புதன், 5 ஜனவரி, 2011

மயிரு கவிதைத்தொகுப்பு வெளியீட்டன்று " கவிஞர் ராஜசுந்தரராஜன் அவர்களின் உரை "

APRIL is the cruelest month, breeding
Lilacs out of the dead land, mixing
Memory and desire, stirring
Dull roots with spring rain.

இவை டி.எஸ்.எலியட்டின் The Waste Land கவிதையின் தொடக்க அடிகள்.


//கூட்டி விடவிடப்
படியும் புழுதியாய்
வாசல் கோலத்தின் பின்
அழிந்தும் அழியாத
நேற்றையக் கோலமாய்

புலம் பெயர்ந்த
சக ஆட்டக்காரிகளின்
பட்டப் பெயர்கள் நிழலாட

அவர்கள் இறங்கவேண்டிய
நிறுத்தத்தில் அதன் தாய்
அழ அழ அழைத்துச்சென்ற குரல்
இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது

தெய்வானைக்கு ஒரு மகன் இரண்டு மகளாம்
அடிக்கடி அவள் பேச்சில்
என் பெயர் வருமாம்.

அகவிழுதுகள் பிடித்தாடுகின்றன குரங்குகள்

காலத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றாய்ப்
புரட்டப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.

அறுபட்ட கோழியின்
தூவலாய் மிதக்கின்றன
கைவிடப்பட்ட பிரியங்கள்

மலக் கழிவென எஞ்சியிருக்கும் நினைவுகள்
இன்னும் இன்னபிற என
சூன்யக்காரனின் மூலப்பொருட்களையொத்த
சேகரங்களனைத்தையும்

நீர்த்திரை விழிகளுடன்
தூசு படிந்த நிழற்படத்தை
முந்தானையால் துடைத்துப் பார்ப்பதாய்
காய்ந்து உதிர்ந்த இலைச்
சருகுகளை விலக்கிப்
பார்க்கிறது காற்றுடன் மழை
கல்லறை எழுத்துகளை

கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாம்

இன்னும் இன்னும் எங்கெங்கிருந்தோ
முளைத்துக்கொண்டே இருக்கின்றன
அழிக்க அழிக்க சுவடுகள்

அகத்தின் அப்புறப்படுத்தவியலாத
சேகரங்கள் அழுகி நாறுகின்றன
உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதில்
தொடர்ந்த தோல்வி, இயலாமை, கழிவிரக்கம்

நினைவு பொல்லாதது//

இவை கவிஞர் யாத்ராவின் வரிகள். ஒற்றையொரு கவிதையொன்றின் வரிகள் அல்ல. இவரது ‘மயிரு’ என்னும் நூலில் உள்ள கவிதைகள் பலவற்றிலும் அங்கங்கே அழுந்திக் கிடப்பவை. நினைவின் நோவுகண்டு பிறந்தனவாக இருக்கின்றன யாத்ராவின் பெரும்பான்மையான கவிதைகள்.

இந் நூல் வருவதற்கு முன்பு ‘எப்படியிருக்கீங்க’ என்கிற கவிதை ஒன்றை மட்டுமே வாசித்திருந்தேன். அதில் கவிஞர் பயன்படுத்தி இருந்த விவரனைகள் என்னை மிகவும் பாதித்திருந்தன.

கவிதைக்கு உரிய கச்சாப் பொருள் அல்ல விவரணைகள். அது நாவலுக்கு உரியது. என்றாலும் கவிதையில் விவரணைகளைக் கொண்டுவந்த கவிஞர்களும் இருக்கிறார்கள். கலாப்ரியா, கல்யாண்ஜி முதலியோர். ஆனால் விவரணைகளைச் சொல்முறையாக அல்லாமல் உத்தியாகப் பயன்படுத்துகிற யாத்ரா அதுவழி நம் உள்ளத்தை அறுக்கிறார். எளிய கவிதைகளும் இவ் விவரணை வழி வேறு தளத்துக்கு உயரவும் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, //வள்ளி புதுக்கோட்டையில்// என்று தொடங்கி, பெயர் அறிந்த ஓரொருத்தியும் ஓரோர் ஊரில் இருப்பதாக விவரித்து, பெயர் அறியாத பெண்களைப் பற்றியும் கவலைப் பட்டு, //பார்கவி எந்த ஊருக்குப் போவாளோ?// என்று முடிகிற கவிதை, இந்தியப் பெண்களின் லாட்டரிச்சீட்டு நிலைமையை உணர்த்தி நம்மை அவமானத்துக்கு உள்ளாக்குகிறது.

எழுதியவர் எழுதிவைத்த படி அல்ல, கவிதை அதை வாசிக்கிறவர் புரிந்துகொள்கிற அளவில்தான் பரிமாணம் கொள்கிறது. ‘எப்படியிருக்கீங்க’, ‘இருப்பு’ முதலிய கவிதைகளை வாசித்த அளவில் யாருக்கும் பாராட்டத் தோன்றும். ஆனால், எளிமை வெளிப்பாட்டின் காரணமாக, அவ்வளவு முக்கியமில்லை என்று தள்ளிவிடக் கூடிய கவிதைகளும் உண்டு. அவற்றில் இரண்டு கவிதைகளை எடுத்துப் பேசி, ஏனைய கவிதைகளும் சாதாரணமானவை அல்ல என்று சுட்ட விரும்புகிறேன்.

தண்ணீரில்
தன் பிம்பம்
தழுவுதல்
தற்கொலையா

இந்த எளிய கவிதையில், //தண்ணீரில்// என்னும் முதல் அடியை வாசித்த அளவில் தண்ணீருடைய அத்தனை குணங்களும் என் மண்டைக்குள் புரள்கின்றன. எந்தத் தண்ணீரில் என்றொரு குறுக்கு வினா எழுந்து, அந்தத் தண்ணீரைப் பற்றியும் சில அடிப்படை உண்மைகள் கணக்கில் வருகின்றன. அப்புறம், //தன் பிம்பம்// என்பது தனது சாயை என்றும் the image about one’s own self என்றும் தோன்றுகிறது. தண்ணீரில் பிரதிபலிக்கிற பிம்பம் என்றாலும் சரி, ‘தண்ணி’யடித்த மப்பில் தன்னைப் பற்றி உண்டாகிற தோற்றம் என்று கொண்டாலும் சரி, it’s an image of uncertainity. இப்பொழுது, //தழுவுதல்//. உறுதிப்பாடற்ற அந்தப் படிமத்தைத் தழுவுதல் அல்லது வரித்துக் கொள்ளுதல், இறுதி அடியில் வினவப் படுவது போல, //தற்கொலையா//? Is that a suicide? தண்ணீர்ப் பரப்பை ஈரத்தோடு கூடிய ஒரு stratum எனக் கொண்டால் அது அன்பின் குறியீடு ஆகிறது. அன்பில் பிரதிபலிக்கும் பிம்பத்தைத் தழுவுதல் தற்கொலை ஆகுமா? இதற்கிடையில் நாம் அறிந்த நார்சிசஸ், ஆத்மாநாம் என இவர்களும் நினைவுக்கு வந்தால்... இது அத்துணை சாதாரணமானதொரு கவிதையா?

//மன்னிக்கவும்
இன்றைக்கு
கவிதையேதுமில்லை
உங்களை வெறுமனே அனுப்புகிறேன்//

என்கிறார் இன்னொரு கவிதையில். ‘எதுவுமே நிகழவில்லை இன்று’ என்னும் தலைப்பின் கீழ் வருகின்றன இந்த வரிகள்:

//புன்னகை ஒட்டிய முகங்கள்
நெகிழவைத்த மேலாளர் நண்பர்கள்
காத்திருக்க வைக்காமல்
வந்துவிட்ட இவள்
காலியாய் இருந்த பேருந்து
ஆழ்ந்து யோசிக்கிறேன்
ஒரு அவமானம்
ஒரேயொரு ஏமாற்றம்
வன்சொல்
சாலை கடக்கையில் குறுக்கிட்ட
லாரிக்காரன் கூட
சாவுகிராக்கியெனவில்லை இன்று
இது ஒரு நாளா//

இப்படி எதுவுமே நிகழவில்லை என்று சொல்லிவிட்டு, //மன்னிக்கவும்/ இன்றைக்கு/ கவிதையேதுமில்லை/ உங்களை வெறுமனே அனுப்புகிறேன்// என்கிறார். கவிதை எழுதுவதற்கு ஏதாவது ஏடாகூடமாக நிகழ்ந்தாக வேண்டும் என்கிற கோமாளித்தனத்துக்கு ஒரு நக்கல் எதிர்வினையாக இது எனக்குப் படுகிறது., இயல்பான நேர்முறையான நிகழ்வே கவிதை என்றும் சுட்டுவதாக.

இப்படி யாத்ராவின் கவிதைகள் அத்தனையும், தமக்கென்று தேர்ந்துகொண்ட சொற்களால், பல்பொருட் தன்மை கூடியனவாக இருக்கின்றன. இது காரணம் இவை நிதானமாக வாசித்து உள்ளுணர வேண்டியவையாகவும் இருக்கின்றன. வலைத்தளத்தில் இந்தக் கவிதைகள் வாசிக்கக் கிடைக்கலாம். ஆனால் அவற்றைத் தேடிப்பிடித்து வாசிக்கிற மனநிலையும் சந்தர்ப்பமும் நமக்கு எண்ணியமட்டில் வந்துகூடி அமைவதில்லை. இப்படிப் புத்தகவடிவில் கிட்டுகையில், ஒரு நற்காலி அல்லது ஒரு தலையணையின் ஓய்வுப் பொழுதில் வாசிக்க முடிகிறது. இதற்காக இவற்றைப் புத்தகம் ஆக்கித் தந்த அகநாழிகைப் பதிப்பகத்தாருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இனி நான் தொடங்கிய இடத்துக்கு வருகிறேன்:

//நினைவு பொல்லாதது//

//உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதில்
தொடர்ந்த தோல்வி, இயலாமை, கழிவிரக்கம்//

எனது ‘முகவீதி’ தொகுப்பில் ஒரு கவிதை இருக்கிறது. என் கல்யாணத்துக்கு முன்பு எழுதியது. என்னைக் கல்யாணம் செய்து, சிறிது காலம் வாழ்ந்து பிறகு என்னை உதற நேர்ந்த ஒரு கட்டத்தில் என் மனைவி, “நீங்கள் எழுதிய இந்தக் கவிதை எவ்வளவு சத்தியமாது!” என்று அதிலிருந்து சில வரிகளை ஞாபகப் படுத்திச் சொன்னாள்.

//பூத்த போது அடடா அழகு என்றேன்
காய்த்தபோது காலில் குத்தியது நெருஞ்சி

என்ன தந்தாய் நீ எனக்கு
சில நரைமுடிகளைத் தவிர?

இருக்கிறதா இன்னும் நினைவுகளில் ஈரம்?

மறப்பதற்கில்லை
நெருஞ்சிப் பரப்பின் மஞ்சள் வசீகரம்//

நான் கெட்டழிந்த கதை ‘தமிழினி’ வெளியீடாக வரும் எனது ‘நாடோடித் தடம்’ என்னும் நூலைப் பிறப்பித்தவள் இவள் என்று என் ஒரு காலத்திய மனைவியை, அதன் முன்னுரையில் குறிப்பிடுகிறேன்.

யாத்ராவின் கவிதைகள் நெடுகிலும் ‘இவள்’ என்றொரு குணவார்ப்பு வருகிறது. அந்த ‘இவள்’ இல்லையென்றால் இத்துணை செறிவான கவிதைகளை இவர் எழுதி இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். அந்த ‘இவள்’ நமக்குள் ஒரு க்ரியாசக்தியாக மாறி நின்று செயல்படவே தன்னைக் காவு கொடுத்தாள் என்றும் நம்புகிறேன்.

‘உள்வெளியற்ற நானை நிர்மாணிப்பதற்கு’ அந்த இவளுடைய இருப்பு இன்றியமையாதது அல்லவா?

//நேசிக்கப் படுகிறேன்
மூடநம்பிக்கை//

என்றோர் இரு வரிக் கவிதையும் இந் நூலில் உண்டல்லவா? அது எவ்வளவு சத்தியமானது! ‘நேசிக்கிறேன்’ என்றால், அது நம்மைச் சார்ந்தது; நம் அறிவுக்குப் படுவது. ‘நேசிக்கப் படுகிறேன்’ என்றால் அது நம்பிக்கைதானே? மூடநம்பிக்கை என்றும் கொள்ளலாம். அப்படி, மூடநம்பிக்கை இருந்தால்தானே முக்தியை அடைய முடியும்? முக்தி என்பது பின் எதிலிருந்து?

இந்த உள்வெளியற்ற நானை நிமாணிப்பதற்கு, ஓரிடத்தில், யாத்ராவே விடை கண்டுபிடித்துத் தந்திருக்கிறார்:

//இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சாகடித்தேன்
அந்த நாயை//

//இருசக்கர வாகனத்தால் ஏறி// அல்ல, //இரு சக்கர வாகனத்தில் ஏற்றி//! அன்பை விடத் துல்லியமான கொலைக் கருவி வேறு உண்டா?

அன்பர்களே, ‘இரு சக்கர வாகனம்’ என்றால் என்ன? ‘நாய்’ என்றால் என்ன? ‘அனுமனவதாரம்’ என்றால் என்ன? ‘தாவணிப் பெண்’ என்றால் என்ன? ‘சிலுவை’ என்றால் என்ன? என்று நான் பேசிக்கொண்டே போக முடியும். இந்த உள்ளுறைகள் எல்லாம் வந்து வாய்க்கிற பொருத்தமான சொற்களைத் தேர்ந்து செய்யப்பட்ட கவிதைகள் இவை என்பது கிடக்க, ஒரு கவிதையில் வரும் வரிகளை எந்த இடத்தில் முடிக்க வேண்டும் என்னும் கலை அறியவும் இந்த நூலை வாங்கிக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று பரிந்துரைக்கிறேன்.


- ராஜசுந்தரராஜன்


ரொம்ப நன்றி சார்

7 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்லதொரு அறிமுக உரை. நன்றி.

பா.ராஜாராம் சொன்னது…

அப்பா!!!

பகிர்விற்கு நன்றி செந்தில்!

நந்தாகுமாரன் சொன்னது…

வாழ்த்துகள் யாத்ரா ... உங்களின் பெரும்பான்மையான கவிதைகளை ஏற்கனவே நான் ரசித்து வாசித்திருக்கிறேன் ... இத்தொகுப்பை அகநாழிகையிடமிருந்து விரைவில் வாங்கிக் கொள்கிறேன்.

ny சொன்னது…

நிறைய ஆனந்தம்.
தலைப்பும் வடிவமைப்பும் அழகு.

வாங்கி விடுகிறேன் :))

ny சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ny சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஆறுமுகம் சொன்னது…

வாழ்த்துகள் யாத்ரா ... உங்களின் பெரும்பான்மையான கவிதைகளை ஏற்கனவே நான் ரசித்து வாசித்திருக்கிறேன் ... இத்தொகுப்பை அகநாழிகையிடமிருந்து விரைவில் வாங்கிக் கொள்கிறேன்