செவ்வாய், 5 மே, 2009

இதுவும் கடந்து போகும்



அணிந்திருந்த புதுச்சுரிதார்
புருவச் செதுக்கல்கள்
கத்தரித்த கன்டிஷனர் சிகையலங்காரம்
அழகு நிலையத்திற்குப் பின்னான முகப்பொலிவு
தழையத் தழையச் சூடிவரும் மல்லிகைச்சரம்
கொலுசொலியுடன் கூடிய புடவைச் சரசரப்பு
குதிகாலுயர்ந்த பாதுகை
அலைபேசி சினுங்கல்களின் அழகு
ஓவியக் கையெழுத்து
மின்மடலின் சொற்பிரயோகங்கள்
புன்னகைகளின் அர்த்த அகராதி
உடல்மொழி புரிதல்கள்
மூன்று நாள் காலங்கள்
காதல் நட்பு உறவுகள்
கவிதை ஓவியம் இலக்கியம் தத்துவம்
விருப்பப் பட்டியல்கள்
Intellectual hypocrite pervert isms
இன்னும் பிற எழவுகளைப் பற்றியெல்லாம்
உரையாடிய ஒரு தருணத்திலாவது
பாவனையாகவேணும் அசௌகர்யமாக
உணர்வதாக அபிநயித்திருக்கிலாம்
புன்னகை தவிர்த்து
குறைந்தபட்சம் என்
பிறந்த நாள் பரிசுகளையாவது
நிராகரித்திருக்கலாம்
வசதியாக குற்றங்களையெல்லாம்
உன்மீதே நிறுவ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்
வாங்கித்தரச் சொன்ன மாத்திரைகளுக்காக
மருந்தகத்தில் நின்றிருக்கையில்

திங்கள், 4 மே, 2009

அறியாமை



அறியாமல் எய்திவிடுகிறீர்கள்
அம்புகளை
காகிதக்கத்தியென
விளையாட்டாய் செருகிவிடுகிறீர்கள்
தாகத்திற்கு குளிர்பானமாய்
அமிலம் அருந்தக்கொடுக்கிறீர்கள்
பீங்கான் வட்டில் கழிவறை பீங்கானென
மலம் பறிமாறுகிறீர்கள்
அறிவேன் அனைத்தும்
அறியாமையில் செய்யப்பட்டவைகளே
என் அறியாமையை மட்டுமேன்
அறிய மறுக்கிறீர்கள்.

வியாழன், 30 ஏப்ரல், 2009

ஓட்டை



ஊற்றப்படுவது நின்றதும்
வடிந்து வெற்றிடமாகிறது
மிச்சமாய் ஈரம்
சில கணங்கள்
ஒப்புக்கொள்கிறேன் குறையை
ஓட்டையை அடைக்காது
புலம்புவதில் அர்த்தமில்லை
துளையெங்கேயெனத் தெரியவில்லை
அடைக்கவும் விருப்பில்லையோ
தேங்கியிருப்பதை விடவும்
வந்து கடந்து போகட்டுமே நீர்
என இருக்கிறேனோ
நீரின்றி போனாலும்
நிரப்புவதற்கு என்றென்றைக்குமாய்
வெறுமை இருக்கிறதென்கிற
திமிரோ.

புதன், 29 ஏப்ரல், 2009

வைதீஸ்வரன் கவிதைகள்



கண்ணாடியை துடைக்கத் துடைக்க
என் முகத்தின் அழுக்கு
மேலும் தெளிவாகத் தெரிகிறது

தன் கூட்டுக்கும்
வானுக்கும்
பாலம் தெரிகிறது
பறவைகளுக்கு மட்டும்

எழுத நினைக்காத தருணம்
எழுத நேருகிறது
மிகத்தெரிந்தது போல்
தெரியாததை எழுதிக்
கொண்டிருக்கிறேன்
எழுதி முடித்தவுடன் தான்
எனக்கு வெளிச்சமாகிறது
இதைத்தான் நான்
தெரிந்து கொள்ள வேண்டிக்
காத்திருந்தேனென்று



புதிர்

இருட்டை வரைந்திருக்கிறேன்
பார் என்கிறான்
தெரியவில்லையே என்கிறேன்
அது தான் இருட்டு என்கிறான்
இன்னும் தெரியவில்லை என்கிறேன்
மேலும் உற்றுப் பார்த்து
அதுவே அதனால் இருட்டு என்கிறான்
இவன் இருட்டு
எனக்கு எப்போது
வெளிச்சமாகும்

மேலே

வெள்ளைச் சுவரில்
மெல்லிய நிழல்கள்
சிலந்தியின் கலைக்கு
செலவற்ற விளம்பரங்கள்


உபதேசம் நமக்கு

அடுத்த வீட்டுக் காரனிடம்
அன்பாய் இருந்து தொலைத்து விடு
வம்பில்லை

பல்தேய்த்துக் கொண்டிருக்கும் போது
பக்கத்து வீட்டுக் காரனிடம்
வெள்ளையாய் சிரித்துவிடு
தொல்லையில்லை

என்றாவது
உன்வீட்டில்
மழை பெய்யும் போது
அவன் வீட்டில்
குடை இருக்கும்
என்றாவது உன் செடியை
ஆடு கடிக்கும் போது
அவன் கையில் ஆளுயரக்
கம்பு இருக்கும்
உன் வீட்டுக் குழந்தைகள்
ஓடியாட
அவன் வீட்டுத் தாழ்வாரம்
நீளமாயிருக்கும்

எதற்கும்
ஒரு விதமான தவமாக
தினந்தினம்
வேலியோரம் சற்றே
கால் சொறிந்து நில்லு

உளுந்தூரில் அவன் பாட்டி செத்ததால்
உனக்குப் போன தூக்கம்
ஊருக்குள் திருட்டு கற்பழிப்பு
உணவுத்தட்டு கருப்பு மார்க்கெட்டு
யாருக்கோ தவறிவிட்ட
லாட்டரிச் சீட்டு
எவனுக்கோ பிறந்து விட்ட
இரண்டு தலைப் பிள்ளை
இன்னும்
கிரஸின் விலை ஊசி விலை
கழுதை விலை காக்காய் விலை
எல்லா நிலையும் பந்தமுடன்
பல் திறந்து பேசிவிட்டு
வாய்க் கொப்பளித்து வந்துவிடு
தொந்தரவில்லை

என்றாவது நின்று போகும்
உன் சுவர் கடிகாரம் கூட
அவன் வீட்டில் அடிக்கும் மணியை
ஒட்டுக் கேட்கட்டும்

ஏசுவும் புத்தனும்
எதற்கு சொன்னான் பின்னே
அடுத்தவனை நேசி என்று
அவனால் உபகாரம்
ஆயிரங்கள் உனக்கு இருக்கும்

அதை மட்டும் யோசி
நீ ஒரு நகரவாசி.

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

இன்னும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் குரல்



மொழியற்ற பிராந்தியத்தில்
அர்த்தமற்ற புனிதச் சிரிப்புடன்
வெற்றுவெளியில் காலுதைத்து
காற்றில் கரங்களைத் துழாவி
முலையென விரல் சுப்பி
தவழ்தலின் முன்வைப்பாய் கவிழ்ந்து
என்னைப் பார்த்து சிரித்தபடியிருக்கும்
இப்பிஞ்சை அள்ளியெடுத்து
உச்சிமுகர்ந்து முத்தி கொஞ்சவே ஆசை
முன்பொரு கால ரயில் பயணத்தில்
மூன்று மணி நேர அன்னியோன்ய
சகவாசத்தின் இறுதியில்
என் சுட்டுவிரல் அழுந்தப் பற்றிய அந்தக்
குட்டிக்கடவுளின் தளிர்க்கரம் விலக்கி
அவர்கள் இறங்க வேண்டிய
நிறுத்தத்தில் அதன் தாய்
அழ அழ அழைத்துச் சென்ற குரல்
இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது
தளிர்க்கரத் தடம் இன்னமும்
என் சுட்டு விரலில்...........


( மாதவராஜ் சார் அவர்களின் விருப்பத்திற்கிணங்க, சந்தோஷக் கவிதை எழுத முயற்சித்தேன். இது சந்தோஷக் கவிதையா என்பது தான் தெரியவில்லை.)

திங்கள், 27 ஏப்ரல், 2009

நிறைவேறாத ஆசைகள்



நிறைவேறாத ஆசைகளுடன்
மரித்த ஆத்மா இது
சுருக்குக் கயிற்றில் சங்கிறுக
விழிவெறிக்க நாத்தள்ள
குறிவிறைத்து உயிர்த்துளி கசிய
பூச்சி மருந்தருந்தி நுரைத்தள்ளி
குடல் வெளிவரும் அனுபவமாகி
நீரில் மூழ்கி வெகு ஆழத்தில்
கடைசி ஸ்வாசமற்றுப்
போகும் கணத்தை தரிசித்து
தண்டவாளத்தில் தலை கொடுத்துப் படுத்து
சக்கரத்தின் ஏறுவதற்கு முந்தைய
கணத்தின் ஓசையை உற்றுக்கேட்டு
தலை துண்டிக்கப்பட்டபின்
விழி எதைப்பார்க்கிறது
வாய் என்ன முணுமுணுக்கிறது
கை கால்களின் செய்கையென்ன
என்பதறிந்து இறக்கவுமே ஆசைப்பட்டேன்
இது எதுவுமே நிறைவேறாது
மரணம் சம்பவித்தது துரதிஷ்டவசமானது
சில உடல்களைத் தேர்ந்திருக்கிறேன்
ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள
தன்னிறைவடையாவிடில்
மேலும் சில உடல்களையும்,,,,,,,,,
தயவுசெய்து தாங்கள்
மறுப்பின்றி சம்மதிக்கவேண்டும்
சங்கடப்படாதீர்கள்
நீங்களும் சில உடல்களில் புகுந்து
தீர்த்துக்கொள்ளலாம் உங்கள்
நிறைவேறாத ஆசைகளையும்...

சனி, 25 ஏப்ரல், 2009

கலைந்த உறக்கம்



விட்ட மின் விசிறியில்
காயமுற்று
சரிவிகித உதிர உயிர்த்துளி
வெள்ளத்தில் உடல் மிதக்க
கான்கிரீட் விதானம்
துளைத்து விறைத்து
நிலவைப் புணர்கிறது
திடுக்கிட்டு விழித்து
யாருமற்ற அறையை
உற்று நோக்கி
பால்கனி வந்து
வெறுமை வானம்
வெறித்துப் புகைத்து
கதவடைத்து உறங்கப்போனேன்
கனவையும் விழிப்பையும் சபித்தபடி.