புதன், 1 ஏப்ரல், 2009

எதுவுமே நினைவிலிருப்பதில்லை எல்லாமே நினைவிலிருக்கிறது



எதுவுமே நினைவிலிருப்பதில்லை
எல்லாமே நினைவிலிருக்கிறது
எதுவும் செய்வதற்கில்லை
மறப்பதற்கும்
நினைவிலிருத்துவதற்கும்
பிரயத்தனங்களேதுமில்லை
புனித நதிக்கும்
நரகல் மிதக்கும் சாக்கடைக்கும்
கிளிக்கும் கழுகிற்கும்
நாய்க்கும் நரிக்கும்
திறந்தே கிடக்கிறது
உணர்கொம்புகளை வெட்டி
எரியூட்டியாகிவிட்டது
புலன்களை மழுங்க
காயடித்தாகிவிட்டது
நிகழ்வுகள் சொற்களாய் பதிவதற்குள்
துரத்தி விழுங்குகிறது சர்ப்பம்
நீங்கள் காறி உமிழலாம்
சங்கிலியில் பிணைத்து
சாட்டையில் விளாசலாம்
முகத்தில் சிறுநீர் கழிக்கலாம்
மலம் பூசலாம்
எதிர்ப்பேதுமில்லை
எதுவுமே நினைவிலிருப்பதில்லை
எல்லாமே தேவையாயிருக்கிறது
எதற்கும் தகுதியுடையவனே
ஏனெனில்
எல்லாமே நினைவிலிருக்கிறது

செவ்வாய், 31 மார்ச், 2009

இந்த வார உயிரோசை இணைய இதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதைகள்



பின்வரும் சுட்டியில் வாசிக்கலாம்.

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1152


உயிரோசை இதழுக்கு நன்றிகள்.


பின்வருவது இந்தப் பதிவிற்கான கவிதை



இது இன்னொரு இவள்

அழும் குழந்தையை
தூக்கி கொஞ்சி
ஓயப்படுத்தியபடி
அது தான் நான் வந்துவிட்டேன்
அல்லவா அழக்கூடாது என
வாசலுக்கு வருகிறாள்
நின்றது மழை.

திங்கள், 30 மார்ச், 2009

ஐயாயிரம் மைல்கள்



தினமும் பேசவேண்டும்
இவளுக்கு எதையாவது
இவங்க வந்தாங்க
அவங்க போனாங்க
இதைச்சொன்னாங்க
புலம்பல் அழுகை கோபம்
ஐயாயிரம் மைல்களுக்கு
அப்பாலிருந்து இம்சிக்கிறாள்
குட்டிப்பொண்ணு அப்பாவென
பேசும் மழலையில் மனம் நிறையும்
பின்னரவில் நிலைகுலைந்த நிலையில்
மறுபடியும் அழைப்பாள்
அந்த நெடுநேர உரையாடல்
முடியும் சுயபோகத்தில்

சனி, 28 மார்ச், 2009

பெரிய குழந்தையும் சிறிய குழந்தையும்

மழையில் முளைத்த
தற்காலிக வீதி நதியில் விட
கப்பல் வேண்டி கெஞ்சுவாள்
என் கவிதைப் பக்கம் கிழித்து வந்து
டீச்சர் வேடம் அவளுக்கு மிகப்பிடித்தம்
அகரம் தவறாய்ச் சொல்லி பாடம் கற்பேன்
சமயங்களில் நான் தான் தலைசீவி
ரெட்டைக்குடுமியிட வேண்டுமென அடம்
குளிப்பாட்டிட துடைக்க
உள்ளாடை சட்டைப்பாவாடை
பொட்டிட மையிட முகப்பவுடர்
சாக்ஸ் ஷீ அனைத்திற்கும் நான்தான் வேணும்
ஒருநாள் கழுவிவிடவும்
நான் வரவேண்டுமென அழுகை
சதா குற்றப்பத்திரிகை வாசிப்பாள் இவள்
ஒருநாள் என் செல்லம் பொறுக்காது
உச்சக்குரலில்
ஒருநாள் உன்னத்தான் கட்டிக்குவேன்னு நிக்கப்போறா
விஷம் கக்கினாள் சண்டாளி
பொறம்போக்கு பீத்தின்னப்போகுது பார் புத்தி
உங்கப்பன்கிட்ட நீ அப்படித்தான் கேட்டயா
விஷத்திற்கு விஷம்

,,,,,,………///? ? ? ? /; ; ;” ;;;;;;;;;[[[
---- _____ \\\\ \ &&&& ^^^^^6$$4444
2222 *** ((9))0 &7777%%%%%
+++++ ==== ^^^6 ^6666 ^^^66 ###33
Gsdjgfjh nvbsd பாபநாபாஎ
கேதனேகதபோ65,ஹ,,,ஹஇ,,ட்ஹ
$$$$$$$$$$$$$ Yuyuyu @@@@@@2
@#$%^*(&:>?”{} ggeg gefg s d d rgy g g
((( 00000 _------ ))))000 0008888 ^^^^^6666^^^^
)))))) &&& ^^^ 6 4444$$$$ #####!!!!!!! 3@$! %^*+_)(
¨ >>>>>>>:::”’<<””’’>>>>.. bhvj jn hh n
¨ 0000000000000000000000000000000000000000000000000000000000000000000
நாளடைவில் முற்றிலும் பிறழ்ந்துவிட்டாள்
அவளுக்கு செய்ததெல்லாம்
இவளுக்கு செய்துகொண்டு நான்
செல்லக்குட்டி தற்போது விடுதியில் தங்கி
படித்துக்கொண்டிருக்கிறாள்.

வெள்ளி, 27 மார்ச், 2009

புழுதி படியும் வாசல்



தேனீர் நுரை
உதட்டு விளிம்பில் இருந்ததும்
சோற்றுப்பருக்கை நாசி நுனியில் இருந்ததும்
உதிர்ந்த சருகு கேசத்தில் செருகியிருந்ததும்
தோளில் எறும்பு ஊர்ந்ததும்
உதிர்ந்த இமைமுடி
விழியருகே ஒட்டியிருந்ததும்,,,,,,,,,,,,,,
பின்னான கணங்களின்
உறைந்த நிகழ்வுகளும்
எரிந்த பாம்புக்குளிகையின்
திக்கில்லாமல் காற்றிலலையும்
சாம்பலாய்
கூட்டி விட விட
படியும் புழுதியாய்
வாசல் கோலத்தின் பின்
அழிந்தும் அழியாத
நேற்றைய கோலமாய்

வியாழன், 26 மார்ச், 2009

சூழ்ந்திருக்கும் புனிதர்கள்



கரப்பான் காதில் சென்று
மூக்கில் வந்து மலக்கிடங்கைவிட
நாற்றமென
பல்லி உள்நாக்கை
துடிப்படங்கும்வரை உள்ளுக்கிழுக்க
நண்டு தேர்ந்தது விழி
எழவு டப்டப்பென்று
உறங்கவிடாது என
இதயத்தின் அருகிருந்து நரி
சர்ப்பத்தின் தலை வாயிலிருந்து
வால் ஆசனவாயில்
மண்புழுவென நரம்புகளைத்
தின்னும் பெயரறியாப் பட்சி
சாளரவிளிம்பில் அணில்
தாழ்ந்த மரக்கிளையில் காகம்
நெடுக குரூரம் பழகிய மூளையை
விரைவாய் செல்லரித்தது
சுவை கொஞ்சம் குறைவென
புழுக்கள்.

புதன், 25 மார்ச், 2009

எதுவுமே நிகழவில்லை இன்று



புன்னகை ஒட்டிய முகங்கள்
நெகிழ வைத்த மேலாளர் நண்பர்கள்
காத்திருக்க வைக்காமல்
வந்துவிட்ட இவள்
காலியாயிருந்த பேருந்து
ஆழ்ந்து யோசிக்கிறேன்
ஒரு அவமானம்
ஓரேயொரு ஏமாற்றம்
வன்சொல்
எதிர்ப்பட்ட லாரிக்காரனும்
சாவுகிராக்கியெனவில்லை
இது ஒரு நாளா
மன்னிக்கவும்
இன்றைக்கு
கவிதையேதுமில்லை
உங்களை வெறுமனேயனுப்புவதில்
துயரம் மெல்ல கவிகிறது.



( ஏதோ ஒரு ஓரமாய் எழுதிக்கொண்டிருக்கலாமென வந்து, நண்பர்கள் உசுப்பி ரணகளமாக்கியதில், இதழ்களுக்கு அனுப்ப அனுப்பியதையெல்லாம் அவ்விதழ்களும் வெளியிட்டுவிட, சட்டென்று என் எழுத்திற்கான கச்சாப்பொருட்களனைத்தும் (துயரம்) தீர்ந்துபோனதாய் உணர்ந்த கையறுநிலையில் இப்படித்தான் எழுதத்தோன்றியது )