வியாழன், 1 அக்டோபர், 2009

சங்கர ராம சுப்ரமணியன் கவிதைகள்



சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை

தலைப்பிரட்டைகளை
மீன்களென்று எண்ணி
நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து அள்ளி
சட்டைப்பையில்
நிரப்பிச்செல்லும் சிறுவர்கள் நீங்கள்
அவை
உங்கள் விருப்பப்படியே
உங்கள் தலைக்குள்ளும்
சில நாட்களுக்கு
அவரவர் வசதிக்கேற்ப
குப்பிகளிலும்
மீனென நீந்தும்.
மீன்களைப் பிடிப்பதற்கு தேவையான
தூண்டில்கள்
வலைகள்
காத்திருப்பின் இருள்
எதையுமே அறியாத சிறுவர்கள்
நீங்கள்.
தலைப்பிரட்டைகளை
சட்டைப்பைக்குள் நிரப்பி
எடுத்துச்செல்கிறீர்கள்.
உலகிற்கும்
காத்திருக்கும் உங்கள் அம்மாவிற்கும்
யாரும் எதிர்பார்த்திராத
அரிய உயிர்த்துடிப்புள்ள
பரிசை எடுத்துச்செல்வதில்
உங்கள் மனம் படபடக்கிறது
உங்கள் தோழி தேஜீவிடமும்
இந்தப் பரிசை
பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும்
நண்பர்களே
உங்களது இப்போதைய
சந்தோஷத்திற்கு
நான் ஒரு பெயர் இடப்போகிறேன்.
தலைப்பிரட்டை.



ஒரு இரையை
புதிரானதும், கரடுமுரடானதுமான இடங்களில்
எலி ஒன்று இழுத்துச் செல்வது போல்
கனவொன்று
நேற்றும் என்னை வழியெங்கும்
அழைத்துச் சென்றது.
என்னை பரிதவிக்க விட்டு
கொஞ்சம் கொஞ்சமாய்
அந்தக் கனவு கொறித்தது
மீதியாய் என்னை மதில்களிலிருந்து
தூக்கி எறிந்தது.
அபாயத்தில் அலறுவதும் பீதிக்குள்ளாவதுமாய்
வழியெங்கும் கனவின்
கொடூரப் பற்களிடையே
நடுங்கியபடி இருந்தேன்.
கனவில் எங்களைக் கண்டாயா என்று
நீங்கள் கேட்கிறீர்கள்
சற்று இளைப்பாறிவிட்டு
உங்களுக்கு நியாயமாகவே பதிலுரைக்கிறேன்.
நீங்கள் இல்லாமலா ?

நித்தியவனம்

தெலைபேசியில் உள்ள எண்காட்டியில்
எண்கள் நடுங்குவதை
முதல் முறையாய் பார்க்கிறீர்களா.
உங்கள் அழைப்புமணியின் ரீங்காரம்
இதவரை செல்லாத நிலவுகளின்
சுவர்களுக்குள்
ஊடுருவுவதை உணர்கிறீர்களா.
நீங்கள் அழைக்கும் நபர்
சற்றுமுன் இறந்தவராய் இருக்கக்கூடும்.



இரவு காகமென அமர்ந்திருக்கிறது
உயிர்
ஒரு கொக்கின்
வெளிச்ச உடலுடன்
ஆஸ்பத்திரி காரிடாரில் நடந்து
வெளியேறியது.
கொக்கும் காகமும்
ஒரு நித்ய வனத்திற்குள்
ஜோடியாய் பறப்பதை
நீங்கள் பார்த்தீர்கள்
நான் பர்ததேன்.


( சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை, சந்தியா பதிப்பகம். முதலில் இவரின் காகங்கள் வந்த வெயில் தொகுப்பு தான் படிக்க கிடைத்தது, அது இவரின் பிற தொகுதிகளையும் தேடும் ஆர்வத்தைத் தூண்டியது, பிறகு அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள், தற்போது இந்தத் தொகுப்பும் வாசிக்க முடிந்தது. இவரின் முதல் தொகுப்பான மிதக்கும் இருக்கைகளின் நகரம் இன்னும் வாசிக்க கிடைக்கவில்லை. வாசகனை மிரட்டாத எளிய ஆற்றொழுக்கான உரைநடையில் கவித்துவ புனைவுகளாய் இக்கவிதைகள் நிறைவான வாசிப்பனுபவத்தையும் கவிதானுபவத்தையும் நல்குகிறது. )

8 கருத்துகள்:

Thamira சொன்னது…

வாசகனை மிரட்டாத எளிய ஆற்றொழுக்கான உரைநடையில் கவித்துவ புனைவுகளாய் இக்கவிதைகள் நிறைவான வாசிப்பனுபவத்தையும் கவிதானுபவத்தையும் நல்குகிறது//

நிஜம்.. நிஜம்..

எக்ஸலண்ட்.! ஆர்ப்பாட்டம், கவிஞனது மேதாவித்தனம் இல்லாமல் ஆனால் விதம் விதமான உணர்வுகளை எழச்செய்யும் கவிதைகள். இனி சங்கரராம சுப்ரமணியன் கண்ணில் பட்டால் கண்ணை மூடிக்கொண்டு பர்ஸைத் திறப்பேன்.

அதுவும் முதல் கவிதை எக்ஸலண்ட்.

சில இடங்களில் நீங்கள் டைப்பிங் எரர் செய்திருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். கவனிக்கவும்.

மண்குதிரை சொன்னது…

mika nalla kavithaikalai pakirnthu kontirukkiraay nanba

nanri

Ashok D சொன்னது…

//வாசகனை மிரட்டாத எளிய ஆற்றொழுக்கான உரைநடையில் கவித்துவ புனைவுகளாய் நிறைவான வாசிப்பனுபவத்தையும் நல்குகிறது//

உண்மைதான் யாத்ரா, நிறுத்தி நிதானமாய் படித்தேன் புது உணர்வு.
நல்லதொரு பகிர்வு.

velji சொன்னது…

door delivery மாதிரி இருக்கிறது உங்கள் பகிர்வு. நல்ல சரக்கா வேற அனுப்புறீங்க.மிக்க நன்றி!(இரவுக் காகம்..கொக்கு புரியவில்லை)

Karthikeyan G சொன்னது…

Super!!

Thanks for Sharing..

இரசிகை சொன்னது…

nallaayirukku.........

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

நல்லாருக்கு யாத்ரா.

karur karthik சொன்னது…

அருமை