வியாழன், 23 டிசம்பர், 2010

புத்தகவெளியீட்டு விழா அழைப்பிதழ்
ப்ரியத்திற்குரிய நண்பர்களுக்கு,

வணக்கம், பிப்ரவரி 2009 முதல் இந்த வலைப்பூவில் எழுதத்துவங்கி இன்றுவரையிலான நிகழ்வுகள் அவற்றின் நினைவுகள் என எல்லாம் எல்லாம் மனதடைத்திருக்கிறது இப்போது, எவ்வளவோ நினைவுகள், துவத்திலிருந்தே இணைய நண்பகளின் உற்சாகமும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் விமர்சனங்களும் வழிகாட்டுதல்களும் தான் இதை சாத்தியப் படுத்தியிருக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியையும் ப்ரியங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மிகுந்த நெகிழ்வாக உணர்கிறேன்.

இக்கவிதைகளை எழுதிய தருணத்தில் தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டு அறிமுகப்படுத்தி வாழ்த்தி உற்சாகப்படுத்திய இணைய நண்பர்களுக்கும், வெளியிட்ட உயிரோசை மற்றும் சிக்கிமுக்கி இணைய இதழ்களுக்கும், நவீனவிருட்சம், மணல்வீடு, அகநாழிகை சிற்றிதழ்களுக்கும், பரிசளித்து மகிழ்வூட்டிய உரையாடல் இலக்கிய அமைப்பிற்கும் மிக்க நன்றி.

இந்த தொகுப்பை நேர்த்தியாக வடிவமைத்து மிகச்சிறப்பாக பதிப்பித்திருக்கும் அகநாழிகை பதிப்பகம், அன்பிற்குரிய பொன்.வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் என் அன்பும் நன்றியும்.

இவ்வெளியீட்டு விழா அறிவிப்பை தங்கள் தளங்களில் மற்றும் கூகுள் பஸ்களில் வெளியிட்டு வாழ்த்தும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

நிகழ்விற்கு சிறப்புரை வழங்கி வெளியிட சம்மதித்த திரு. ராஜசுந்தரராஜன் மற்றும் திரு. ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

வருகிற புதன்கிழமை 29 டிசம்பர் 2010 அன்று சென்னை கே.கே.நகர், முனுசாமிசாலை, டிஸ்கவரி புக் பேலஸில் மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் இப்புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி.

சனி, 31 ஜூலை, 2010

எப்டியிருக்கீங்க

மணவாழ்க்கை எப்டியிருக்கு
விஷேஷம் ஏதாவது
தம்பதி சமேதரா விருந்துக்கு வரணும்
வீட்ல எப்டியிருக்காங்க
ஆடிமாசம் கொலபட்னியா
புரிதல் எப்டியிருக்கு
புதுமாப்ள தொந்தரவு பண்ணாதீங்கப்பா போகட்டும்
குடிக்க்கூடாதுன்னு கன்டிஷனா
சிகரெட்டாவாது பிடிக்கலாமா
என்ன சொல்றாங்க வீட்டுக்காரம்மா
வீட்ல எங்க ஊருக்கா
பொண்டாட்டி கால் பண்றாங்களா
வீட்ல கூட்டிட்டு வரணும் கல்யாணத்துக்கு
புதுமாப்ள என்ன பண்றீங்க இந்த நேரத்துல சேட்ல
பொண்டாட்டி சமையலா
தலைதீபாவளி வாழ்த்துகள்
போன்ற இன்னபிற தருணங்களை கேள்விகளை
புன்னகையோடு கடந்துவிடுகிறேன்
நிலைக்கண்ணாடி சட்டக விளிம்பிலிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள்
விழுந்த புத்தகமெடுக்க குனிய கட்டிலுக்கடியில் சுவரோரம்
சுருண்டிருக்கும் நீண்ட ஒற்றைமுடி
ஜன்னல் விளிம்பிலிருக்கும் ஏர்பின்கள்
முந்தானை மடிப்பு குத்தப்பட்ட அரைஞான் கயிறிலிருக்கும் சேப்டிபின்
பீரோவில் சட்டைகளுக்கிடையில் விடுபட்டுப்போன உள்ளாடை
ஆர்எம்கேவியில் எடுத்த பட்டு வேட்டி சட்டை
கறை படிந்த உள்ளாடை வேட்டி
சுகித்த மெத்தை சீதனங்கள்
மோதிரம் அணிந்திருந்த மெட்டி
நலங்குமஞ்சள் பூசியிருந்தபடி
வரவேற்பறையில் நின்றபடி
நண்பர்கள் உறவினர்களோடு நின்றபடி கைகோர்த்து திரும்பிப்பார்த்தபடி
என் காதலிகளுடன் நின்றபடி
அவள் காதலர்களுடன் நின்றபடி
முதுகுகளில் சாய்ந்தபடி
உணவுமேசையில் ஊட்டியபடி
மெட்டியணிவித்தபடி மாலைமாற்றியபடி
மாங்கல்ய முடிச்சிட்டபடி தலைசுற்றி திலகமிட்டபடி
யாரையோ பார்த்து சிரித்தபடி தோளில் சாய்ந்தபடி
நெற்றிசரியுமவள் முன்கேசம் ஒதுக்கியபடி
கழுத்தில் கைகோர்த்தபடி
பரிசுப்பொருட்களை பெற்றபடி
யாகநெருப்புக்கு நெய்வார்த்தபடி
குட்டிப்பிள்ளையாரை தொட்டிலாட்டியபடி
பாதபூசை செய்தபடி பொறிமோதிரம் அணிவித்தபடி
நீர்க்குடத்தில் மோதிரம் துழாவியபடியிருக்கும்
இறந்த கணங்களின் பிணக்குவியலான ஆல்பம்
சங்கத்தில் பாடாத கவிதை ஆயிரம் மலர்களே மலருங்கள்
ராஜாமகள் ரோஜாமலர் கோடைகாலகாற்றே குளிர் தென்றல் பாடும்பாட்டே
ராஜராஜசோழன் நான் என் இனிய பொன்நிலாவே
பூவண்ணம் போலநெஞ்சம் ஓ வசந்தராஜா தேன்சுமந்த ரோஜா
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
பொத்திவச்ச மல்லிகமொட்டு ஆயிரம் தாமரை மொட்டுக்களே
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்
ஆனந்த ராகம் கேட்கும்காலம் கீழ்வானிலே
அழகிய கண்ணே உறவுகள் நீயே
அழகே அழகு தேவதை ஆயிரம் பாவலர்
கொடியிலே மல்லிகப்பூ ஆத்தாடி பாவாட காத்தாட
மதுர மரிக்கொழுந்து வாசம் மேகங்கருக்கையிலே தேகங்குளிருதடி
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
அடியே மனம் நில்லுனா நிக்காதடி
புத்தம்புது காலை பொன்னிறவேளை
பூங்காவியம் பேசும் ஓவியம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
சோளம் வெதக்கயிலே சொல்லிப்புட்டு போன புள்ளே
தம்தனதம்தன தாளம் வரும் புதுராகம் வரும்
தேவதை போலொரு பெண்ணிங்கு வந்த்து நம்பி
மெட்டியொலி காத்தோடு என் நெஞ்சை தாலாட்ட
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பிவந்தேன்
உறவெனும் புதியவானில் பறந்ததே இதய மோகம்
வெள்ளிக்கொலுசுமணி வேலான கண்ணுமணி
சிறுபொன்மணியசையும் அதில் தெறிக்கும் புதுஇசையும்
ஏ ராசாத்தி ரோசாப்பூ வாவா தேவதையே திருமகளே
பூங்கதவே தாழ்திறவாய் பூவாய் பெண்பாவாய்
ஒருகிளி உருகுது உரிமையில் ப்ழகுது ஓ மைனா மைனா
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்துவர நெனக்கலயே
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும்நேரம்
மணநிகழ்வின் காட்சிகளுக்கு பொருத்தமாய் கோர்க்கப்பட்ட
மூன்றுமணிநேர மூன்று குறுந்தகடுகளை
கணினியில் அலைபேசியில் சேமித்திருந்த நிழற்படங்கள்
அலைபேசியெண்ணை எண்களை
அவ்வப்போது தட்டுப்படும் அழைப்பிதழ்கள் வாழ்த்தட்டைகள்
பெயர் அச்சிடப்பட்ட மஞ்சள் பைகள்
போல்டரில் சேமித்திருந்த வாழ்த்து மின்னஞ்சல்கள்
தூர நண்பர்களுக்கு பகிர்ந்த பிகாசா புகைப்படங்கள்
சுவரில் அலமாரியில் மேசையில் டிவிமேல்
சமையலைறையில் உணவு மேசையில் இருந்த அன்பளிப்புகள்
அன்பளிப்பு விவரங்களடங்கிய நோட்டு
அழைப்பிதழ் கொடுக்க தயாரித்த பட்டியல்
மாமா எழுதி வைத்திருந்த பார்க்கச்சென்ற
முதல் நாள் டிராவல் செலவுமுதல்
சத்திரச்செலவு வரையிலான கணக்குடைரி
சகல தடயங்களையும் அப்புறப்படுத்தியாகிவிட்டது
இன்னும் இன்னும் எங்கெங்கிருந்தோ
முளைத்துக்கொண்டேயிருக்கின்றன அழிக்க அழிக்க சுவடுகள்
முதலில் சந்தித்த கோயில் நிச்சயம் மணம் நிகழ்ந்த மண்டபம்
அழைத்துச்சென்ற மருத்துவனை சினிமா தியேட்டர்
பூ வாங்கும் கடை ஒரேமுறை நேப்கின் வாங்கிய கடை
இருக்கும் வீதி சாலை வழி கவனமாக தவிர்க்கிறேன்
பின்னால் இருத்தி அழைத்துச்சென்ற இருசக்கரவாகனத்தை
கல்லாலடித்து உடைத்துவிட்டேன்
நின்ற அமர்ந்த இடம் கோலம் நடந்த தடம் சுமந்த
அனைத்தையும் நீங்கி வந்துவிட்டேன்
சாவதற்கும் சாமர்த்தியம்வேண்டும்
என்ன செய்வது
பரிமாறப்பட்ட வார்த்தைகள் பார்வைகள் புன்னகைகள் வசைகள் சம்பவங்கள்
பூச்சிகளாய் பறக்கும் மனதை
கூந்தல் கோதியிபடியிருந்த விரல்களை
தழுவிய கரங்களை அணைத்து புரண்டுருண்ட அங்கங்களை
சுவைத்த நாக்கை ஊர்ந்த உதடுகளை
புணர்ந்த குறியை

வியாழன், 17 ஜூன், 2010

அபி கவிதைகள்

உள்பாடு


இந்தப் பழக்கம்
விட்டுவிடு

எங்காயினும்
வானிலேனும் மண்ணிலேனும்
புள்ளியொன்று கிடக்க்க் கண்டால்
சுற்றிச் சுற்றி
வட்டங்கள் வரைவதும்
சுழன்று சுழன்று
கோலங்கள் வரைவதும்

குறுக்கும் நெடுக்குமாய்ப்
புள்ளியின் வழியே
பரபரத்துத் திரிவதும்------

இந்தப் பழக்கம் விட்டுவிடு

முடிந்தால்

புள்ளியைத் தொட்டுத்தடவி
அதன் முடிதிறந்து
உள்நுழைந்து

விடு


அதுதான் சரி

எல்லாம் தெரிவதும்
ஏதும் அறியாததும்
ஒன்றேதானென்று
தெருவிலொரு பேச்சு
காதில் விழுந்த்து

எதும் அறியாமல்
இருப்பதுவே சரி
என்று தோன்றிற்று

இருந்தால்
இருப்பதை அறியாமல்
இருப்பது
எப்படி

அதனால்
இல்லாதிருப்பதே
சரியென்று பட்டது

இல்லாதிருந்தால்
ஒருவசதி
தெருப்பக்கம்
போகவேண்டியதில்லை
இல்லாதிருப்பதும்
இருப்பதும் ஒன்றே
என்றொரு பேச்சைக்
கேட்டுக் குழம்பும்
குழப்பம் இல்லைஅவர்

கொஞ்சம் கொஞ்சமாக
விலகி
விலகலில் நீடித்தாயெனில்
நீ வாழ்கிறாய்
என்றார்

முடிந்து போனதாய்ப்
போக்குக் காட்டும்
கணங்களில்
ஒட்டிக் கொண்டு சிதறினாய்
உன் சாவைச் சரிபார்த்துக் கொள் என்றார்

பின்னும்
நீ இருப்பதாக உணர்வது வழக்கமெனில்
வாழ்க்கை
எட்டி நின்று உன்னை
முறைப்பதை
சாவின் சஞ்சலத்தை
ஒருபோதும் நீ காணப் போவதில்லை
என்றார்

சொற்களின் கும்மாளத்திலும்
எண்ணங்களின் ஆடம்பரத்திலும்
உன் நிகழ் அனுபவம்
உயிர்ப்படங்கியது
அறியாய்

அறியாய் மேலும்
நிகழ்வில் நின்றே
நிகழ்வினின்றும் விலகும்
நெறி எது என்பதை

கூடவே நிகழ்ந்து வா
கொஞ்ச நேரத்தில் நீ
நிகழ்வுடன் அருகே
இணைகோட்டில் ஓடுவாய்

ஆச்சரியமாகவே உன் இருத்தல்
உனைவிட்டு விலகி உன்னுடன்
ஓடிவரக் காண்பாய்

என்றார்

இன்னும் சொன்னார்


கோடு

கோடு வரைவதெனின்
சரி
வரைந்து கொள்

இப்புறம் அப்புறம்
எதையேனும் ஒன்றை
எடுத்துக்கொள்

எடுத்துக் கொள்ளாதது
எதிர்ப்புறம் என்பாய்

இப்போதைக்கு
அப்படியே வைத்துக்கொள்

முதலிலேயே
மறுபுறத்தை எடுத்துக்கொண்டிருந்தால்

மாறி மாறி
எதிர்ப்புறக் குழப்பம்

இருபுறமும் உனது ?
இருபுறமும் எதிர்ப்புறம் ?

எதுவும்
எவ்வாறும்
இல்லை என்று
சலிப்பாய்

களைத்து உறங்கும் உலகம்

ஆரம்பத்திலேயே
முடிவைத் தடவியெடுக்க
நின்றாய்

இதுஎன்றோ அதுஎன்றோ
இரண்டும் இல்லையென்றோ
வருகிறது
உன்முடிவு

அதனால்
கோடு வரைவதெனின்
வரைந்து கொள்இடைவெளிகள்

யாரும் கவனியாதிருந்தபோது
இடைவெளிகள்
விழித்துக்கொண்டு
விரிவடைந்தன

நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும்
அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும்
உனக்கும் எனக்கும்
விநாடிக்கும் விநாடிக்கும்
இடைவெளிக்கும் இடைவெளிக்கும்.....
என்று

இடைவெளிகள் விரிவடைந்தன

வெறியூறி வியாபித்தன

வியாபகத்தின் உச்சத்தில்
மற்றெல்லாம் சுருங்கிப்போயின

ஆங்காங்கிருந்து
இடைவெளிகள் ஒருங்கு திரண்டு
அண்டவட்டமாயின

வட்டத்தின் விளிம்பைச் சுற்றிலும்
சிற்றெரும்புகளாய்
வாழ்க்கைக் துகள்

வட்டத்தின் சுழற்சியில்
நடுவே தோன்றி வளர்ந்த்து
பேரொளி

அதற்குப் பேச்சு வரவில்லை
சைகைகளும் இல்லை
எனினும் அதனிடம்
அடக்கமாய் வீற்றிருந்தது
நோக்கமற்று ஒரு
மகத்துவம்எதன் முடிவிலும்

நினைக்க நினைக்க
நா ஊறிற்று
பறிக்கப் போகையில்

ஓ அதற்கே எவ்வளவு முயற்சி
இரண்டு சிறகுகள்
இங்கே கொண்டுவந்துவிட
யார்யாரோ கொடுத்த
கண்களைக் கொண்டு வழிதேடி
இடையிடையே காணாமல்போய்
என்னை நானே
கண்டுபிடித்துக் கொண்டு
கடைசியில்
மங்கலான ஒரு வழியில்
நடந்தோ நீந்தியோ சென்று சேர்ந்து
முண்டுமுண்டாய்ச்
சுளுக்கிக் கொண்டு நிற்கும்
அந்த மரத்தில் என்னை ஏற்றி
அதை பறிக்கச் செய்து

ஏறிய நானும்
கீழ்நின்ற நானும்
நாவில் வைத்த போது
குடலைக் கசக்கும் கசப்பு

கீழே எறிந்துவிட்டு
மறுபடி நினைத்தால்
நினைக்க நினைக்க
நா ஊறுகிறது

வியாழன், 10 ஜூன், 2010

உமா மகேஸ்வரி கவிதைகள்

பூக்காத செடிகள்

ஏதாவது பேசு
துவைக்காத சட்டை, சுவைக்காத குழம்பு
இவற்றோடு இன்னும்
இலக்கியம் சினிமா என்றில்லாவிடினும்
இன்று கண்ட புதியமுகம், எதிர்பாராத
சம்பவம், வாகன நகர்த்தலில்
வடிவழகு கெடாத கோலம்
வந்து போன வியாபாரத் தந்திரம்
பூக்காத செடியின் யோசனை
புதிதான புத்தக வாசனை என்று
சொல்லேன் எதையாவது.
தினங்களின் கனத்தில்
நசுங்கிய ஞாபகங்களுக்கு
மூச்சு தா
ஜன்னல் வெளியின் பொன்தூசியையும்
நீர்க்கிண்ணத்திலாடும் நிலவையும்
அள்ள முனையும் எனை நோக்கி
முறுவல் செய்
அல்லது முட்டாளென்று சொல்
அடிவயிற்றுக் கருவின் அசைவை
அறிவிக்க உன் கை பற்றிப் பதிந்த போது
அவசரமாய் உதறிப் போனாயே
அதற்கு வருத்தம் தெரிவி உடனடியாக.
அவிர்த்து எறியுமுன்
புடவையடுக்குள் புதைந்த பூக்களையாவது
ரசித்துக் கவனி.
அடுத்த முறை எனை நீ
அழுத்தும் இரவுகளில்
வெளியிலசையும் தென்னையை
வெறிப்பதையாவது
விசாரி ஏன் என்று எப்போதாவது.

•••••

ஒன்றுமில்லை நான் தீர்ந்தேன்
கிடக்கட்டும் இந்த பிரச்சனைகள்
உறங்க வேண்டும் நான்
உரத்த பேச்சு
முடிவற்ற விவாதங்கள்
அலுத்த ஆலோசனைகள்
நைந்து விழுந்த இந்நாள்.
நடமாற்றங்களற்ற நதியொன்றின் கரையில்
என்னை இனியாவது
தனியாகத் தூங்கவிடு
வெல்வெட் மெத்தைகளில்
விரிகின்ற வலைகளில்
வியர்த்து சிறு பூச்சியானேன்.
பயணத்தின் திசை
தெரியப் பிரியமில்லை
இறப்பின் வரப்புகளில்
இன்றும் காத்தருந்த நம்பிக்கை
நகர்ந்து போவதை
நடுங்கிப் பார்க்கிறேன்.
கேள்விகளை சிக்கல்களை
தீராத குழப்பங்களைப்
பொட்டலமாக்கி
எடுத்துப் போ உன்னோடு.
நதிக்கரையில் புதர்மடியில்
நான்மட்டும் தனியாகத்
தூங்கவிடு.

••••••••

குழந்தைக்கால் நுனிகளென
ஆரம்ப மழைத்தடங்கள் என்
கார்த்திகைக் கோலத்தில்
நேர்த்தி தான் பார்ப்பதற்கு;
தீபங்களுக்குப் பதிலாக நீர்ச்சுடர்கள்
வலுத்துப் பெருத்ததில்
வர்ணப்பொடி கரைசல்
திரவ வானவில்லாக.
நின்றதும் மறுபடி வரைதல்.
முடித்துத் திரும்புமுன்
வெடித்துச் சாடும் மழையின் ஆக்கேராஷம்.
கனவின் சிதைவைக்
கண்ணுற்றேன் இம்முறை

•••••••••••••

சொல்லாதது

உரையாடல்களின் முற்றுப்புள்ளி
சுழன்று விரிகிறது வளைகிறது
சொல்லமற் போன ஏதோ ஒன்றின்
கேள்விக்குறியாக.
சொல்வதற்கான திட்டங்களோ
சொல்லாததற்குரிய சகஜமின்மையோ
இல்லை நம்மிடையே
இருந்தாலும்
இரைச்சல்கள் நெரிசல்களிடையே
நசுங்கி உப்பியபடியிருந்தது நாம்
பகிராத எதுவோ

பிரிவில் கையசைத்த பின்பும்
தேடிக் கொள்கிறேன் என்னுள்
ஆடையில் ஒட்டிய உதிராத புல்லென
அது எதுவென்று

•••••••••••••

நேற்று என்னுடையதாக இல்லை
என் சிதறிய அழுகை
எனினும் ஆராய்ந்தேன்
வேகமான உரையாடல்களில்
வெடித்து ஒரு கீறல்
உருவாகும் விதம் குறித்து.
கண்ணாடியில் போலவோ
காய்ந்த நிலத்தில் போலவோ
உலர்ந்த நதியில் போலவோ........

•••••••••••••

மேகம் கருத்திருக்கிறது
மழை வருமென்று
சொல்லிவிட்டேன் தெரியாத்தனமாய்
குழந்தை கேட்கிறாள்
எப்போது மழை வரும் ?
அங்கே கிளம்பினால்
இங்கே வந்துவிடுமென்று
சமாளித்தேன். அடுத்த வினா
எப்போது அங்கே கிளம்பும் ?
‘வரும் போது வரட்டும்’ என
மழுப்பி நகர முனைகையில்
குறுக்கிடும் மற்றொன்று.
‘வரும் போது எப்போ வரும்’
‘வரும் பொழுது, வரும் போது
தானே வருமென்றால்
அவளுக்குப் புரியவில்லை.
ஒருவேளை எப்படியோ
புரிந்ததோ என்னவோ.
விளையாட்டெல்லாம் துறந்து,
வாசல் வரைவில் தேய்படும் கன்னத்தோடு,
வரும் பொழுதிற்காக அவள்
காத்துக்கிடப்பது
என்னை வருத்துகிறது ஏதோ மாதிரியாய்.
நானும் அவளோடு
நின்று காத்திருத்தலன்றி
தெரியவில்லை வழியொன்றும்.

•••••••••••••••

நம்
மழலை பதிந்த ஒலிநாடாக்கள்
அழிபடவேயில்லை
சிறுமிப் பிராயத்தின் கூடாரங்கள்
திறந்தேயிருக்கின்றன.
மரச்செப்புகளில் வேகிற சாதம்
ஆடுகுதிரையில் என் முதுகைக்
கட்டிக் கொண்டிருக்கும் நீ.
மரணச் சுவடுகளை அனுமதிக்காது
நம் குழந்தைமையின் வெளி
அழிவல்ல உன் இறப்பில் நேர்ந்தது
அணுகிவிடக் கூடியதான
சிறு தொலைவும் பிரிவும்

••••••••••••••••••••

ஏனித்தக் குருவியை
இன்னும் காணோம்
எனக்கு மகா செல்லம் அது
பழுப்புக் கலரில் அழுக்குக் குஞ்சு.
சின்ன இறக்கைகளில்
கறுப்புப்கோடு தெரியும்.
கண் மட்டும்
கண்ணாடிக்கல் மாதிரி
வெளிச்சத் துறுதுறுக்கும்.
உரிமையாய் கூடத்தின்
உள்ளே நுழைந்து நடக்கும்.
புத்தகம் ஒதுக்கி
அதையே கவனிக்கும் என்னை
அலட்சியப்படுத்தும்.
மாடி வெயிலில்
வேட்டியில் காயும்
வடகத்தை அலகால் நெம்புதல்,
தோல் உரிக்காது
நெல்லை விழுங்குதல்,
துணிக்கொடியில் கால் பற்றிக்
காற்று வாங்குதல்,
அறைக் கண்ணாடியில்
தன்னைத் தானே
கொத்திக் கொள்ளுதல்
அதற்குப் படித்தம்.
நான் இறைக்கும்
தானியமணிகளை
அழகு பார்த்துத் தின்னும்
ரசனாவாதி.
ஏனிந்தக் குருவியை
இன்னும் காணோம்
அதுவரும் மாலை
மெதுவாய் நகருதே
கீழ்வானப் பரப்பில்
கண் விசிறித் தேடினும்
காணவில்லை, எங்கு போச்சோ
திடுமெனக் காதில்
தித்தித்தது அதன் கீச்சுக்குரல்
ஜன்னல் பிளவில்
உன்னிப் பார்த்தால்
அடுத்த வீட்டு முற்றத்தில்
இறைந்திருக்கும் தானியம் பொறுக்கி
அழகு பார்க்கும் என் குருவி
என் முகம் ஏறிடாது
திரும்பிக் குனியும் விழிகளை


( வெறும் பொழுது - உமா மகேஸ்வரி
தமிழினி பதிப்பகம் )

வியாழன், 22 ஏப்ரல், 2010

வி.அமலன் ஸ்டேன்லி கவிதைகள்

சுயம்

கீறல் விழுந்த கைக்கடிகாரத்தின்
உள்முக மையத்தில்
கருக்கொண்டது முழுவட்ட
நீர்ப்படிவு

இசைபட ஒழுகாது
வழுவிக்காட்டுகையில்
சூழ்ந்து தழுவிய அகாலம்

பழுதென்று கொள்ளலாகாது
தனக்கென சுயமாக
நகரத் தொடங்கியுள்ளது
முள்

முழுமைத்துவம்

மௌனத்தின் மத்தியில் நாம்

மேசையில் கிடந்த்து
மொண்ணைப் பென்சில்

உருட்டியுருட்டி
சிரத்தையுடன் சீவினேன்
கூரானது முனை

மடியில் விழுந்த
செதுக்கல்களை ஊதிவிட்டு
மேம்போக்காக சிராய்த்தேன்
நுனியினை

முடிந்த்தென்று வைத்துவிட
நீயெடுத்துச் சீவுகிறாய்
மென்மேலும்

பழையன கழிதல்

எனக்கும் தெரியவில்லை
என்ன செய்வதென்று
நீ கூறலாம்
ஆனால் செய்யப்பிடிக்கவில்லை

ஒருக்கால்
எனக்காக நீயே செய்தால்
பார்த்துக் கழிப்பேன்
அலாதியென

அலுத்து விடுகையில்
புறக்கணித்துப் போ
வழியில் பிடித்த
வேறெவராயினும் வரக்கூடும்

சொன்னதைச் சொல்லி
உன்னிடம் போல்
முதலிலிருந்து தொடங்குவேன்
நீ வந்துபோனதை மட்டும்
மறைத்துவிட்டு

0

பாடாதுபோன பட்சியை
குறையளக்காதீர்கள்
ஒருக்காலும் தன் சுரக்குறிப்புகளை
தவறவிட்டிருக்காது

தொண்டைக்குழியில் முள்குத்தி
துன்புற்றிருக்கலாம்
மனநலம் சரியில்லாத
வாய்ப்புமுண்டு

அவகாசம் உண்டென்றால்
உள்ளங்கைக்குள் பொருத்தி
மெல்ல வருடிக் கொடுங்கள்
அகப்படவில்லையெனில்
போன திக்கு நோக்கி
வலி தீரப் பிரார்த்தியுங்கள்

நாளையோ மறுநாளோ
வராதுபோயின்
அக்கறையோடு தோட்டத்தில்
தேடுங்கள்
மிஞ்சிக்கிடக்கும் சிறகுகளையும்
சதையெடுத்துச் செல்லும்
எறும்புச் சாரைகளையும்

0

வாழ்தலுக்கிடையில்
அவ்வப்போது
இருத்தலை உறுதிபடுத்திக்கொள்ள

சொற்ப நீர்த்தேங்கலின்
மேற்புறப்படலமென
மெய்சிலிர்த்துக்கொள்ள
வேண்டியுள்ளது வெறுங்காற்றுக்கு

0

நேற்றைக்கின்று அறையில்
கொஞ்சம்
கூடுதலான நேரம்
தங்கிப்போனது வெளிச்சம்

நாளை இன்னும் அதிகம்
நீடிக்கக்கூடும்

அவ்வப்போது
தவறவிட்டதைத் தேட
மேலும் அவகாசம் கிடைக்கும்

முடியாமல் போனால்
எனக்கானதையாவது
தேடிக் கண்டெடுப்பேன்
அதற்குள்

0

ஒவ்வொரு கடற்கரை அமர்விலும்
ஒரு பள்ளம் உருவாகிறது

யாருடைய பள்ளத்திலோ கைநுழைத்து
பேச்சுவாக்கில்
ஏதோவொரு பள்ளம் நிரம்புகிறது
இப்படியே தான் வழிநெடுகிலும்

அறியாதொரு பள்ளம்
அனிச்சையாய் நிரவல்
பிறகு மீண்டுமொரு பள்ளம்

நிஜம்

எட்ட பார்த்த நீராயில்லை
இறங்கி நின்றது

இலை தழை புறந்தள்ளி
விலக்க முயன்ற நீராயில்லை
பருகச் சூழ்ந்த்து

இளைப்பாறுகையில்
அள்ள முனைந்த நீராயில்லை
குடித்துத் தீர்த்த்து


0

அந்த அறைக்குள்
தூங்கவே பயமாயிருக்கும்
யாராரோ உற்று நோக்கும்
பார்வையின் கலவரம்

ஈரம் கசிந்து ஆங்காங்கே
சுண்ணாம்பு உதிரந்த சுவரில்
விரவித் தென்படும் உருவத்தோற்றங்கள்

விளக்கணைக்க
இடம்பெயர்ந்து இருளோடு சூழும்
புதைபடிவ முகங்கள்

ஒருநாள் வெள்ளையடிக்கப்பட்டது

இப்போது தூக்கமில்லை
யாருமற்றுப் படுத்திருப்பதிலும்
பயமிருக்கத்தான் செய்கிறது

சீக்கிரமே பழசாகட்டும்
சுவர்

தூரம்

அன்பைப் பெருக்குகிறது
துயரங்களை ஆற்றிப்போகிறது
நிம்மதியைத் தருவிக்கிறது

அப்படியின்றி
முற்றிலும் எதிர்மறையாகவும்
முரண்பட்டியங்குகிறது

தூரமென்று ஒன்றுமில்லை
அது புலன்களின் விடுதலை
மறதியின் அனுகூலமுடையது

ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளின்
இடைவெளி
ஒரே புள்ளியின் வேறுபட்ட பதிவு
கர்ப்பிணிக்கும் சிசுவுக்குமென
முகில் வழி நதிகளென

மரங்களுக்கும் பறவைகளுக்கும்
மண்ணுக்கும் காற்றுக்குமென
காலதேசவர்த்தமானங்களின் உள்ளீடாக

உனக்கும் எனக்குமன்றி
என்னிடமிருந்தே எனக்கும்

(மேய்வதும் மேய்ப்பதும் யாது... என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள், தமிழனி பதிப்பகம்)

திங்கள், 29 மார்ச், 2010

நானும் அவனும்

துயரத்தின் ரேகை படர்ந்து
முகம் துவண்டு
இன்னும் சற்றைக்கெல்லாம்
தளும்பிவிடும் விழிகளுடன்
என் முன்னால்
நிலைக்கண்ணாடியில் அமர்ந்திருந்தவனை
அப்படியே பார்த்திருந்தேன் சிலகணங்கள்
ஏனோ முத்தமிடத்தோன்றியது
அவன் கன்னத்தில்
இதழ்குவித்து
அவன் கன்னத்தை நெருங்க
அதற்குள் அவன்
உதடுகுவித்து முத்தமிட்டுவிட்டான்
என் உதடுகளில்
அல்லது
என் முத்தம் தான்
குறி தவறிவிட்டதா

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

ஊமைப் பிரியம்

வீசியெறிய மனமின்றி
மீண்டும் மீண்டும்
ஓட்டுகிறாள்
பலநாள் நெற்றியிலிருந்த
அந்த ஸ்டிக்கர் பொட்டை

தான் பாரமாயிருப்பதாய் எண்ணி
கூந்தல் சூடிய சரத்தினின்று
தன்னை உதிர்த்துக் கொள்ளும்
மலர்களைப் போல
உதிர்ந்து வீழ்கிறது
அந்தப் பொட்டு
ஒட்ட வைக்கப்படும்
ஒவ்வொரு முறையும்

காலத்தால் பசை தீர்ந்த அதை
கைவிடுவதைத் தவிர
வேறு வழியிருக்கவில்லை

அதன் இருப்பின்
வெள்ளைத்தடம் மறையாத
அந்த நெற்றியில்
வீற்றிருக்கிறது
மற்றொரு பொட்டு
தன் எதிர்காலத்தையுணராது

வீட்டைக் கூட்டுகையில்
தட்டுப்பட்ட அதைப்பார்த்து
அப்படியே அமர
அவள் விழியோரத்திலிருந்து
ஒரு சொட்டு
நனைக்கிறது
அந்த உதிர்ந்த பொட்டை