

யாத்ரா சொன்னது…

நன்றி மண்குதிரை.

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி சொன்னது…

அருமை...

Thamira சொன்னது…

அட்டகாசமான அனுபவம். அப்படியிருந்தால் எப்பிடியிருக்கும்? கனவுகளை ஏற்படுத்தும் கவிதை.!

பெயரில்லா சொன்னது…

What do you think of this post-modern piece?

http://www.tamilhindu.com/2009/07/facts-amidst-gospels/

பெயரில்லா சொன்னது…

What do you think of this post-modern piece?

http://www.tamilhindu.com/2009/07/facts-amidst-gospels/

Karthikeyan G சொன்னது…

யாத்ரா.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)

ny சொன்னது…

many more happy returns mate!!

நேசமித்ரன் சொன்னது…

யாத்ரா அற்புதமான வெளியை நோக்கி இட்டுச் செல்கின்றன உங்கள் எழுத்துக்கள்

தமிழன்-கறுப்பி... சொன்னது…

மற்றுமொரு முறை வாசிக்கிறேன்...