வியாழன், 17 ஜூன், 2010

அபி கவிதைகள்

உள்பாடு


இந்தப் பழக்கம்
விட்டுவிடு

எங்காயினும்
வானிலேனும் மண்ணிலேனும்
புள்ளியொன்று கிடக்க்க் கண்டால்
சுற்றிச் சுற்றி
வட்டங்கள் வரைவதும்
சுழன்று சுழன்று
கோலங்கள் வரைவதும்

குறுக்கும் நெடுக்குமாய்ப்
புள்ளியின் வழியே
பரபரத்துத் திரிவதும்------

இந்தப் பழக்கம் விட்டுவிடு

முடிந்தால்

புள்ளியைத் தொட்டுத்தடவி
அதன் முடிதிறந்து
உள்நுழைந்து

விடு


அதுதான் சரி

எல்லாம் தெரிவதும்
ஏதும் அறியாததும்
ஒன்றேதானென்று
தெருவிலொரு பேச்சு
காதில் விழுந்த்து

எதும் அறியாமல்
இருப்பதுவே சரி
என்று தோன்றிற்று

இருந்தால்
இருப்பதை அறியாமல்
இருப்பது
எப்படி

அதனால்
இல்லாதிருப்பதே
சரியென்று பட்டது

இல்லாதிருந்தால்
ஒருவசதி
தெருப்பக்கம்
போகவேண்டியதில்லை
இல்லாதிருப்பதும்
இருப்பதும் ஒன்றே
என்றொரு பேச்சைக்
கேட்டுக் குழம்பும்
குழப்பம் இல்லை



அவர்

கொஞ்சம் கொஞ்சமாக
விலகி
விலகலில் நீடித்தாயெனில்
நீ வாழ்கிறாய்
என்றார்

முடிந்து போனதாய்ப்
போக்குக் காட்டும்
கணங்களில்
ஒட்டிக் கொண்டு சிதறினாய்
உன் சாவைச் சரிபார்த்துக் கொள் என்றார்

பின்னும்
நீ இருப்பதாக உணர்வது வழக்கமெனில்
வாழ்க்கை
எட்டி நின்று உன்னை
முறைப்பதை
சாவின் சஞ்சலத்தை
ஒருபோதும் நீ காணப் போவதில்லை
என்றார்

சொற்களின் கும்மாளத்திலும்
எண்ணங்களின் ஆடம்பரத்திலும்
உன் நிகழ் அனுபவம்
உயிர்ப்படங்கியது
அறியாய்

அறியாய் மேலும்
நிகழ்வில் நின்றே
நிகழ்வினின்றும் விலகும்
நெறி எது என்பதை

கூடவே நிகழ்ந்து வா
கொஞ்ச நேரத்தில் நீ
நிகழ்வுடன் அருகே
இணைகோட்டில் ஓடுவாய்

ஆச்சரியமாகவே உன் இருத்தல்
உனைவிட்டு விலகி உன்னுடன்
ஓடிவரக் காண்பாய்

என்றார்

இன்னும் சொன்னார்


கோடு

கோடு வரைவதெனின்
சரி
வரைந்து கொள்

இப்புறம் அப்புறம்
எதையேனும் ஒன்றை
எடுத்துக்கொள்

எடுத்துக் கொள்ளாதது
எதிர்ப்புறம் என்பாய்

இப்போதைக்கு
அப்படியே வைத்துக்கொள்

முதலிலேயே
மறுபுறத்தை எடுத்துக்கொண்டிருந்தால்

மாறி மாறி
எதிர்ப்புறக் குழப்பம்

இருபுறமும் உனது ?
இருபுறமும் எதிர்ப்புறம் ?

எதுவும்
எவ்வாறும்
இல்லை என்று
சலிப்பாய்

களைத்து உறங்கும் உலகம்

ஆரம்பத்திலேயே
முடிவைத் தடவியெடுக்க
நின்றாய்

இதுஎன்றோ அதுஎன்றோ
இரண்டும் இல்லையென்றோ
வருகிறது
உன்முடிவு

அதனால்
கோடு வரைவதெனின்
வரைந்து கொள்



இடைவெளிகள்

யாரும் கவனியாதிருந்தபோது
இடைவெளிகள்
விழித்துக்கொண்டு
விரிவடைந்தன

நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும்
அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும்
உனக்கும் எனக்கும்
விநாடிக்கும் விநாடிக்கும்
இடைவெளிக்கும் இடைவெளிக்கும்.....
என்று

இடைவெளிகள் விரிவடைந்தன

வெறியூறி வியாபித்தன

வியாபகத்தின் உச்சத்தில்
மற்றெல்லாம் சுருங்கிப்போயின

ஆங்காங்கிருந்து
இடைவெளிகள் ஒருங்கு திரண்டு
அண்டவட்டமாயின

வட்டத்தின் விளிம்பைச் சுற்றிலும்
சிற்றெரும்புகளாய்
வாழ்க்கைக் துகள்

வட்டத்தின் சுழற்சியில்
நடுவே தோன்றி வளர்ந்த்து
பேரொளி

அதற்குப் பேச்சு வரவில்லை
சைகைகளும் இல்லை
எனினும் அதனிடம்
அடக்கமாய் வீற்றிருந்தது
நோக்கமற்று ஒரு
மகத்துவம்



எதன் முடிவிலும்

நினைக்க நினைக்க
நா ஊறிற்று
பறிக்கப் போகையில்

ஓ அதற்கே எவ்வளவு முயற்சி
இரண்டு சிறகுகள்
இங்கே கொண்டுவந்துவிட
யார்யாரோ கொடுத்த
கண்களைக் கொண்டு வழிதேடி
இடையிடையே காணாமல்போய்
என்னை நானே
கண்டுபிடித்துக் கொண்டு
கடைசியில்
மங்கலான ஒரு வழியில்
நடந்தோ நீந்தியோ சென்று சேர்ந்து
முண்டுமுண்டாய்ச்
சுளுக்கிக் கொண்டு நிற்கும்
அந்த மரத்தில் என்னை ஏற்றி
அதை பறிக்கச் செய்து

ஏறிய நானும்
கீழ்நின்ற நானும்
நாவில் வைத்த போது
குடலைக் கசக்கும் கசப்பு

கீழே எறிந்துவிட்டு
மறுபடி நினைத்தால்
நினைக்க நினைக்க
நா ஊறுகிறது

8 கருத்துகள்:

VELU.G சொன்னது…

மிகவும் அருமையான கவிதைகள்

எதன் முடிவிலும் கவிதை ஏற்கனவே ஏதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்
மீண்டும் படித்து மகிழ்ந்தேன்

அருமை

Unknown சொன்னது…

மிகவும் யதார்த்தமான கவிதைகள்.. பகிர்வுக்கு நன்றி.

Thamira சொன்னது…

எதன் முடிவிலும், கோடு ஆகியவை மிகச்சிறப்பாக இருந்தன. 'கோடு' உரைநடையில் எழுதமுடியாத விஷயங்கள் எப்படி கவிதையில் சாத்தியமாகின்றன என்பதற்கான உதாரணம்.

udhaya சொன்னது…

"இடைவெளிகள்"

This topic poem is very good sir. i like much

Unknown சொன்னது…

இடைவெளிகள்

This topic poem is very nice sir,
i like much

Sugirtha சொன்னது…

இது கொஞ்சம் பொறுமையா படிக்கணும், எனக்கு புரியணுமில்ல... ஆமா நீங்க எப்போ எழுதப்போறீங்க? :)

G Gowtham சொன்னது…

என்னை ரொம்பவே யோசிக்கவும் நேசிக்கவும் வைத்த கவிதை.. உள்பாடு!

Kumky சொன்னது…

அப்பப்பா.,

ஒரு ஆன்மிகம் உணர்தலைபோன்ற அற்புதம் யாத்ரா...

எங்கிருந்து பிடித்துக்கொண்டு வருகிறீர்கள் எங்கள் மனதையும் சேர்த்து...

காலத்தினும் நிலைத்திருக்கும் கவிதைகள்...

நன்றி தோழா.