செவ்வாய், 6 அக்டோபர், 2009

கொஞ்சம் திரும்பிப்பார்க்கிறேன்



இப்பதிவை எழுத அழைத்த நண்பர் நர்சிம் அவர்களுக்கு நன்றி.

திரும்பிப்பார்த்தல் எப்போதுமே லயிப்பான விஷயமாக இருந்தில்லை. காரணம் இப்படியான மகிழ்ச்சியான காலங்கள் தொலைந்து போயிற்றே என்ற விசாரம் ஒரு புறம், மனதைத் துகள்துகளாகச் சிதறடித்த துர்நிகழ்வுகள் மீட்டப்படும் போதான கணங்களின் தாங்கவியலாத அவஸ்தைகள் ஒரு புறம் என முத்தம் பெற்ற இடத்தை தடவிப்பார்த்துக் கொள்வதும் தழும்புகளை குத்திக் கிளறிப்பார்ப்பதுமான செய்கைகளை கவனத்தோடே தவிர்க்க முயற்சித்திருக்கிறேன். நிகழின் கணங்கள் மட்டும் அவ்வளவு உணக்கையான தட்பவெப்பத்தில் இருக்கிறதாயென்ன.

எழுத்துக்கு மனப்பதிவுகள் அவசியமாகிறது, அவற்றைத் துறந்து சுதந்திரமாகி விடத் துடிப்பவன் எழுதுவது, சுயசூன்யம் வைத்துக் கொள்வது போன்றதானது. அதைத் தவிர்த்துவிட எவ்வளவோ முயன்று தோற்றிருக்கிறேன். எழுத்தின் மூலமான, மனப்பதிவுகளை சேமிப்பதை அவற்றைப் பற்றியதான அபிப்ராயங்கள் உருவாக்கிக் கொள்வதை அவைகள் என்னை வதைக்க அனுமதிப்பதை சினத்தையும் வெறுப்பையும் ஏன் அன்பையும் நெகிழ்வையும் கூட தூண்டுவதை தவிர்த்து விட வேண்டுமென்பது என் கடந்த காலம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடமாக நினைத்திருந்தேன். எந்த தப்பித்தலுக்கான முயற்சியும் எந்த விடுதலையையும் வழங்கிவிடவில்லை என்பது வேறு விஷய்ம்

ஒரு வித வெறுமையை எனக்குள் சிருஷ்டித்துக் கொள்வதே பிரதான நோக்கமாயிருந்தது, இந்த வெறுமையைத் தான் நான் ஓயாது என் எழுத்துகள் மூலமாக அடைந்து கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். என் எல்லா பிணைப்புகளிலிருந்தும் சப்தமில்லாமல் உதிரும் இலைபோன்று என்னை துண்டித்துக் கொள்வதே என் சகல துயரத்திலிருந்துமான விடுதலையாக இருக்க முடியும் என்பது என் எண்ணமாயிருந்தது. என் இச்செயற்பாடுகளின் காரணமாக ஓஷோவும் ஜெ.கிருஷ்ணமூர்த்தியும் இருந்திருக்கிறார்கள் என்பதை இப்போது உணரமுடிகிறது. இந்த மனநிலை ஒரு பருவம், அடுத்த பருவம் இதற்கு எதிர் நிலையிலிருக்கும். இப்படி ஒரு நிலைப்பாட்டிலும் அதற்கு எதிர்நிலையிலும் மாறி மாறி இருந்திருக்கிறது என் கடந்த பத்து வருடங்கள்.

என் நிலை ஒரு மாதிரி இரட்டைநிலை, நீரின் ஈர ஸ்பரிசத்திற்கும் ஆசை, கனமின்றி ஓட்டைக் குடமாகவும் இருக்க வேண்டும். இதை ஈடு செய்யும் வகையில் இலக்கியங்கள் இருந்தன. பத்து வருடங்கள் அவை என்னோடு கூடவே நான் அவைகளோடு கூடவே இருந்து வந்திருக்கிறோம். இவை என் புறவுலகின் பற்றற்ற தன்மைக்கும் அகத்தின் வெறுமைக்கும் அவ்வப்போது தீனியிட்டு வந்தன.

கணினி என்கிற தொழில் நுட்பம் 2006 வரை எனக்கு மிக அந்நியமாகவே இருந்து வந்திருக்கிறது. சுயமாக மின்னஞ்சல் கூட கிடையாது, முற்றிலும் பூஜ்யம். இப்போதும் ஏனென்று தெரியவில்லை பூஜ்ய நிலையின் மேல் தீராத காதல் இருந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி அந்த நிலையைத் தொட்டுவிட்டு வருவது எனக்கு பிடித்தமான செய்கையாக இருந்திருக்கிறது. பிறகான காலகட்டத்தில் பணியின் படிநிலைகளில் மேசையும் கணிணியுமாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்பொழுதும் அதை முழுமையாக பயில முடியவில்லை. கழுத்தை நெறிக்கும் தேவையின் கரங்களை விலக்குமளவிற்கு கற்றுக் கொண்டேன்.

பிறகு இணையம் பரிச்சயமானது, கூகுளில் எதையெதையோ தேடித் தேடி தொலைந்து போனேன். ஒரு சுபயோக சுபதினத்தில் வலையில் மேய்ந்து கொண்டிருக்கையில் தமிழ் தட்டுப்பட இடறி விழுந்து எழுந்து நிற்க இலக்குகளற்ற யாத்ரீகனுக்கு திறக்கப்படும் மாயக்குகைகள் போன்று திறந்தன பிளாகுகள். பிளாக் என்கிற தளங்களை அவைகள் பிளாக் என்று தெரியாமலே வாசித்திருக்கிறேன், இப்போதைய என் நண்பர்களை அப்போதே புக்மார்க் செய்யத் தெரிந்துகொண்டு, செய்து தொடர்ச்சியாக வியந்து வாசித்துவந்தேன், உடனடி கருத்துப்பரிமாற்றங்கள் பரஸ்பர நட்புகள் சர்ச்சைகள் மோதல்கள் என பல தளங்களில் விரிந்திருந்தது பதிவுலகம்.

இலக்கியப் பிரதிகளோடு வலைப்பதிவுகள் வாசிப்பதும் வழமையாகிவிட்டது. அப்பொழுதும் பிளாக் பற்றிய எந்த நுட்பங்களும் அறிந்திருக்கவில்லை. பின்னூட்டமிடக்கூடத் தெரியாது. 2009 பிப்ரவரி வரை எனக்கு ஜிமெயில் முகவரி கூட கிடையாது. தம்பி மற்றும அவனுடைய ஒரு நண்பன் உதவியோடு ஜிமெயில் முகவரி துவங்கி, அப்போதே பிளாக் என்ற சொல்லைக் காணுற பிளாகும் துவங்கியாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஜன்னலையும் திறந்து பார்த்து தளத்தைக் கட்டமைத்தாகிவிட்டது. தமிழில் எப்படி தட்டச்சுவது, Google transliteration கிடைத்தது, ஆங்கிலத்தில் தட்டச்ச தமிழில் வந்தது, இப்படி எனக்கு மிகப்பிடித்த கவிதைகளை சில பதிவுகளாக இடத்துவங்கினேன்.

அதுவரையில் நான் வாசித்து வந்த தளங்களில் பின்னூட்டமிட கற்றுக்கொண்டுவிட்டேன். வண்ணதாசன் என் ஆதர்சம், வண்ணதாசன் எழுத்துகள் என ஒரு நான்கு பக்க அளவில் Google transliteration ல் தட்டச்சிய கட்டுரை காணாமல் போனது நொடியில் ஏதோ தொழில் நுட்பப் கோளாறு காரணமாக. அந்த ஒடிந்த மனநிலையில் அப்படி காணாமல்போனதையே நான்குவரிப்பதிவாக்கி பதிவிட்டேன். அப்போது தான் NHM writer உபயோகிக்கச் சொல்லி ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்களிடமிருந்து பின்னூட்டம் வந்தது. பிறகு அவ்வப்போது எழுத்துப்பிழைகளை சுட்டியும் தன் விமர்சனங்களை மென்மையாக தெரிவித்தபடியும் இருந்தார்.

பிறகு ஆதவா, ச முத்துவேல், அனுஜன்யா, மாதவராஜ், வடகரைவேலன் அண்ணாச்சி,,,,,,,, மற்றும பலர் தொடர்ந்து வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டது மிகுந்த ஊக்கமளிப்பதாயிருந்தது. ஒரு நாள் மதியம் பதிவுப்பக்கம் வருகையில், என் சதுரங்கம் கவிதையை தன் வலைப்பப்பக்கத்தில் அறிமுகப்படுத்தி பதிவிட்டிருந்தார் ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்கள். அன்று அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

பிறகு எவ்வளவு அன்புள்ளங்கள். அந்தப்பட்டியல் மிக நீளமானது. ஒரு கைக்குழந்தையைப் போல் அவர்கள் கரங்களில் வலம் வரத்துவங்கினேன். எவ்வளவு அன்பு, நட்புகள், நல்லிதயங்கள் என இவ்வருட பிப்ரவரி முதல் இது வரையிலான ஏழு மாதங்களிலான பயணம் மிக இனிமையானது.

வலையுலகில் முதலில் தொலைபேசியது ச.முத்துவேல் அவர்களிடம் தான், முதலில் பார்த்ததும் அவரையும் அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களையும். பிறகு அநேகமாக எல்லோரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இப்பதிவுலகம் எனக்களித்திருக்கும் நட்பு வட்டத்தை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வெறுமையை தனிமையை உறவின் பிரிவின் வலியை வாழ்வின் அலைக்கழிப்பை என எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டபோது இந்த நட்பு வட்டத்திடமிருந்து ஆறுதலாகப் பெற்ற சொற்களின் கதகதப்பு இன்னும் அப்படியே இருக்கிறது.

தற்போது எதுவும் எழுதுவதில்லையே என நண்பர்கள் கேட்பதுண்டு, தற்போதைய வேலைப்பளு காரணம் எனத் தோன்றினாலும் இன்னும் ஆழ்ந்து யோசிக்க ஒரு காரணம் தென்பட்டது. எனக்கு வருடமொருமுறை பருவகாலம் மாதிரி ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்துவிடும் (உண்மை நம்புங்கள்), அந்த பைத்தியநிலை சில மாதங்கள் நீடிக்கும், பிறகு இயல்பு நிலை திரும்பிவிடும். பிறகு குறிப்பிட்ட இடைவெளி விட்டு அடுத்த வருடத்தில் அந்தப் பருவம் திரும்பவரும். அந்தக் காலகட்டத்தில் வித்தியாசமான அந்நியமான செய்கைகளை செய்து வந்திருக்கிறேன். அப்படியான செய்கைகளில் எழுதுவதும் ஒன்று.

கொஞ்சம் என்று நிறையவே திரும்பிப்பார்த்துவிட்டேன். :)

19 கருத்துகள்:

பா.ராஜாராம் சொன்னது…

நான் வாசித்த தொடர் பதிவுலேயே,இதுதான் ஆக சிறந்தது யாத்ரா!(எனக்கு).இந்த சுந்தர் பயலின் இந்த மனசு ரொம்ப...ரொம்ப நிறைவா இருக்குடா சுந்தரா.

Vidhoosh சொன்னது…

ரொம்ப ரசித்துப் படித்துக் கொண்டே இருக்கிறேன்

--வித்யா

ஜெனோவா சொன்னது…

Arumai Yatra, rasitthu paditthen

Nanri

Ashok D சொன்னது…

//வெறுமையைத் தான் நான் ஓயாது என் எழுத்துகள் மூலமாக அடைந்து கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். என் எல்லா பிணைப்புகளிலிருந்தும் சப்தமில்லாமல் உதிரும் இலைபோன்று//

உன் கவிதைகளிலே உன் மனம் புரிந்ததது. மேலும் அறிய உதவியது இப்பதிவு. மனதை வேடிக்கை பார்ப்பதிலும் கவனம் தேவை யாத்ரா ‘குருவின்’ அன்மை மிக முக்கியம். வாழும் குருவை பிடித்துக்கொள் வாழ்க்கை மேலும் சிறக்கும்.

நல்ல பதிவு .. பல விஷயங்களை தூக்கிவைத்துவீட்டு படித்தேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

தொடர் பதிவைக்கூட சுவாரசியமாக்கிவிடுகிறது உங்கள் எழுத்து. இதற்கு முன்பு ஒருமுறை - இப்போதும்!

chandru / RVC சொன்னது…

யாத்ரா, உங்களை மனதுக்கு மிக நெருக்கமாக உணர்கிறேன். தொடருங்கள், காத்திருக்கிறோம்.

anujanya சொன்னது…

என் போன்ற கவிதை வாசிப்பாளர்களுக்கு உங்கள் வருகை தந்த உவகை எழுத்தில் சொல்ல முடியாதது. 'இரு நிலைகள்' இருப்பது நல்லதுதான். 'உன்மத்த நிலை' வரும் போது அய்ஸ் சொன்ன மாதிரி எழுதித் தள்ளி விடுங்கள்.

மற்றபடி ஜ்யோவ் சொன்னதே தான். மிக சுவாரஸ்யம். உரைநடையும் நீங்கள் நிறைய எழுதலாம் யாத்ரா.

அனுஜன்யா

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

நன்றாக இருக்கிறது யாத்ரா.

velji சொன்னது…

படைப்பாளியுடனே பயணிக்க வைக்கும் எழுத்த்க்கள்.உங்கள் யாத்திரை தொடரட்டும்!

மண்குதிரை சொன்னது…

urai nadai ezhutha varvillai enraayee nanba?

ithuthaan athuvaa

nan enna sollap pookireen.

namakkidaiyilaana vaanil natsaththirangkalukkidaiyil oru nila puukkirathu

மாதவராஜ் சொன்னது…

உங்களோடு ஒரு இரவு முழுக்க பஸ்ஸில் ப்யணம் செய்தது இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

யாத்ரா சொன்னது…

ராஜாராம், வித்யா, ஜெனோவா, அசோக், ஜ்யோவ்ராம்சுந்தர், சந்துரு, அனுஜன்யா, ஸ்ரீ, வேல்ஜி, மண்குதிரை, மாதவராஜ் (எனக்கும் :)) அனைவருக்கும் ரொம்ப நன்றிங்க.

அகநாழிகை சொன்னது…

யாத்ரா,
இன்றுதான் வாசித்தேன். நெகிழ்வாக இருக்கிறது. மிகவும் மென்மையான மனம் உனக்கு. எனக்குப் புரிகிறது. காலம் அதன் போக்கில் இழுத்துச் செல்லட்டும். தொடர்ந்து நதியாய் ஓடிக் கொண்டிருப்போம்.

Sugirtha சொன்னது…

ரொம்ப நல்ல பதிவு யாத்ரா. கடைசி பத்தி என்னை மிக கவர்ந்தது.

புலவன் புலிகேசி சொன்னது…

அருமை....

பிரவின்ஸ்கா சொன்னது…

அருமை ..

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

நிகழின் கணங்கள் மட்டும் அவ்வளவு உணக்கையான தட்பவெப்பத்தில் இருக்கிறதாயென்ன.

எழுத்துக்கு மனப்பதிவுகள் அவசியமாகிறது, அவற்றைத் துறந்து சுதந்திரமாகி விடத் துடிப்பவன் எழுதுவது, சுயசூன்யம் வைத்துக் கொள்வது போன்றதானது //


ரசித்துப் படித்த வரிகள்

nila சொன்னது…

azhagana padhivu....
avvappodhu ippadi thirumbi parpathu manithanukku avasiyam thaan illaya??

Unknown சொன்னது…

hai yathra how r u and u'r family


by

Eswarira.A.R.