வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009
பிரான்சிஸ் கிருபா கவிதை
ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி
அம்மா கவலையின்றி துணி துவைப்பாள்
அப்பா கவனமாக நாளிதழ் வாசிப்பார்
அண்ணன் கடன் பட்டவன் போல் டி.வி பார்ப்பான்
அவளோ சலிப்பின்றி வகுப்பெடுப்பாள்
மாடத்துத் தொட்டிச் செடிகளில்
குட்டிப்பூக்கள் அவளை எட்டி எட்டிப் பார்க்கும்
ஜன்னல் திலைச்சீலைகள் கெக்கலித்து நெளியும்
வாசலில் நுழையும் வெயில்
அவள் காலில் விழுந்து பாடம் கேட்கும்
கைகளைத் தூக்கி தூரப் போடுவது மாதிரி விளக்குவாள்
ஆத்திரப்படும் போது காலை ஓங்கித் தரையில் உதைப்பாள்
சுட்டு விரலால் காற்றில் எழுதுவாள் அழிப்பாள்
புரிந்து கொள்ளாத மாணவ மாணவிகளிடம் பொறுமையிழப்பாள்
பொட்டு வைப்பதைவிட மெதுவாகத் தான் என்றாலும்
தன் நெற்றியில் அடிக்கடி அடித்துக் கொள்வாள்
கன்னத்தில் ஒரு பலூன் ஊதிக் கடைவாயில் கடித்தபடி
யோசனையோடு குறுக்கும் மறுக்கும் நடப்பாள்
கெட்டிக்கார குழந்தைகளைப் பாராட்ட
புன்னகை வயலில் பூவொன்று பறித்துக் கொண்டு
சந்தோஷ வரப்புகளில் ஓடோடி வருவாள்
ஞாயிற்றுக் கிழமைகளில் டீச்சராகும் சிறுமி
திங்கட்கிழமையை தள்ளிக் கொண்டு போவாள் பள்ளிக்கு
( இந்தக் கவிதையை படித்ததிலிருந்து அவ்வப்போது தானே மெலிதாய் சிரித்துக் கொள்கிறேன். டீச்சர் சிறுமி அடிக்கடி தோன்றி எனக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள். நான் புரியாத மாதிரி நடித்து, அவள் பொறுமையிழந்து பொட்டு வைப்பது போல் மெலிதாக தலையிலடித்துக் கொள்வதை உள்ளூர ரசித்து புன்னகைத்துக் கொள்கிறேன். என் சமீபத்திய நாட்களை அழகாக்கிக் கொண்டிருக்கும் அந்த முகமறியாச் சிறுமிக்கும் கிருபாவுக்கும் என் நன்றிகள்.
நிழலன்றி ஏதுமற்றவன் என்ற தொகுப்பிலுள்ள கவிதை இது. யுனைடட் ரைட்டர்ஸ் வெளியீடு. )
வியாழன், 13 ஆகஸ்ட், 2009
சில பிரியங்கள்
அறுபட்ட கோழியின்
தூவலாய் மிதக்கின்றன
கைவிடப்பட்ட பிரியங்கள்
சில மிதந்து மேகங்களுக்கப்பால் சென்று
நட்சத்திரங்களாகி விடுகின்றன
சில அலைகளின் மடிப்புகளில்
மூழ்கி கடற்பாசிகளோடு நேசம் கொள்கின்றன
சில சாக்கடையில் மிதக்கும்
சூரிய வட்டில் பரிமாறப்பட்டிருக்கும்
நரகல் துண்டுகளை அலங்கரிக்கின்றன
சில
பலருக்கு கைக்கெட்டிவிடும் பாவனை காட்டி
கண்மூடியாய் பின்தொடர வைத்து
தற்கொலை முனையில்
சொர்க்கத்தின் வாயிலை
திறந்து வைக்கின்றன
சில
காதலர்களின் பார்வைக் கம்பிகளில்
பட்டாம்பூச்சியென அமர்ந்தமர்ந்து
சங்கேதமாய் எதையோ
உணர்த்த முயல்கின்றன
சில
சிலந்தி வலைகளில் சிக்கி
காற்றின் அலைக்கழிப்புகளில்
விலகும் கணத்தை எதிர்நோக்கியிருக்கின்றன
இப்படி எல்லாமும் தங்களுக்கான
இடங்களைத் தேர்ந்து கொள்ள
ஒரேயொரு இறகு மட்டும்
தனித்து மிதந்து கொண்டிருக்கிறது அந்தரத்தில்
எவ்விடம் எதனிடம் யாரிடம்
அது சென்றடையப் போகிறதென்கிற
பதற்றம் கூடிக்கொண்டே வருகிற தருவாயில்
பாலருந்த விழையும்
குழந்தையின் முனைப்போடு
தேவதையொருத்தியின் ( தேவதையோ ராட்சசியோ )
முலையிடை தஞ்சமடைகிறது
சடுதியில் பார்வைப்புலத்திலிருந்து
மறைந்துவிட்ட அவள் இதை
கவனித்தாளோ கவனிக்கவில்லையோ
தெரியவில்லை
கூ(ண்)டடைந்த பிரியத்தை
உடை களைகையில் அவள்
தூக்கியெறிந்துவிடக் கூடாதென
பிரார்த்தித்துக் கொள்வோம் சபிப்போம்
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009
ஒரு பொழுதில்
வீதியில் விழுந்திருக்கும்
மின் கம்பி நிழலின்
ஒரு கோட்டில்
முன்பின்னாய் பாதம் பதித்து
தடுமாறும் தருணங்களில்
சிலுவையாய் கரம் விரித்து
சமன்குலைவை சரி செய்தபடி நடக்கிறாள்
ஒரு தாவணிப் பெண்
கவனித்தோ கவனிக்காமலோ
அமர்ந்திருந்த நிழற்ப்பறவையை
மிதித்து விட
கீச்கீச்சென காலடியிலிருந்து மீண்டு
பறந்து சென்றதோ ஓடிச்சென்றதோ
அந்தப் பறவை என
மேல் கீழாய் அவதானித்தபடியிருந்த
ஒரு அபூர்வ கணத்தில்
சிறகில் அவளை வைத்து
அலகில் என் கழுத்தைப் பற்றி
பறந்து கொண்டிருந்தது அப்பறவை
முன்பே தீர்மானித்து
வைத்திருந்தது போலும்
ஒரு மேகத்தில் விடுவித்துச் சென்றது எங்களை
கழுத்தில் பற்றிய அலகின் தடத்திலிருந்து
வழியும் குருதியைத் தடுக்க
தாவணியவிழ்த்து கட்டிடுகிறாள்
சுருக்குக் கயிறாகி இறுகுகிறது கழுத்து
பொழியக் காத்திருந்த மேகத்தில்
எங்கள் காலடிகள் நழுவுகின்றன
சறுக்கிய படியே
மழைத் தாரை பிடித்திறங்கி
சங்கமமானோம்
அலைகள் தணிந்திருக்கும்
நடுக்கடலில்
வெள்ளி, 24 ஜூலை, 2009
நாகப்பழ நாக்கு
கருநீலப்பாவாடையோரத்தில் மடித்து
எச்சிற்படாமல் கடித்துத் தரும் புளிப்பு மிட்டாய்
கடித்துக் கடித்து திறக்கும்
பென்சில் வைக்கும் பிளாஸ்டிக் பெட்டியில்
பதிந்திருக்குமுன் பற்தடம்
கணக்கு பீரியடில் விழுந்த உன் பல்லை
வானத்துக்கு காட்டாமல்
உள்ளங்கைக்குள் இறுக மூடி
மதிய உணவு இடைவேளையில்
புதைத்த அந்த இடம்
இன்டர்வலில் புதர்ச்சரிவில்
நிகழ்த்தும் சிறுநீர் ஓட்டப்பந்தயம்
முத்தமிட்ட கன்னத்தைத் துடைத்துக்கொண்டே
கழுவ ஓடி குழாய் திறக்க காற்று வர
உள்ளங்கைக்குள் எச்சில் துப்பி
என் முத்தம் அழித்தது
ரிப்பனையவிழ்த்து விட்டே சலித்துப்போன
ரெட்டைப் பின்னல் நாட்களுக்கிடையில்
உச்சியிலிருந்து துவங்குமாறு அலங்கரித்திருந்த
அந்த ஒற்றைப் பின்னல் தினத்தில்
அதை பதினெட்டாவது முறையாக பற்றியிழுத்த
அப்போது அழுது கொண்டே
போடா செந்திலு பொந்திலு குந்திலு நாயே என்றதற்கு
போடி வள்ளி கள்ளி குள்ளி பல்லி பன்னி என்றது
நாகப்பழம் தின்ற நாக்கு காட்டி
நங்கு காண்பித்தது
பாதி சாப்பிட்டிருந்த ஐய்சைப் பிடுங்கிக்
கொண்டோடிய அன்று முழுக்க என்னிடம் பேசாமலிருந்தது
நொண்டியாட்டத்தில் உன் போங்கு ஆட்டம்
பொறுக்காது ஒரு அறைவிட
சில கணங்களில் உன் கன்னத்தில் சிவந்தயென்
விரல் தடம் பார்த்ததிர்ந்து
தடவியபடியே தழுவ முயல்கையில்
காக்கா அடி அடித்து அழுது
விலக்கிக்கொண்டோடியது
விளையாட்டாய் வளையல் உடைப்பது
வழக்கம் தானெனினும்
அன்று பீரிட்ட ரத்தம் பார்த்து
சாரிடி சாரிபா சாரிபா மன்னிச்சிக்கோவென
காயத்தின் ரத்தத்தை வாயில் வைத்து உறிஞ்சியது
தவறவிட்ட ஒற்றைக் கொலுசுக்காய்
அன்று முழுதும் அழுதழுது முகம் வீங்கி
வீட்டுக்குச் செல்கையில்
ஏய் இங்க பாருடி என
கையில் ஆடவிட்டபோது
சிரிப்பும் அழுகையுமாய்
பிடிபடாது ஓடிய என்னைத் துரத்தியது
ஒருநாள் விளையாட்டு பீரியடில்
மைதானத்தில் வழிமறித்து
நான்.......நான்...... என தயங்கி நின்றது
காலத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றாய்
புரட்டப் பட்டுக் கொண்டேயிருக்கிறது
இன்று காலையிலிருந்து
இவளுக்கு சுகமில்லாததால்
அம்முக்குட்டியை அழைத்துவர பள்ளிக்குச் செல்ல
அழுதபடி அப்பா தோ பாருப்பா
அந்தப் பையன் என் கையை எப்படி கடிச்சிட்டான்
என்றவள் கையை வருடிவிட்டு
அவள் சுட்டுவிரல் காட்டிய திசை பார்க்க
மிரண்டு பயந்திருக்கும்
அந்த மழலையின் கரம் பிடித்து
நின்றிருந்தாள் வள்ளி.
திங்கள், 13 ஜூலை, 2009
நிலைக்கண்ணாடி
கடந்து சென்றதும்
உன்னிலிருந்து என்னை
அழித்திருக்கிறாயோவென சந்தேகித்தேன்
அருகில் வந்து பார்க்க
உன்னில் அப்படியே நானிருந்தேன்
தவறாக புரிந்து கொண்டமைக்கு
சற்றே வருந்தி
மன்னிப்பு கேட்டுச்
சென்ற என்னையழைத்து
என்னில் தன்னை சில கணம்
பார்த்துச் செல்பவர்களுக்கிடையில்
என்னில் வசிக்க விரும்பிய இதயமே
பிரியமே உன் நம்பிக்கையும் நேசமும்
என்னை வீழ்த்திவிட்டது
என் தனிமைக்கு விமோசனமளித்து
எப்போதும் என்னை விட்டகலாதிருப்பாயாவென
இறைஞ்சி கலங்கினாய்
உன் பிரியத்தின்
கனம் தாளாமல் பரிதவித்தேன்
மெதுமெதுவாய் பின்னால் நகர்ந்து
உன்னில் என்னைச் சிறியதாக்கி
சிறு பூச்சியென
பெயர்த்துக் கொண்டோடினேன் என்னை
நீ நேசித்த என்னை
நான் விரும்பிய உன்னில்
நிரந்தரமாய் இருத்திக் கொள்ள
இயலாமல் போன
குற்றவுணர்வை அதிகரிக்கச் செய்கிறது
பிறகான தருணங்களில்
உன்னை நெருங்கி கடக்கும் போதெல்லாம்
நீ பார்க்கும் பார்வை
செவ்வாய், 7 ஜூலை, 2009
கவிஞர் இசை கவிதைகள்
3 கி. மீ
அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்திற்கு
அவ்வூரைப் பார்க்கும்
ஆசை வந்துவிட்டது ஒரு நாள்
வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்து கொண்டிருக்க
3 கி.மீ. 3 கி.மீ. எனத்
தன்னை பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்
வளர்ந்தாலும் நடந்தாலும்
என் தோட்டத்தில்
ஒரு ரோஜா பூத்திருக்கிறது
அதன் கூந்தல் வெகு தொலைவில் இருக்கிறது
ரோஜாவின் கனவில் கூந்தலும்
கூந்தலின் கனவில் ரோஜாவும்
அடிக்கடித் தோன்றி மறைகிறது
கூந்தலை எண்ணி எண்ணி
ரோஜா கறுத்து வருகிறது
கூந்தல் சிவந்து வருகிறது
ரோஜா நடந்து செல்லவோ
கூந்தல் வளர்ந்து நீளவோ
இயலாது
வளர்ந்தாலும் நடந்தாலும்
சென்று சேர இயலாது
தற்கொலைக்கு தயாராகுபவன்
தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்துநிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்பப் படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து தனியே தன்னுருவைப்
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல்நுனி
கூடவே வருவேனென்கிறது
தோழமை
எல்லா வெள்ளியின் மாலைகளிலும்
தான் விளையாடிக் கொண்டிருந்த
மைதானத்தை அப்படியே விட்டுவிட்டு
புறப்பட்டு விடுகின்றனர்
பள்ளிக்குழந்தைகள்
ஒரு நாள்
இல்லை
ஒரு நாள்
பிரிவின் வெம்மை பொறுக்காது
பேருந்தேறும் அப்பெரு மைதானமும்
சகலமும்
சகலமும் கலைந்து சரிய
அழுதழுதடங்கியவன்
தன்னருகே வந்து
குழைந்த நாய்க்குட்டியை
மெல்லமெல்ல தடவிக் கொடுத்தான்
அது அவன்
உடலாகவும் இருந்தது
பூனை
பூனை ஒரு விலங்கு
அதற்கு தெரிந்திருக்கிறது
பிரியமானவர்களைக் கடிக்கும் முன்னே
பற்களை எப்படி உதிர்த்துக் கொள்வதென
ஸ்பர்சிக்கும போது
நகங்களை எவ்வாறு மழுங்கிக்கொள்வதென
சௌமி குட்டி சௌமியா ஆனது எப்போது
ஒருமுறை சௌமி குட்டிக்கு
வேடிக்கை காண்பிப்பதற்காக
அய்.. பூ! என்றேன்
அன்றிலிருந்து அய்.. பூ! அய்.. பூ!
என்றே அவள் விளிக்க
மலர்ந்ததிலிருந்து மேலும் மலர்ந்தன...
பூ என்பதற்கு முகம் திருப்பாத அவைகள்
அய்.. பூ! என்பதில் இறும்பூதெய்தின
அல்லி வட்டம் புல்லி வட்டம்
இதழ்கள் காம்பென படம் வரைந்து
பாகம் குறிக்கும்
தாவரவியல் மாணவியான
சௌமியாவுக்கு
இன்று பூக்களைப் பற்றி சகலமும் தெரியும்
அய்.. பூ! பூவான போது தான்
சௌமி குட்டி சௌமியா ஆனாள்
அல்லது
சௌமி குட்டி சௌமியா ஆனபோது
அய்.. பூ! பூவாகிப் போனது
( கவிஞர் இசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு, உறுமீன்களற்ற நதி, காலச்சுவடு பதிப்பக வெளியீடு. வாசிக்க தந்துதவிய நண்பர் முத்துவேலுக்கு நன்றிகள். )
புதன், 1 ஜூலை, 2009
எறும்பின் பயணம்
சமவெளியிலிருந்து இச்சுவரின்
காரை பெயர்ந்த பள்ளத்தாக்குகளில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன் எறும்பாகி
நடையில் சிறு வேகம்
சிறு நிதானிப்பு
சிறு வளைவு
சக எறும்புகளோடு
விதானத்தையொட்டிய
செங்குத்துச் சுவரில் ஊர்ந்தபடி
முன் பின்னாய் திரும்பிப்பார்க்க
புலம்பெயர் அகதியாய் உணர்ந்தேன்
போகுமிடம் குறித்த தெளிவுகளின்றி
கவலையேதுமற்று ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
எப்படி இச்சுவரைப் பற்றி
நடந்து கொண்டிருக்கிறேனென்பது
எனக்கே ஆச்சர்யமாயிருக்கிறது
யாரையும் கடிக்கக் கூடாதென்கிற எண்ணம்
பார்ப்போம்
ஒரேயொரு ஆசை மட்டும்
பருகுவதற்கு யாருமற்று
யுகயுகமாய் தனித்திருக்கும்
மது நிரம்பிய குவளையின்
விளிம்பில் சுற்றியபடியிருக்க வேண்டும்
ஆயுள் முழுக்க
ஊழிக் காலத்தில்
அப்படியே அதிலிறங்கி
ஜலசமாதியடைந்து விட வேண்டும்
ஜன்னல் வரை சென்று
கதவு மூடப்பட்டிருக்க
வட்டமடித்து திரும்பிக்கொண்டிருந்தனர் முன்னோர்
என்ன நினைத்தேனோ
கதவைத் திறந்து விட்டு
நானும் என் சக எறும்புகளும
ஜன்னல் விளிம்பு வழி
வெளியேறிக் கொண்டிருப்பதை
பார்த்துக் கொண்டிருந்தேன்
பிறகு எவ்வளவு காத்திருந்தும்
என்னை வந்தடையவேயில்லை
எறும்பாகிப் போன நான்
ஒருவேளை அதற்கு
அந்த மதுக்குவளை
கிடைத்திருக்கலாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)