சனி, 28 பிப்ரவரி, 2009

பிழைத்தல்

பிழைத்தல்

கசப்பின் முள் கீரிடத்தின் ஊடே
குருதி வழிய
வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்பளுக்காக
பாரம் சுமக்கப்போகிறவர்களின்
உள்ளங்கைகளிலும் கால்களிலும்
அறையப்போகும் ஆணிகளையும்
தேர்ந்த மரத்தில் சிலுவைகளையும்
தயாரிக்கச்சொல்லி உத்தரவு
குளிர்காய மரபுத்தர் சிலைகளும்
நல்ல விற்பனை
உயிர்த்தெழுதல் வேண்டிநிற்கும்
அனேகர்கள் மன்னிப்பீர்களாக
வணிகம் முடிந்து
பாவமன்னிப்போ
பங்கு காணிக்கையோ
குற்றவுணர்வு பீடிக்காதிருக்க
வழிகள் அனேகம்
சாமர்த்தியமாய் பிழைத்தலே முக்கியம்


தன்னிலை விளக்கம்

உருவமாகவும் அரூபமாகவும்
சதா குதறிக்கொண்டிருக்க
மீள்தலின் அவசியம் கருதி
எதிலாவது ஒப்புக்கொடுத்து
வாதை குறைய பிம்பம் குலைய
இருப்பின் மீதான அலட்சியப்போக்கில்
தன்னை மறத்தலின் அவசியம்
உணர்ந்தவர்களுக்கே புரியும்

இவர்களின் உறவினளா நீ

இவர்களின் உறவினளா நீ

வரவும் மாட்டாள்
போகவும் மாட்டாள்
வந்தால் போகவே மாட்டாள்
வருவாளோ மாட்டாளோ
இருக்கிறாளோ இல்லையோ
இருந்தாளோ இருப்பாளோ
இரு இல்லாமல் இரு எங்கும்
வந்து தொலைத்து விடாதே
தூர உறவின் மேன்மையான
பிம்பங்களை குலைப்பதற்கு
அவளல்ல நீ
அவளைப் போன்றவளெல்லாம் அவளாகி விட முடியுமா
அவளே கூட அவளல்ல
என்னவள் நீதான் ஆனால் நீயல்ல
பருகும் தேனீரின் வெம்மையில் குழலுலர்த்தி
ஆயிரம் பக்க நாவல் கண்களில் மிதக்கவிட்டு
கொலுசொலிக்க புடவை சரசரக்க உலவுபவளே
நகுலனின் சுசிலா
கலாப்பிரியாவின் சசிகலா
மனுஷ்யபுத்திரனின் சாரதா
இவர்களின் உறவினளா நீ

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

நகரும் அகவை

நகரும் அகவை

மறந்து போன அகவை
பிரபஞ்சத்தின் ஆதிப்புள்ளியில் இருந்து நீள்கிறதா
புதையப்புதைய முளைத்துக்கொண்டே போகும்
நிகழ் கணத்திலிருந்தா
புறச்சிதைவின் அடையாளங்களை
கேளிக்குள்ளாக்கும் நிலைக்கண்ணாடியுடனான
தோழமைபபிளவு
அழிப்பானுடன் ஒரு கை
சாக்குத்துண்டுடன் ஒரு கை
அழித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும்
நிகழ் கணத்திலிருக்க நினைவுப்பிசகு ஏதுவாக
தொலைத்தது இழந்தது
மறந்தது
வேக நகர்வில் பின் நகரும் சாலை
ஒரே இடத்தில ஓடிக்கொண்டிருப்பதாக உறுத்த
நின்றதும் நேசமாய் சிரிக்க
தார்ச்சாலையில் எழுதி வைத்த பெயரை
வெப்பம் உறிய
உறையும் காலம்
சாத்தியப்பாடுகளுக்கு அப்பாலிருக்க
நிச்சயமின்மைகள் வன்மையான
ஆயுதங்களுடன் துரத்த
திரும்பிப்பார்த்தளுக்கான அவகாசங்களற்று
வன்மத்திற்கு பதிலியாய் வன்மமாய்
கழிகிறது
கடிகார முட்கள்
கால் குத்த
நின்றபடி ஓட
களைப்பின் நிமித்தமோ
கோளாறின் நிமித்தமோ
உறக்கமோ தியானமோ கோமாவோ மரணமோ நேர்ந்துவிட
குற்ற உணர்வுகளின்றி நகர்கிறது காலம்
உச்ச பிறழ்வு எய்த
உபாயங்கள் தேடி களைத்து
நினைவின் புதைகுழியில்
மீட்சிக்கான பிரயத்தனங்கள் மழுங்கடிக்கப்பட்டு
மனதை அரித்துதின்ன
புழுக்களுக்கு கொடுத்து
உயிர் கொடுத்து உயிர் வளர்த்து
நரமாமிசம் பகிர்ந்து விருந்தோம்பி
பொரியலுக்கு ரத்தவங்கியிலிருந்து தருவித்து
இரை உண்டு இறை வளர்த்து
வளர்த்து அழித்து உண்டு வளர்ந்து அழிந்து
தீயின் பசியையும்
புழுக்களின் ஜீவிதத்தையும்
கணக்கிற்க்கொண்டு
அகவை நகர்ந்துகொண்டிருக்கிறது
அழிவை நோக்கி


இன்றைய தினம்


கோடை நன்பகல் மின்வெட்டில் கழிய
சட்டைப்பையின் வென்சுருட்டுப்பெட்டியை துழாவ
காலியான வெறுமையில் நசுக்கி எரிய
விரக்தியின் வரிகள் பதிய
எழுத மறுக்கும் மை
குழிகள் நிரம்பிய சாலையில் அடிவயிறு குளுங்க
சில்லரையற்று நடத்துனரின் பேச்சிற்கு ஆளாக
வழக்கமாய் பூக்கும் தோட்டத்து கொடியும் பூக்காது
சாளரம் ஒட்டிய மரக்கிளையில்
வந்தமரும் பறவையும் வராது
இன்றைய தினம் இப்படியிருக்க
வங்கிக்கடனுக்காக அலைபேசியில்
தேவதைக்குரல்
ஒருமணிநேரம் கேட்டுக்கொண்டிருந்தது

வியாழன், 26 பிப்ரவரி, 2009

காற்றாக ஆதல்

காற்றாக ஆதல்

உள்ளங்கைக்குள் ஓடும்
ரேகைகளின் புதிர்ப்பாதைகள்
அழைத்துச்செல்லும் மர்ம பிரதேசங்கள்
யாருமற்ற வெளியில்
பார்வையின் தடம்
பதியாத பயணம்
இருக்குக் கயிறுகளாகும்
விரல்கள்
வாசல் திறக்க மறுத்தது
சாளரம் திறந்தது
மரணத்துடன் புணர்ச்சி
கருகும் வாடை வந்த திசையில்
எரியும் தீயின் தாக நாவுகள்
வெற்றுவெளியில் துழாவும்
தசைகள் சுருங்கி சோம்பல் முறிக்கும்
அணைத்துக்கொள்ள ஆவல்
மழையில் ஒதுங்க தஞ்சம் தேடும்
தீயின் அபயக்குரல்
நீரில் மூச்சு முட்ட
இட்டுச்செல்லும்
இருந்ததில் இல்லாதிருந்தது
இன்மைக்கு செல்லும்
சகல தடங்களும் அழிந்து
அரூப வெளிக்குள் ரூபமிழந்து
திசை தொலைத்த காற்றாய்
அலையுற்றது
முகம் பார்க்க முயற்சித்த
எளிய ஆசையை முறியடித்தது
நீர்ப்பரப்பு
இனி தடையில்லை
காதோர சிகையுடன்
கன்னத்தில் ஓடிபபிடிக்க
முதுகில் புரளும் குழலை அலைய
உடை களைய
மேல் உதட்டு வியர்வை பருக
காற்றோடு இருத்தல்
காற்றாக இருத்தல்
காற்றாக ஆதல்
காற்றடைத்த பைக்கு எதற்கு நாமகரணம்
பலூனை உடைத்து
பறந்து சென்றது காற்று
உடைமை இழந்து
அடையாளமும் அழிந்து
இன்மைக்குள் நிரந்தரமானது

வண்ணத்தாசன் எழுத்துக்கள்

வண்ணதாசன் எழுத்துக்கள்
இந்த தலைப்பில் ஒரு நான்கு பக்கத்திற்கு இந்த கூகிள் transliteration இல் தட்டச்சினேன். எனக்கு வண்ணதாசனை மிகவும் பிடிக்கும். ஒரு நொடியில் தட்டச்சிய எல்லாம் அழிந்துவிட்டது. இதனால் மிகவும் மனமுடைந்து இருக்கிறேன். மறுபடியும் ஒரு இரண்டு மணி நேரம் ஆகும். இன்னொரு சமயத்தில் வெளியிடுகிறேன்.

சனி, 21 பிப்ரவரி, 2009

நெஞ்சை விட்டு நீங்காத வரிகள்

நெஞ்சை விட்டு நீங்காத வரிகள்

நகுலன் அவர்களது

இருப்பதற்கு என்று தான்

வருகிறோம்

இல்லாமல் போகிறோம்

* எனக்கென்று யாருமில்லை

நான் கூட

விக்ரமாதித்யன் அவர்களது

evanai இவன் kaalathil

இவர்கள்

அறியாமல் ponathil

ivanukku என்ன nashtamm

வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

பிடித்த கவிதைகள்

மனுஷ்யபுத்திரன் அவர்களின் எனக்கு மிகவும் பிடித்த கவிதை

புது வருடத்தில் இருந்து
அன்புக்காக eangum கெட்ட பழக்கத்தை
விட்டு விட்டேன்
உங்களுக்கு எப்படி சொல்வது
நீங்களும் அன்பு செலுத்தும்
கெட்ட பழக்கத்தை விட்டுவிட வேண்டுமென்று

ஆத்மாநாம் அவர்களின் பிடித்த கவிதை
கடவுளை கண்டேன்
எதுவும் கேட்கவே இல்லை
அவரும் புன்னகைத்து
போய்விடடார்

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

அறிமுகப்பதிவுகள்

மூன்று பதிவு இருந்தால் மட்டுமே இணைக்கமுடியுமம் தமிழ்மணத்தில். தடைகளை தாண்டி வருகிறேன். வர முடியுமா பார்க்கலாம்.

அறிமுகப்பதிவுகள்

எப்படி தமிழ்மணத்தில் என் பதிவை இணைப்பது.

சனி, 14 பிப்ரவரி, 2009

யாத்திரை

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பல நாள் போராட்டத்திற்கு பிறகு என் நெடு நாளைய ஆசையான ப்லோக் துவங்குவது இன்று நிறைவேறி இருக்கிறது. எனக்கு இந்த கணினி அறிவு மிக மிக குறைவு. பகிர்ந்து கொள்ள ஏராளம் இருக்கிறது. இந்த பதிவை எப்படி திரட்டியில் இணைப்பது என்பது கூட அறியாத நிலையில் தான் இதை தட்டடசு செய்து கொண்டிருக்கிறேன்.

மிட்டாய் கடையை முறைத்து பார்ப்பது போல் ஒரு அறை மணி நேரம் விழித்து விட்டு ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தமிழ் எழுத்துக்கள் தானே உருவானது. என்ன இது தங்க கோடரி கிடைத்த கதை போல் ஆகி விட்டது.

எனக்கு தமிழ் தட்டச்சு தெரியும். மேலும் தமிழிலேயே பளோகில் தட்டச்சு செய்வதகான எழுத்துரு மற்றும் டேம்ப்லடே ஆகியவை எங்கு கிடைக்கும் என உதவினால் செய் நன்றி மறக்காமல் இருப்பேன்.

முதலில் இந்த பதிவை தமிழ் மனத்தில் இணைத்து பார்க்கிறேன். உங்களுடன் எனக்கு நிறைய பேச இருக்கிறது.

அடியேனுக்கு இந்த blog விடயத்தில் சற்று யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும்.