செவ்வாய், 7 ஜூலை, 2009

கவிஞர் இசை கவிதைகள்


3 கி. மீ

அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்திற்கு
அவ்வூரைப் பார்க்கும்
ஆசை வந்துவிட்டது ஒரு நாள்

வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்து கொண்டிருக்க

3 கி.மீ. 3 கி.மீ. எனத்
தன்னை பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்

வளர்ந்தாலும் நடந்தாலும்


என் தோட்டத்தில்
ஒரு ரோஜா பூத்திருக்கிறது
அதன் கூந்தல் வெகு தொலைவில் இருக்கிறது

ரோஜாவின் கனவில் கூந்தலும்
கூந்தலின் கனவில் ரோஜாவும்
அடிக்கடித் தோன்றி மறைகிறது

கூந்தலை எண்ணி எண்ணி
ரோஜா கறுத்து வருகிறது
கூந்தல் சிவந்து வருகிறது
ரோஜா நடந்து செல்லவோ
கூந்தல் வளர்ந்து நீளவோ
இயலாது

வளர்ந்தாலும் நடந்தாலும்
சென்று சேர இயலாது

தற்கொலைக்கு தயாராகுபவன்

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்துநிலையில்
என்னென்னவோ செய்கிறான்

அவன் கையில்
குடும்பப் படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து தனியே தன்னுருவைப்
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்

எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல்நுனி
கூடவே வருவேனென்கிறது

தோழமை

எல்லா வெள்ளியின் மாலைகளிலும்
தான் விளையாடிக் கொண்டிருந்த
மைதானத்தை அப்படியே விட்டுவிட்டு
புறப்பட்டு விடுகின்றனர்
பள்ளிக்குழந்தைகள்
ஒரு நாள்
இல்லை
ஒரு நாள்
பிரிவின் வெம்மை பொறுக்காது
பேருந்தேறும் அப்பெரு மைதானமும்

சகலமும்

சகலமும் கலைந்து சரிய
அழுதழுதடங்கியவன்
தன்னருகே வந்து
குழைந்த நாய்க்குட்டியை
மெல்லமெல்ல தடவிக் கொடுத்தான்
அது அவன்
உடலாகவும் இருந்தது

பூனை

பூனை ஒரு விலங்கு
அதற்கு தெரிந்திருக்கிறது
பிரியமானவர்களைக் கடிக்கும் முன்னே
பற்களை எப்படி உதிர்த்துக் கொள்வதென
ஸ்பர்சிக்கும போது
நகங்களை எவ்வாறு மழுங்கிக்கொள்வதென

சௌமி குட்டி சௌமியா ஆனது எப்போது

ஒருமுறை சௌமி குட்டிக்கு
வேடிக்கை காண்பிப்பதற்காக
அய்.. பூ! என்றேன்
அன்றிலிருந்து அய்.. பூ! அய்.. பூ!
என்றே அவள் விளிக்க
மலர்ந்ததிலிருந்து மேலும் மலர்ந்தன...

பூ என்பதற்கு முகம் திருப்பாத அவைகள்
அய்.. பூ! என்பதில் இறும்பூதெய்தின

அல்லி வட்டம் புல்லி வட்டம்
இதழ்கள் காம்பென படம் வரைந்து
பாகம் குறிக்கும்
தாவரவியல் மாணவியான
சௌமியாவுக்கு
இன்று பூக்களைப் பற்றி சகலமும் தெரியும்
அய்.. பூ! பூவான போது தான்
சௌமி குட்டி சௌமியா ஆனாள்
அல்லது
சௌமி குட்டி சௌமியா ஆனபோது
அய்.. பூ! பூவாகிப் போனது

( கவிஞர் இசையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு, உறுமீன்களற்ற நதி, காலச்சுவடு பதிப்பக வெளியீடு. வாசிக்க தந்துதவிய நண்பர் முத்துவேலுக்கு நன்றிகள். )

25 கருத்துகள்:

ny சொன்னது…

பகிர்ந்தமைக்குப் பல நன்றிகள்!!

ச.முத்துவேல் சொன்னது…

சகலமும்” கவிதையை எங்கே போடாம விட்டுட்டீங்களோன்னு ஆர்வமா கீழே இறக்கிட்டுபோனேன். பார்த்ததும் ஒரு சந்தோசம்.

எனக்குத் தெரிஞ்சவங்க, பேசறவங்க, கேட்கறவங்க எல்லாருக்கும் நான் இசையின் கவிதைகளை சிபாரிசு செய்துகொண்டிருக்கிறேன்.அதே இங்கும் இப்போதும்.

யாதரா, இசையின் வலைப்பூ முகவரியை முடிந்தால் பதிவில் சேருங்கள்.

(வாசிக்கக்கொடுத்ததற்கெல்லாம் நன்றியும், பதிவில் பெயருமா! எனில், நான் யார் யாருக்கெல்லாம், எவ்வளவு நன்றிகள் சொல்லவேண்டியிருக்கும்.வேண்டாம் யாத்ரா. உண்மையாகவே சொல்கிறேன். தேவையில்லை,நீக்கிவிடுங்கள்.)

காமராஜ் சொன்னது…

//தங்கையின் சுண்டுவிரல் நுனி//
அடடா அருமையான வரி வாரியெடுக்கிறது
உள்ளத்தை

மாதவராஜ் சொன்னது…

அன்றைக்கு நீங்கள் இந்தக் கவிதை புத்தகம் தந்த போது, சௌமிக்குட்டியை படிக்கவில்லை. அடேயப்பா...! கவிஞர் இசை எளிமையாகவும், ஆழமாகவும் படைக்கிறார்.

அகநாழிகை சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அகநாழிகை சொன்னது…

யாத்ரா,
இசையின் கவிதை பகிர்விற்கு நன்றி.
இசையின் கவிதைத் தொகுதியை என்னிடம் கொடுத்ததும், எப்போதும் போல கடைசிப்பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன்.
கடைசிக் கவிதையான ‘சௌமி‘ கவிதையை அழகியலை உடனே நான் முத்துவேலிடமும், உன்னிடமும் பகிர்ந்து கொண்டது நினைவுக்கு வருகிறது.

இசையின் கவிதைகள் மொழியாளுமையுடன், சொல்லாமல் சொல்லிச்செல்லும் விஷயங்கள் அதிகம்.

‘சகலமும்‘ அருமையான கவிதை.
மறுபடி மறுபடி வாசிக்கத் தூண்டுகிறது.

பகிர்தலுக்கும், தொகுப்பை வாசிக்கச் செய்ததற்கும் நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Venkatesh Kumaravel சொன்னது…

சௌமிக்குட்டி கவிதை தான் பெஸ்ட்!
அப்பாடா!
இம்முறையாவது உங்களுக்கு அல்லாமல் அண்ணன் முத்துவேலுக்கு நன்றி சொல்ல வாய்ப்பளித்ததற்கு. நல்லாயிருக்கு-னு பின்னூட்டம் போட்டு சலித்துப்போச்சு!

அப்புறம், நம்மளையும் பரிந்துரை செய்து பிறருக்கு வாசிக்க சைட்பாரில் வைத்ததற்கு ஒரு பெரிய நன்றி!

பிரவின்ஸ்கா சொன்னது…

நல்ல பகிர்வு .
மிக்க நன்றி

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

இரசிகை சொன்னது…

arumaiyaana pahirvukal..
nantri yatra..!!

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

நல்ல பகிர்வு யாத்ரா.. அன்னைக்கு நீங்க வாசிக்க இந்தக் கவிதைகளை நான் கேட்டது இன்னும் நினைவில் இருக்கு.. இசைக்கு வாழ்த்துகள்..

வால்பையன் சொன்னது…

முதல் கவிதை செம லாஜிக்!

மூன்றாவதும் அருமை!

தனிதனியாக இட்டிருந்தால் முழுமையாக ரசிக்க முடியும்!

தற்சமயம் எதை ரசிக்க என குழப்பத்தில் இருக்கிறேன்!

(எதிர்கவுஜ எழுத ஒண்ணு போடுங்க தல)

நந்தாகுமாரன் சொன்னது…

3 கி.மீ. மற்றும் தோழமை கவிதைகள் எனக்குப் பிடித்தன ... பகிர்வுக்கு நன்றி ... இசையை இனி கேட்க முயல்கிறேன்

Admin சொன்னது…

உங்கள் பதிவுகள் அருமை தொடருங்கள்.....
வாழ்த்துக்கள்.... தொடர்ந்து எழுதுங்கள்..


நம்ம பக்கமும் வந்து பாருங்களேன்...

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

இசைக்கு வாழ்த்துகளும்,பகிர்ந்து கொண்டமைக்காக உங்களுக்கு நன்றியும்.

♫சோம்பேறி♫ சொன்னது…

3 கி. மீ மனதை என்னவோ செய்கிறது. அதி சோகமான ஒரு கதையைக் கேட்ட உணர்வு, பாரம் ஏற்படுத்துகிறது.. ஜடத்துக்காக ஏன் அழுகிறாய் என கேட்டு குழப்புகிறது. சம்மந்தமில்லாத என் கவலையை ஞாபகப்படுத்தி, சுயபரிதாபமேற்பட வைக்கிறது.

அடுத்த கவிதைக்கு நகர விடாமல், அங்கேயே சுற்ற வைக்கிறது.

இந்த உணர்வை ஏற்படுத்திய இசையையும், உங்களையும் திட்டுவதா பாராட்டுவதா என்று புரியவில்லை.

இது போன்ற கவிதையை இதற்கு முன் படித்ததில்லை. முழுத் தொகுப்பையும் படிக்க பேராவல்..

Unknown சொன்னது…

// 3 கி. மீ

அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்திற்கு
அவ்வூரைப் பார்க்கும்
ஆசை வந்துவிட்டது ஒரு நாள்

வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்து கொண்டிருக்க

3 கி.மீ. 3 கி.மீ. எனத்
தன்னை பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர் //அருமை.... அருமை....!! என்னொரு கற்பனை........!!!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

நல்ல கவிதைகள். பகிர்வுக்கு நன்றி

-ப்ரியமுடன்
சேரல்

மதுசூதனன் சொன்னது…

எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல்நுனி
கூடவே வருவேனென்கிறது....

அருமை...

தமிழ்நதி சொன்னது…

இசையின் கவிதையில் எனக்கும் பிடித்தது 'தங்கையின் சுண்டுவிரல் நுனி'தான். அதென்னமோ காட்சியாய் வந்துகொண்டேயிருக்கிறது....

பா.ராஜாராம் சொன்னது…

நல்ல கவிதைகள் வாசிக்க நேருகிறபோது,
அறியாது கண்கள் நிறைகிறது...
பகிர்ந்த எல்லா கவிதைகளிலுமே!
என்ன மயிறு கவிதை எழுதுகிறோம்
என்றிருக்கு...
நன்றி யாத்ரா!

இளங்கோ கிருஷ்ணன் சொன்னது…

என் நண்பனின் கவிதையை நீங்கள் உங்கள் வலைப் பூவில் பதிந்திருப்பதையும் அதை இத்தனை பேர் பாராட்டியிருப்பதையும் பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி நண்பரே. வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

//எவ்வளவு நுட்பமாகச் செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல்நுனி
கூடவே வருவேனென்கிறது//
 
மனதை நனைத்த வரிகள்.

கே.பாலமுருகன் சொன்னது…

அருமையான மனதின் உளடுக்குகளில் புதிந்திருக்கும் ஆழங்களை சில வரிகளில் வெளிப்படுத்துவதன் சூட்சமம் நிறைந்த கவிதைகள்.
பகிர்ந்தமைக்கு நன்றி யாத்ரா.

கவிஞர் இசை சொன்னது…

nanba , anbin nimithamoa kavithaiyin nimithamoa ean kavithaikalai veliyitta unakkum , pinnuttam alitha nanbarkallukum ean nantrikal

CS. Mohan Kumar சொன்னது…

தற்கொலை கவிதையில் கடைசி வரிகள் அதிர வைக்கிறது. அதற்கு பின் உள்ள கவிதைகள் இப்போது வாசிக்க தோணலை. அந்த கவிதை ஏற்படுத்திய பாதிப்பு !!