செவ்வாய், 24 மார்ச், 2009

இந்த வார உயிரோசை இணைய இதழில் வெளிவந்திருக்கும் எனது கவிதைகள்


அழைக்கும் பிம்பம், தலைப்பூச் சூடாத கவிதா நவீனவிருட்சம், உயிரோசை என இரண்டிலும் வெளிவந்திருப்பது மகிழ்ச்சி, சதுரங்கம் கவிதையும் வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி. பின்வரும் சுட்டியில் வாசிக்கலாம்


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=1123


உயிரோசை இதழுக்கு அனேக நன்றிகள்.

திங்கள், 23 மார்ச், 2009

அண்மையில் மறைந்த கவிஞர் அப்பாஸ் நினைவாக



ஆத்மாநாமை
ரோஜாப்பதியன்கள் தேடிக்கொண்டிருக்கிறது

கோபிகிருஷ்ணனின்
டேபிள் டென்னிஸ் சத்தமும்
உள்ளேயிருந்து சில குரல்களும
கேட்டுக்கொண்டேயிருக்கிறது

இப்படியிருக்க இருவரும்
சுயஅழிப்பில் மீட்சியடைந்தனர்


ப சிங்காரம்
எல்லோரும் தனியாகவே
இருக்கிறோமெனச் சென்றார்

நகுலன்
சூரல் நாற்காலியையும்
கோட் ஸ்டாண்டையும்
கால்சுற்றும் பூனையையும் விட்டு
சுசிலாவை அடைந்தார்

ஆதவனை அருவி
தாகம் தீர்த்துக்கொண்டது

வாழ்வைக் கொண்டாடிய
ஜி நாகராஜனை
சாவு துணைக்கழைத்துக்கொண்டது

ஸ்டெல்லா புரூஸ்
துணையிழந்து
வாழமுடியாமல் போனார்

சுந்தர ராமசாமி
ஒரு வேடந்தாங்கல்
புலம் பெயர்ந்து மறைந்தது

கற்றதையும் பெற்றதையும்
கற்பித்த சுஜாதா
காலம் ஆனார்

இருத்தலியம் பேசிய
அப்பாஸ்
நகுலன் சொன்னது போல
இல்லாமல் போய்விட்டார்

வர வர குறைகிறது
இருப்பின் மீதான ஈர்ப்பு

(எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் இச்செய்தியை வாசிக்கையில் சூழ்ந்த வெறுமையில் மனம் தத்தளித்தது. அப்பாஸ் அவர்களின் கவிதைகளும், பாவண்ணனின் உரையும் அத்தளத்தின் சுட்டியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் கடற்கரய் அப்பாஸ் அவர்களின் புகைப்படத்தை தன் வலைப்பூவில் வெளியிட்டிருந்தார், நன்றி. முகவரி http://thesanthri.blogspot.com/ )

சனி, 21 மார்ச், 2009

நவீன விருட்சம் வலைப்பூவில் அழகியசிங்கர் அவர்களால் தொகுக்கப்பட்ட என் கவிதைகள் ( நான்கு கவிதைகள் – செ. செந்தில்வேல் )

எஸ்.வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன், ஆத்மாநாம்,,,,,, என எப்பேர்ப்பட்ட படைப்பாளிகள் புழங்கிய இலக்கியப் பாரம்பர்யமிக்க சிற்றிதழ் நவீனவிருட்சம். http://navinavirutcham.blogspot.com/

இதழ்களுக்கு அனுப்ப வேண்டுமா கவிதைகளை என்பது கூட தெரியாமலிருந்த எனக்கு, ச.முத்துவேல், அனுஜன்யா ( இவர்கள் கவிதைளும் நவீனவிருட்சத்தில் வெளிவந்திருக்கிறது ) மற்றும் ஆதவா அவர்கள் (மிக்க நன்றி) நினைவுறுத்தி அனுப்பச்சொல்லினர்.( நான் மிகவும் நேசிப்பவர்கள் )
நானும் அனுப்ப மதிப்பிற்குரிய எழுத்தாளர், நவீனவிருட்சம் ஆசிரியர் அழசியசிங்கர் அவர்கள் தன் வலைப்பூவில் வெளியிட்டு நெகிழ்விலாழ்த்திவிட்டார். மிக்க நன்றி,,,,,,,

என் அழைக்கும் பிம்பத்தையும், தலைப்பு சூடாத கவிதாவையும் என் இம்மாத வலைப்பதிவு காப்பபகத்திலும்,
பின்வரும் முகவரியிலும் சுட்டி வாசிக்கலாம்.

. http://navinavirutcham.blogspot.com/

என்னுடைய இயற்பெயரில் வெளியிட்டு விட்டார், ( செ.செந்தில்வேல் ) , என் இணைய நண்பர்கள் என் இயற்பெயரை அறியும்படி ஆகிவிட்டது. இதுநாள் வரை காத்துவந்த மர்மம் உடைபட்டுவிட்டது.

நேற்று நான் மிகவும் நேசிக்கும் மதிக்கும் படைப்பாளிகளுள் ஒருவர் ஜ்யோவ்ராம்சுந்தர் அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் என்னை அறிமுகப்படுத்தி நெகிழவைத்தார். அதற்கான நன்றிக்கடிதத்தையும் பின்னூட்டத்தில் காணலாம்.

http://jyovramsundar.blogspot.com/

நெகிழ்ச்சியில் என்னை உறைய வைக்கும் பெருமதிப்பிற்கும் அன்பிற்குமுரிய எழுத்தாளர் மாதவராஜ் ஐயா அவர்கள் தொடர்ந்து வாசித்து கருத்துக்கள் சொல்லி உற்சாகப்படுத்திவருகிறார்.

மற்றும் பலர் வாசித்து வாழ்த்தி குறைகளைச் சுட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்கள் (எல்லோர் பெயரையும் குறிப்பிடவேண்டும்). எட்டு மாதகாலமாக வலைப்பூ எப்படி துவங்குவதென்றும் ( அப்போ தான் தெரியும் இப்படியொன்னு இருப்பதே ) பின்னூட்டம் எப்படியிடுவதென்றும் தெரியாமல் வாசித்து வந்திருக்கிறேன். கணிணியும் தட்டச்சும் (அறைகுறை) ஒரு வருடமாகத் தான் தெரியும் ( கற்றுக்கொடுத்தவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் )

இதுவரை வாசித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டமிட்டு உற்சாகப்படுத்தியவர்களுக்கும், இனி என் வலைப்பூவிற்கு வரப்போகிறவர்களுக்கும்

மிக்க நன்றி,,,,,,,,,,,,,,,,,,

ஆற்றாமையின் புலம்பல்



விரல்களில் வருடி பற்றி
முத்தங்களிட்டு
கடைசியில் மிதி
வாழ்ந்த கணங்களின் எச்சமாய்
மிதிபட்டுக்கொண்டிருக்கிறோம்
கைவிடப்படல் வழமையே
சுகிக்க சுகிக்க
கரைந்தோம்
பின்பு வேறொன்று
தேவையுணர்கையிலெல்லாம்
ஒவ்வொன்று
கசந்தால்
இன்னொன்று
ஏகபத்தினி விரதன்
வேடம் தான் உறுத்துகிறது
புனிதபிம்பம்
கூறுபடுவது பொறுக்காது
பிரம்மச்சர்யம் பூணுவதாயும்
பொய்யுரைக்கிறாய்
அழிக்கும் பிரயத்தனங்கள் கடந்து
சில கணமேனும்
மறைந்ததன் தடயமாய்
வாழும் வாசம் புலப்படுத்திவிடும்
எங்களுடனான
சகவாசத்தை
இப்படிக்கு
உனக்காக
சுவாசித்தே உயிர்நீத்த
சிகரெட்.....................

வெள்ளி, 20 மார்ச், 2009

வெளியில் நல்ல மழை

தாயம் சீக்கிரத்தில் விழாது
அஞ்சாங்காயில் போய்விடும்
பல்லாங்குழி கொப்பரை வராது
ஒற்றையா ரெட்டையா
யூகம் தவறாகவேயிருக்கும்
சிவப்பிற்கு துணை விழாத கேரம்
எப்போதும் கறுப்புக் காய்கள் தானெனக்கு
சதுரங்கத்திற்கு தந்திரம் பற்றாது
சீட்டுக்கும் அதுவே
புலம் பெயர்ந்த
சக ஆட்டக்காரிகளின்
பட்டப்பெயர்கள் நிழலாட
அனிச்சையாய் இதழ் மலர
சூடான தேனீருடன்
சாய்வு நாற்காலியில்,,,,,,,,,,,

வெளியில் நல்ல மழை

வியாழன், 19 மார்ச், 2009

பாதை


இந்தப் பாதையில் தான்
வழக்கமாய் புகைக்கும் தேனீரருந்தும் கடை
புளியமர நிழலில்
சற்றே நீளம்
இதைவிட குறுக்கு வழிகள் அனேகம்
ஒரு ஒட்டுதல்
அப்பக்கம் செல்லாத
அசந்தர்ப்ப நாட்களின்
இரவுகளை உறக்கமிழக்கச் செய்யும்
பிரிவுத்துயர் நிரம்பிய கண்ணீர் திரண்ட முகம்
எவ்விதம் இந்நெருக்கம்
வாகன பயண நாட்களை விட
பாதயாத்திரையில்
அதீத புத்துணர்வுடன் தென்படும்
பிரிவின் துயரமிகு கணங்களை யூகித்தே
நெருக்கத்திலிருந்து சாமர்த்தியமாய் நழுவிச்சென்றும்
சிலரிடம் சிலதிடம் இப்படியாகி,,,,,,,,,,,,,,,,,,




காலப்போக்கில் இன்னதென்றறியாத
மனவிலகலில்
தொடர்பறுந்து போனது
மயானத்திற்கு வேறு குறுக்கு வழிகள் இல்லை
ரோஜா இதழ்களும் சம்பங்கிகளும்
பூக்கள் உதிர்ந்த ஆரமும்
பாதை நெடுக உதிர்த்து
இவ்வழி தான்
போக வேண்டியதாயிற்று
நெடுநாள் பாராதிருந்து
இந்தக் கோலத்தில் பார்க்கவா
என அரற்றியது பாதை,

புதன், 18 மார்ச், 2009

யூமா வாசுகியின் கண்ணீரைப் பின்தொடர்ந்து


தொலைவான ஓரிரவு

என் அம்மா...
உன் ஒரு முலையிலிருந்து மறுமுலைக்கு
என் உதடுகளை மாற்றிக்கொள்ளும் நேரமிது
பிரிவென்று கருதாதே.
என் தமக்கையே நெடுவழியில் நான்
உன் சுட்டுவிரல் விட்டு நடுவிரல்
பற்றிக்கொள்ளும் பொழுது இது.
தீண்டலற்ற இடைநொடி
தனிமையோ என்று திகைக்காதே
என் தங்கையே உன்னைத் தியானிக்கும்
என் மனம் இமைக்கும் தருணமிது.
அச்சமய இருட்டில் நீ மிரளாதிரு.
உறங்கு என் மகளே
தோள் மாற்றிச் சுமக்கவே உன்னை
என் நெஞ்சிலிருந்து அகற்றுகிறேன்.
ஐயோ இது விலகலோ என்று
திடுக்கிட்டு விழித்துவிடாதே.
சகலமுமான என் பிரியமே
இன்று நாளெல்லாம் உன் நினைவால்
எத்தனை முறை மனம் ததும்பி
கண்ணீர் வரப் பார்த்தது...


( என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர் என்ற யூமா வாசுகியின் கவிதைத் தொகுப்பிலிருந்து )


கென் தன்னுடைய வலைப்பதிவில் மஞ்சள் வெயில் வாசிப்பனுபவத்தை எழுதியிருக்கக் கண்டேன், எங்களூர் நூலகத்தில் தேட கிடைத்தது. அந்நாட்களில் நானும் ஜீவிதா ஜீவிதாவென்று பிதற்றியபடியிருந்தேன். மொழிநடை, இளகிய மனம், கசிந்துகொண்டேயிருக்கும் இதயம், தாங்கொணாத் துயரளிக்கும் பிரியம், நிராகரிப்பின் புறக்கணிப்பின் மறுப்பின் வலி நிரம்பிய உணர்வுகளின் சிதறல் என எல்லாமும் யூமா வாசுகியை இன்னும் கண்டடைதலுக்கான தேடலைத் தூண்டியது,

இவ்வருட புத்தகக் கண்காட்சியில் அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு, என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர் கவிதைத்தொகுதிகளும், உயிர்த்திருத்தல் சிறுகதைத் தொகுப்பும், ரத்த உறவு நாவலும் கிடைக்கப் பெற்றதில் மகிழ்ந்தேன்.
துயரத்தை ரசிப்பதில் அப்படியென்ன குரூர ஈடுபாடோ தெரியவில்லை. நெஞ்சை கனக்க வைப்பதும் கசியச்செய்வதுமான கலை இலக்கியங்களின் மீதான நாட்டமே அதிகமிருக்கிறது. எனக்கு ஏதோ ஆழ்மனப்பிறழ்விருப்பதாகக்கூடச் சந்தேகமெழும் சில சமயங்களில். மிகவும் உலர்ந்த இவ்வாழ்வில் எதன் பொருட்டாவது அழுவதிலும் நெகிழ்வதிலும் தான் வாழ்தலுக்கான கணங்கள் இருப்பதாகவும் எந்நேரமும் மனதை அரித்துக்கொண்டிருப்பவற்றின் தற்காலிக மீட்சியாகவும் மனம் நிறுவிக்கொள்ள முயல்கிறது, புனைவே வாழ்வாய், வாழ்வே புனைவாய். புனைபவர்களின் வாழ்வு அதிபுனைவாய் இலக்கிய உலகம் எண்ணிலடங்கா ரகசியங்களை உள்ளடக்கியதாயிருக்கிறது.