வெள்ளி, 10 ஏப்ரல், 2009

மு. சுயம்புலிங்கம் கவிதைகள்



சரிசெய்

நீ கவனிக்கறதே இல்லை
உன்னுடைய சாட்டையில்
வார் இல்லை
முள் இல்லை
சரி செய் பிரயோகம் பண்ணு
அப்போது தான்
வசத்துக்கு வரும்
அதுகள்
உன் வசத்துக்கு வரும்.


சுய வேலைவாய்ப்பு

காலையில் எழும்ப வேண்டியது
ஒரு கோணியோடு
ஒரு தெருவு நடந்தால் போதும்
கோணி நிறைந்து விடும்
காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன
தலை நிமிர்ந்து வாழலாம்.


பஞ்சனை

எதுக்கு
நாக்கத் துருத்திக்கிட்டு வாரிய.......
அடிக்கிற சோலியெல்லாம
வச்சிக்கிடாதிங்க.........

ஏங்கிட்ட
என்ன குத்தம் கண்டுட்டிய.......
ஒங்களுக்கு
நான் என்ன பணிவிட செய்யல
சொல்லுங்க.........

நீங்க தேடுன சம்பாத்யத்த
தின்னு அழிச்சிட்டனா..........
ஒங்களுக்கு தெரியாம்
எவனையும் கூட்டி வச்சிக்கிட்டு
வீட்டுக்குள்ள ஒறங்குதனா.........

ஒங்களுக்கு வாக்கப்பட்டு
ரொம்பத்தான்
நான் சொகத்த கண்டுட்டேன்...........
பஞ்சனைல
உக்கார வெச்சித்தான
எனக்கு நீங்க
சோறு போடுதிய.........

எஞ்சதுரத்த
சாறாப் பிழிஞ்சிதான
ஒரு வா தண்ணி குடிக்கறேன்...........
ஒங்க மருவாதிய
நீங்களாக் கெடுத்துக்கிடாதீக..........
எடுங்க கைய
மயித்த விடுதியளா என்ன......

அவள் வார்த்தைகளில்
ஆவேசம் பொங்கி
கரை புரண்டு வந்தது
அவள் வார்த்தைகளில்
நேர்மையும் சத்தியமும் இருந்தது

அவன் பிடி தளர்ந்தது
திருணைல கெடக்கான் அவன்
குடிச்சது
தின்னது
எல்லாத்தையும் கக்கிக்கிடடுக் கெடக்கான்

அவா
புருசனக் கழுவி
வீட்டக் கழுவி
எல்லாத்தையும்
சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்



முந்தித்தவம்

நீ ஒரு ஆம்பள
உனக்கு ஒரு பொண்டாட்டி......

புள்ளைகளுக்கு
கலைக்டர் வேல வேண்டாம்.......
ஒரு எடுபிடி வேல
வாங்கிக் கொடுக்க முடியாது
உன்னால.......

வீடு வித்து
வாயில போட்டாச்சி.......
தாலிநூல் வித்துத் தின்னாச்சி......
கம்மல் இருக்கா.....
மூக்குத்தி இருக்கா.....

வீட்டு வாடகைக்கு
பொம்பள ஜவாப் சொல்லணும்

விடிஞ்சாப் போற
அடஞ்சா வாற

மண்ணெண்ண அடுப்பில் சமச்சி
வீடு பூராவும் கரி

ஒரு பாவாடைக்கு
மாத்துப் பாவாட கெடையாது
முகத்துக்குப் பூச
செத்தியங்காணு
மஞ்சத்துண்டு இல்ல
நல்லாப் பொழைக்கறவா
சிரிக்கறா

ஒனக்கு
ஆக்கி அவிச்சி
ருசியா கொட்டணும்

கால் பெருவிரலை நீட்டி
ஒத்தச் செருப்பை
மெள்ள இழுத்தேன்
பாழாய்ப் போன ரப்பர்
வார் அறுந்திருக்கிறது

அவள் பின்கழுத்தில்
என் கண்கள்
செல்லமாய் விழுந்தன

அந்த மஞ்சக்கயிற்றில்
ஒரு ஊக்கு இருக்கு
கேக்கலாம்
கேளாமலேகூட
தென்னி எடுக்கலாம்

அவள் அழுவதைப் பார்க்க
இஷ்டம் இல்லை
செருப்பை விட்டுவிட்டு
நடக்கிறேன்.

தளபதி

என் பேரன் பேத்திகளுக்கு நான் தாத்தா
எங்க வூர் இளைஞர்களுக்கு நான் தான் தளபதி

மக்கள் கடல்

தூண்டில் போட்டும் கொல்கிறார்கள்
வலை போட்டும் பிடிக்கிறார்கள்

( உயிர்மை வெளியீட்டில் நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள் தொகுப்பிலிருந்து )

வியாழன், 9 ஏப்ரல், 2009

என். டி. ராஜ்குமார் கவிதைகள்



லேட்டி பொன்னுமக்கா
முன்வாசல் வழியா போகக்கூடாதுட்டீ...
அயித்தம் பாப்பாங்க
நம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ.
ஏமாத்திம்மா..... அடியேன் வந்திருக்கேன்
கும்பிகாந்துகு ஏதெங்கிலும் தரக்கூடாதா
கஞ்சி வெள்ளமும் ஒரு துண்டு கருப்பட்டியும்
கிட்டியாலே போதும்
மனசுவெச்சு ஏமாத்தியம்மா எச்சிச் சோத்துல வெள்ளம் ஊத்தி
கொண்டு தட்டுவா
விரிச்ச முந்தியில தண்டிணியெல்லாம் ஒழுகிவிழ
கிட்டிய சோத்த அரிச்சுத் தின்போம்.
சட்டிப்பான கழுவணுமெங்கிலும்
எல்லாத்துக்கும் வாற வழியதுதான்
ஏமான் வீட்டிலயிருந்தாரெங்கி
ஏமாத்தியோ பெண்டுபிள்ளையோ
சத்தமிட்டு சிரிக்கப்பிடாது.
ஏமான தொடப்பிடாது
தண்ணிகொண்டு கொடுக்கணுமெங்கிகூட
கொடுத்துட்டு ஓடிப்போய் சொவரு பக்கம் மறஞ்சி நிக்கணும்
அன்யோன்யமா நெருங்கி நின்னு பேசக்கூட வரப்பிடாது
எப்படி இந்த ஏமாத்திமாரெல்லாம் ஏமாம்மார
கெட்டி ஆளுதோன்னு தோணும்.
செலச் சமயம் காட்டுக்கு ஆனமேய்க்க போறயேமான்
வெளுப்பிலபோய் அந்தியில வரும்
இத அறிஞ்சி வச்சிகிட்டுதான்
ஏமாத்திக ஆசைய தீத்துவைக்க
ஆரங்கிலும் வருவானுக.
நம்ம பௌப்பு
பிச்சயெடுத்திட்டு கண்டும் காணாம போறது
நமக்கு அறியாதுண்ணு ஏமாத்தி நெனப்பா.
நம்மளும் உரியாடாத போய்கிட்டு
நாலஞ்சி தெவசம் கழிச்சி பிச்சயெடுக்க வாறப்ப
ஏமாத்திய பாத்து மொகக்குறி சொல்லுறது
அம்மையிட மொகத்துல ஒரு கலக்கம் தெரியுதல்லோ
மனசின்ற அகத்து ஒரு வல்லாத்த சலனம் ஒண்டல்லோ
ஏமான் அறியாத அம்மைக்கும் வேறொருத்தனுக்கும் ஒரு
தொடர்பு ஒண்டல்லோ
பாவமல்லா எந்நாலுமிதொரு பாவமாணு
தொஸமில்லா எந்நாலுமிதொரு தொஸமாணு
அம்மைக்கு பகவதி தொணையொண்டு
கொளவி குறி சொல்லி முடிக்க
ஆருட்டையும் இதப்பத்தி மிண்டப்பிடாது
என்று சொல்லிவிட்டு
சூடுசோறும் கறியும் கொடுத்து
புதுத்துணியும் கொடுத்தனுப்புவா ஏமாத்தி
இப்படியே ஆறும் இருவர் பசியும்.




தம்பிய பெத்தெடுத்த பச்ச ஒடம்போடு கெடக்க
வயிறு நெறய கள்ளும் மோந்திக்கிட்டு
வாய் நெறய விளித்துக்கொண்டே
நல்லமொளகு, கொடமஞ்ச, நால்பா மரப்பட்ட.
ராமச்சம்வேரு,
ஒணங்கிபோன காட்டு நெல்லிக்காயிட்டு
கொதிக்க வைத்த வென்னீரில் துணியை முக்கி
அடிவயிற்றில் ஒத்தடமிட்டுக் கொடுத்துவிட்டு
ஒடக்கு எடுக்கும் அப்பா
அம்மாவின் கூந்தலுக்கு

( எழுத்தாளர் ரவிக்குமார் அவர்கள் தொகுத்த ராஜ்குமார் அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு ( கல் விளக்குகள் ). காலச்சுவடு பதிப்பக வெளியீடு.)

புதன், 8 ஏப்ரல், 2009

ஞானக்கூத்தன் கவிதைகள்



பார்க்கப் படுதலின்றி வாழ்க்கை பிறிதென்ன ?

யார் யார் என்னை பார்க்கிறார்கள் ?
பார்க்கிறார்கள் என்ற உயர்திணை
முடிவு கூடத் தவறு தான்.

எது எவரால் பார்க்கப் படுகிறேன் என்பதே சரி.
வீதியில் நடந்தால் கல்லாப் பெட்டிக்
கிண்ணத்து வழவழப்பைத் துழாவிக்கொண்டு
கடைக்காரர் என்னைப் பார்க்கிறார்.

தெருமாறிச் செல்லும் நாய் பார்க்கிறது
அதைத் தொடரும் மற்றொரு நாயும் பார்க்கிறது
ஒரு சிறுவன் ஒரு சிறுமி அவர்களிடம் நானொரு
காதல் கடிதத்தை இன்னாளிடம்
கொடுக்கச் சொல்வேனோ என்று பார்க்கின்றனர்.

பெருமாள் மாட்டுடன் எதிரில் வந்தவன்
ஒன்றும் கேட்காமல் என்னைப் பார்க்கிறான்.
அவனது மாடும் என்னைப் பார்க்கிறது.
வெள்ளைப் புள்ளிகள் மேவிய ஆடுகள்
கிளுவை இலைகளைப் புசித்துக் கொண்டு
என்னைப் பார்க்கின்றன.
தபால்காரர் கையில் அடுக்கிக் கொண்ட
கடிதக் கடடுகளை விரல்களால் பிரித்து
எனக்கு கடிதம் இல்லை என்று
சொல்லாமலே என்னைப் பார்க்கிறார்.

குட்டிகள் பின்பற்ற தெருவின் ஓரத்தில்
குறுங்கால்களோடு நடக்கும்
பெரிய பன்றி என்னைப் பார்த்தது.
ஆனால் குட்டிகள் என்னைப் பார்க்கவில்லை
தாயைத் தவிர யாரையும் பார்க்கத்
தெரியாதவை. மேலும் இன்னும் வயதாகவில்லை

வரிசையாய் மின்சாரக் கம்பிமேல்
உட்கார்ந்திருக்கும் காக்கைக் கூட்டத்தில்
ஒன்றாவதென்னைப் பார்க்காமலா இருந்திருக்கும் ?

எல்லாம் எல்லோரும் என்னைப் பார்ப்பது
போலப் பிரமை எனக்கேன் வந்தது
ஞானாட்சரி நீ சொல்வாயா
எப்போதும் என்னை விமர்சிக்கும் உன் வாயால் ?


ஒரு பையன் சொன்ன கதை

ஓட்டுக் கூரைமேல் ஒரு காக்கை தனது
கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு
எதையோ தின்றதாம் ஆர்வமாகவும்
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டும்

தெருவெல்லாம் பசியோடு பறந்து
எங்கே என்ன கிடைத்ததோ
இப்போது தின்கிறது காக்கையென்று
நினைத்துக் கொண்டனாம்
ஒரு வேளை தன் வீட்டுக் கொல்லையில்
உலர்த்தி வைத்ததாய் இருக்குமோ
என்று நினைப்பு வரவே
விட்டானாம் ஒரு கல் காக்கை மேலே
என்னவோ கவலையில் நான் இருந்த போது
ஒரு பையன் சொன்னான் இந்தக் கதையை எனக்கு

களத்திரம்

சொன்னார். சொன்னார். முச்சுவிடாமல்
சொன்னார். அப்புறம் கேட்கிறேன் என்றேன்.
இன்னும் கொஞ்சம் கேளென்று சொன்னார்
உறங்குவது போல பாவனை செய்யலாம். ஆனால்
எவ்வளவு கஷ்டம் கேட்பது போல
நீண்ட நேரம் பாவனை செய்வது ?
கோட்டுவாய் விட்டேன். அவரோ இன்னமும்
சொன்னார். முக்கியமான கட்டத்தை
அடையவில்லை இன்னமும் என்றார்.
ஓயாமல் சொன்னார். மூன்றாம் மனிதன்
ஒருவன் வந்தென்னை மீட்க
மாட்டானா என்று நான் ஏங்கும் சமயம்
அவரே ஓய்ந்து போய் அடுத்த சந்திப்பில்
மீதியைச் சொல்வதாய் என்னை நீங்கினார்.
அவர் சொன்ன கதைகளை எல்லாம்
உம்மிடம் சொன்னால் நீரும் என்போல்
ஆகிவிடுவீர்.
மனைவியைக் கனவில் காணும்
வாழ்க்கை போல் கொடுமை உண்டோ ?


(விருட்சம் வெளியீட்டில் ஞானக்கூத்தன் அவர்களின் பென்சில் படங்கள் தொகுப்பிலிருந்து)

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

அவிழ்க்கவியலாத முடிச்சுகள்



கொசுவர்த்திச்சுருள் தீரப்போகிறது
நாவரள பிரக்ஞையின்றி
தேக்கிய எச்சிலை விழுங்கியிருக்கிறேன்
கழுத்து வலிக்க சற்று நிமிர்ந்து படுத்திருக்கிறேன்
மூத்திரம் அடக்கவியலாது கழித்து வந்தேன்
வேர்க்கடலையும் தீரப்போகிறது
இவனின் வருகை ஒவ்வாததோ
சாளர நிழல் வரையறுத்திருந்த
இடத்தையும் தாண்டி நகரப்போகிறது
இவ்விளம்பரம் வரக்கூடாதென நினைத்திருந்தேன்
இந்த வர்ணனையாளரும் கூட
பதட்டமாயிருக்கிறது
சேவாக் ஆட்டமிழந்துவிடுவாரென

திங்கள், 6 ஏப்ரல், 2009

ஏழாம் உலகம்



அம்மா தாயே
அய்யா பிச்சை போடுங்க
உங்க காலைப் பிடிச்சி கேக்கறேன்
தர்மம் தலைகாக்கும்
நீங்க நல்லாயிருப்பீங்க
காக்குமென்று நினைத்த தர்மமெல்லாம்
காலை வாறிவிட்டது
நல்லாயிருப்பீங்களாம்
என்னமோ
இவனுக்கு பிச்சையிட்டால்
ஈழத்தில் அமைதி நிலவும்
பொருளாதாரச் சரிவு சீராகும்
சுனாமி வராது
விலைவாசி குறையும்
காவிரித்தண்ணீர் வரும்
பப்பில் மதுவருந்தும்
எம் குலப்பெண்கள் தாக்கப்படமாட்டார்கள்
ஐடி யில் மறுபடியும்
பணிக்கு அழைத்துவிடுவார்கள்
என்பது போல
வந்துவிட்டான்(ள்)கள்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

நிழல்கள்

மின்தடை
சாளர விளிம்பிலிருந்த
மெழுகேற்றி படுக்க
மெழுகின் நிழல் கரைகிறது
அறை விதானத்தில் நிழல்கள்
உறைந்த மின்விசிறி
கொடில் கயிறின் உள்ளாடை
மின்கம்பி பறவையாய்
குழல்விளக்கின் விறைத்த குறி
குண்டுபல்ப்பின் பருத்த முலை
ஊஞ்சல் கம்பியின் நிழல்
தொங்கும் தூக்குக்கயிறாய்
பரண்பொருள் நிழலில்
கணமொரு உருவம்
சுவரில்
என் நிழலை உற்று நோக்கினேன்
வராமலிருந்திருக்கலாம் மின்சாரம்
தடங்கலுக்கு வருந்துகிறேன்

புதன், 1 ஏப்ரல், 2009

எதுவுமே நினைவிலிருப்பதில்லை எல்லாமே நினைவிலிருக்கிறது



எதுவுமே நினைவிலிருப்பதில்லை
எல்லாமே நினைவிலிருக்கிறது
எதுவும் செய்வதற்கில்லை
மறப்பதற்கும்
நினைவிலிருத்துவதற்கும்
பிரயத்தனங்களேதுமில்லை
புனித நதிக்கும்
நரகல் மிதக்கும் சாக்கடைக்கும்
கிளிக்கும் கழுகிற்கும்
நாய்க்கும் நரிக்கும்
திறந்தே கிடக்கிறது
உணர்கொம்புகளை வெட்டி
எரியூட்டியாகிவிட்டது
புலன்களை மழுங்க
காயடித்தாகிவிட்டது
நிகழ்வுகள் சொற்களாய் பதிவதற்குள்
துரத்தி விழுங்குகிறது சர்ப்பம்
நீங்கள் காறி உமிழலாம்
சங்கிலியில் பிணைத்து
சாட்டையில் விளாசலாம்
முகத்தில் சிறுநீர் கழிக்கலாம்
மலம் பூசலாம்
எதிர்ப்பேதுமில்லை
எதுவுமே நினைவிலிருப்பதில்லை
எல்லாமே தேவையாயிருக்கிறது
எதற்கும் தகுதியுடையவனே
ஏனெனில்
எல்லாமே நினைவிலிருக்கிறது