சுயம்
கீறல் விழுந்த கைக்கடிகாரத்தின்
உள்முக மையத்தில்
கருக்கொண்டது முழுவட்ட
நீர்ப்படிவு
இசைபட ஒழுகாது
வழுவிக்காட்டுகையில்
சூழ்ந்து தழுவிய அகாலம்
பழுதென்று கொள்ளலாகாது
தனக்கென சுயமாக
நகரத் தொடங்கியுள்ளது
முள்
முழுமைத்துவம்
மௌனத்தின் மத்தியில் நாம்
மேசையில் கிடந்த்து
மொண்ணைப் பென்சில்
உருட்டியுருட்டி
சிரத்தையுடன் சீவினேன்
கூரானது முனை
மடியில் விழுந்த
செதுக்கல்களை ஊதிவிட்டு
மேம்போக்காக சிராய்த்தேன்
நுனியினை
முடிந்த்தென்று வைத்துவிட
நீயெடுத்துச் சீவுகிறாய்
மென்மேலும்
பழையன கழிதல்
எனக்கும் தெரியவில்லை
என்ன செய்வதென்று
நீ கூறலாம்
ஆனால் செய்யப்பிடிக்கவில்லை
ஒருக்கால்
எனக்காக நீயே செய்தால்
பார்த்துக் கழிப்பேன்
அலாதியென
அலுத்து விடுகையில்
புறக்கணித்துப் போ
வழியில் பிடித்த
வேறெவராயினும் வரக்கூடும்
சொன்னதைச் சொல்லி
உன்னிடம் போல்
முதலிலிருந்து தொடங்குவேன்
நீ வந்துபோனதை மட்டும்
மறைத்துவிட்டு
0
பாடாதுபோன பட்சியை
குறையளக்காதீர்கள்
ஒருக்காலும் தன் சுரக்குறிப்புகளை
தவறவிட்டிருக்காது
தொண்டைக்குழியில் முள்குத்தி
துன்புற்றிருக்கலாம்
மனநலம் சரியில்லாத
வாய்ப்புமுண்டு
அவகாசம் உண்டென்றால்
உள்ளங்கைக்குள் பொருத்தி
மெல்ல வருடிக் கொடுங்கள்
அகப்படவில்லையெனில்
போன திக்கு நோக்கி
வலி தீரப் பிரார்த்தியுங்கள்
நாளையோ மறுநாளோ
வராதுபோயின்
அக்கறையோடு தோட்டத்தில்
தேடுங்கள்
மிஞ்சிக்கிடக்கும் சிறகுகளையும்
சதையெடுத்துச் செல்லும்
எறும்புச் சாரைகளையும்
0
வாழ்தலுக்கிடையில்
அவ்வப்போது
இருத்தலை உறுதிபடுத்திக்கொள்ள
சொற்ப நீர்த்தேங்கலின்
மேற்புறப்படலமென
மெய்சிலிர்த்துக்கொள்ள
வேண்டியுள்ளது வெறுங்காற்றுக்கு
0
நேற்றைக்கின்று அறையில்
கொஞ்சம்
கூடுதலான நேரம்
தங்கிப்போனது வெளிச்சம்
நாளை இன்னும் அதிகம்
நீடிக்கக்கூடும்
அவ்வப்போது
தவறவிட்டதைத் தேட
மேலும் அவகாசம் கிடைக்கும்
முடியாமல் போனால்
எனக்கானதையாவது
தேடிக் கண்டெடுப்பேன்
அதற்குள்
0
ஒவ்வொரு கடற்கரை அமர்விலும்
ஒரு பள்ளம் உருவாகிறது
யாருடைய பள்ளத்திலோ கைநுழைத்து
பேச்சுவாக்கில்
ஏதோவொரு பள்ளம் நிரம்புகிறது
இப்படியே தான் வழிநெடுகிலும்
அறியாதொரு பள்ளம்
அனிச்சையாய் நிரவல்
பிறகு மீண்டுமொரு பள்ளம்
நிஜம்
எட்ட பார்த்த நீராயில்லை
இறங்கி நின்றது
இலை தழை புறந்தள்ளி
விலக்க முயன்ற நீராயில்லை
பருகச் சூழ்ந்த்து
இளைப்பாறுகையில்
அள்ள முனைந்த நீராயில்லை
குடித்துத் தீர்த்த்து
0
அந்த அறைக்குள்
தூங்கவே பயமாயிருக்கும்
யாராரோ உற்று நோக்கும்
பார்வையின் கலவரம்
ஈரம் கசிந்து ஆங்காங்கே
சுண்ணாம்பு உதிரந்த சுவரில்
விரவித் தென்படும் உருவத்தோற்றங்கள்
விளக்கணைக்க
இடம்பெயர்ந்து இருளோடு சூழும்
புதைபடிவ முகங்கள்
ஒருநாள் வெள்ளையடிக்கப்பட்டது
இப்போது தூக்கமில்லை
யாருமற்றுப் படுத்திருப்பதிலும்
பயமிருக்கத்தான் செய்கிறது
சீக்கிரமே பழசாகட்டும்
சுவர்
தூரம்
அன்பைப் பெருக்குகிறது
துயரங்களை ஆற்றிப்போகிறது
நிம்மதியைத் தருவிக்கிறது
அப்படியின்றி
முற்றிலும் எதிர்மறையாகவும்
முரண்பட்டியங்குகிறது
தூரமென்று ஒன்றுமில்லை
அது புலன்களின் விடுதலை
மறதியின் அனுகூலமுடையது
ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளின்
இடைவெளி
ஒரே புள்ளியின் வேறுபட்ட பதிவு
கர்ப்பிணிக்கும் சிசுவுக்குமென
முகில் வழி நதிகளென
மரங்களுக்கும் பறவைகளுக்கும்
மண்ணுக்கும் காற்றுக்குமென
காலதேசவர்த்தமானங்களின் உள்ளீடாக
உனக்கும் எனக்குமன்றி
என்னிடமிருந்தே எனக்கும்
(மேய்வதும் மேய்ப்பதும் யாது... என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள், தமிழனி பதிப்பகம்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
12 கருத்துகள்:
அருமையான பகிர்விற்கு மிக்க நன்றி யாத்ரா
thanks for sharing yathra... gud work!
எல்லாமே நல்லா இருக்குங்க யாத்ரா, அவரைப் பற்றி சிறு அறிமுகம் தந்திருக்கலாமே, (முன்னமே இருந்தா லிங் கொடுங்க.)
ஆதவா, இது 2001 ல் வெளிவந்த தொகுப்பு, அப்போது அவருக்கு 34 வயது, சுற்றுச்சூழல் துறையில் நச்சுயியல் விஞ்ஞானியாக பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார், அவர் பத்தாண்டுகளாக எழுதிவந்த கவிதைகளின் முழுத்தொகுப்பு இது. சமீபத்தில் நான் வாசித்த என்னை ரொம்பவும் பாதித்த தொகுப்பு இது. இவர் எங்கு வசிக்கிறார் என்ற விவரங்கள் தொகுப்பில் இல்லை, மேலும் இதற்குப் பிறகு வெளிவந்த இவரது கவிதைத் தொகுதிகள் பற்றிய விவரமேதும் தெரியவில்லை, இவரின் மற்ற தொகுப்புகளையும் வாசிக்க மிகுந்த ஆவலோடிருக்கிறேன். நண்பர்கள் அறிந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்
pakirvukku nantri.............
பாடா பொருளைப் பற்றி பாடினேன் என்பது போல வித்தியாசம் காட்டுகிறது கவிதை எளிமையாய்.
தனியாக நேரம் ஒதுக்கி ஸ்ரத்தையாக படிக்க வேண்டியிருந்த்து.
பகிர்வு – கொள்ளையழகு.
புதுமாதிரியாகவும் புத்துணர்வாகவும் இருந்த்து யாத்ரா :)
இம்மாதிரி கவிதைகளை படிக்கையில் வறட்சியான இதயத்திலும் பூப்பூக்கிறது
//பாடாதுபோன பட்சியை
குறையளக்காதீர்கள்
//
Thanks for sharing..
அடடா இந்த வரிகள் அருமை, மிக ரசித்தேன்!
//கீறல் விழுந்த கைக்கடிகாரத்தின்
உள்முக மையத்தில்
கருக்கொண்டது முழுவட்ட
நீர்ப்படிவு//
//முடிந்த்தென்று வைத்துவிட
நீயெடுத்துச் சீவுகிறாய்
மென்மேலும்//
//பாடாதுபோன பட்சியை
குறையளக்காதீர்கள்
ஒருக்காலும் தன் சுரக்குறிப்புகளை
தவறவிட்டிருக்காது
தொண்டைக்குழியில் முள்குத்தி
துன்புற்றிருக்கலாம்
மனநலம் சரியில்லாத
வாய்ப்புமுண்டு
அவகாசம் உண்டென்றால்
உள்ளங்கைக்குள் பொருத்தி
மெல்ல வருடிக் கொடுங்கள்
அகப்படவில்லையெனில்
போன திக்கு நோக்கி
வலி தீரப் பிரார்த்தியுங்கள்
நாளையோ மறுநாளோ
வராதுபோயின்
அக்கறையோடு தோட்டத்தில்
தேடுங்கள்
மிஞ்சிக்கிடக்கும் சிறகுகளையும்
சதையெடுத்துச் செல்லும்
எறும்புச் சாரைகளையும்//
நலமா? திருமண வாழ்க்கை எப்படியிருக்கு? என் வாழ்த்துக்கள் யாத்ரா!
உறவுகள் தொடர்கதை பாடல் நினைவுக்கு வருது.. அப்படியே அந்த ரசம் சாதமும்,
இந்த கவிதை புத்தகத்தின் பின்புறம் ஸ்டேன்லியின் மகளின் கிறுக்கல்கள் இருக்கின்றனவா?
அப்படியொரு புத்தகம் 'பார்த்த' ஞாபகம்!
I follow the comments up..
பகிர்விற்கு நன்றி யாத்ரா... :)
கருத்துரையிடுக