புதன், 2 டிசம்பர், 2009

இருப்பு

நீர்த்திரை விழிகளுடன்
தூசு படிந்த நிழற்படத்தை
முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்
காய்ந்து உதிர்ந்த இலைச்
சருகுகளை விலக்கிப்
பார்க்கிறது காற்றுடன் மழை
கல்லறை எழுத்துக்களை

நெடும்பயண ஓய்வாய்
சிலுவைக்கரங்களில்
வந்தமர்ந்த பறவை
தத்தியிறங்கி தானியமென
கொறிக்கிறது
கல்லறை எழுத்துக்களின்
ஒற்றுப்புள்ளிகளை

தோற்றம் மறைவு என்ற
சொற்களுக்கிடையில்
கறுத்த அட்டைப்பூச்சி
மெல்ல ஊர்கிறது

பெயரைப் போர்த்தியிருக்கும்
பறவையின் எச்சத்தைக் கழுவி
மனதோடு வாசிக்கிறது மேகம்

திசையறியாது மிதந்த
ஒற்றையிறகு நனைந்து
ஒட்டுகிறது சிலுவை உச்சியில்

பளிங்குச் சதுரங்க மேடையில்
மழைத்துளிகளின்
காய் நகர்த்தலுக்கெதிராக
கிளையிலை துளை வழி
சூது நிரம்பிய ஆட்டத்தை
ஆடிக்கொண்டிருக்கின்றன
சூர்யக் கிரணங்கள்

மழைத்துளிகளும் ஒளிப்புள்ளிகளும
ஆடிச் சலித்துச் செல்ல
இருளின் மடியில்
தவழ்ந்திருக்கும் சமயம் வருகிறாள்
கைக்கும் வாய்க்கும் எட்டாமல்
நீலி நிலா
ஒற்றைமுலை குலுக்கி

அதிகாலை
கல்லறை இடுப்பின்
தாழ்வாரத்தில்
மொக்கவிழ்ந்த குறியாய்
முளைத்திருக்கிறது காளான்

( உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை )