வெள்ளி, 24 ஏப்ரல், 2009

நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறவராக இருந்தால்



ஸ்ரீநேசன் கவிதை

கொலை விண்ணப்பம்


நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறவராக இருந்தால்
முதலில் என்னைத் திட்டுங்கள் மோசமான
காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகளால்
தவறாமல் அம்மாவுடனான எனது உறவை
அதில் கொச்சைப் படுத்துங்கள்
எதிர்வினையே புரியாத என்னைக்
கண்டு இப்போது எரிச்சலடையுங்கள்
அதன் நிமித்தமாக என்னைச் சபியுங்கள்
நான் லாரியில் மாட்டிக்கொண்டு சாக வேண்டுமென்று
இல்லையெனில் நள்ளிரவில் நான் வந்து திறக்கும்
என் வீட்டுப் பூட்டில் மின்சாரத்தைப் பாய்த்து வையுங்கள்
அல்லது நான் பருகும் மதுவில் விஷம் கலந்து கொடுங்கள்
முடியாத பட்சத்தில் மலையுச்சியை நேசிக்கும் என் சபலமறிந்து
அழைத்துச் சென்று அங்கிருந்து தள்ளி விடுங்கள்
அது அநாவசியமான வேலை என நினைத்தால்
என் முதுகிலேனும் பிச்சிவா கத்தியால் குத்துங்கள்
நீங்கள் தைரியம் கொஞ்சம் குறைவானவரெனில்
ஆள் வைத்துச் செய்யுங்கள்
தடயமே தெரிய வரக்கூடாது என்றால்
பில்லி சூன்யமாவது வையுங்கள்
இதுவெதுவும் பொருந்தவில்லையெனில்
ஆற்றில் மூழ்கடிக்கலாம்......
தூக்கேற்றிக் கொல்லலாம்.....
பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தலாம்......
இவற்றையெல்லாம் முயற்சித்துப் பாருங்கள்
ஒன்றினாலும் பலனில்லாத பட்சத்தில்
என் மனைவியை வன்புணர்ச்சி செய்யுங்கள்
அல்லது என் குழந்தைகள் தூங்கும் போது
பாறாங்கல்லால் தலை நசுக்குங்கள்
அப்படியும் நான் உயிரோடு தொடர்ந்திருந்தால்
தயவுசெய்து இறுதியிலும் இறுதியாக
அன்பையாவது செலுத்துங்கள்.

( ஸ்ரீநேசன் அவர்களுக்கும் தக்கை காலாண்டிதழுக்கும் நன்றி )

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

சாசனம்



கிடத்தி கிடந்து புலம்பியழாதீர்கள்
ஊதுபத்திக்கு பதில் சிகரெட்
இன்னும் கஞ்சா உசிதம்
பன்னீருக்கு மாற்றாக பிராந்தி
பயம் பூக்களின் மென்மையில்
தவிர்த்திடுங்கள் மாலைகளை
குளிர் நீரில் முற்றிலும்
நிர்வாணமாய் குளிப்பதே வழமை
பரவாயில்லை
ஆடைகளோடே குளிப்பாட்டுங்கள்
மீரா ஷிக்காய் அமாம் சோப்
சாவுக்கூத்தும் பறையோசையும் கொண்டாட்டம்
நண்பர்கள் ஆடினால் ம்கிழ்வேன்
மரணகானா விஜியை எப்பாடுபட்டாவது
அழைத்து வந்துவிடுங்கள்
சங்கு மணி அவசியம்
வெள்ளை தவிர்த்து கறுப்புத்துணி போர்த்துங்கள்
மூங்கில் கொம்பு தென்னையோலை சணல் இதுபோதும்
உடல் மட்டுமே இது
கொள்கைகள் சிலதில் சமரசம் செய்கிறேன்
தங்கள் விருப்பச் சடங்குகளில் குறுக்கிடவில்லை
ஆடுபவர் அடிப்பவர் அடக்கம் செய்பவர்
போதைக்கு மறக்காமல் கவனியுங்கள்
மனிதனை மனிதன் சுமப்பதில்
உடன்பாடில்லை ஊர்தி அவசியம்
விதிவிலக்களித்து தாய்க்குலங்கள்
இடுகாட்டில் வாய்க்கரிசியிட அனுமதியளிக்குமாறு
தாழ்மையுட்ன் வேண்டுகிறேன்
விருப்பப்பட்டால் முகத்தில்
விழிக்கவேண்டாமென்றவர்களும்
முகம் பார்த்துக்கொள்ளலாம் கடைசியாய்
இரக்கமற்ற மின்தகனம் வேண்டாமே
இவள் வந்து கொள்ளி வைக்க அனுமதிக்கவும்
விருந்தினர் சிரமம் கருதி
உடன் பால் நல்லது
அஸ்தியை சாக்கடையில் கரைக்கவும்
3 5 8 10 15 30 ல்லாம் எதற்கு சிரமம்
திதி ஞாபகமிருந்தால் பார்த்துக்கொள்ளலாம்
நினைவு பொல்லாதது
எதையும் வைக்காதீர்கள் நினைவில்

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

பொய்யாய் பழங்கனவாய்

நெடுங்காலமாய் பாதுகாத்திருந்த
மைதீர்ந்த எழுதுகோல்
கண்மையும் நீரும் உதட்டுச்சாயமும் ஒட்டிய
துவைக்காத கைக்குட்டை
முத்தங்களுடன் முடியும் கடிதங்கள்
சிரிக்கும் சாவிக்கொத்து பொம்மை
உடைந்த வளையல் துண்டுகள்
உதிர்ந்த மோதிர ஒற்றைக்கல்
பரிசளித்த புத்தக பக்கங்களுக்கிடையில் சேமித்த
நீள ஒற்றைக்கற்றை அருகே
அழுந்தியபடியிருக்கும் ஒற்றைப்பூ
மேலே ஒரு பொட்டு
உணவகத்தில் இதழ் துடைத்த தாள்
குறுஞ்செய்திகள் நிரம்பிய அலைபேசி
கொலுசின் உதிர்ந்த ஒற்றைப்பரல்
அறியாது அபகரித்த
மாதவிடாய்க் கறை படிந்த துணி
மலக்கழிவென எஞ்சியிருக்கும் நினைவுகள்
இன்னும் இன்னபிற என
சூன்யக்காரனின் மூலப்பொருட்களையொத்த
சேகரங்களனைத்தையும்
கீழ் உள்ளாடைக்குள் மூட்டைக்கட்டி
வீசிவிட்டு வந்தேன் கடலுக்குள்
வந்ததாகவே நினைவு
எங்ஙனம் உறுதிபடுத்திக்கொள்ள
என் இருப்பை
இந்தச் சூன்யவெளியில்.

புதன், 15 ஏப்ரல், 2009

சில நாட்குறிப்புகள்

காதல்
கடிதத்தில்
காற்றாடி

இலட்சியம் என்ன
என்னவாகப்
போகிறாய்
சாகப்போகிறேன்

நீயின்றி நானும்
நானின்றி நீயும்
சத்தியங்கள்
வாழ்க
ஒழிக

தனியாய் உணர்வதாகவும்
தன்னுடனிருக்கச் சொல்லியும் தனிமை
நெருங்கிப் பழகியதில்
தனிமையுடனான உறவில்
விரிசல்

தண்ணீர் போத்தலின்
அடியாழத்திலிருக்க
வெறுமை
வலியறிந்து
தாகமடக்கினேன்

காமாட்சியம்மன் விளக்கின்
தீநாக்கு பசியில் தவிக்க
தின்னக்கொடுக்கிறேன்
விரலை

உன் திருமண நிழற்படம்
ஒன்றில் புன்னகை
ஒன்றில் தவிப்பு
எது நிஜம்
எது பாவனை
எது எதுவாகவிருக்க
விரும்புகிறேன்

பார்க்க நேர்கையில்
பார்த்துச்செல்லவா
பார்த்தும்
பார்க்காதது போல் செல்லவா

( எது உன் விருப்பம் )

பார்த்தாய்
பார்த்தேன்
பார்த்தோம்
சென்றாய்
சென்றேன்
திரும்பிப் பார்த்தாய்
திரும்பிப் பார்த்தேன்
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஒருவேளை
நீயும்,,,,,,,,,,,,,,,

பொட்டு வைக்கவில்லையா என்றேன்
மலர்ந்த இதழுடன்
நெற்றியை என் இதழருகே
காட்டி நிற்கிறாள்

காசியென்று
நினைத்திருக்கும்
நின்மேனியை கொசு
நடக்குமா
ஜீவகாருண்யளாயிற்றே நீ

நன்றாக தூங்குகிறாள்
அருகில் படுத்தபடி
வாசித்துக்கொண்டு
நெகிழும் வரிகளில்
அவளறியாமல்
தலைநீவி முத்தமிடுகிறேன்

கோழி மிதித்து குஞ்சுக்கும்
குஞ்சு மிதித்து கோழிக்கும்
ஒன்றும் ஆகாது
மத்தீசமென வந்து
கறியாக்காதீர்கள் எங்களை

புணரும் தருணத்தில்
நிழலாடும்
பிரசவ வலி

கண்ணீரில்
காகிதக்கப்பல் விடும் நீ
மழலையா

நேசிக்கப்படுகிறேன்
மூடநம்பிக்கை

காகம் அறிந்திருக்குமோ
தேர்ந்திருக்கிறது
எச்சமிட

கட்டணம் வசூலிக்காத காற்று
உழைக்காமல் பிழைத்திருக்கும் தாவரம்
பாழாய்ப்போகும் நான்

வசிக்கும் உடலிற்கு
வாடகை வசூலிக்க
வருவார் எவர்

பாதை
பயணம்
எது இருப்பதால்
எது நீள்கிறது

நிலைக்கண்ணாடியில்
எங்கேயென் பிம்பம்
பார்வையிழந்து விட்டேனோ
இறந்து விட்டேனோ

கும்பிடப் போன இடத்து
கொடுமையாய்
ஆலோசனை கேட்கும்
கடவுளர்கள்
நாத்தீகர்களாவதற்கு

எது
இருக்கையில் இருப்பது
இறக்கையில் இறப்பது

மரண வாக்குமூலம்
நேசம் நேசமன்றி
வேறொன்றுமில்லை

அலங்கார வசீகரங்களுடன்
புணர அழைக்கும்
வேசியாய்
மரணம்


இரக்கமும் கருணையும்
அதிகம்
மரணத்திற்கு

சுட்டும் விழிச்சுடர்
சுடுகாட்டில் வைத்தது
கொள்ளி

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

காலத்தால்,,,,,,,,,,,



வாதைகளிலிருந்து விடுபட
காயங்களில் மருந்திட
உள்ளிழுக்கும் புதைகுழியிலிருந்து
மீள புதைய
அரிப்புகளை சொரிந்து புண்ணாக்கிக் கொள்ள
குலைத்துக் கொண்டிருக்கும்
குற்றவுணர்வின் நாக்கையறுக்க
ரகசியமாய் எதிரிகளை
வஞ்சம் தீர்த்துக் கொள்ள
புழுக்கத்திற்கு சாமரமாக
துரோகிகளோடு கைக்குலுக்க
கண்ணாடிக் குவளையென
உடைந்த உறவை ஒட்ட வைக்க
அவளின் புகைப்படத்தை
இவளறியாமல் பார்த்துக் கொள்வதாய்
நாசூக்காய் குற்றங்களை நியாயப்படுத்த
பிறழ்வடைந்தவன் அற்றவனென உறுதிபடுத்த
ஆசை பிம்பத்தை வரித்து சுயபோகிப்பதாய்
என்னிலிருந்து என்னை தற்காத்துக்கொள்ள
தனிமையை நிரப்ப
நிரப்பியதை வெறுமையாக்க
இருக்க இல்லாமலிருக்க
ஒவ்வொரு முறையும் நான்
கொலை செய்யப்படுவதின் நேரலையாய்
இவைகளைப் போல்
இவைகளின் மாயை போலிருக்கும்
இந்த எழுத்தும் இதன் உள்ளீடுகளும்
காலத்தால் அழியுமெனினும்
எழுதிக்கொண்டிருக்கிறேன்

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

கட வுளே



எதுவுமே
ஏதோவொன்றாய் தெரிந்தது
அதது அததுவாகயில்லாமல்
வேறெதுவாகவோ தெரிவதை
எழுதிப்பார்த்தேன்
ஒவ்வொரு மாதிரி
தெரிவதாகச் சொன்னார்கள்
ஒவ்வொருத்தரும்
நல்ல மருத்துவரை அணுக வேண்டும்
முற்றிவிட்டதென முடிவு செய்தேன்

எல்லாவற்றிலும்
ஒன்றே தெரியவாரம்பித்தது
பார்வையையும் பரிசோதனை
செய்ய வேண்டிய நிர்பந்தம்

அந்ததந்த கணத்திலிருக்கும் படி
பணித்தார் ஒருவர்
அகத்திலிருந்த ஒளிப்பதிவுக்கருவி
நிலைக்கண்ணாடி
உடைத்தேன் அனைத்தையும்
ஒன்று பலவாக
பல பலப்பலவாகத் தெரிந்தது
தொடர்ந்த கணங்களால் பிணைக்கப்பட்டு
சபிக்கப்பட்டிருப்பதை
அப்போது தான் உணர்ந்தேன்

சூழ்வான பூமியில்
எது எல்லையற்ற வெளி
வலைப்பின்னல்கள் தெரிகிறது
என் இருப்பு
வலைக்குள்ளிருக்கிறதா வெளியிலிருக்கிறதா
எது உள் எது வெளி
வலை உண்மையா மாயையா

இருப்பது மாயை
இன்மை சாஸ்வதம் என்பவர்களே
இருப்பதை இல்லையென்பது
பிரமையன்றி வேறென்ன

எதுவுமே இல்லாமலிருப்பதெப்படி
எதையுமே ஏன்
புரிய முயற்சிக்கிறேன் என்கிறீர்களே
அறிவைக்கடந்ததென்கிறீர்கள்
அறிவற்ற வெளியில் சஞ்சரிப்பதென்கிறீர்கள்
அறிவற்ற வெளியெனில் அறியாமையிலா
அறிவென்பது அறியாமையா

இருப்பு இன்மை மாயை
இதெல்லாம்
இருப்பதா
இருப்பது போலிருப்பதா
கட வுளே காப்பாற்று,,,,,,,,,,,,,,

சனி, 11 ஏப்ரல், 2009

புகைப்படக் கவிதை




எதிர்முனையில்

எவருமில்லையென்பதறியாது

அந்த ஒற்றைச் செருப்பு

அலைபேசியின் காதில்

தன் எஜமானன் கேளாத

மெல்லிய குரலில்

புலம்பியபடியிருக்கிறது

காலமெலாம்

நடந்து நடந்து

தேய்ந்த கதையை

(அகநாழிகை அவர்களின் வலைப்பக்கத்தில்,அவர் சமீபமாய் நடந்த பதிவர் சந்திப்பில் எடுத்து வெளியிட்டிருந்த புகைப்படங்களில் ஒன்று இது, எனக்கு இந்தப் புகைப்படம் மிகவும் பிடித்திருந்தது, பலரும் இதற்கு பொருத்தமாக ஏதாவது எழுதினால் நன்றாயிருக்குமென குறிப்பிட்டிருந்தார்கள் பின்னூட்டத்தில். இநத புகைப்படத்திற்குள் இன்னும் நிறைய ஒளிந்திருக்கிறது, அதில் சிறுதுளி இது,) அகநாழிகை அவர்களின் புகைப்படத்திற்கு மிக்க நன்றி.