வியாழன், 22 அக்டோபர், 2009

ராஜசுந்தரராஜன் கவிதைகள்

*

குற்றுயிரும் கொலையுருமாய்க் கிடந்த
ஒரு சிகரெட்டை
முற்றாகக் கொன்றவன் நான்
அதில் எனக்குக்
குற்றபோதம் இல்லை


*

வான பரியந்தம் உயர்ந்த கோபுரத்தில் ஏறி
இல்லை என்று கைவிரித்து நிற்கிறது
சிலுவை


*

மழை இல்லெ தண்ணி இல்லெ

ஒரு திக்குல இருந்துங்
கடதாசி வரத்து இல்லெ

அடைக்கலாங் குருவிக்குக்
கூடுகட்ட
என் வீடு சரிப்படலெ

நான் ஒண்டியாத்தான் இருக்கேன்
இன்னும்


*

கிறுக்குப்பிடித்த பெண்ணைக்
கர்ப்பவதியாக்க
எவன் மனம் துணிந்தது இப்படி
அதற்கு முன் இவளைப்
புஷ்பவதியாக்க
இறை மனம் துணிந்ததே எப்படி


*

காக்கைகள் கொத்த
எறுமை நிற்கிறது இணங்கி
உண்ணிகள் காரணம்


சருகு

நழுவியது கிளையின் பிடி
விடுதலை.

விடுபட்ட மறுகணம்
மாட்டிக்கொண்டதோ காற்றின் கையில்.
அலைக்கழிப்பு

ஒரு குடிப் பிறந்தோம்

ஒரு கனி
ஒரு இலை
உதிர்ந்தன பழுத்து.

மண்ணோடு கலந்த வழியில்
ஒன்று மரம்
ஒன்று உரம்.


*

ஒரு சுடர்
ஒரு நிழல்
இல்லை தொல்லை

இருள் போக்க வந்ததுகள் என்று
வழி நெடுக விளக்குகள்.
ஒன்றின்மீதோன்று புரண்டு
குழப்பித் தொலைக்குதுகள் நிழலுகள்.


*

ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம் நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.


*

பின்தங்கிப் போன என்னை
உன் இகழ்ச்சி – நகும் - பார்வையின்
கீழ் நிறுத்திக் காணவா
உச்சியை எட்டி ஓடினாய்.
நடந்தது இது தான்.
இடைவழியில், சிறுதொலைவு.
வண்ணத்துப்பூச்சிகளின் பின்னோடி
போட்டிப்போட மறந்துவிட்டேன்.



*

அப்படி ஒரு நிலைமை
வரும் என்றால் அக்கணமே
வாழோம் என்றிருந்தோம்

வந்தது.
அப்படியும் வாழ்கிறோம்.

நம்மோடு நாம் காண
இத்தென்னைகள்
தம் மேனி வடுக்கள் தாங்கி.


*

கண்டெடுத்தோம்
அப்படியும் கவலைப்படுகிறோம்
அய்யோ யார் தொலைத்தாரோ என்று.


( முகவீதி கவிதைத்தொகுப்பு, தமிழினி பதிப்பகம் )

14 கருத்துகள்:

அ.மு.செய்யது சொன்னது…

பாசாங்கில்லாமல் ராஜசுந்தரராஜன் எழுதியிருக்கிறார்.

நல்ல தொகுப்பு யாத்ரா..குறிப்பாக கடைசி இரு கவிதைகள் பளீர் ரகம்.ப‌கிர்வுக்கு ந‌ன்றி !!

Karthikeyan G சொன்னது…

Attagaasam.. thanks for sharing..

பெயரில்லா சொன்னது…

after a long time, got to read nice poems. keep it up.

காமராஜ் சொன்னது…

அழகு

எல்லாமே சிறப்பான தெறிப்பு யாத்ரா.
இந்த வரி இன்னும் கூடுதலாகுவதற்கு
அதன் பொருள் காரணம்.
நல்ல லயிப்பு மனம் உங்களுக்கு யாத்ரா.
எனது அன்பையும் வணக்கத்தையும்
ராஜ சுந்தரராஜனுக்குச்சொல்லுங்கள் யாத்ரா.

காமராஜ் சொன்னது…

//நடந்தது இது தான்.
இடைவழியில், சிறுதொலைவு.
வண்ணத்துப்பூச்சிகளின் பின்னோடி
போட்டிப்போட மறந்துவிட்டேன்.//

simply super

Kumky சொன்னது…

ஆஹா...

வர வர அன்னம் மாதிரி ஆகிட்டீங்க யாத்ரா...

Kumky சொன்னது…

இது ஹைக்கூ மாதிரியுமில்லாமல் கவிதை மாதிரியுமில்லாமல் இயல்பாய் தோன்றியதை, வார்த்தைகளின் பழகிய அமைப்புக்குள்ளாக்காமல் இயல்பான நடையில்....அய்யோ.....அர்த்தங்களை நேரடியாக தரவல்ல இம்மாதிரி கவிதைகளே ஒரு உச்சத்தை உணர வைக்கும் அற்புதம்.

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

அருமை.ப‌கிர்வுக்கு ந‌ன்றி.

சந்தான சங்கர் சொன்னது…

கிறுக்குப்பிடித்த பெண்ணைக்
கர்ப்பவதியாக்க
எவன் மனம் துணிந்தது இப்படி
அதற்கு முன் இவளைப்
புஷ்பவதியாக்க
இறை மனம் துணிந்ததே எப்படி

கனமான வரிகள்..

நல்ல பகிர்வு யாத்ரா...

butterfly Surya சொன்னது…

அருமை.

வாசித்து நெகிழ்ந்தேன்... ப‌கிர்வுக்கு ந‌ன்றி.

சுபஸ்ரீ இராகவன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி யாத்ரா..

//கண்டெடுத்தோம்
அப்படியும் கவலைப்படுகிறோம்
அய்யோ யார் தொலைத்தாரோ என்று.//

//ஒரு சுடர்
ஒரு நிழல்
இல்லை தொல்லை

இருள் போக்க வந்ததுகள் என்று
வழி நெடுக விளக்குகள்.
ஒன்றின்மீதோன்று புரண்டு
குழப்பித் தொலைக்குதுகள் நிழலுகள்.//

//நழுவியது கிளையின் பிடி
விடுதலை.

விடுபட்ட மறுகணம்
மாட்டிக்கொண்டதோ காற்றின் கையில்.
அலைக்கழிப்பு//

மிகவும் ரசித்தேன்

ராகவன் சொன்னது…

அன்பு யாத்ரா,

’வான பரியந்தம்...சிலுவை’

”ஒரு கனி
ஒரு இலை
உதிர்ந்தன பழுத்து.
மண்ணோடு கலந்த வழியில்
ஒன்று மரம்
ஒன்று உரம்.”

”ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம் நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்”

மீண்டும் வாசிக்கத் தூண்டிய கவிதைகள் மேலே உள்ளவை, நிறைய பரிமாணங்களில், படிமங்களில் எத்தனையோ அர்த்தங்களை புதைத்து வைத்திருக்கும் கவிதைகள், புரட்ட, புரட்ட விரிகிறது வானமயக்கமாய்.

ராஜசுந்தரராஜனுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கும்,

அன்புடன்
ராகவன்

உயிரோடை சொன்னது…

//ஒரு சுடர்
ஒரு நிழல்
இல்லை தொல்லை

இருள் போக்க வந்ததுகள் என்று
வழி நெடுக விளக்குகள்.
ஒன்றின்மீதோன்று புரண்டு
குழப்பித் தொலைக்குதுகள் நிழலுகள்.//

ந‌ல்லா இருக்கு ப‌கிர்வுக்கு ந‌ன்றி.

Vidhoosh சொன்னது…

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

Please accept this gift from me with deep appreciation for your blog.

-vidhya