செவ்வாய், 17 மார்ச், 2009

அழைக்கும் பிம்பம்

அழைக்கும் பிம்பம்

தண்ணீரில்
தன் பிம்பம்
தழுவுதல்
தற்கொலையா
(ஆத்மாநாம் நினைவாக)

இரக்கப்படாதீர்கள்

தனிமையிலேயே விட்டுவிடுங்கள்
என் பேரன்பும்
மரக்கிளையினின்று
சுழன்றபடி உதிரும்
பழுப்பு இலை போன்ற
என் பிரிவும்
கொன்றுவிடக்கூடும்
உங்களை.

விட்டுச்சென்றபின்

தத்தித் தத்தி
வல இட உள்ளங்கால்களால்
அழைத்து வந்த
கூழாங்கல்லை தாட்சண்யமின்றி
விட்டுச்சென்றதும்
திருப்பத்தில் மறையும் வரை
பார்த்திருந்தது
ரயில் மறையும் வரை
கையசைக்கும்
வழியனுப்ப வந்தவளைப்போல.

இவள்

காரில் இவளுடன்
சென்றிருந்தேன்
ஐயோவென இவளின் அலறல்
வேகத்தைக் குறைத்து
இவளைப் பார்க்கிறேன்
ஆசுவாசமாய்
இவள் வாகனத்தின் முன்னால்
பார்த்த திசையில்
தும்பி
கடந்து சென்றது.

திங்கள், 16 மார்ச், 2009

சூன்யப்பாதை

சூன்யப்பாதை

களவானியாய் பார்வைகளுக்கிடையில்
கண்டும் காணாமல் மென்னகை படரவிட்டு
நடையில் வலிந்து வரவழைக்கப்பட்ட கவனத்துடன்
காற்றைச் செல்லமாய்ச் சினந்து
கன்னச்சிகையை காதோரம் செருகி
இழுத்துவிட்டுக்கொள்ள தோள் ரவிக்கை விளிம்பும்
சரிசெய்ய முந்தானையும்
விரல்களின் வெறுமைக்கு துணையாக
கொலுசொலிக்கும் பரவும் சுகந்தத்திற்கும்
உன்னை உன் நிழல் பின்தொடர்வதில்
கர்வமுனக்கு
யட்சியின் சகல அறிகுறிகள்
சூன்யத்தின் பாதையில்
திரும்பிப்பார்த்தலின் கணங்களுக்காய்
நின் தடத்தை மிதிக்காது பின்தொடர்கிறேன்
வந்த வழியும்
திரும்பும் வழியும்
தெளிவற்றிருக்க
நீயுமில்லை
நின் பாதச்சுவடுமில்லை.

சனி, 14 மார்ச், 2009

சதுரங்கம்

சதுரங்கம்

சிப்பாய்களின் உயிர் மலிவு
உங்கள் ஒரு மந்திரியை பணயம் வைத்து
என் இரண்டு யானைகளை வீழ்த்தினீர்கள்
ஒரு தட்டில் உங்கள் இன்னொரு மந்திரி யானை
மற்றொன்றில் என் இரண்டு குதிரை மந்திரி
உங்கள் குரூர சமண்பாடு இது
ராஜ்யத்தைக் காக்கும்
நிர்க்கதி நிலைக்குத்தள்ளி
என் ராணியைக் கவர்ந்தீர்கள்
உங்கள் சூட்சுமங்கள்
அறிந்திருக்கவில்லை
வெற்றி இதற்கு
உங்கள் விசுவாசிகள்
எவரையும் காவு கொடுக்க தயாராயிருந்தீர்கள்
அவர்களோ
நான் உட்பட
உங்கள் தந்திரம் மெச்சினோம்
துரோகம்
அறியாது.

வெள்ளி, 13 மார்ச், 2009

நெற்றிப்பொட்டில் ஆணியறையும் பட்டினத்தாரின் வரிகள்

நெற்றிப்பொட்டில் ஆணியறையும் பட்டினத்தாரின் வரிகள்

வீடிருக்க தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளுந் தாமிருக்க
மாடிருக்க கன்றிருக்க வைத்த பொருளிருக்க
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமோ

சீயுங்குருதிச் செழுநீர் வழம்புஞ் செறிந்தெழுந்து
பாயும் புடவையொன்றில்லாத போது பகலிரவாய்
ஈயுமெறும்பும் புகுகின்ற யோனிக் கிரவுபகன்
மாயுமனிதரை மாயாமல் வைக்க மருந்தில்லையோ

அன்னை யெத்தனை யெத்தனை யன்னையோ
அப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ
பின்னை யெத்தனை யெத்தனை பெண்டிரோ
பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ
முன்னை யெத்தனை யெத்தனை சென்மமோ
மூடனாயடி யேனு மறிந்திலேன்
இன்ன மெத்தனை யெத்தனை சென்மமோ
என் செய்வேன் கச்சியேகம்ப நாதனே

பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னை
கண்ணால் வெருட்டி முலையான் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங்குழியிடைத் தள்ளியென் போதப்பொருள் பறிக்க

பீளையும் நீரும் புறப்படு மொருபொறி
மீளும் குறுமபி வெளிப்படு மொருபொறி
சளியும் நீருந் தவழு மொருபொறி
உமிழ்நீர் கோழை யொழுகு மொருபொறி
வளியும் மலமும் வழங்கு மொருவழி
சலமும் சீழும் சரியு மொருவழி
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டக முடிவிற் சுட்டெலும்பாகும
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து

வெட்டுண்ட புண்போல் விரித்தவற் குல்பைதனிலே
தட்டுண்டு நிற்றல் தவிர்ப்பதுவு மெக்காலம்




பட்டினத்தார் பத்திரகிரியார் ஆண்டாள் இவர்களின்பால் தனித்த ஈர்ப்பு உண்டு. உடலைப் பற்றியும் பற்றியெறியும் காமம் பற்றியும் அதனினின்று விடுவித்துக் கொள்ளும் ஆன்மீகப் பிரயத்தனங்கள் பற்றியும் பாடியவர்கள். முலை, அல்குல், யோனி இதுபோன்ற சொற்களையெல்லாம் ஆன்மீகப்பாடலில் எவ்வளவு அனாயசமாகப் பயன்படுத்தியிருக்கிறார் பாருங்கள். உருவ வழிபாட்டில் ஈடுபாடில்லாதயெனக்கு கச்சியேகம்பநாதன் மீது அளப்பரிய பற்றே உண்டாகி விட்டது. இன்னும் ஆண்டாள் பாசுரங்களையும் கம்பனையும் வாசிக்க ஆசை. வாசிப்பு இட்டுச் செல்லும் பாதையின் வசீகரங்களை உள்வாங்கியபடியே தீராது திரிந்து கொண்டிருக்கிறேன் புத்தகப்பக்கங்களில்,,,,,,,,,,,

வியாழன், 12 மார்ச், 2009

தலைப்பூ சூடாத கவிதா

தலைப்பூ சூடாத கவிதா

புத்தரின் போதனைகள்
புத்தகத்தை வாசித்து மூட
பக்கங்களுக்கிடையில் சிக்கியிறந்தது
ஒரு எறும்பு.

வாசலில்
சொற்களின் யாசகம்
கவிதையில் இடம் கேட்டு
பார்க்காதது மாதிரி
கடந்துவிடுகிறேன்.

எட்டிப்பிடிக்க முயல
ரொட்டித்துண்டை இன்னும் உயர்த்த
முயல உயர்த்த முயல
எவ்வளவு குரூரம்
நாயாயிருக்கவே சும்மா விட்டது.

மாமரக்கிளையில்
அளவளாவியபடியிருந்த சிட்டுக்குருவி
கிளம்புகிறேன் என்பதாய் தலையசைக்க
எப்போது பார்க்கலாம் என்றதற்கு
தெரியாதென தலையசைத்து பறந்தது.

விழி எழு
கழி போ வா
வாழ்வெனும் புனைவு பழகு
புணர் வளர்
பொருளற்ற பொருளீட்டு
மாண்டுபோ

புதன், 11 மார்ச், 2009

நடுநிசி

நடுநிசி

பலன் பார்க்கும் பழக்கமுண்டாவென
தலையில் விழும் பல்லி
பூனையின் இருப்பை
பரிசோதித்துச் செல்லும் எலி
புணர்ச்சி நிமித்தம் அலையும்
நடுநிசி நாய்கள்
உறக்கம் தொலைத்த இரவில்
இன்னும் என்னவெல்லாமோ நடந்தது
அப்பா
அம்மாவின் புருஷன்
இத்துனை காலமாய்
இதுகூட
தெரியாமலிருந்திருக்கிறது.

செவ்வாய், 10 மார்ச், 2009

பாசாங்கு

பாசாங்கு

என்ன பேசுவதென்றே தெரியவில்லை
நெடுநேரம் மௌனப்பிடியுள்
தொடங்கிய உரையாடல்களையும்
ஒரு சொல்லில் கடக்க
என்ன நினைத்தானோ
சொல்லிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டான்
புன்னகைகள் கைக்குலுக்கல்கள்
நலம் விசாரிப்புகள் முகஸ்துதிகள்
விவாதங்கள்
நினைவைத்தோண்டுதல் கிளறுதல்
புல்லரிக்கச்செய்தல்
புளகாங்கிதமடையச்செய்தல்
கொஞ்சமேனும் பழகியிருந்திருக்கலாம்
பாசாங்குகளை