வெள்ளி, 25 செப்டம்பர், 2009

பாதசாரி கவிதைகள்


ஈக்குஞ்சு

ஈக்குஞ்சு ஒன்று கண்டேன் ஆஹா...
என்னுயிரைப் பகலில்
கலகலப்பாக்கியதொரு ஈக்குஞ்சு தான்
எவ்வளவு அற்புதம்...

இரவுகளில்கூட பெரிய ஈக்கள் மேலும்
வாஞ்சை வந்து விடுகிறது
‘குற்றமும் தண்டனையும்’ நாவலுக்குள
வந்து கண் மறைக்கையில்
வெளியில் எடுத்துவிடுவேன் பெரிய ஈயை –
முன்னொரு நாள் என் மூக்கின் மேல் சிந்தின
திருநீறை என்னவள் துடைத்த மென்மையாக.

பகல் ஒரு குல்கந்து வியாபாரி
இரவே எனக்கு ரோஜாத்தோட்டம்.

ஒரு சொம்பு சிறுவாணித் தண்ணீர்
ஒரு நண்பரின் கடிதம்

ஹோட்டலில் காஃபியைத் தன் கையால்
ஆற்றி வைத்த ஒரு புதிய சர்வர்
தவிரவும் வேறென்ன
இன்று பகலில் ........

ஆத்மார்த்தமாக செய்த செயல் என்னவோ
குண்டூசி கொண்டு
(என்) சீப்பில் அழுக்கெடுத்தது தான்.......

ஒரு குழந்தையாய்
இரவில் என் மடிமீது
மலர்ந்து சிரிக்கும்
பால் மணம் மாறாத
என் டைரி.அழகான சாட்டை

என் இறுதி மூச்சாக நான் வெளியேறுமுன்
வந்து நிற்கிறாய் சிட்டுக்குருவியே
இதுவரை என்னிடம்
எதுவும் நீ எதிர்பார்த்ததில்லை
ஆனால் உன்னிடம் நான் தெரியத் தவறியது ஏராளம்
ஒரு பறவை இறப்பதற்கும்
ஒரு மனிதன் எனும் பெயரில் நான் இறப்பதற்கும்
உள்ள வித்தியாசமும் புரிகிறது இப்போது
புத்தகங்கள் மட்டுமே கூடி நிற்க இறப்பது
என்பது கூட வேதனையில்லை

உன் பாடல்களில்
எவ்வளவோ கேட்டிருக்கலாம்
சுடரின் இறுதிப்புள்ளி இக்கணம்
பாமரக் கண்ணின் கடைசி அசைவில்
புலப்பட வேறு உயிர் காணேன் சுற்றிலும்

கரெக்ட் டயம் பார்த்து தெரு இறங்கி
கடலை பொரிக்காரனிடம் கையேந்தும் வீட்டுநாய்
அடிக்கடி மரமேறி காக்கா முட்டை திருடும் அறைப்பூனை
புகைப்பட அப்பாவின் காலர் குடிக்கும் கறையான்கள்
புத்தகங்கள் புகுந்து அசிங்கப் படுத்திய கரப்பான்கள்
என் முன்னால் கூச்சமின்றிப் புணரும் பல்லிகள்
இரவில் உடலேறி இம்சிக்கும் பெண் கொசுக்கள்
ஒரு ஜீவனைக் காணவில்லை
நான் சொல்லிக் கொண்டு போக

புருஷனுக்குத் தெரியாமல் பலதடவை பிணங்களுக்கு
கொஞ்சம் தலைக்கு வெண்ணையும்
காட்டுக்கு வறட்டியும்
இலவசமாகத் தந்த ஒரே அக்காவும் எங்கோ
தொலைவூரில் சாணி தட்டும் ஓசை கேட்கிறது

நான் வெளியேறிய பின்னால்
சிலர் வரக்கூடும் மனித உடையில்
ஜென்மம் நீங்கின ஒரு கவிஞனைக் காண
இருதயம் நிற்கும் முன்பே இறந்து விட்ட மனிதர்களில்
நானும ஒருவன் என்பதெல்லாம்
நீ அறிந்தது தானே என் சிட்டே

இனியொரு சிறு உதவி
உன் பாடல்களின் வழிகளிலெல்லாம்
இவ்விதயத்தின் கடைசி வரிகளையும் சேர்த்துப்பாடு

மனித உடை தரித்த உயிர்களே
மன்னித்து விடுங்கள் ஒரு மனிதனை
இறுதிவரை அவனின் சாதனை
அழகான சாட்டை செய்ய முயன்றது தான்
அழகான சாட்டை. ஆமாம் அழகான............

பேசும் வாழ்க்கை

அன்று சைக்கிளின் மீதிருந்து
அந்தப் புன்னகையின் கையுயர்த்தல்
நேற்று ஸ்கூட்டரிலிருந்து புன்னகையின் கையுயர்த்தல்
(நான் என்றும் காலத்தின் மீது நடையில்)

இடையில் மாதக்கணக்கில்
இருவரும் சந்திக்காமல் ஆனாலும்
சந்திக்கும் நாளின் இதயத்திலிருந்து
அதே புன்னகையின் கையுயர்த்தல்

சுமார் எட்டு வருடங்களாக
சந்திப்பு நேராத நாட்களில்
எங்களைக் குறித்து கிஞ்சித்தும் சிந்தனையே
எனக்கிருக்காது. அவருக்கும் அப்படித் தானிக்கும்

அவர் எங்கோ பக்கத்தில் தான்
ஒரு கம்பெனியில் வேலை பார்க்கவேண்டும்
என்ன பேர் என்ன வேலை எங்கே வீடு தெரியாது
ஒரு வார்த்தை பேசிக்கொண்டதில்லை

வீட்டுப் பூந்தொட்டியில் வெங்காயப் பயிரென்றான
இன்று –

என் முகம் இறந்த தாய்
எனக்கு முகம் திருப்பும் தந்தை
எனக்கு முகம் மறுக்கும் உறவுகள்
என் முகம் புரியா நண்பர்கள்
இருந்தாலும்

நேர்தலுக்கான திட்டமோ
நேர்தலுக்கான எதிர்பார்ப்போ
நேர்தலுக்கான ஏக்கமோ
இல்லாமல்
அந்த புன்னகையின் கையுயர்த்தல்
என்றேனும்
இவ்விதந்தான்
வாழ்க்கை முகங்கொடுத்து
என்னோடு பேசுவது.

(பாதசாரியின் மீனுக்குள் கடல் தொகுப்பிலுள்ள கவிதைகள் இவை. இத்தொகுப்பு இரண்டு சிறுகதைகளும் சில கவிதைகளும உள்ளடக்கியது. தமிழினி வெளியீடு. இத்தொகுப்பிலுள்ள காசி சிறுகதை ஏற்படுத்திய பாதிப்பு சொல்லில் அடங்காது.)

13 கருத்துகள்:

மண்குதிரை சொன்னது…

nallathoru pakirvu nanbanee

velji சொன்னது…

ஈக்குஞ்சு

'ஈ ஓட்டிக்கிட்டு இருக்கான்' என்ற பதத்திலிருந்து விரிந்த நல்லதொரு கவிதை.

அழகான சாட்டை

சாட்டை செய்யத் தெரிந்தவரோ,சாட்டை எதுவும் இன்றி இருப்பவரோ பாதியில் இறக்க அழகான சாட்டை செய்யும் சாமர்த்தியம் வந்தால் வாழ்க்கையும் சாத்தியமோ...

பேசும் வாழ்க்கை

மொத்த நிராகரிப்பிலும் திட்டமின்றி நிகழும் புன்னகையின் கையுயர்த்தல் 'பேசும் வாழ்க்கையாய்' இருக்கிறது.

அருமையான கவிதைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Ashok D சொன்னது…

கவிதைகள் மூன்றும் அருமை. தனிமை, இறப்பு, நிராகரிப்பு. ஆனால் ஒருவித அழகியலோடு இருக்கிறது.

சரி யாத்ரா இதுமாதிரி கவிதைகளையே படித்துக் கெட்டுபோகாதே :)

கொண்டாடத்தை, கடவுளை (கடவுளோடு சண்டையேகூட போடலாம்), வேறுவேறு விஷயங்களை நோக்கி நகர்ந்தால் எங்களுக்கு சந்தோஷமே.

நந்தாகுமாரன் சொன்னது…

பத்து வருடங்களுக்கு முன்பாக கோவையில் என் நண்பர் ஒருவர் பாதசாரியின் (அவர், அவர் நண்பர்) காசி கதை பற்றி குறிப்பிட்டார் ... பிறகு எப்போதோ ‘மீனுக்குள் கடல்’ பற்றி எங்கேயோ கேள்விப்பட்டு ஓஷோவின் the fish in the sea is not thirsty போல் இருக்கின்றதே ... படிக்க வேண்டும் என நினைத்தேன் ... இப்போது உங்கள் பதிவை படித்துவிட்டு ... பிறகு ... ‘மணல் வீடு’ ஹரியிடம் வேறு ஒன்று பேசும் போது அவரும் திடீரென்று பாதசாரி பற்றி குறிபிட்டார் ... பகிர்வுக்கு நன்றி

Kumky சொன்னது…

ஏம்பா யாத்ரா தம்பி ஏதோ உபோஒ வாமே அதப்பத்தி ஏதும் கவிதை எழுதலியா..?

பா.ராஜாராம் சொன்னது…

அருமையான பகிர்வு யாத்ரா.நன்றி.

யாழினி சொன்னது…

ஈக்குஞ்சு
கவிதை மிக அருமை....

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

மீனுக்குள் கடல் முக்கியமான தொகுதி. நீங்கள் சொல்லியிருப்பது போல் காசி எனக்கும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய கதை.

காமராஜ் சொன்னது…

//முகம் இறந்த தாய், முகம் திருப்பும் தந்தை.//

ஒவ்வொரு முறையும் சஞ்சலத்தோடு திரும்பவைக்கிறது கவிதைகள்.
சலனப்படுத்தாவிட்டால் எப்படி படைப்பாகும். யாத்ரா அருமையான
முனவைத்தல்.

மாதவராஜ் சொன்னது…

கவிதைகள் அருமை தம்பி. சரி... உங்க கவிதகளை சில காலமாக காணோமே...!

G.S.Dhayalan சொன்னது…

காசி சிறுகதையை பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாசித்திருக்கிறேன். காசி தந்த பாதிப்பு, ரெண்டு நாட்கள் தூங்க முடியாமல் பெற்ற தவிப்பு, ரயில்கள் இருக்கும் வரை வாழலாம் போலிருக்கிறது என்ற கடைசி வரிகள் எல்லாம் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. இப்போது வாசித்தால் எப்படியிருக்கும் என்பதை உணர முடியவில்லை. முதல்முறை வாசித்த போது ஏற்பட்ட அனுபவங்களை தக்கவைப்பதற்காக திரும்ப வாசிக்காமலிருக்கிறேன். உங்கள் பதிவு மீண்டும் வாசிக்கும் ஆர்வம் தருகிறது. இனிமையான உங்கள் ஞாபகமூட்டலுக்கு நன்றி.

Karthikeyan G சொன்னது…

Too Good..

Thanks for sharing..

இரசிகை சொன்னது…

yenna vaasiththuk kondu irukkiren yenbathey puriyaamal mudinthu vittathu...

marupadiyum vaasiththen..