திங்கள், 9 நவம்பர், 2009

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

கதவு

திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய் காத்திருக்கிறாய்
கதவின் பின்புறம் அவ்வப்போது
உறும்
பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும்
அங்கு யாருமில்லை எனக்
கருதவிடாது பார்த்துக் கொள்கின்றன
அயர்விலும் ஆற்றாமையிலும்
திரும்பச் செல்ல
எத்தனிக்கும் கணந்தோறும்
கதவு நோக்கி வரும் காலடியோசையொன்று
உன் காத்திருப்பின் எல்லைகளை நீட்டிக்கிறது
திறக்கப்படாத கதவின் முன்
நெடுங்காலமாய்க் காத்திருக்கிறாய்


ஊழியம் & கம்பெனி (பி) லிமிடெட்

நீங்கள் ஒரு ஓவியர் என்பதை நன்கு அறிவோம் அதனாலேயே
சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியை
வழங்கியிருக்கிறோம் உங்களுக்கு
அந்த இசைக் கலைஞரைப் பாருங்கள்
எவ்வளவு அமைதியாக மணியடித்துக் கொண்டிருக்கிறார்
ஏன் இப்படி உங்கள் கண்கள் கலங்கியிருக்கின்றன
நீங்கள் பயன்படுத்த வேண்டிய
சுண்ணமும் மட்டையும் காத்துக்கொண்டிருக்கின்றன
இப்போதே பணியைத் துவக்குங்கள்
இன்னும் சில தினங்களில் நமது ஆண்டு விழாவில்
கலந்து கொள்ள கடவுள் வர உள்ளார்
அதற்குள்ளாக அனைத்தும் தயாராக வேண்டும்
அதென்ன தூரிகையா
பணியிடத்திற்கு அதோடெல்லாம் வராதீர்கள்
நமது நிறுவனத்தின் விதிகளை அறிவீர்கள் தானே
பணிநேரத்தில் செல்பேசியை உபயோகிக்காதீர்கள்
சரி சீக்கிரம் வேலையைத் துவங்குங்கள்
கடவுளின் அதிகாரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்
பணிகளை மேறபார்வையிட.


முல்லா

கடிகாரங்களை விற்பதற்காக பாக்தாத்தின் கடைத்தெருக்களில்
நாள் முழுதும் சுற்றிக் கொண்டிருந்த முல்லா வீடு திரும்பிக் கொண்டிருந்தார் தன் ஒட்டகத்தில். எதிர்காலத்திற்குள் நுழையவே தெரியாத அந்தக் கடிகாரங்களை யாருமே வாங்கவே இல்லை வழக்கம் போல். சென்ற முறை பழங்களை மட்டுமே நறுக்கும கத்திகளைக் கொண்டு வந்த போதும் இப்படித்தான் நடந்தது. தாகத்தில் நா உலர பாலைவனத்தை அவர் கடந்து கொண்டிருந்தபோது மாறுவேடத்தில் அங்கு வந்த கடவுள் அவரை யாரெனக் கேட்டார். என் பெயர் முல்லா நஸ்ருதின் வாங்குவதற்கு யாரும் வராத பொருட்களைத் தயாரிப்பதில் மட்டுமே தேர்ச்சி பெற்றவன் என, புன்னகையோடு அவரின் கரங்களைப்பற்ற கடவுள் முனைந்தபோது, இந்தக் கரங்களை நான் பார்த்திருக்கிறேன் என்றார் முல்லா. எப்படியெனக் கடவுள் புருவமுயர்த்த, நான் நடந்து செல்லும் போது என் கால்களுக்கடியில் முள் வைத்துக்கொண்டே போகும் கரங்களை நன்கறிவேன் என்றார்.


மரப்பாச்சி

வேப்பமரத்தால் ஆன மரப்பாச்சி பொம்மையொன்று நெடுங்காலம் என் வீட்டிலிருந்தது. மிகுந்த காதலோடு அதற்கு என் பெயரை வைத்திருந்தேன். வாசனைத்திரவியங்கள் முகப்பூச்சு என என்னென்னவோ பூசியும் அதனிடமிருந்து இறுதிவரை அகலவில்லை வேம்பின் உலர்ந்த கசப்பு வாசனை. அதனிடம் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் மெல்லிய விம்மலோசை இரவுகளில் என் அறையெங்கும் வியாபிக்கிறது பேரிரைச்சலாக. அது என்னிடம் ஏதும் கேட்கவில்லை ஆயினும் அதற்கு தவறான உதவிகளையே செய்தேன் போலும். தன்னை இரண்டாகப் பிளக்கும் ஒரு கோடாரி அல்லது சாம்பலாய்த் தூளாக்கும் கொஞ்சம் நெருப்பு என எதையாவது பரிசளித்திருக்கலாம் நான். ஒரு நாள் அது திடீரெனக் காணாமல் போய்விட்டது. அதுமுதலாய் அதனை எல்லா இடத்திலும் தேடிவருகிறேன். அதனிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கவேண்டும். அவ்வளவே. திடீரெனக் காணாமல் போவது எப்படியென.

(காயசண்டிகை கவிதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம்)

12 கருத்துகள்:

D.R.Ashok சொன்னது…

// ஓவியர் என்பதை நன்கு அறிவோம்
சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியை
இசைக் கலைஞரைப் பாருங்கள்
எவ்வளவு அமைதியாக மணியடித்துக் //கலந்து கொள்ள கடவுள் வர உள்ளார்
கடவுளின் அதிகாரிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்
பணிகளை மேறபார்வையிட//

என்ன ஒரு பகடி என்ன ஒரு நிதர்ஸனம்.

இதற்கு மேல் படிக்கமுடியவில்லை.நிறைவு.

ப.ந.

நிலாரசிகன் சொன்னது…

யாத்ரா,

இந்த தொகுப்பிற்கு பாவண்ணன் எழுதிய விமர்சனகட்டுரை இளங்கோ கிருஷ்ணனின் வலைப்பக்கத்தில் இருக்கிறது. அந்த சுட்டியும் கொடுத்தால் நல்லதொரு அறிமுகமாக இருக்கும்.

பா.ராஜாராம் சொன்னது…

இப்படியெல்லாம் கவிதை எழுத முடியுமா யாத்ரா!..இரண்டு உணர்வுகளிலும் கண் கலங்க வைக்கிறார்...பகிர்வுக்கு நன்றி யாத்ரா!

Karthikeyan G சொன்னது…

super.. Thanks fo sharing!!

மண்குதிரை சொன்னது…

excellent

thanks for sharing

Nundhaa சொன்னது…

அருமை ... ஏற்கனவே படித்திருக்கிறேன் ... பகிர்வுக்கு நன்றி

கும்க்கி சொன்னது…

இதற்கு கருத்துரையிட அதிகம் செலவாகும் போலிருக்கிறதே....

இது வரையான செலவு கணக்குகளையே இன்னும் உம்மிடம் தாக்கல் செய்யவில்லை.....

மனதிற்க்கு உவப்பான கவிதைகள்.
திரும்ப திரும்ப வாசிக்க சொல்கின்றன..

நன்றிகள் யாத்ரா.

சந்ரு சொன்னது…

பகிர்வுக்கு நன்றிகள்

ஸ்ரீ சொன்னது…

எல்லாமே அருமை.நன்றி யாத்ரா.

செல்வராஜ் ஜெகதீசன் சொன்னது…

Nice poems Yathra.

Thanks for Sharing.

ஆயில்யன் சொன்னது…

//தன்னை இரண்டாகப் பிளக்கும் ஒரு கோடாரி அல்லது சாம்பலாய்த் தூளாக்கும் கொஞ்சம் நெருப்பு என எதையாவது பரிசளித்திருக்கலாம் நான். ஒரு நாள் அது திடீரெனக் காணாமல் போய்விட்டது. அதுமுதலாய் அதனை எல்லா இடத்திலும் தேடிவருகிறேன். அதனிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கவேண்டும். அவ்வளவே. திடீரெனக் காணாமல் போவது எப்படியென.///


அருமை!

இரசிகை சொன்னது…

yellaame nallyirukku...!