வெள்ளி, 25 செப்டம்பர், 2009

பாதசாரி கவிதைகள்


ஈக்குஞ்சு

ஈக்குஞ்சு ஒன்று கண்டேன் ஆஹா...
என்னுயிரைப் பகலில்
கலகலப்பாக்கியதொரு ஈக்குஞ்சு தான்
எவ்வளவு அற்புதம்...

இரவுகளில்கூட பெரிய ஈக்கள் மேலும்
வாஞ்சை வந்து விடுகிறது
‘குற்றமும் தண்டனையும்’ நாவலுக்குள
வந்து கண் மறைக்கையில்
வெளியில் எடுத்துவிடுவேன் பெரிய ஈயை –
முன்னொரு நாள் என் மூக்கின் மேல் சிந்தின
திருநீறை என்னவள் துடைத்த மென்மையாக.

பகல் ஒரு குல்கந்து வியாபாரி
இரவே எனக்கு ரோஜாத்தோட்டம்.

ஒரு சொம்பு சிறுவாணித் தண்ணீர்
ஒரு நண்பரின் கடிதம்

ஹோட்டலில் காஃபியைத் தன் கையால்
ஆற்றி வைத்த ஒரு புதிய சர்வர்
தவிரவும் வேறென்ன
இன்று பகலில் ........

ஆத்மார்த்தமாக செய்த செயல் என்னவோ
குண்டூசி கொண்டு
(என்) சீப்பில் அழுக்கெடுத்தது தான்.......

ஒரு குழந்தையாய்
இரவில் என் மடிமீது
மலர்ந்து சிரிக்கும்
பால் மணம் மாறாத
என் டைரி.அழகான சாட்டை

என் இறுதி மூச்சாக நான் வெளியேறுமுன்
வந்து நிற்கிறாய் சிட்டுக்குருவியே
இதுவரை என்னிடம்
எதுவும் நீ எதிர்பார்த்ததில்லை
ஆனால் உன்னிடம் நான் தெரியத் தவறியது ஏராளம்
ஒரு பறவை இறப்பதற்கும்
ஒரு மனிதன் எனும் பெயரில் நான் இறப்பதற்கும்
உள்ள வித்தியாசமும் புரிகிறது இப்போது
புத்தகங்கள் மட்டுமே கூடி நிற்க இறப்பது
என்பது கூட வேதனையில்லை

உன் பாடல்களில்
எவ்வளவோ கேட்டிருக்கலாம்
சுடரின் இறுதிப்புள்ளி இக்கணம்
பாமரக் கண்ணின் கடைசி அசைவில்
புலப்பட வேறு உயிர் காணேன் சுற்றிலும்

கரெக்ட் டயம் பார்த்து தெரு இறங்கி
கடலை பொரிக்காரனிடம் கையேந்தும் வீட்டுநாய்
அடிக்கடி மரமேறி காக்கா முட்டை திருடும் அறைப்பூனை
புகைப்பட அப்பாவின் காலர் குடிக்கும் கறையான்கள்
புத்தகங்கள் புகுந்து அசிங்கப் படுத்திய கரப்பான்கள்
என் முன்னால் கூச்சமின்றிப் புணரும் பல்லிகள்
இரவில் உடலேறி இம்சிக்கும் பெண் கொசுக்கள்
ஒரு ஜீவனைக் காணவில்லை
நான் சொல்லிக் கொண்டு போக

புருஷனுக்குத் தெரியாமல் பலதடவை பிணங்களுக்கு
கொஞ்சம் தலைக்கு வெண்ணையும்
காட்டுக்கு வறட்டியும்
இலவசமாகத் தந்த ஒரே அக்காவும் எங்கோ
தொலைவூரில் சாணி தட்டும் ஓசை கேட்கிறது

நான் வெளியேறிய பின்னால்
சிலர் வரக்கூடும் மனித உடையில்
ஜென்மம் நீங்கின ஒரு கவிஞனைக் காண
இருதயம் நிற்கும் முன்பே இறந்து விட்ட மனிதர்களில்
நானும ஒருவன் என்பதெல்லாம்
நீ அறிந்தது தானே என் சிட்டே

இனியொரு சிறு உதவி
உன் பாடல்களின் வழிகளிலெல்லாம்
இவ்விதயத்தின் கடைசி வரிகளையும் சேர்த்துப்பாடு

மனித உடை தரித்த உயிர்களே
மன்னித்து விடுங்கள் ஒரு மனிதனை
இறுதிவரை அவனின் சாதனை
அழகான சாட்டை செய்ய முயன்றது தான்
அழகான சாட்டை. ஆமாம் அழகான............

பேசும் வாழ்க்கை

அன்று சைக்கிளின் மீதிருந்து
அந்தப் புன்னகையின் கையுயர்த்தல்
நேற்று ஸ்கூட்டரிலிருந்து புன்னகையின் கையுயர்த்தல்
(நான் என்றும் காலத்தின் மீது நடையில்)

இடையில் மாதக்கணக்கில்
இருவரும் சந்திக்காமல் ஆனாலும்
சந்திக்கும் நாளின் இதயத்திலிருந்து
அதே புன்னகையின் கையுயர்த்தல்

சுமார் எட்டு வருடங்களாக
சந்திப்பு நேராத நாட்களில்
எங்களைக் குறித்து கிஞ்சித்தும் சிந்தனையே
எனக்கிருக்காது. அவருக்கும் அப்படித் தானிக்கும்

அவர் எங்கோ பக்கத்தில் தான்
ஒரு கம்பெனியில் வேலை பார்க்கவேண்டும்
என்ன பேர் என்ன வேலை எங்கே வீடு தெரியாது
ஒரு வார்த்தை பேசிக்கொண்டதில்லை

வீட்டுப் பூந்தொட்டியில் வெங்காயப் பயிரென்றான
இன்று –

என் முகம் இறந்த தாய்
எனக்கு முகம் திருப்பும் தந்தை
எனக்கு முகம் மறுக்கும் உறவுகள்
என் முகம் புரியா நண்பர்கள்
இருந்தாலும்

நேர்தலுக்கான திட்டமோ
நேர்தலுக்கான எதிர்பார்ப்போ
நேர்தலுக்கான ஏக்கமோ
இல்லாமல்
அந்த புன்னகையின் கையுயர்த்தல்
என்றேனும்
இவ்விதந்தான்
வாழ்க்கை முகங்கொடுத்து
என்னோடு பேசுவது.

(பாதசாரியின் மீனுக்குள் கடல் தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை. இத்தொகுப்பு இரண்டு சிறுகதைகளும் சில கவிதைகளும உள்ளடக்கியது. தமிழினி வெளியீடு. இத்தொகுப்பிலுள்ள காசி சிறுகதை ஏற்படுத்திய பாதிப்பு சொல்லில் அடங்காது.)

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

ரமேஷ் பிரேம் கவிதைகள்

 • ஆழிப்பேரலை
  ஊருக்குள் புகுந்தது
  தொலைக்காட்சிப் பெட்டியருகே இருந்த
  கண்ணாடித் தொட்டி மீன்களை
  மீண்டும் கடலுக்குள் சேர்த்தது

  ஆழியின் ஆழ்படிவில்
  பனிக்குடத்துக்குள்
  நீந்திக் கொண்டிருக்கிறது
  சிசு

 • எறும்புகளுக்கு
  தற்கொலை செய்துகொள்ளத்
  தெரிவதில்லை
  எனக்குத தெரிந்த எறும்பொன்று
  மூன்று முறை தோல்வி கண்டது
  எதேச்சையாக ஒரு நாள்
  என்னைக் கடித்தபோது
  தன் இறுதி முடிவுக்கான வழியை
  அறிந்து கொண்டது

 • இரவில் படுக்கப் போவதற்கு முன்
  உறைக்கு ஊற்றிய பால் தயிராவதைக்
  காலையில் கண்டதுண்டு

  இரவெலாம் கண்விழித்து
  அது வேறொன்றாகத் திரியும்
  கூத்தைக்
  கண்டதுண்டோ நீ
  கதைசொல்லி

 • காகம்
  வழி தவறி விட்டது
  மிடறு நீருக்காக
  பாலை நிலப்பகுதியில் அலைந்தது

  பள்ளிவிட்டுச் செல்லும் குழந்தையின்
  தோள் பையிலிருந்த கதைப்புத்தகத்துள்
  ஒரு பானையையும்
  அதிலுள்ள கையகல நீரையும் கண்டது
  பரபரப்போடு கற்களைத் தேடியது
  தாகத்தை மறந்து தானும் ஒரு கதையாவதற்கு

 • புத்தகத்தின் மீது
  வட்டமாக விழுகிறது
  மேசை விளக்கின் ஒளி
  வரிவரியாக நீளும்
  எழுத்துக்களால் உருவாகும்
  கதைகளுக்குள் நிகழ்ந்தபடியிருக்கும்
  மனிதர்கள்
  தனியொருவனை ஐந்தாறு பேர்
  ஆயுதங்களோடு விரட்டுகிறார்கள்
  என்னால் எதுவும் செய்ய முடியவில்லை
  சமயோசிதமாக புத்தகத்தை மூடியிருந்தால்
  என் முகத்தில் பட்டுத் தெறித்து வழியும்
  கதகதக்கும் இக்குருதியை
  தவிர்த்திருக்கலாம்
  ஒருவேளை

 • ஒவ்வொரு தீக்குச்சிகளாக உரசி
  விரல்கள் சுடும் வரை எரியவிடுவது
  சிறுவயதிலிருந்து பழக்கம்

  அபூர்வமாக சில சமயம்
  எரியும் சுடரில்
  யாரோ பார்ப்பது தெரியும்

  முகமற்ற பார்வை


 • நெருப்பு ஏன் சுடுகிறது

  சுடக்கூடாது என்று அதற்கு யாரும்
  ஏன் சொல்லித் தரவில்லை

  கடல் உப்புக் கரிக்கிறது
  மீன் ஏன் கரிப்பதில்லை

  தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்
  சரி சாமி செய்வது தப்பில்லையா

  குழந்தைகள் பேசிப் பேசி
  பெரியவர்கள் ஆகிறார்கள்

 • கனவில் வந்த அப்பா
  நான் அதிகமாகக் குடிப்பதாகக்
  குறைபட்டுக்கொண்டார்
  தனக்கு சாராயம் வைத்துப்
  படையலிடாததையும்
  நாசூக்காகச் சொல்லிவிட்டுப் போனார்

  ( உப்பு கவிதைத் தொகுதியிலுள்ள கவிதைகள். உயிர்மை வெளியீடு )

வியாழன், 10 செப்டம்பர், 2009

அப்பாஸ் கவிதைகள்


கோடுகள்

நான் இல்லாத வேளை
நீ என்ன செய்து கொண்டிருந்தாய்
என் மகளே
வயலின் இசைத்துக் கொண்டு
தொலைபேசியில் உன் நண்பர்களோடு
அறையினுள்
அல்லது
உனது விரல்களில் வழியும்
வர்ணங்களின் கோடுகளோடு
அப்படியே தான்
நான் இல்லாத வேளையில்
என்ன செய்து கொண்டிருக்கிறாயோ
அதுவே அதுவே
உனது வேளை
என் மகளே.

நண்பகல்

என்னைக் கேட்காமலேயே
எனது அறையினுள் வந்து விடுகிறது
சப்தமற்ற
இந்த நண்பகல்.
பின் மதிய வேளையில்
வெளியேறும் போதும்
என்னிடத்தில்
சொல்லிக் கொள்வதே இல்லை
கேட்காமலும் சொல்லிக் கொள்ளாமலும்
வரும் போகும்
நண்பகலைக் காண
நீயும் ஒரு முறை
வா
எனது மகளே.


வெளியே

ஒரே புழுக்கமாய் இருக்கிறது
என் மீது எதையும் ஏற்றாதே
உனது வார்த்தைகளும் போரடிக்கிறது
நகருக்கு வெளியே கூட்டிப் போ என்னை
சுவரில் சாய்த்து வைத்த
சைக்கிள் சொல்லிற்று
இப்போது அதை அழைத்து
வெளியே போய்க் கொண்டிருக்கிறேன்.

( அப்பாஸ் அவர்களின் ஆறாவது பகல் என்ற கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை. அகம் வெளியீடு )

புதன், 9 செப்டம்பர், 2009

வாமு கோமு கவிதை

சாந்தாவின் புலம்பல் படலம் 1

லீவ் விட்டா ஐயா என்னை மறந்துடுவீங்களோ ?
ஒரு கடிதமாச்சும அனுப்ப வேண்டாம் ?
நான் ஒருத்தி இங்க தினமும் கடுதாசி வரும்
வரும்னு பாத்துட்டிருந்துட்டு ஏமாந்து போறேன்.
நிஜமாலுமே மறந்துட்டியாப்பா ?
திருப்பூரு சுத்தி அலைவீங்க.. எவடா கெடைப்பான்னு.
பேச்சுல உங்கள அடிச்சிக்க முடியுமா ?
அன்னிக்கி பஸ்சுல என்ன சொன்னீங்க ?
போனதும் முதல் வேலையா உன்னை
நெனச்சு நெனச்சு எழுதுன கவிதை
அமுட்டையும் அனுப்பறேன்னு.. நல்லாவே
இருந்துச்சு வசனம் ! இதை
படிச்ச பின்னாடி அனுப்புனீங்க..
எல்லாத்தையும் அடுப்புல போட்டு கொளுத்தீர்வேன்.
இனியும் லெட்டர் வரலைன்னா
சாப்பிடக் கூட மாட்டேன். ப்ளீஸ்டா..
ஒரே ஒரு கடுதாசி .. ப்ளீஸ்.
இங்க உங்க போட்டோவுக்கு நான் கிஸ்
பண்ணிப் பண்ணி போட்டோ நசிஞ்சு போச்சி.
அழுத்தக்கார ஆளுப்பா நீங்க.
போனா போச்சாதுன்னு பழைய டென்த்
படிச்சப்ப எடுத்த போட்டாவ குடுத்தா
என்ன சொன்னீங்க ? அப்படியே தலையில
கிரீடமும் கையில வேலையும் குடுத்திட்டா
சாமியாக்கும்னு நெனச்சு தின்னீரு
இட்டுக்கிட்டு போயிருப்பேன்னு.. லொள்ளு !
சரியாந்த லொள்ளு ! பஸ்சுனு கூட
பாக்காம போட்டோவுக்கு கிஸ்சு வேற
குடுக்கறீங்க
பதிலுக்கு உங்க போட்டாவக் கேட்டா
நீயே எம் பாக்கட்ல இருக்கு
எடுத்துககோன்னு.. சரியாந்த கொழுப்பு !
இனி என்ன எழுத ? எனக்கு எல்லாமே
நீங்க தான்.
( இந்தக் கடிதம் மிஸ்டேக் இல்லாம வர
காரணம் என் தங்கச்சி உங்க
கொழுந்தியாவின் திரு உதவி )

( சொல்லக் கூசும் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதை, உயிர்மை வெளியீடு )