வியாழன், 17 ஜூன், 2010

அபி கவிதைகள்

உள்பாடு


இந்தப் பழக்கம்
விட்டுவிடு

எங்காயினும்
வானிலேனும் மண்ணிலேனும்
புள்ளியொன்று கிடக்க்க் கண்டால்
சுற்றிச் சுற்றி
வட்டங்கள் வரைவதும்
சுழன்று சுழன்று
கோலங்கள் வரைவதும்

குறுக்கும் நெடுக்குமாய்ப்
புள்ளியின் வழியே
பரபரத்துத் திரிவதும்------

இந்தப் பழக்கம் விட்டுவிடு

முடிந்தால்

புள்ளியைத் தொட்டுத்தடவி
அதன் முடிதிறந்து
உள்நுழைந்து

விடு


அதுதான் சரி

எல்லாம் தெரிவதும்
ஏதும் அறியாததும்
ஒன்றேதானென்று
தெருவிலொரு பேச்சு
காதில் விழுந்த்து

எதும் அறியாமல்
இருப்பதுவே சரி
என்று தோன்றிற்று

இருந்தால்
இருப்பதை அறியாமல்
இருப்பது
எப்படி

அதனால்
இல்லாதிருப்பதே
சரியென்று பட்டது

இல்லாதிருந்தால்
ஒருவசதி
தெருப்பக்கம்
போகவேண்டியதில்லை
இல்லாதிருப்பதும்
இருப்பதும் ஒன்றே
என்றொரு பேச்சைக்
கேட்டுக் குழம்பும்
குழப்பம் இல்லை



அவர்

கொஞ்சம் கொஞ்சமாக
விலகி
விலகலில் நீடித்தாயெனில்
நீ வாழ்கிறாய்
என்றார்

முடிந்து போனதாய்ப்
போக்குக் காட்டும்
கணங்களில்
ஒட்டிக் கொண்டு சிதறினாய்
உன் சாவைச் சரிபார்த்துக் கொள் என்றார்

பின்னும்
நீ இருப்பதாக உணர்வது வழக்கமெனில்
வாழ்க்கை
எட்டி நின்று உன்னை
முறைப்பதை
சாவின் சஞ்சலத்தை
ஒருபோதும் நீ காணப் போவதில்லை
என்றார்

சொற்களின் கும்மாளத்திலும்
எண்ணங்களின் ஆடம்பரத்திலும்
உன் நிகழ் அனுபவம்
உயிர்ப்படங்கியது
அறியாய்

அறியாய் மேலும்
நிகழ்வில் நின்றே
நிகழ்வினின்றும் விலகும்
நெறி எது என்பதை

கூடவே நிகழ்ந்து வா
கொஞ்ச நேரத்தில் நீ
நிகழ்வுடன் அருகே
இணைகோட்டில் ஓடுவாய்

ஆச்சரியமாகவே உன் இருத்தல்
உனைவிட்டு விலகி உன்னுடன்
ஓடிவரக் காண்பாய்

என்றார்

இன்னும் சொன்னார்


கோடு

கோடு வரைவதெனின்
சரி
வரைந்து கொள்

இப்புறம் அப்புறம்
எதையேனும் ஒன்றை
எடுத்துக்கொள்

எடுத்துக் கொள்ளாதது
எதிர்ப்புறம் என்பாய்

இப்போதைக்கு
அப்படியே வைத்துக்கொள்

முதலிலேயே
மறுபுறத்தை எடுத்துக்கொண்டிருந்தால்

மாறி மாறி
எதிர்ப்புறக் குழப்பம்

இருபுறமும் உனது ?
இருபுறமும் எதிர்ப்புறம் ?

எதுவும்
எவ்வாறும்
இல்லை என்று
சலிப்பாய்

களைத்து உறங்கும் உலகம்

ஆரம்பத்திலேயே
முடிவைத் தடவியெடுக்க
நின்றாய்

இதுஎன்றோ அதுஎன்றோ
இரண்டும் இல்லையென்றோ
வருகிறது
உன்முடிவு

அதனால்
கோடு வரைவதெனின்
வரைந்து கொள்



இடைவெளிகள்

யாரும் கவனியாதிருந்தபோது
இடைவெளிகள்
விழித்துக்கொண்டு
விரிவடைந்தன

நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும்
அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும்
உனக்கும் எனக்கும்
விநாடிக்கும் விநாடிக்கும்
இடைவெளிக்கும் இடைவெளிக்கும்.....
என்று

இடைவெளிகள் விரிவடைந்தன

வெறியூறி வியாபித்தன

வியாபகத்தின் உச்சத்தில்
மற்றெல்லாம் சுருங்கிப்போயின

ஆங்காங்கிருந்து
இடைவெளிகள் ஒருங்கு திரண்டு
அண்டவட்டமாயின

வட்டத்தின் விளிம்பைச் சுற்றிலும்
சிற்றெரும்புகளாய்
வாழ்க்கைக் துகள்

வட்டத்தின் சுழற்சியில்
நடுவே தோன்றி வளர்ந்த்து
பேரொளி

அதற்குப் பேச்சு வரவில்லை
சைகைகளும் இல்லை
எனினும் அதனிடம்
அடக்கமாய் வீற்றிருந்தது
நோக்கமற்று ஒரு
மகத்துவம்



எதன் முடிவிலும்

நினைக்க நினைக்க
நா ஊறிற்று
பறிக்கப் போகையில்

ஓ அதற்கே எவ்வளவு முயற்சி
இரண்டு சிறகுகள்
இங்கே கொண்டுவந்துவிட
யார்யாரோ கொடுத்த
கண்களைக் கொண்டு வழிதேடி
இடையிடையே காணாமல்போய்
என்னை நானே
கண்டுபிடித்துக் கொண்டு
கடைசியில்
மங்கலான ஒரு வழியில்
நடந்தோ நீந்தியோ சென்று சேர்ந்து
முண்டுமுண்டாய்ச்
சுளுக்கிக் கொண்டு நிற்கும்
அந்த மரத்தில் என்னை ஏற்றி
அதை பறிக்கச் செய்து

ஏறிய நானும்
கீழ்நின்ற நானும்
நாவில் வைத்த போது
குடலைக் கசக்கும் கசப்பு

கீழே எறிந்துவிட்டு
மறுபடி நினைத்தால்
நினைக்க நினைக்க
நா ஊறுகிறது

வியாழன், 10 ஜூன், 2010

உமா மகேஸ்வரி கவிதைகள்

பூக்காத செடிகள்

ஏதாவது பேசு
துவைக்காத சட்டை, சுவைக்காத குழம்பு
இவற்றோடு இன்னும்
இலக்கியம் சினிமா என்றில்லாவிடினும்
இன்று கண்ட புதியமுகம், எதிர்பாராத
சம்பவம், வாகன நகர்த்தலில்
வடிவழகு கெடாத கோலம்
வந்து போன வியாபாரத் தந்திரம்
பூக்காத செடியின் யோசனை
புதிதான புத்தக வாசனை என்று
சொல்லேன் எதையாவது.
தினங்களின் கனத்தில்
நசுங்கிய ஞாபகங்களுக்கு
மூச்சு தா
ஜன்னல் வெளியின் பொன்தூசியையும்
நீர்க்கிண்ணத்திலாடும் நிலவையும்
அள்ள முனையும் எனை நோக்கி
முறுவல் செய்
அல்லது முட்டாளென்று சொல்
அடிவயிற்றுக் கருவின் அசைவை
அறிவிக்க உன் கை பற்றிப் பதிந்த போது
அவசரமாய் உதறிப் போனாயே
அதற்கு வருத்தம் தெரிவி உடனடியாக.
அவிர்த்து எறியுமுன்
புடவையடுக்குள் புதைந்த பூக்களையாவது
ரசித்துக் கவனி.
அடுத்த முறை எனை நீ
அழுத்தும் இரவுகளில்
வெளியிலசையும் தென்னையை
வெறிப்பதையாவது
விசாரி ஏன் என்று எப்போதாவது.

•••••

ஒன்றுமில்லை நான் தீர்ந்தேன்
கிடக்கட்டும் இந்த பிரச்சனைகள்
உறங்க வேண்டும் நான்
உரத்த பேச்சு
முடிவற்ற விவாதங்கள்
அலுத்த ஆலோசனைகள்
நைந்து விழுந்த இந்நாள்.
நடமாற்றங்களற்ற நதியொன்றின் கரையில்
என்னை இனியாவது
தனியாகத் தூங்கவிடு
வெல்வெட் மெத்தைகளில்
விரிகின்ற வலைகளில்
வியர்த்து சிறு பூச்சியானேன்.
பயணத்தின் திசை
தெரியப் பிரியமில்லை
இறப்பின் வரப்புகளில்
இன்றும் காத்தருந்த நம்பிக்கை
நகர்ந்து போவதை
நடுங்கிப் பார்க்கிறேன்.
கேள்விகளை சிக்கல்களை
தீராத குழப்பங்களைப்
பொட்டலமாக்கி
எடுத்துப் போ உன்னோடு.
நதிக்கரையில் புதர்மடியில்
நான்மட்டும் தனியாகத்
தூங்கவிடு.

••••••••

குழந்தைக்கால் நுனிகளென
ஆரம்ப மழைத்தடங்கள் என்
கார்த்திகைக் கோலத்தில்
நேர்த்தி தான் பார்ப்பதற்கு;
தீபங்களுக்குப் பதிலாக நீர்ச்சுடர்கள்
வலுத்துப் பெருத்ததில்
வர்ணப்பொடி கரைசல்
திரவ வானவில்லாக.
நின்றதும் மறுபடி வரைதல்.
முடித்துத் திரும்புமுன்
வெடித்துச் சாடும் மழையின் ஆக்கேராஷம்.
கனவின் சிதைவைக்
கண்ணுற்றேன் இம்முறை

•••••••••••••

சொல்லாதது

உரையாடல்களின் முற்றுப்புள்ளி
சுழன்று விரிகிறது வளைகிறது
சொல்லமற் போன ஏதோ ஒன்றின்
கேள்விக்குறியாக.
சொல்வதற்கான திட்டங்களோ
சொல்லாததற்குரிய சகஜமின்மையோ
இல்லை நம்மிடையே
இருந்தாலும்
இரைச்சல்கள் நெரிசல்களிடையே
நசுங்கி உப்பியபடியிருந்தது நாம்
பகிராத எதுவோ

பிரிவில் கையசைத்த பின்பும்
தேடிக் கொள்கிறேன் என்னுள்
ஆடையில் ஒட்டிய உதிராத புல்லென
அது எதுவென்று

•••••••••••••

நேற்று என்னுடையதாக இல்லை
என் சிதறிய அழுகை
எனினும் ஆராய்ந்தேன்
வேகமான உரையாடல்களில்
வெடித்து ஒரு கீறல்
உருவாகும் விதம் குறித்து.
கண்ணாடியில் போலவோ
காய்ந்த நிலத்தில் போலவோ
உலர்ந்த நதியில் போலவோ........

•••••••••••••

மேகம் கருத்திருக்கிறது
மழை வருமென்று
சொல்லிவிட்டேன் தெரியாத்தனமாய்
குழந்தை கேட்கிறாள்
எப்போது மழை வரும் ?
அங்கே கிளம்பினால்
இங்கே வந்துவிடுமென்று
சமாளித்தேன். அடுத்த வினா
எப்போது அங்கே கிளம்பும் ?
‘வரும் போது வரட்டும்’ என
மழுப்பி நகர முனைகையில்
குறுக்கிடும் மற்றொன்று.
‘வரும் போது எப்போ வரும்’
‘வரும் பொழுது, வரும் போது
தானே வருமென்றால்
அவளுக்குப் புரியவில்லை.
ஒருவேளை எப்படியோ
புரிந்ததோ என்னவோ.
விளையாட்டெல்லாம் துறந்து,
வாசல் வரைவில் தேய்படும் கன்னத்தோடு,
வரும் பொழுதிற்காக அவள்
காத்துக்கிடப்பது
என்னை வருத்துகிறது ஏதோ மாதிரியாய்.
நானும் அவளோடு
நின்று காத்திருத்தலன்றி
தெரியவில்லை வழியொன்றும்.

•••••••••••••••

நம்
மழலை பதிந்த ஒலிநாடாக்கள்
அழிபடவேயில்லை
சிறுமிப் பிராயத்தின் கூடாரங்கள்
திறந்தேயிருக்கின்றன.
மரச்செப்புகளில் வேகிற சாதம்
ஆடுகுதிரையில் என் முதுகைக்
கட்டிக் கொண்டிருக்கும் நீ.
மரணச் சுவடுகளை அனுமதிக்காது
நம் குழந்தைமையின் வெளி
அழிவல்ல உன் இறப்பில் நேர்ந்தது
அணுகிவிடக் கூடியதான
சிறு தொலைவும் பிரிவும்

••••••••••••••••••••

ஏனித்தக் குருவியை
இன்னும் காணோம்
எனக்கு மகா செல்லம் அது
பழுப்புக் கலரில் அழுக்குக் குஞ்சு.
சின்ன இறக்கைகளில்
கறுப்புப்கோடு தெரியும்.
கண் மட்டும்
கண்ணாடிக்கல் மாதிரி
வெளிச்சத் துறுதுறுக்கும்.
உரிமையாய் கூடத்தின்
உள்ளே நுழைந்து நடக்கும்.
புத்தகம் ஒதுக்கி
அதையே கவனிக்கும் என்னை
அலட்சியப்படுத்தும்.
மாடி வெயிலில்
வேட்டியில் காயும்
வடகத்தை அலகால் நெம்புதல்,
தோல் உரிக்காது
நெல்லை விழுங்குதல்,
துணிக்கொடியில் கால் பற்றிக்
காற்று வாங்குதல்,
அறைக் கண்ணாடியில்
தன்னைத் தானே
கொத்திக் கொள்ளுதல்
அதற்குப் படித்தம்.
நான் இறைக்கும்
தானியமணிகளை
அழகு பார்த்துத் தின்னும்
ரசனாவாதி.
ஏனிந்தக் குருவியை
இன்னும் காணோம்
அதுவரும் மாலை
மெதுவாய் நகருதே
கீழ்வானப் பரப்பில்
கண் விசிறித் தேடினும்
காணவில்லை, எங்கு போச்சோ
திடுமெனக் காதில்
தித்தித்தது அதன் கீச்சுக்குரல்
ஜன்னல் பிளவில்
உன்னிப் பார்த்தால்
அடுத்த வீட்டு முற்றத்தில்
இறைந்திருக்கும் தானியம் பொறுக்கி
அழகு பார்க்கும் என் குருவி
என் முகம் ஏறிடாது
திரும்பிக் குனியும் விழிகளை


( வெறும் பொழுது - உமா மகேஸ்வரி
தமிழினி பதிப்பகம் )

வியாழன், 22 ஏப்ரல், 2010

வி.அமலன் ஸ்டேன்லி கவிதைகள்

சுயம்

கீறல் விழுந்த கைக்கடிகாரத்தின்
உள்முக மையத்தில்
கருக்கொண்டது முழுவட்ட
நீர்ப்படிவு

இசைபட ஒழுகாது
வழுவிக்காட்டுகையில்
சூழ்ந்து தழுவிய அகாலம்

பழுதென்று கொள்ளலாகாது
தனக்கென சுயமாக
நகரத் தொடங்கியுள்ளது
முள்

முழுமைத்துவம்

மௌனத்தின் மத்தியில் நாம்

மேசையில் கிடந்த்து
மொண்ணைப் பென்சில்

உருட்டியுருட்டி
சிரத்தையுடன் சீவினேன்
கூரானது முனை

மடியில் விழுந்த
செதுக்கல்களை ஊதிவிட்டு
மேம்போக்காக சிராய்த்தேன்
நுனியினை

முடிந்த்தென்று வைத்துவிட
நீயெடுத்துச் சீவுகிறாய்
மென்மேலும்

பழையன கழிதல்

எனக்கும் தெரியவில்லை
என்ன செய்வதென்று
நீ கூறலாம்
ஆனால் செய்யப்பிடிக்கவில்லை

ஒருக்கால்
எனக்காக நீயே செய்தால்
பார்த்துக் கழிப்பேன்
அலாதியென

அலுத்து விடுகையில்
புறக்கணித்துப் போ
வழியில் பிடித்த
வேறெவராயினும் வரக்கூடும்

சொன்னதைச் சொல்லி
உன்னிடம் போல்
முதலிலிருந்து தொடங்குவேன்
நீ வந்துபோனதை மட்டும்
மறைத்துவிட்டு

0

பாடாதுபோன பட்சியை
குறையளக்காதீர்கள்
ஒருக்காலும் தன் சுரக்குறிப்புகளை
தவறவிட்டிருக்காது

தொண்டைக்குழியில் முள்குத்தி
துன்புற்றிருக்கலாம்
மனநலம் சரியில்லாத
வாய்ப்புமுண்டு

அவகாசம் உண்டென்றால்
உள்ளங்கைக்குள் பொருத்தி
மெல்ல வருடிக் கொடுங்கள்
அகப்படவில்லையெனில்
போன திக்கு நோக்கி
வலி தீரப் பிரார்த்தியுங்கள்

நாளையோ மறுநாளோ
வராதுபோயின்
அக்கறையோடு தோட்டத்தில்
தேடுங்கள்
மிஞ்சிக்கிடக்கும் சிறகுகளையும்
சதையெடுத்துச் செல்லும்
எறும்புச் சாரைகளையும்

0

வாழ்தலுக்கிடையில்
அவ்வப்போது
இருத்தலை உறுதிபடுத்திக்கொள்ள

சொற்ப நீர்த்தேங்கலின்
மேற்புறப்படலமென
மெய்சிலிர்த்துக்கொள்ள
வேண்டியுள்ளது வெறுங்காற்றுக்கு

0

நேற்றைக்கின்று அறையில்
கொஞ்சம்
கூடுதலான நேரம்
தங்கிப்போனது வெளிச்சம்

நாளை இன்னும் அதிகம்
நீடிக்கக்கூடும்

அவ்வப்போது
தவறவிட்டதைத் தேட
மேலும் அவகாசம் கிடைக்கும்

முடியாமல் போனால்
எனக்கானதையாவது
தேடிக் கண்டெடுப்பேன்
அதற்குள்

0

ஒவ்வொரு கடற்கரை அமர்விலும்
ஒரு பள்ளம் உருவாகிறது

யாருடைய பள்ளத்திலோ கைநுழைத்து
பேச்சுவாக்கில்
ஏதோவொரு பள்ளம் நிரம்புகிறது
இப்படியே தான் வழிநெடுகிலும்

அறியாதொரு பள்ளம்
அனிச்சையாய் நிரவல்
பிறகு மீண்டுமொரு பள்ளம்

நிஜம்

எட்ட பார்த்த நீராயில்லை
இறங்கி நின்றது

இலை தழை புறந்தள்ளி
விலக்க முயன்ற நீராயில்லை
பருகச் சூழ்ந்த்து

இளைப்பாறுகையில்
அள்ள முனைந்த நீராயில்லை
குடித்துத் தீர்த்த்து


0

அந்த அறைக்குள்
தூங்கவே பயமாயிருக்கும்
யாராரோ உற்று நோக்கும்
பார்வையின் கலவரம்

ஈரம் கசிந்து ஆங்காங்கே
சுண்ணாம்பு உதிரந்த சுவரில்
விரவித் தென்படும் உருவத்தோற்றங்கள்

விளக்கணைக்க
இடம்பெயர்ந்து இருளோடு சூழும்
புதைபடிவ முகங்கள்

ஒருநாள் வெள்ளையடிக்கப்பட்டது

இப்போது தூக்கமில்லை
யாருமற்றுப் படுத்திருப்பதிலும்
பயமிருக்கத்தான் செய்கிறது

சீக்கிரமே பழசாகட்டும்
சுவர்

தூரம்

அன்பைப் பெருக்குகிறது
துயரங்களை ஆற்றிப்போகிறது
நிம்மதியைத் தருவிக்கிறது

அப்படியின்றி
முற்றிலும் எதிர்மறையாகவும்
முரண்பட்டியங்குகிறது

தூரமென்று ஒன்றுமில்லை
அது புலன்களின் விடுதலை
மறதியின் அனுகூலமுடையது

ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளின்
இடைவெளி
ஒரே புள்ளியின் வேறுபட்ட பதிவு
கர்ப்பிணிக்கும் சிசுவுக்குமென
முகில் வழி நதிகளென

மரங்களுக்கும் பறவைகளுக்கும்
மண்ணுக்கும் காற்றுக்குமென
காலதேசவர்த்தமானங்களின் உள்ளீடாக

உனக்கும் எனக்குமன்றி
என்னிடமிருந்தே எனக்கும்

(மேய்வதும் மேய்ப்பதும் யாது... என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள், தமிழனி பதிப்பகம்)

திங்கள், 29 மார்ச், 2010

நானும் அவனும்

துயரத்தின் ரேகை படர்ந்து
முகம் துவண்டு
இன்னும் சற்றைக்கெல்லாம்
தளும்பிவிடும் விழிகளுடன்
என் முன்னால்
நிலைக்கண்ணாடியில் அமர்ந்திருந்தவனை
அப்படியே பார்த்திருந்தேன் சிலகணங்கள்
ஏனோ முத்தமிடத்தோன்றியது
அவன் கன்னத்தில்
இதழ்குவித்து
அவன் கன்னத்தை நெருங்க
அதற்குள் அவன்
உதடுகுவித்து முத்தமிட்டுவிட்டான்
என் உதடுகளில்
அல்லது
என் முத்தம் தான்
குறி தவறிவிட்டதா

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

ஊமைப் பிரியம்

வீசியெறிய மனமின்றி
மீண்டும் மீண்டும்
ஓட்டுகிறாள்
பலநாள் நெற்றியிலிருந்த
அந்த ஸ்டிக்கர் பொட்டை

தான் பாரமாயிருப்பதாய் எண்ணி
கூந்தல் சூடிய சரத்தினின்று
தன்னை உதிர்த்துக் கொள்ளும்
மலர்களைப் போல
உதிர்ந்து வீழ்கிறது
அந்தப் பொட்டு
ஒட்ட வைக்கப்படும்
ஒவ்வொரு முறையும்

காலத்தால் பசை தீர்ந்த அதை
கைவிடுவதைத் தவிர
வேறு வழியிருக்கவில்லை

அதன் இருப்பின்
வெள்ளைத்தடம் மறையாத
அந்த நெற்றியில்
வீற்றிருக்கிறது
மற்றொரு பொட்டு
தன் எதிர்காலத்தையுணராது

வீட்டைக் கூட்டுகையில்
தட்டுப்பட்ட அதைப்பார்த்து
அப்படியே அமர
அவள் விழியோரத்திலிருந்து
ஒரு சொட்டு
நனைக்கிறது
அந்த உதிர்ந்த பொட்டை

புதன், 2 டிசம்பர், 2009

இருப்பு

நீர்த்திரை விழிகளுடன்
தூசு படிந்த நிழற்படத்தை
முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்
காய்ந்து உதிர்ந்த இலைச்
சருகுகளை விலக்கிப்
பார்க்கிறது காற்றுடன் மழை
கல்லறை எழுத்துக்களை

நெடும்பயண ஓய்வாய்
சிலுவைக்கரங்களில்
வந்தமர்ந்த பறவை
தத்தியிறங்கி தானியமென
கொறிக்கிறது
கல்லறை எழுத்துக்களின்
ஒற்றுப்புள்ளிகளை

தோற்றம் மறைவு என்ற
சொற்களுக்கிடையில்
கறுத்த அட்டைப்பூச்சி
மெல்ல ஊர்கிறது

பெயரைப் போர்த்தியிருக்கும்
பறவையின் எச்சத்தைக் கழுவி
மனதோடு வாசிக்கிறது மேகம்

திசையறியாது மிதந்த
ஒற்றையிறகு நனைந்து
ஒட்டுகிறது சிலுவை உச்சியில்

பளிங்குச் சதுரங்க மேடையில்
மழைத்துளிகளின்
காய் நகர்த்தலுக்கெதிராக
கிளையிலை துளை வழி
சூது நிரம்பிய ஆட்டத்தை
ஆடிக்கொண்டிருக்கின்றன
சூர்யக் கிரணங்கள்

மழைத்துளிகளும் ஒளிப்புள்ளிகளும
ஆடிச் சலித்துச் செல்ல
இருளின் மடியில்
தவழ்ந்திருக்கும் சமயம் வருகிறாள்
கைக்கும் வாய்க்கும் எட்டாமல்
நீலி நிலா
ஒற்றைமுலை குலுக்கி

அதிகாலை
கல்லறை இடுப்பின்
தாழ்வாரத்தில்
மொக்கவிழ்ந்த குறியாய்
முளைத்திருக்கிறது காளான்

( உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை )

திங்கள், 30 நவம்பர், 2009

மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா





அழைப்பிதழ்

மணல் வீடு & களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நிகழ்த்தும்
மக்கள் கலை இலக்கிய விழா


நாள் :26 டிசம்பர் 2009

சனிக்கிழமை பிற்பகல் 3.30மணி

இடம்: ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,
மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம். 636453
தொடர்புக்கு :9894605371,9894812474,9677520060,9789779214

பஸ்ரூட்: சேலம்-டூ-மேட்டூர்
பஸ் நிறுத்தம்: பொட்டனேரி

தெருக்கூத்து ஒரு மகத்தான கலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்லாது ஒப்பற்ற நமது பண்பாட்டு அடையாளமாகும். மலிந்து பெருகி வரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, தோல்பாவை கட்ட பொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள பூர்வ கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் சமூகத்தின் கடைகோடியில் வாழ்ந்து வரும் மக்கள் கலைஞர்கள் மீள

முடியாத வறுமையில் உழன்ற போதிலும் தம் உடல் பொருள் ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்.

நம் சகோதரர்களை இனம் கண்டு பாராட்டுவதும், அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச் செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதார சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும் அங்ஙனமே மணல்வீடு சிற்றிதழும் மற்றும் களரி தெருக்கூத்துப் பயிற்சி பட்டறையும் இணைந்து நிகழ்த்தும் மக்கள் கலை இலக்கிய விழா கலைஞர் பெருமக்களுக்கான பாராட்டு விழாவாக அமைக்கப் பெற்றிருக்கிறது இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி மகிழ அன்போடு அழைக்கிறேன்.

இப்படிக்கு,
மு.ஹரிகிருஷ்ணன்
ஆசிரியர், மணல்வீடு



தலைமை : ச.தமிழ்ச்செல்வன்( மாநில பொதுச் செயலாளர், த.மு.எ.ச)


முன்னிலை: ஆதவன் தீட்சண்யா(ஆசிரியர் புது விசை)


சிறப்பு விருந்தினர்: எடிட்டர். பி. லெனின்.


நிகழ்ச்சித் தொகுப்பு: வெய்யில்,நறுமுகை. இராதாகிருஷ்ணன்








அமர்வு:1 மாலை 3.30-4.00மணிவரை


களரிக் கூட்டுதல்: அம்மாபேட்டை சரஸ்வதி நாடக சபா.

வரவேற்புரை: தக்கை.வே.பாபு

துவக்கவுரை: பிரபஞ்சன்


அமர்வு.2 மாலை 4-6மணி வரை

கிராமிய தெருக்கூத்து கலைஞர்களுக்கு, தெருக்கூத்துச்செம்மல்
தோற்பாவைக் கலைஞர்கள், பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு, நிகழ்த்துக்கலைச் செம்மல்,கலைச்சுடர் விருது& பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்

வாழ்த்துவோர்:

முனைவர் கே.ஏ. குணசேகரன்,முனைவர் மு.இராமசாமி
அம்பை,கிருஷாங்கினி,நாஞ்சில் நாடன்,பொ.வேல்சாமி,இமயம், ஹேமநாதன்(உதவி இயக்குநர் மண்டல கலை பண்பாட்டு மையம். சேலம்), பெருமாள் முருகன், புதிய மாதவி, பாமரன், லிங்கம்


சிறப்புரை: எடிட்டர் பி.லெனின்

நிறைவுரை: ச.தமிழ்ச்செல்வன்

நன்றியுரை: மு.ஹரிகிருஷ்ணன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வ.சண்முகப்ரியன், இர.தனபால்

வரவேற்புக்குழு: லக்ஷ்மி சரவணக்குமார்,செல்வ புவியரசன்,கணேசகுமாரன்,அகச்சேரன்,ராஜா.


மாலை6மணி முதல் 7மணி வரை : உணவு இடை வேளை


அமர்வு3: மாலை7மணி

நல்ல தங்காள் (கட்ட பொம்மலாட்டம்)

நிகழ்த்துவோர்: ஸ்ரீ இராம விலாஸ் நாடக சபாக்குழுவினர்,பெரிய சீரகாபாடி.
மிருதங்கம்:திருமதி.லதா
முகவீணை:திரு.செல்வம்(கண்டர் குல மாணிக்கம்)






அமர்வு4- இரவு 10 மணி

மதுரை வீரன் (தெருக்கூத்து)

நிகழ்த்துவோர்: எலிமேடு கலைமகள் நாடக சபா.
கோமாளி: மாதேஸ்
காசி ராஜன் :சண்முகம்
செண்பகவள்ளி:பழனிச்சாமி
சின்னான்:செல்லமுத்து
செல்லி:பிரகாஷ்
வீரன்:சதாசிவம்
பொம்மண்ண ராஜன்:வீராசாமி
வீர பொம்மன்:பெரிய ராஜு
பொம்மி:வடிவேல்
முகவீணை:குஞ்சு கண்ணு .செல்வம்.
மிருதங்கம்:வெங்கடாச்சலம், நடராஜன்
அரங்க நிர்வாகம்:சென்ன கிருஷ்ணன், வ. பார்த்திபன்.

(இவ்விரு நிகழ்வுகளுக்கு மட்டும்(கட்ட பொம்மலாட்டம் , தெருக்கூத்து)
பார்வையாளர் நன்கொடை:ரூ.50

நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அளிக்க விரும்புவோர்,

ஆசிரியர், மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர், சேலம் - 636 453 என்ற முகவரிக்கு பணவிடை மூலமாகவோ,

611901517766, சண்முகப்பிரியன் என்ற ICICI வங்கி எண்ணுக்கு நேரடியாகவோ அளிக்கலாம்.